மனித உயிர் மலிவாகி விட்டதா?

அண்மைக் காலமாக உலகெங்கிலும் பல்வேறு வகைகளில் உயிரிழப்புகள் பெருகிக் கொண்டிருப்பது அனைவரையும்
Updated on
3 min read

அண்மைக் காலமாக உலகெங்கிலும் பல்வேறு வகைகளில் உயிரிழப்புகள் பெருகிக் கொண்டிருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உயிரிழப்புகள் கொலை, தற்கொலை, விபத்து என்ற பெயரால் நிகழ்கின்றன. எந்தப் பெயரால் நிகழ்ந்தால் என்ன? மனிதநேயம் கொண்டவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது என்பது பல காலமாக நடந்து வருகிறது. பிறகு குடும்பத் தகராறு காரணமாகக் கொலை - தற்கொலை, பின்னர் பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் தோல்வி காரணமாகத் தற்கொலை என வளர்ந்து புதிய புதிய நிலைகளை எட்டியுள்ளது.
 குடும்பப் பிரச்னையில் மனைவி தூக்கிட்டுச் சாவு, அந்தச் சோகத்தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நஞ்சுண்ட பெண் வழக்குரைஞர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வீட்டில் தனியாக இருந்த பெண் பொறியாளர் மர்மச் சாவு, கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு சாவு - இவ்வாறு வரும் செய்திகள் படிப்போரையும், கேட்போரையும் வேதனையடைய வைக்கிறது.
 மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தன்னுடன் வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேரை தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துக் கொன்ற பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
 தன்னால் அடைய முடியாத ஒன்றை அழித்துவிட வேண்டும் என்ற வெறிச் செயல் மனநோயின் அடையாளம் என்றே உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நோய் தன்னை மட்டுமல்ல, தன்னைச் சேர்ந்தோரையும் அழித்து ஒழித்து விடுகிறது. மனம் மாறுவதற்கும், மகிழ்ச்சியாக வாழ்வதற்குமான வாய்ப்புகளையும் முற்றாகத் துடைத்து விடுகிறது. அவசரமும், ஆத்திரமும் எல்லா வழிகளையும் அடைத்து விடுகிறது.
 படிக்காத பாமர மக்கள்தாம் பின்னால் வருவதை அறிந்து கொள்ளாமல் இத்தகைய முடிவுகளைத் தேடிக் கொள்கிறார்கள் என்பதில்லை. படித்தவர்களும், பதவியில் இருக்கும் அதிகாரிகளும்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
 திருநெல்வேலி வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை தமிழ்நாட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்த இந்த அதிகாரி வேளாண் துறையில் காலியாக இருந்த ஏழு ஓட்டுநர் பதவிகளை நேர்மையான முறையில் நிரப்பியதால் அச்சுறுத்தப்பட்டார்.
 இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி தாங்க முடியாமல் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தவறு செய்வதற்கு அஞ்சும் காலம் போய், நேர்மையாக இருப்பதற்கும் அஞ்ச வேண்டிய காலமாகி விட்டது. இந்நிகழ்ச்சி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படவே, துறையின் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றும், "லோக் ஆயுக்த' அமைப்பைத் தாமதமின்றி உருவாக்கிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
 மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் இறப்பதும், நோயாளிகள் மரணம் அடைவதும், அதனால் போராட்டம், வன்முறை, வழக்கு என்று தொடர்வதும் வாடிக்கையாகி விட்டன. இதற்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என்ற பேதம் இல்லை. பணமே முக்கியத்துவம் பெறும்போது, மனிதநேயத்துக்கு அங்கே இடமே இல்லை.
 தாங்க முடியாத தங்கள் பிரச்னைகளுக்காகத் தற்கொலை என்பது மாறி, அரசியல் காரணங்களுக்காகத் தங்களை மாய்த்துக் கொள்ளும் புதிய போக்கு உருவாகியுள்ளது. இது தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
 ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக 20 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 7 அன்று நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதனை "மனித உரிமை மீறல்' என்றே அறிவித்துள்ளது.
 ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையால் ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அந்த மாநில அரசே விசாரணை செய்வதால் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை என்றும், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 இறந்தவர்கள் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பதும், அவர்களைக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொன்ற பிறகே அவர்களைக் கொண்டு வந்து வனப் பகுதியில் வீசியுள்ளனர் என்பதும் ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விட்டன. செம்மரக் கட்டைகளைக் கடத்தும் பெரும்புள்ளிகளைத் தப்புவிக்கும் நோக்கத்துடனேயே இவர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்குத்தான் தெரியாது?
 இவ்வாறு நம்மைச் சுற்றிலும் நடக்கும் உயிரிழப்புகள், "மனித உயிர்கள் எவ்வளவு மலிவாகி விட்டன' என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. அன்றாடம் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி விட்டன. இயற்கையாக நடப்பனவற்றோடு செயற்கையாக நடப்பவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கவலைப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
 பல்வேறு நாடுகளில் பயங்கரவாதக் குழுக்களால் ஏற்படும் உயிர்ப் பலியை என்னென்பது? இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் இந்தப் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே. ஐ.நா. முதற்கொண்டு அனைத்து நாடுகளும் கண்டித்தாலும், தடுக்க முடியவில்லையே என்பதுதான் அனைவரது ஆதங்கமும்.
 பயங்கரவாதம் பரவுவதற்கு அந்தந்த நாட்டு அரசு பயங்கரவாதமும் ஒரு காரணமாகும். ஆளுவோர் தங்கள் ஆட்சியை நீடித்துக் கொள்வதற்காக படைபலத்தைப் பயன்படுத்தும்போது பயங்கரவாதமும் தலையெடுக்கிறது.
 இலங்கையில் 2009 மே 18 அன்று நடந்த இறுதிப் போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நடந்தேறி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இறுதிக் கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இன்னும் விசாரணை நடைபெறவில்லை. அடுத்த மாதம் தொடங்கும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
 புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில் மதவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சிய ரோஹின்கியா முஸ்லிம்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வங்கதேச மக்களும் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் கேட்டு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாகப் பயணம் செய்து வருகின்றனர்.
 அந்தமான் கடலில் தத்தளித்த சுமார் 7 ஆயிரம் அகதிகளைத் தாற்காலிகமாக ஏற்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன. தொடர்ந்து வருவதாகக் கூறி, அகதிகளை ஏற்றுக்கொள்ள இந்த நாடுகள் முதலில் மறுத்துவிட்டன. பன்னாட்டு நெருக்கடி காரணமாக இந்த உயிர்களை ஏற்றுக்கொள்ள இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.
 ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் இடைவிடாது நடக்கும் உள்நாட்டுப் போர்களாலும், பயங்கரவாதக் குழுக்களின் மோதல்களாலும் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் பலியாகின்றனர். போருக்கு அஞ்சி உயிரைக் காத்துக் கொள்ள அகதிகளாக நாட்டை விட்டு ஓடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டிருக்கிறது.
 மத்திய தரைக் கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 800 அகதிகள் பலியான நிகழ்வு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "ஓர் இனப் படுகொலைக்கு இணையானது' எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இதே போன்ற படகு விபத்துகளால் 2014-ஆம் ஆண்டு 3,500 பேரும், 2015-இல் இதுவரை 1,500 பேரும் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 35 ஆயிரம் அகதிகள் மத்திய தரைக் கடலைக் கடந்துள்ளனர் என ஐ.நா. மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
 இவர்கள் அகதிகளாக வெளியேறுவதற்குக் காரணம் அந்த நாடுகளில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதே. அதற்குக் காரணம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மட்டுமா? அங்கு குண்டுகளை வீசும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளும்தான். இவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றும் கடமை இவர்களுக்கு இல்லையா?
 "தற்கொலைத் தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது' என்று பாகிஸ்தானில்
 ஃபத்வா வெளியிடப்பட்டுள்ளது. ஜிகாதி அமைப்புகள் என்று கூறப்படும் குழுக்களின் சித்தாந்தம் தவறாக வழிகாட்டுகிறது. அவர்கள் பின்பற்றும் ஜிகாதி முறைகள் இஸ்லாம் மதத்தில் மதப்போர் (ஜிகாத்) குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது என்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் இஸ்லாம் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இந்த ஃபத்வா வெளியிடப்பட்டுள்ளது.
 எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. எல்லா மக்களும் அமைதியையே விரும்புகின்றனர். பிறகு ஏன் இத்தனைப் படுகொலைகள்? மனித உயிர்கள் மலிவாகி விட்டனவா?
 தன்னால் அடைய முடியாத ஒன்றை அழித்துவிட வேண்டும் என்ற வெறிச் செயல் மனநோயின் அடையாளம் என்றே உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நோய் தன்னை மட்டுமல்ல, தன்னைச் சேர்ந்தோரையும் அழித்து ஒழித்து விடுகிறது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com