தேர்தல் கூட்டணி: கொள்கையா, குழப்பமா?

இந்தியா ஏழை நாடு என்னும் முத்திரை ஒரு பக்கம். வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் இந்தியா என்னும் பெருமை மறுபக்கம்.
தேர்தல் கூட்டணி: கொள்கையா, குழப்பமா?

இந்தியா ஏழை நாடு என்னும் முத்திரை ஒரு பக்கம். வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் இந்தியா என்னும் பெருமை மறுபக்கம். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் இந்தியாவில் 1,866 கட்சிகள் உலா வருகின்றன. கட்சிகளின் பெருக்கமும் கூட்டணித் தத்துவமும் இந்திய ஜனநாயகத்திற்கு வலிமையும் அழகும் சேர்க்குமா? மக்களின் மனவோட்டத்தை முழுதும் எதிரொலிக்குமா? என்பவை சிந்தனைக்குரியவை ஆகும்.
 ஒருமுறை இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது, இந்தியாவைப் பற்றி அவரிடம் கருத்துக் கேட்டனர். இந்திய மக்கள் பாவம், துணிகளைக் காயவைப்பதற்கு இடமில்லாமல், கம்புகளை நட்டு அதில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்று கூறினாராம். அவை உலர்த்தப்பட்டிருக்கும் துணிகள் அல்ல. இந்திய நாட்டின் அரசியல் கட்சிக் கொடிகள் என்று அவருக்கு விளக்கப்பட்டதாகக் கவிஞர் கண்ணதாசன் நகைச்சுவையாகக் கூறினார் என்பர். அந்த அளவிற்குக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
 இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 நடுவண் அரசு ஆட்சிப் பகுதிகள் உள்ளன. இந்த ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களிலும் 2014-ஆம் ஆண்டு கணக்கின்படி 1,761 கட்சிகள் களத்தில் இருந்தன. இவற்றுள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை 55 ஆகும். அதில் தேசியக் கட்சிகள் 6. மாநிலக் கட்சிகள் 49. பிற 1,706 கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறாதவை. அயல்நாடுகளில் இதுபோன்று காணமுடியாது.
 தேசியக் கட்சிகள் மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களுள் இரண்டு விழுக்காடு அல்லது பதிவான வாக்குகளுள் ஆறு விழுக்காட்டினைப் பெற வேண்டும். அதுபோல, மாநிலக் கட்சிகள் மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்களுள் மூன்று விழுக்காடு அல்லது மூன்று உறுப்பினர்கள் அல்லது பதிவான வாக்குகளுள் 8 விழுக்காட்டினைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகுதிகளைப் பெறும் கட்சிகளே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. இத்தகுதியை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் அதிகக் கட்சிகளைக் கொண்டது உத்தரப் பிரதேச மாநிலமாகும். தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
 கட்சிகளின் பெருக்கத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் அரசியல் ஆதாயம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல், பதவி மோகம், அளவற்ற சொத்துகளுக்குப் பாதுகாப்புத் தேடுதல், குறுகிய காலத்தில் கோடிகளைக் காணும் வேட்கை முதலியவை அடங்கும். பெரிய கட்சிகளோடு பேர உடன்பாடு போன்ற காரணங்களை முன்வைத்து மழையில் பூத்த காளான்களாகக் கட்சிகள் உதயமாகின்றன. சில கட்சிகள் ஈசல்களைப் போல தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகின்றன.
 தேசத்தைப் புறம்தள்ளி ஜாதியத்தையும் மதத்தையும் சுவாசிக்கும் கட்சிகள் அவற்றைப் பரப்பவும் கற்றுக்கொடுக்கவும் வெளிப்படையாக முயல்கின்றன. ஜனநாயகப் பாதையில் பூக்களை அப்புறப்படுத்திவிட்டு முள்விதைகளை ஊன்றவும் முற்படுகின்றன. இனநலன் என்னும் இனிப்பில் ஜாதி உணர்ச்சி என்னும் உயிர்க் கொல்லியைக் கலந்து அரசியலில் தடம் பதிக்கும் புதிய கலாசாரத்திற்கு இந்திய ஜனநாயகம் இடம்கொடுத்து வருகிறது.
 சமூக நலன், சமூக நீதி, நாட்டின் வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு போன்ற காரணங்களை முன்வைத்துத் தொடங்கப்படும் கட்சிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு.
 ஒரு கட்சியில் இருந்து பிரிந்து செல்பவர் புதிய கட்சி தொடங்குவதற்குரிய காரணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். ஒன்று, கட்சியில் குறிப்பிட்ட ஒருவருக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தரப்படுவது. இரண்டாவது, நீண்ட காலம் ஒரு கட்சியில் இருந்தும் கட்சிப் பொறுப்புகளோ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளோ வழங்கப்படாமை.
 மூன்றாவது, கட்சித் தலைமைக்கும் பிரிந்து செல்பவர்க்கும் இடையிலான சொந்தப் பகைமை அல்லது கருத்து வேறுபாடு. நான்காவது, ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கும் மனப்பாங்கு. ஐந்தாவது, ஒரு முதலாளியிடம் வேலை பார்ப்பவர் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானும் முதலாளியாக வேண்டும் என்னும் வேட்கை. இப்படிப் பல பின்னணிகளைக் கொண்டு கட்சிகள் உருவாகின்றன.
 அவ்வாறு உருவாகும் புதிய கட்சிகளால் இந்தியப் பொருளாதாரம் சிதைவுக்குள்ளாகிறது. வாக்குச் சிதைவும், அதன் வழி அறுதிப்பெரும்பான்மையை எட்டமுடியாத நிலையும் சில நேரங்களில் ஏற்பட்டுவிடுகின்றன. தேர்தல் காலங்களில் பயன்பெறலாம் என்பதற்காகவே பதிவு பெறாத பல கட்சிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. ஒரு தனிக்கட்சியை நடத்துவது எளிதன்று. பொருளாதாரத் தேவை, காலூன்றிச் செல்வாக்கை எட்டுவதற்குத் தொண்டர்கள், நடைமுறைத் தேவைகளை ஈடுசெய்வதற்கு நன்கொடைகள் போன்றவற்றைப் பெறவேண்டியுள்ளது.
 ஒரு வியாபாரி மனம் வெதும்பி கூறுகிறார்: இந்த நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பதே தெரியவில்லை. பத்து பேர் கூட்டமாக வந்து ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி நன்கொடை கேட்கிறார்கள். நாங்களும் எத்தனை பேருக்குத்தான், எத்தனை தடவைதான் எடுத்துக் கொடுப்பது என்று சலிப்புடன் கூறியதையும் நாம் தள்ளிவிட முடியாது.
 ஒரு ஜனநாயக நாட்டில் புதிய கட்சிகள் தொடங்குவது தவிர்க்க முடியாதது என்று வாதிடலாம். இயக்கம் உருவாவது வரலாற்றுக்கு முரண்பட்டதன்று. ஓர் இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் இயக்கங்கள் பிறக்கவே செய்யும். அவை காலவெள்ளத்தைக் கடப்பதற்கு உதவும் பரிசல்கள் என எண்ண வேண்டும்.
 ஆனால், இந்தியாவில் கட்சிகள் தொடங்குவது குடிசைத் தொழிலாகிவிட்டது. எத்தனை கட்சிகள் தோன்றினாலும் கொள்கைகளில் புரட்சியோ புதுமையோ தென்படுவதில்லை. மக்கள் நலனுக்காகவே பாடுபடுவதாக எல்லோரும் கூறிக்கொள்கிறார்கள். அப்படியானால், இத்தனைக் கட்சிகள் எதற்கு? இவர்களின் நோக்கமும் தாகமும் பொருள் நோக்கமே எனில் தவறாகாது.
 அன்று சேவை மனப்பான்மையும் தியாகச் சிந்தனையும் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். மக்களோடு பயணம் செய்தார்கள். மக்கள் மனதில் கருத்துகளை விதைத்தார்கள். பல்வேறு இன மக்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு விழிப்புணர்வு நல்கினார்கள். உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டப் பாதையில் மக்களை உண்மையாகவே அழைத்துச் சென்றார்கள். அவர்கள் தொடங்கிய இயக்கங்களின் கொள்கையில் உறுதிப்பாடு வெளிப்பட்டது. தொலைநோக்குச் சித்தாந்தம் புதைந்திருந்தது. அந்த உயரிய பண்புகளை இன்று பல கட்சிகள் உதிர்த்து வருகின்றன.
 தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் தேர்தல் தளத்தில் தடம் பதித்ததில்லை. ஆனால், தன் புரட்சிகரத் தத்துவங்களால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாமனிதருள் ஒருவராகத் திகழ்கிறார் பெரியார். அதுபோன்று இயக்கம், அமைப்பு, சங்கம், மன்றம், பேரவை என்று பல வடிவங்களில் செயல்படலாம். தேர்தல் காலங்களில் பயனுள்ள கட்சிக்கு ஆதரவு கொடுத்து உதவலாம். மற்ற நேரங்களில் மக்களின் குரலாக ஒலிக்கலாம். அதனை விடுத்துக் கட்சிகளாகப் பரிணமிக்க எண்ணுவது மக்கள் நலனுக்கா என்னும் கேள்வி எழுகிறது.
 கட்சிகளின் பெருக்கம், கூட்டணி அமைப்பதற்கு உதவலாமே தவிர, ஆரோக்கியமான அரசியலுக்கும் மக்கள் தொண்டிற்கும் ஒருபோதும் பயன்படாது. அதிகாரம் செலுத்த ஆட்சி, ஆட்சி அமைக்க அரசியல், அரசியல் வளர்க்க ஜாதியமைப்பு, அந்த அமைப்பை வலுப்படுத்த மாநாடு, பேரணி, ஊர்வலம் என்பவையே இன்றைய இயக்கங்களின் தத்துவமாக உள்ளன.
 கூட்டத்தைக் காட்டிச் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளக் கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகின்றன. இந்த மாநாடுகளால் மக்கள் பெறும் பயன் என்ன? கோடிகளைக் கொட்டி இறைப்பதும் கட்சிப் பணம் என்றாலும் அதுவும் மக்களிடமிருந்து வலிந்து பெறப்பட்டதுதானே? அந்தப் பணத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆண்டுக்குப் பத்து கிராமங்களைத் தத்தெடுத்துச் செயல்பட்டால், பல கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாகுமே.
 கூட்டணி அமைப்பதற்கு முன்பு தொண்டர்களைத் திரட்டுகிறார்கள். கூட்டணி அமைப்பதற்கு அதிகாரத்தைப் பெற்றதாகப் பறைசாற்றுகிறார்கள். அது வாக்கெடுப்பு வழி உறுதி செய்யப்பட்டது அல்லவே. கூட்டணி முடிவு கொள்கை நோக்கில் எனில் ஏற்கலாம். எதிரணியை வீழ்த்துவதற்கும் மாற்றத்தை உருவாக்குவதற்கும் எனில் ஏற்புடையதன்று.
 தலைவர்களால் எடுக்கப்படும் கூட்டணி முடிவு வாக்காளர்கள் மீது திணிக்கப்படுகிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளைத் தெரிந்து கொண்டுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று வாதிடலாம். உண்மை அதுவன்று. பலருக்குக் கூட்டணியில் சேர்ந்துள்ள சில கட்சிகளைப் பிடிக்காமல் போகலாம். ஆனால், தான் சார்ந்துள்ள கட்சியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காகச் சகித்துக் கொண்டு வாக்களிப்பவர்களும் உண்டு.
 தேர்தல் கூட்டணி என்பது மக்களின் முழு இசைவையும் பெற்றுள்ளது என்று கூறமுடியாது. ஜனநாயகப் போர்வையை உடுத்திக் கொள்வதில் பெருமையில்லை. வேர்களுக்கு உரமிடமால் இலையின் மீது மருந்து தெளித்து செடியின் வாட்டத்தைப் போக்க முடியாது. காயத்திற்கு மருந்து போடாமல் கட்டுகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருந்தால் நோய் நீங்காது.
 தளம் சரியாக இருந்து இழுப்பவர் பலம் ஒன்றுபட்டால் தான் தேர் ஒழுங்காக நிலைக்கு வந்துசேரும். ஜனநாயகத்தின் தேர்தல் தளத்தில் பழுதுள்ளது. அது சீர்செய்யப் பெறவேண்டும். அதனை இழுக்கும் மக்களின் பலமும் ஒன்றுபடவேண்டும். எனவே நமது ஜனநாயகம் நூற்றுக்கு நூறு மணக்கவில்லை என்று சொன்னால் தவறில்லை.
 நமது தேர்தல் ஜனநாயகம் தழைக்கச் சில விதிமுறைகளை மாற்றியமைத்து எதிர் காலத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். நாடு முழுவதும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பெற்று தேசியக் கட்சிகளை மூன்றாகவும் மாநிலக் கட்சிகளை ஐந்தாகவும் குறைக்க வேண்டும். மற்ற கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தம்மை இணைத்துக்கொண்டு செயல்படுவதே விரும்பத்தக்கது. அதற்கு வழியில்லையெனில் கலைத்துவிட்டு நற்பணிகளைத் தொடரலாம்.
 அடுத்து, தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கண்கட்டி வித்தைகளால் ஜனநாயத்திற்குப் பெருமை இல்லை. மேலும், வாக்காளர்களின் முழு மனவோட்டத்தையும் எதிரொலிப்பது ஆகாது. எனவே, அவரவர்களும் தனித்துப் போட்டியிட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் சட்டப் பேரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்று பணியாற்றும் வகையில் பிரதிநிதித்துவ நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.
 ஊர் கூடித் தேர் இழுத்தால் அழகு. ஆனால், கூட்டணி என்னும் பெயரில் ஜனநாயகத் தேர் சிதைந்து வருகிறது என்பதுதான் உள்ளார்ந்த பொருள்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com