சோழ நாடு சோறுடைத்து' என்பது ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு பொன்மொழியாகும். இதனை தமிழ்நாட்டின் "நெற்களஞ்சியம்' என்று கூறுவர். இப்போது இந்தப் பெருமைகள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் மெல்லப் போய்க் கொண்டிருக்கின்றன.
தஞ்சை மாவட்டம், திருவாரூர், நாகை என்று மூன்று மாவட்டங்களாகப் பிரிந்தபோதும் முப்போகம் விளைந்தது. இப்போது ஒரு போகத்துக்கே தவியாய்த் தவிக்கிறது. இதற்குக் காரணம் காவிரி நீர் வரத்தும், பருவ மழையும் இல்லாமல் போனதுதான்.
சட்டத்துக்கும், இயற்கை நியாயங்களுக்கும் புறம்பாக கர்நாடக அரசு நடந்து கொள்கிறது. அடாவடிச் செயல்பாடுகளால் நமக்கு நியாயமாகத் தர வேண்டிய தண்ணீரையும் தர மறுக்கிறது. விவசாயத்துக்குப் பாசன நீராக மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்படும் காவிரியின் உரிமையை மறுப்பதுதான் அண்டை மாநில அரசுக்கு அழகா?
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த நவம்பர் 4 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. "சென்னையில் வாழும் காவிரி மைந்தர்கள்' என்ற அமைப்பு இதனை முன்னின்று நடத்தியது.
விவசாயத்துக்கு மட்டுமன்றி, தமிழகத்தின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகக் காவிரி விளங்குகிறது. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர்ப் பங்கீட்டுக் குழுவை அமைக்க வேண்டும்; அதன்மூலம் தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்ணாவிரதத்தின் நிறைவில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரிப் பிரச்னையில் அடுத்தக் கட்ட நடவடிக்கையைப் பற்றி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும், காவிரியிலிருந்து
தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் டிசம்பர் 14 அன்று நாடாளுமன்றம் எதிரே மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5-ஆம் தேதி காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இத்தீர்ப்பின்படி, கர்நாடக அரசு உரிய நீரைத் தருவதைக் கண்காணிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்ட பிறகு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை 2013 பிப்ரவரி 19-ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டது.
அதன்பிறகும், இரு அமைப்புகளையும் அமைக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால், தமிழகத்துக்கு உரிய நீர்ப் பங்கீட்டை கர்நாடக அரசு ஒழுங்காக வழங்குவது இல்லை. இதனால், தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதால் தமிழக அரசு அக்டோபர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அந்த மனுவில், "தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கடந்த செப்டம்பர் 30 வரை வழங்க வேண்டிய 45.327 டி.எம்.சி. நீரை பிலிகுண்டு நீர் அளவையிலிருந்து உடனே திறந்து விட வேண்டும்; அக்டோபர் 1-க்குப் பிறகு தர வேண்டிய உரிய நீர்ப் பங்கீட்டு அளவையும், முறையாகத் தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்; அதிக நீர்ப்பரப்பில் பயிர் சாகுபடி செய்வதைத் தடுக்கவும், உரிய நீரைத் தமிழகத்துக்குத் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேற்பார்வைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்' எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு, கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் இந்த வாரத்துக்கான நீதிமன்றப் பட்டியல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்றும், எனவே தமிழக அரசின் மனு, தீபாவளி விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அறிவித்துள்ளார்.
காவிரி நீர்ப் பிரச்னை என்பது ஒரு சில மாவட்டங்களின் பிரச்னை என்று குறைத்து மதிப்பிட முடியாது. தமிழகத்துக்கு உரிய தலையாயப் பிரச்னை
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உணவுத் தேவையும்,
குடிநீரின் தேவையும் இதில் அடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் விளைவிக்கப்படுகின்ற நெல் உற்பத்தியை ஒப்பிட்டால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் கணிசமான பங்களிப்பை அறிய முடியும்; அதனால்தான் அது "நெற்களஞ்சியம்' என்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"நீர் இன்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் போவதைப் போன்ற சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சென்னையில் மட்டுமல்ல, கடைக்கோடி குக்கிராமங்களிலும்கூட ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலையும் அவலத்தைப் பார்க்க வில்லையா?
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்குத் தரவேண்டிய உரிமையுடைய நீரை கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிரம்பி வழியும் நீர், அந்த அணை முதல் மேக்கேதாட்டு வரையிலான சுமார் 110 கி.மீ. தொலைவில் பெய்யும் மழைநீர் ஆகியவற்றையே தமிழகத்துக்குப் பெயரளவில் வழங்கி வருகிறது.
இப்போது இந்தப் பகுதியில் அணை கட்டுவதன் மூலம் இதுவரை தமிழகத்துக்குக் கிடைத்து வந்த உபரி நீரையும் கர்நாடக அரசு தடுத்துவிட முடிவெடுத்துள்ளது. இதனால், ஒரு சொட்டு நீர்கூட கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வராமல் தடுக்கப்பட்டு விடும்; தஞ்சை டெல்டா மாவட்டங்கள் வறண்டு போய்விடும்.
கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கடந்த 2014 நவம்பர் 11 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பெங்களூரு மக்களின் குடிநீருக்காகவும், புறநகர் மக்களின் மின்சாரத்துக்காகவும் மேக்கேதாட்டு என்ற இடத்திலும், மைசூரின் சுற்றுவட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட இருப்பதாக அறிவித்தார்.
இங்கு அமைக்கப்படவிருக்கும் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நிகரான கொள்ளளவு கொண்டதாக இருக்கும்; இதில் 48 டி.எம்.சி. வரை தண்ணீரைத் தேக்க முடியும். சுமார் 2,500 ஏக்கர் வனப் பகுதியில் அமைக்கப்படும்; இந்த அணை சமநிலை நீர்த்தேக்கம் என்ற வகையில் இருக்கும் என்று அவரது அறிவிப்பு தெரிவிக்கிறது.
"எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இந்தப் பகுதியில் அணை கட்டியே தீருவோம்' என்று கர்நாடக முதல்வர் உறுதியாகப் பேசி வருகிறார். இத்திட்டம் பெங்களூரு மக்களின் குடிநீருக்காக என்று கூறப்படுகிறது. குடிநீருக்காக என்று கூறினால் யாரும் மறுக்க மாட்டார்கள் என்பதால் இவ்விதம் கூறப்படுகிறது.
கர்நாடக அரசின் தலைமை சட்ட வழக்குரைஞரும், காவிரி டெல்டா திட்டத்தின் ஆலோசகருமான பாலி நாரிமன் இதுபற்றிக் கூறுவது என்ன தெரியுமா?
"கர்நாடக அரசு தற்போது பரிந்துரைத்துள்ள இந்தத் திட்டம், கர்நாடக அரசின் எல்லைக்குள் இருக்கிறது. காவிரி நதிநீரில் கர்நாடகத்துக்குச் சேர வேண்டிய நீரைத்தான் கர்நாடக அரசு பயன்படுத்தப்போகிறது. தமிழ்நாடு இதனைத் தடுப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்தத் திட்டம் காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறுவது ஆகாது.
மேலும், இது குடிநீர்த் திட்டம்தான். ஆகையால், மத்திய நீர் ஆணையம் இதற்கு அனுமதி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த மேக்கேதாட்டு அணை பற்றிய அறிவிப்பு என்பது, இது முதல் முறை அல்ல; 1967-ஆம் ஆண்டு முதலே அறிவித்து வருகிறது. அப்போது இதற்கு 4,000 ஏக்கர் வனப் பகுதி தேவைப்படும் என அறிவித்த கர்நாடக அரசு, இப்போது அதனைக் குறைத்து 2,500 ஏக்கர் போதும் என்று கூறுகிறது. எப்படியாவது அனுமதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் மனுச் செய்து வந்துள்ளது. இந்தக் காலங்களில் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் இருந்துள்ளது. இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்து வருகிறது.
என்றாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பதில் கர்நாடக அரசுகள் ஒரே கருத்துடனேயே செயல்படுகின்றன. இதனை அவர்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துகின்றன என்பதைத் தவிர வேறு என்ன?
காவிரியில் தமிழக உரிமையை மறுக்கும் போதெல்லாம் "ஒகேனக்கல் யாருக்கு?' என்ற புதிய பிரச்னையையும் கிளப்புகின்றனர். 2014 டிசம்பர் 6 அன்று மாதேஸ்வரம் மலைக்குச் சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா இது பற்றிப் பேசியுள்ளார்.
"ஒகேனக்கல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள 50 ஆண்டு கால பிரச்னையைத் தீர்க்க கர்நாடக அரசுத் தயாராக உள்ளது. தமிழகம்தான் ஒத்துழைக்க மறுக்கிறது' என்று பேசியுள்ளார்.
ஒகேனக்கலைத் தமிழகம் ஆக்கிரமித்து விட்டதுபோல பொய்யாகப் பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மக்களுக்குத் தண்ணீரைத் தர மறுப்பதற்குக் காரணங்களைத் தேடி அலைகின்றனர்.
இவ்வாறு நாம் நமது பாரம்பரியக் காவிரித் தண்ணீர் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, மறுபக்கத்தைக் காண மறுக்கிறோம். இங்கே இருக்கிற ஆறுகளையும், ஏரி, குளம், குட்டைகளையும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோமா என்றால் "இல்லை' என்று கண்ணை மூடிக் கொண்டு கூறலாம்.
தொழில்சாலைக் கழிவுகளாலும், குப்பைகளாலும் நமது நீர்நிலைகள் சாக்கடைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் உதவாமல் நச்சுநீராக மாறிப் போனதற்கு யார் காரணம்? நாம் குடித்து, குளித்து, நீச்சல் அடித்து கும்மாளம் போட்ட நீர்நிலைகளா இவை? நம் கண் எதிரே ஓர் அழிவு நடந்து முடிந்து விட்டதே!
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.