இன்பமாய் வாழ்வது எப்போது?

அண்மையில் வரும் செய்திகள் பல நமது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சூழல் கெட்டுப் போனதற்கு யார் காரணம்?
Updated on
3 min read

அண்மையில் வரும் செய்திகள் பல நமது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சூழல் கெட்டுப் போனதற்கு யார் காரணம்? பூமி சூடாகி நில நடுக்கம் ஏற்படுகிறது. அட்லாண்டிக் பகுதிகளில் பனிக் கட்டிகள் உருகி கடல்நீர் பெருகிக் கொண்டு இருக்கிறது. இது நிலப் பகுதிக்குள் நுழைந்தால் ஏற்படும் "பிரளயம்' நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
 இப்போது பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையால் இருப்பதற்கே பூமியில் இடமில்லை. வேறு கோள்களைத் தேடி அறிவியல் உலகம் ஆலாய்ப் பறக்கிறது. மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான நீர் முதலியன கிடைக்குமா? என செயற்கைக்கோள் மூலம் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித இனம் தமக்கான கடமைகளைத் திரும்பிப் பார்க்க வேண்டாமா?
 "இயற்கையுடன் மனிதன் நல்லிணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே பூமியில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து தப்பிக்க முடியும்' என்று பிரதமர் மோடி உலகச் சுற்றுச்சூழல் தினச் செய்தியாகக் கூறியுள்ளார். இதுதான் உலக நலம் நாடும் அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.
 ஆனால், மனிதர்களின் எல்லா அழிவுகளுக்கும் காரணமாக இருப்பது பேராசையும், சுயநலமுமே என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்? மனித உறவுகளும், மாநில உறவுகளும், உலக உறவுகளும் வளர்வதற்கு மனிதநேயமே அடிப்படையாகும். பேராசையும், சுயநலமுமே மனிதநேயத்தின் எதிரிகள். இந்த எதிரிகளை அழிக்காமல் மனித உறவுகள் எப்படி வாழும், வளரும்?
 பல்வேறு நாடுகளிடையே பாயும் நதிநீரைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால், பக்கத்து மாநிலங்கள் இடையே பாயும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. வளர்ந்து வரும் மத வெறியும், இனவெறியும் மனித உறவைத் தடுக்கின்றன. பிறகு எப்படி மனிதநேயம் வளர முடியும்?
 பக்கத்து மாநிலமான கர்நாடகா காவிரி நீர் பற்றிய நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்க மறுக்கிறது. அதனை மேற்பார்வையிட வேண்டிய மத்திய அரசு மெüனம் சாதிக்கிறது. உரிமைகளைக் கேட்டு இங்கு போராடினால் அங்குள்ள தமிழ் மக்களைத் தாக்கிட குண்டர்களை ஏவுகிறது. இது என்ன தேசிய ஒருமைப்பாடு என்பதை அவர்கள்தாம் விளக்க வேண்டும்.
 தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் காவிரியாறு, டெல்டாப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, 16 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது. பெங்களூரு குடியிருப்புகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் திருப்பி விடப்படுகிறது.
 நாள் ஒன்றுக்கு 148 கோடி லிட்டர் கழிவு நீர் காவிரியில் கலக்கிறது. இதனால், தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பதோடு, காவிரியை நம்பியுள்ள டெல்டா விவசாயமும் அடியோடு பாதிக்கப்படும்; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உச்சநீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 பெங்களூரிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் காவிரி மாசுபடுவதைத் தடுக்க ரூ.600 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும், கழிவு நீரைச் சுத்திகரித்த பிறகு கிடைக்கும் தண்ணீர் கோலார் மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பப்படும் என்றும் கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
 இவர் கூறும் சுத்திகரிப்பு நிலையம் இனிமேல்தான் கட்டப்பட இருக்கிறது. இதுவரை கழிவு நீரை ஆறுகளில் வெளியேற்றியது தவறு இல்லையா? இதனைக் குடித்து மக்களும், ஆடு மாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனரே, அதற்கு இழப்பீடு இல்லையா? பக்கத்து மாநில மக்கள் எப்படியாவது போகட்டும் என்ற அலட்சிய மனப்பான்மைதானே இதற்குக் காரணம்?
 "தமிழக அரசு தொடரும் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதற்றம் அடையாமல் சாதாரணமாகக் கூறியுள்ளார். அடுத்தத் தேர்தலைப் பற்றிக் கவலைப்படும் அரசியல்வாதிகளை நம்மால் காண முடிகிறது. அடுத்தத் தலைமுறையைப் பற்றிக் கவலைப்படும் தலைவர்களை எப்போது காணப் போகிறோம்?
 ஆறுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டாமா? தமிழ் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட பல ஏரிகள், கண்மாய்கள், ஓடைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இருக்கும் ஏரி குளங்களும் தூர்வாரப் படாமல் மண்மேடாகவே காட்சியளிக்கின்றன. கிரானைட் குவாரிகளால் நடந்த முறைகேடுகள் காரணமாகப் பல மலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
 இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் வரலாற்றுச் சின்னங்களும், கல்வெட்டுகளும் அழிந்தொழிந்தன. சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகள் சிதைக்கப்பட்டுவிட்டன. அங்கிருந்த அடர்ந்த இயற்கைக் காடுகளும் அழிக்கப்பட்டு விட்டன. இவ்வாறு இயற்கை அழிக்கப்படுவதால் மனிதர்கள் தம்மை தாமே அழித்துக் கொள்கிறார்கள்.
 மனித வாழ்க்கைக்கே அறைகூவல் விடும் அணு உலைகளை நிறுவி ஆபத்துகளை வரவழைத்துக் கொள்ளலாமா? கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதை அப்பகுதி மக்கள் பல காலமாக எதிர்த்து நின்றபோதும், மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் கருத்துக்கு எதிராகவே அணுமின் நிலையம் செயல்படுத்தப்பட்டது. இதற்குத் தமிழக அரசும், காவல் துறையும் துணை நின்றன.
 ஆட்சிக்கு வரும் வரை மக்களிடம் கெஞ்சுவதும், ஆட்சிக்கு வந்துவிட்டால் மிஞ்சுவதும் வழக்கமாகி விட்டது. ஏழை எளிய மக்களைத் தெருவில் விட்டுவிட்டு, "தொழில் வளர்ச்சி' என்ற பெயரால் செல்வந்தர்களைச் சீராட்டுவது சுயநலம் இல்லாமல் வேறு என்ன?
 "மின்சாரம் தேவையில்லையா?' என்று கேட்கிறார்கள். மக்களின் உயிர் அதைவிட மேலானது இல்லையா? மக்களுக்காக மின்சாரமா? மின்சாரத்துக்காக மக்களா? மக்களின் உயிர்களுக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பாதுகாப்புத் தரவேண்டிய அரசுகள் தங்கள் கடமைகளை விட்டுவிட்டு புதிய புதிய காரணங்களைத் தேடி அலைகின்றன.
 மத்திய பிரதேசம், போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட பாதிப்புக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1984 டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் நாளுக்கு இடப்பட்ட நள்ளிரவில் நச்சுவாயு கசிந்தது. அதை சுவாசித்ததால் 3,787 பேர் உயிரிழந்தனர். 8 ஆயிரம் பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஏராளமானோர் ஊனமுற்றனர்.
 இந்த நிகழ்வு நடந்து இவ்வளவு காலமாகியும் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. பற்றாக்குறையான இழப்பீடுதான் வழங்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடர்பான முதல் தீர்ப்பில் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களும் உடனடியாக ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்கள்.
 மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபடுகின்றனர். நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வெளியேற ஆட்சியாளர்களே துணை நின்றனர். தாய்நாட்டு மக்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
 எல்லா உயிர்களும் உணவில்லாமல் உயிர்வாழ முடியாது. அதனால்தான் "பசி வந்திடப் பத்தும் பறந்து போம்' என்று நீதி நூல் கூறுகிறது. இதில் ஏழை, செல்வர் என்ற வேறுபாடு கிடையாது.
 இதனை அறிந்த திருவள்ளுவரும் ஒரு நாட்டுக்குரிய இலக்கணம் (குறள்-734) என்னவென்று கூறினார். பசி, பிணி, பகை இல்லாத நாடுதான் உயர்ந்த நாடாகும் என்பது அரசியல் வித்தகர்களின் முடிந்த முடிவாகும்.
 அதனால்தான் உணவை உற்பத்தி செய்யும் வேளாண்மையை உயர்த்திப் பேசினர். போர் முனையா? ஏர் முனையா? என்ற கேள்வி எழும்போதெல்லாம் ஏர்முனையில்லாமல் எதுவும் இல்லை என்பது விடையாகிறது.
 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்கள் வணக்கத்துக்கு உரியவை. அந்தச் சோலை வனங்களைப் பாலைவனமாக மாற்றும் திட்டமே மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமாகும். மக்களின் கடுமையான எதிர்ப்பால் இது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 "ஒப்பந்தத்தின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டிய பல்வேறு ஆவணங்களை "தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி' நிறுவனம் இதுவரையிலும் சமர்ப்பிக்கவில்லை. மீத்தேன் எடுப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளையும் அந்நிறுவனம் தொடங்கவில்லை. அதனால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை பெட்ரோலிய அமைச்சகம் தொடங்கியுள்ளது' என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டும் போதாது; திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 "ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட பூர்த்தி செய்ய முடியாது' என்றார் காந்தியடிகள்.
 இயற்கையை நாம் தோழமையாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, அதனை எதிர்த்து நிற்பது நமக்கு நாமே தீங்கு செய்து கொள்வதாகும். உலகில் எல்லா மக்களும் இன்பமாய் வாழ்வது எப்போது? அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
 "ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட பூர்த்தி செய்ய முடியாது' என்றார் காந்தியடிகள். இயற்கையை நாம் தோழமையாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, அதனை எதிர்த்து நிற்பது நமக்கு நாமே தீங்கு செய்து கொள்வதாகும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com