தேசம் என்பது என்ன? மண்ணும் மலைகளுமா? நதிகளும், கடல்களுமா? குளங்களும் ஏரிகளுமா? காடுகளும் விலங்குகளுமா? இல்லை, இல்லவே இல்லை; ரத்தமும் சதையுமாக, உடலும் உயிருமாக வாழும் அந்த நாட்டு மக்களையே குறிக்கும். இந்த மக்களை நேசிக்காமல் நாட்டை நேசிக்க முடியாது.
இதையே சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவைப் பிராட்டி பாடுகிறார். "நாடாக இருக்கலாம்; காடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம்; மேடாக இருக்கலாம்; அதனால் பெருமை ஏதும் இல்லை; எங்கு நல்ல மக்கள் வாழ்கிறார்களோ அந்த நாடே நல்ல நாடாகும்' என்பது அவர் கருத்தாகும்.
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'
என்று புறப் பாடல் பேசுகிறது.
இல்லாமை இல்லாத தேசமே உயர்வானது; அங்கே போட்டியில்லை; பொறாமை இல்லை; சாதி, மத, இனப் பூசல் இல்லை. அமைதியான வாழ்க்கையே அருமையான நாடாகும்.
நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருப்பதால் இல்லாதவர், இருக்கின்றவர் என்ற வேறுபட்ட நிலையே இல்லை என்பதை,
"எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம்
எய்த லாலே
இல்லாரும் இல்லை உடையாரும்
இல்லை மாதோ!'
என்று கம்பர் பாடி சிறந்த நாட்டுக்கு இலக்கணம் வகுக்கிறார்.
நமது நாடும் இப்படிப்பட்ட சிறந்த நாடாக மாற வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகள் ஏறுக்கு மாறாக இருக்கின்றன.
இந்தப் பெரிய துணைக் கண்டத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்கள் நாட்டு நலனின் அக்கறை கொண்டோரை வருத்தமடையச் செய்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக அளவில் இந்தியாவுக்கு அவப் பெயரை உருவாக்க சதி நடப்பதாகக் கூறுகின்றனர்.
இதுபற்றி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வருத்தம் தெரிவித்துள்ளார். "நமது நாகரிகமானது வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றைக் கொண்டது. அவை வீணாவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் பழைமையான பல்வேறு நாகரிகங்கள் அழிந்து விட்டன என்றும், ஆனால் தொடர்ச்சியானப் பல ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தும், நீண்டகாலமாக வெளிநாட்டினரின் ஆட்சியின் கீழ் இருந்தும் இந்திய நாகரிகத்துக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார். மக்கள் வெப்ப மிகுதியால் தவித்தபோது, மழை பொழிந்தது போல இருந்தது என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
"உலகின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட நாடு, சாதி, சமயப் பூசலால் சிதறுண்டு போகக் கூடாது என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்' என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர்; என்றாலும் இந்த எச்சரிக்கைகளை மீறி சில சம்பவங்கள் அப்போதைக்கப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதனை பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளாமல் மெüனம் சாதிக்கிறார் என்று அனைத்துத் தரப்பிலும் இருந்து கேள்விகள் எழுந்தன. இப்போது அவரும் குடியரசுத் தலைவரின் உரையை வழிமொழிந்துள்ளார்.
"தாத்ரி சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியபோது வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது அறிவுரையை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும்' என்று பிரதமர் மோடி பிகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பரப்புரை செய்தபோது பேசியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுவதா அல்லது வறுமைக்கு எதிராகப் போராடுவதா என்பதை இந்துக்கள் சிந்திக்க வேண்டும் என்றும், அதேபோல இந்துக்களுக்கு எதிராகப் போராடுவதா அல்லது வறுமைக்கு எதிராகப் போராடுவதா என்பதை முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும் என்றும், இந்து } முஸ்லிம் இருவருமே தங்களது பொது எதிரியான வறுமைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சில அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் நலன்களுக்காகப் பொறுப்பற்ற வகையில் பேசுவர் என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், பிரதமரான தமக்குள்ள பொறுப்பினை வசதியாக மறந்து விடுகிறார் அல்லது தவிர்த்து விடுகிறார் என்பதுதான் அவரைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனமாகும்.
சட்டம், ஒழுங்கு என்பது அடிப்படையில் மாநிலம் சார்ந்தது என்றாலும், உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் அண்மையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது உள்பட நாடு முழுவதும் மதவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தது கவலையளிக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மதச் சார்பற்ற தன்மையை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
நாட்டில் நடக்கும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்களைக் கண்டு மத்திய அரசு மெüனம் சாதிப்பதற்கு எதிராக எழுத்தாளர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல், அசோக் வாஜ்பாய் மற்றும் சாரா ஜோசப் தங்களது விருதுகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பலர் அறிவித்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் நாள் கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய எழுத்தாளர் கலபுர்கி தார்வாடில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து அவருடன் கர்நாடக சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற 6 பேர் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர்.
சமூகத்தில் மாறுபட்ட கருத்துகளை சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து வருவதாலும், அவ்வாறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அளிப்பதாக நயன்தாரா ஷகல் தெரிவித்துள்ளார்.
"ரிச் லைக் அஸ்' என்ற ஆங்கில நாவலுக்காக 1986-ஆம் ஆண்டு அவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவரான விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான இவர், அவசர நிலைப் பிரகடனத்தை இந்திரா காந்தி நடைமுறைப்படுத்தியபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரைத் தொடர்ந்து கருத்துரிமை மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அசோக் வாஜ்பேயி சிறந்த கவிஞரும், லலித் கலா அகாதெமியின் முன்னாள் தலைவரும் ஆவார். மலையாள நாவலாசிரியரான சாரா ஜோசப் "ஆலாஹயுடெ பெண்மக்கள்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இவ்வாறு இந்தப் பட்டியல் தொடர்கிறது.
நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதலை அவர்கள் கண்டித்துள்ளனர். எழுத்தாளர்களின் இத்தகைய எதிர்வினைகளை, சகிப்புத் தன்மையில்லாத வன்முறை நடவடிக்கையின் மீது தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்திலேயே இந்தியா உயர்ந்த நாகரிகம் கொண்டதாக இருந்தது என்று வீரத் துறவி விவேகானந்தர் கூறியுள்ளார்.
"நான் சென்ற ஒவ்வொரு நாட்டிலும் மதத்தின் பேரால் மிகுந்த கொடுமைகள் செய்யப்பட்டு வருவதைக் கண்டேன். மத விவகாரங்களில் ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுதல் இந்தியாவில்தான் இருக்கிறது; வேறு எங்கும் இல்லை...' என்று விவேகானந்தரால் பாராட்டப்பட்ட இந்தியா இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சாசனம் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. சமத்துவ உரிமை, சுதந்திர வாழ்வு பெறும் உரிமை, சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு உரிமை, விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் உரிமை, பண்பாட்டு - கல்வி உரிமைகள், சொத்துரிமை, அரசியல் அமைப்புக்கு உள்பட்டு பரிகாரம் தேடுகிற உரிமை இவைகளைச் சொல்லலாம்.
நாட்டு நலனில் அக்கறை கொண்ட அரசியல் விற்பன்னர்கள் பல காலம் யோசித்து திட்டமிட்டு உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறவர்களை எந்தப் பட்டியலில் சேர்க்கலாம்?
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு இருக்கிறதா, இல்லையா?
"இந்தியா ஒரு பெரிய நாடு. அது அளவில் பெரிய நாடு என்பதால் அது பெரிதாகக் கருதப்படவில்லை. இந்திய மக்கள் எண்ணத்தில் பெரியவர்களாய், இதயத்தில் பெரியவர்களாய், சிந்தனையில் பெரியவர்களாய், செயலில் பெரியவர்களாய் இருக்க வேண்டும்' என்று நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு கூறியதை இப்போது நாம் நினைவு கூர வேண்டும்.
நாட்டின் பழம் பெருமைகளை மீட்டெடுக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நல்லிணக்கம் இல்லாமல் நாடு ஏது?
நாட்டின் உயர்வு என்பது பேச்சுகளில் இல்லை; செயல்பாடுகளில்தான் இருக்கிறது.
"உலகின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட நாடு, சாதி, சமயப் பூசலால் சிதறுண்டு போகக் கூடாது என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்' என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர்; என்றாலும் இந்த எச்சரிக்கையை மீறி சில சம்பவங்கள் அப்போதைக்கப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.