சரியாக 800 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் பொதுமக்கள், நிலப் பிரபுக்கள், தனவந்தர்கள் ஒன்றிணைந்து செய்த கிளர்ச்சிகளின் விளைவாக 1215 ஜூன் 15-ஆம் தேதி அந்நாட்டின் விண்ட்சர் அருகே ரனிமேடில் (Runnymede) ஜான் மன்னர் முன்னிலையில் மக்களைக் காக்கும் உரிமை சாசனமான மகாசாசனம் என்னும் மேக்னா கார்ட்டா (Magna Carta) எழுதப்பட்டது.
ஒரு முழுமையான முடியாட்சியின் காலம் முடிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரப் பரவலாக்கம் அப்போதிருந்து படிப்படியாகத் தொடங்கியது. ஜூன் 15-ஆம் நாள் (இன்று) இந்த மகாசாசனம் எழுதப்பட்டு 800 ஆண்டு நிறைவாகிறது.
மகாசாசனத்தின் மூலம் பிரிட்டன் அரசரும் அந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டவராகிறார். இதன்படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் ஆட்சி, எந்தவித விசாரணையும் இல்லாமல் எவரையும் தண்டிக்கக் கூடாது. குற்றவாளிக்கும் தன்னுடைய விளக்கத்தை அளிக்க உரிமைகள் வழங்க வேண்டும். தேவாலயங்களும் சுதந்திரமாகச் செயல்படும். நாட்டின் மன்னர் தன் குடிமக்களோடு கலந்து ஆலோசிக்காமல் எந்த புதிய வரியையும் விதித்துவிட முடியாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் நீதி விற்கப்பட மாட்டாது. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் எந்த ஒரு தனி மனிதருக்கும் பொதுவில் வாதாட உரிமை உண்டு என மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் படைத்ததுதான் இந்த மகாசாசனம்.
தற்போதுள்ள எந்த அரசியல் உரிமை சாசனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதும் மேக்னா கார்ட்டா பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மகாசாசனம் பற்றிய பல தரவுகள் பிரிட்டனில் காலம்காலமாக கதைகள், நாட்டுப் பாடல்கள் மூலம் வரலாற்றில் பதியப்பட்டு வந்துள்ளது.
யூதர்களுக்கு மோசே, இந்தியாவில் மனு, மெசபடோமியாவில் ஹமுராபி, சீனாவில் கன்பூசியஸ், ரோமில் ஜஸ்டினியன் ஆகிய சட்டங்கள் மேக்னா கார்ட்டாவுக்கு முன்பே இருந்திருந்தாலும் மேக்னா கார்ட்டா அவற்றிலிருந்து வேறுபட்டு, மக்களுக்கான உரிமைகளைத் தெளிவுபடுத்துகிற சாசனமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், மேக்னா கார்ட்டா உரிமையாக அளிக்கப்பட்டதல்ல, அரசரிடமே கேட்டுப் பெறப்பட்டது.
பிரிட்டனின் எல்லைப் பகுதிகளை பிரான்ஸிடம் இழந்த ஜான் மன்னருக்கு, மேக்னா கார்ட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன்மூலம் முதன்முதலாகக் குடியாட்சிக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அரசியல் புரட்சிகளினால் இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் ஒவ்வொன்றின் தலையெழுத்தையும் மேக்னா கார்ட்டா தீர்மானித்தது.
மேக்னா கார்ட்டா, ஒரு மன்னர் தன்னையும் சட்டத்துக்குள் ஆள்படுத்தி இயற்றிய மிகப் பழமையான முதல் அரசப் பிரகடனம். ஒருவர் எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும் சட்டம் அவரைவிட உயர்வானது என்ற கருத்து இதன்மூலம் வலுவாக்கப்பட்டது.
இந்த மகாசாசனம்தான் அரசியலமைப்புப் பிரகடனங்களில் மிகச் சிறந்தது என்கிறார் ஆங்கிலேய நீதிபதி லார்ட் டென்னிங். இதுவே தன்னிச்சையான ஒரு கொடுங்கோலனின் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஒரு தனி மனிதனைக் காக்கும் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜானுக்கு முன்பும், மேக்னா கார்ட்டாவுக்கு முன்பும் அதாவது 597-ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் சட்டங்கள் இருந்தன. அவற்றை சாக்ஸன் சட்டம் (saxon law) என்று குறிப்பிடுகின்றனர்.
1066-இல் வில்லியம் தலைமையில் பிரான்ஸின் நார்மான்கள் பிரிட்டனை கைப்பற்றினர். 1100-ஆம் ஆண்டு முதலாம் ஹென்றி, நார்மான்களின் சட்டங்களோடு சாக்ஸன் சட்டத்தையும் இணைத்து ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகிறார்.
நிர்வாகம், ஆட்சி முறை, சட்டம் ஆகியவற்றை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டாம் ஹென்றி, வழக்குகளை விசாரிக்க பொதுவான ஜூரிகளை அமர்த்தினார். நிலப்பிரபுக்கள் மூலம் தன்னிச்சையான விதிகள் இருந்த இடத்தில் ஆண், பெண்களுக்கும் சமமான ஒரு பொது விதியை இந்த ஜூரிகள் மூலம் நிர்ணயித்தார். இந்தப் புதிய விதி எதிர்கால பிரிட்டனின் சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது என்றால் மிகையானதல்ல.
பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜான் மன்னரின் ஆட்சியில், ஏற்கெனவே அதிக வரி செலுத்திவந்த நிலப்பிரபுக்கள் மேல் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. கேண்டர்பரியின் பேராயரோடும் ஜான் மோதினார். இந்தக் காலக் கட்டத்தில் பிரிட்டனில் குழப்பங்கள் விளைந்து, அரச நிர்வாகம் மக்கள் விரோதமாக மாறி மக்கள் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்டனர். சர்வாதிகாரம் தலைதூக்கி நர்த்தனமாடியது.
இதற்கிடையில், ஐரோப்பாவில் ஜெர்மனுடன் இணைந்து பிரான்ஸýக்கு எதிராகப் போரிட்ட ஜானின் படைகள் தோல்வியடைந்தன. நகரங்களில் கலகங்கள் ஏற்பட, ஜான் மன்னருக்கு எதிராக உரிமைகள் கேட்டு பிரிட்டன் மக்கள் போராடத் துவங்கினர்.
இந்நிலையில், 1216-ஆம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. இம்முறை இவர்களைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஜான், தன் படைகளை விட்டுவிட்டு ஓடிப் போனார். பிரிட்டனை பிரான்ஸ் வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் இறந்து போனார்.
ஜான் மன்னரின் இடத்தில் ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஹென்றி, முதல் காரியமாக மேக்னா கார்ட்டாவை தூசி தட்டினார். அதன் பயன்பாடு அவருக்குத் தெரிந்திருந்தது. பிரிட்டனிலிருந்து பிரான்ûஸ துரத்தியடிக்க வேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். மேக்னா கார்ட்டா அதற்கு கைகொடுத்தது.
1217-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது, மேக்னா கார்ட்டா சிறிய மாற்றங்களோடு சமாதான ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்டது. 1225-இல் மீண்டும் அந்த அதிகாரப் பத்திரம் மறுவெளியீடு செய்யப்பட்டு 1297-ஆம் ஆண்டு பிரிட்டன் சட்டத்தில் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
திஸ் லிட்டில் பிரிட்டன் (This Little Britain) நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வார்த்தைகளில் சொல்வதானால், பிரிட்டன் இந்த உலகுக்கு கொடுத்த சிறந்த அருட்கொடை மேக்னா கார்ட்டா. மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர். சட்டத்தை மீறினால், அவரது நிலங்கள், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்கிறது மகாசாசனம். அரசர்தான் எல்லாமும் என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹாரி பிங்கம்.
பிற்காலத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த புதிய சட்டத் திருத்தங்களால் மேக்னா கார்ட்டா தன் நடைமுறை முக்கியத்துவத்தை சில சமயங்களில் இழக்கவும் நேர்ந்தது.
ஆரம்ப காலத்தில் மேக்னா கார்ட்டாவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமாகவே இருந்தன. அவையும் அலங்காரச் சட்டங்களாகவே சேர்க்கப்பட்டவை. சாசனப் பிரிவு 39, 40 ஆகியவை எந்த சுதந்திர மனிதனையும் அநீதியாக கைது செய்யவோ, சட்டவிரோதமாக சிறையில் அடைக்கவோ, நாடு கடத்தவோ முடியாது. எந்த சுதந்திர மனிதனின் உரிமையையும் பறிக்க முடியாது என்கிறது.
ஆனால், இந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் வேலை இருந்தது. அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். யார் சுதந்திர மனிதன் என்பதை அரசர்தான் தீர்மானிப்பார். தங்களுக்குப் பிடிக்காத புரட்சியாளர்களை, நிச்சயம் சுதந்திர மனிதர்கள் என்று ஒருபோதும் அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு உரிமைகள் வழங்கப் போவதும் இல்லை.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் மேக்னா கார்ட்டா ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. வழக்குரைஞர்களும் வரலாற்றாசிரியர்களும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஆங்கிலோ - சாக்ஸன் நாள்கள் திரும்ப வந்ததாகக் கருத ஆரம்பித்தனர். 1066-இல் நார்மான் படையெடுப்புக்குப் பின்பு காணாமல் போய்விட்ட இந்த உரிமைகளை மேக்னா கார்ட்டாவை பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்றும், ஆள்கொணர்வு உரிமையை (habeas corpus) மீண்டும் நாடாளுமன்றத் தீர்மானங்களில் சேர்க்க முடியும் என்றும் வாதிட்டனர்.
அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக வாதிட மேக்னா கார்ட்டாவை நீதித் துறை பயன்படுத்திக் கொண்டது. 1640-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முதலாம் சார்லஸýக்கு மரண தண்டனை விதிக்கும் வரையிலும் மேக்னா கார்ட்டாவை பற்றிய விவாதங்கள் அடங்கியிருந்தன.
புரட்சிக்குப் பிறகு, ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளைப் பாதுகாக்கும் மூன்று முக்கிய ஆவணங்களில் ஒன்றாக 1688-இல் மேக்னா கார்ட்டா முடியாட்சியின் கீழ் சேர்க்கப்பட்டது. இந்த அதிகாரப் பத்திரம் 1789-ஆம் ஆண்டு அமெரிக்க காலனிகள் உருவாவதற்கும், அமெரிக்காவின் அரசியலமைப்புச் சாசனம் உருவாவதற்கும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் மேக்னா கார்ட்டா சுதந்திரத்தின் சின்னம் என அரசியலாளர்களாலும், உலக நாடுகளின் தலைவர்களாலும் மேற்கோள் காட்டப்படுகிறது.
1215-ஆம் ஆண்டு, மேக்னா கார்ட்டாவின் 1215 மூல சாசனங்கள் பதப்படுத்தப்பட்ட கன்றின் தோல் மீது குயிலின் இறகினைக் கொண்டு, இலத்தீன் மொழியில் எழுதப்பட்டு, மெழுகு, பிசினால் முத்திரை இடப்பட்டது.
தற்போது மேக்னா கார்ட்டாவின் 1215 மூல சாசனங்களில் நான்கு மட்டும் பிரிட்டிஷ் நூலகத்திலும், லிங்கன் நூலகத்திலும், சாலிஸ்பரி தேவாலயங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது, தனியார் உடைமையாக சில மூல சாசனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ளன.
1759-இல் அறுபத்தி மூன்று பாகங்களாக வில்லியம் பிளாக்ஸ்டோனினால் பிரிக்கப்பட்டாலும் அசல் மேக்னா கார்ட்டா ஒற்றையான, உடையாத, நீண்ட உரையினால் உருவாக்கப்பட்டது. இந்த நான்கு அசல் மேக்னா கார்ட்டா சாசனமும், அது உருவான 800-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த பிப்ரவரி 3, 2015-இல் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்குக் வைக்கப்பட்டது.
மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்ற கூறுகளுக்கு அடிப்படையே இந்த மேக்னா கார்ட்டாதான். இவ்வாறான மகாசாசனம் உலக வரலாற்றில் முதல் மக்களின் சாசனமாகும். அரசியல் அரங்கத்தில் இந்த அருட்கொடை கிடைத்ததை பிரிட்டனில் மட்டுமல்லாமல், பன்னாட்டு அளவில் கொண்டாட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.