ஷேக்ஸ்பியரும் இந்தியாவும்...
"உலகமே ஒரு நாடக மேடை' என்று கூறி, உலகத்தையே தன் முப்பத்தாறு நாடகங்களில் படம்பிடித்துக் காட்டிய ஷேக்ஸ்பியர், ஒரு உலகக் குடிமகனாவார்.


"உலகமே ஒரு நாடக மேடை' என்று கூறி, உலகத்தையே தன் முப்பத்தாறு நாடகங்களில் படம்பிடித்துக் காட்டிய ஷேக்ஸ்பியர், ஒரு உலகக் குடிமகனாவார். அவருடைய நாடகங்களை உலகமெல்லாம் நடித்தும், படித்தும், அவற்றைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்தியரும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை காலனியாட்சி காலத்திலிருந்தே படித்துப் பார்த்து மகிழ்ந்ததோடு அவற்றுக்கும் இந்திய மனத்துக்கும் உள்ள ஒற்றுமைகளையும் உணர்ந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியர், எடுத்த எடுப்பிலேயே ஷேக்ஸ்பியரில் இந்திய மனப் பண்புகளைக் கண்டுள்ளனர். அதனால்தான் அவர், இந்தியருக்கு ஒரு கண்டுபிடிப்பு அல்ல. ஒரு மீள் பெறுதல் (not a discovery, but a recovery) என்பர். "ஷேக்ஸ்பியர்' இந்தியாவுக்கு வந்தார், "ஷேக்ஸ்பியர் கீழ்திசைக் கவிஞரானார்' என்ற தலைப்புகளில் நூல்கள் வந்துள்ளன. இந்தியா ஷேக்ஸ்பியரை சுவீகரித்துக் கொண்டதில் வியப்பில்லை.
காந்திஜி அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால, விந்தை இன்ப நாடகங்கள் (Romantic comedies) இந்தியர்களை அவ்வளவு கவரவில்லை என்று சி.டி.நரசிம்மையா என்ற பிரபல இந்தியத் திறனாய்வாளர் கூறுகிறார்.
ஆனால், அந்த நாடகங்களில் ஷேக்ஸ்பியர் காதலை ஓர் அதிசயமாக, பொற்காலப் புதுமையாக மட்டுமல்ல, வாழ்வின் அடிநாதமாக காட்டியுள்ளார். அதனால்தான், அவருடைய "பன்னிரண்டாம் இரவு' இந்தியர்களைக் கவர்ந்துள்ளது.
மேலும், இந்த நாடகத்திலும் மற்ற இன்பியல் நாடகங்களிலும் பெண்கள் ஆணுடையில் வந்து, அவர்களது சுயத்தை அடையாளம் காட்டியுள்ளார். அதனால்தான், ஷேக்ஸ்பியரில் தலைவர்கள் இல்லை; தலைவியர்தாம் உள்ளனர் என்று ரஸ்கின் கூறினார். இந்த மாறுவேடத்தை நல்ல உத்தியாகவும் இந்தியத் திரைப்படங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான இன்னொரு இன்பியல் நாடகம் "வெனிஸ் நகர வணிகன்'. அதிலும், அதன் தலைவி ஆண் வேடம் புனைந்து, நீதிமன்றத்தில் வாதாடி தன் காதலனை மீட்கிறாள். அது இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்ததற்கு முக்கியக் காரணம், அது பொருளை அன்பைவிட மதிக்கும் ஷைலக் என்ற யூதருக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே உள்ள போராட்டத்தைச் சித்திரிப்பதே.
இறுதியில், அது நீதியை விட கருணை மேல் என்று காட்டுகிறது. இந்த அற உணர்வு இந்திய மனத்துக்கு ஏற்றதாக இருந்தது. அதேசமயத்தில், கடைசியில் ஷைலக்கிடம் போர்ஷியா கருணை காட்டவில்லை. இப்படி இரு தரப்பையும் சமமாகக் காட்டுவதுதான் ஷேக்ஸ்பியரின் பெருமைக்குக் காரணம்.
அவரது வரலாற்று, அரசியல் நாடகங்களில், "ஜுலியஸ் சீசர்' இந்திய மக்களிடமும் மாணவர்களிடமும் மிகவும் விரும்பப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும், சீசருக்கும் ப்ரூட்டசுக்குமிடையே ஆன போராட்டம் என்பது மட்டுமல்ல, ப்ரூட்டஸ் நாட்டுக்காக நண்பனுக்குத் துரோகமிழைத்ததைக் காட்டுவதும்தான்.
ஷேக்ஸ்பியருக்கு, அரசியல் சித்தாந்தங்களைவிட, மனிதம் முக்கியமானது.இதையே, "நீயுமா ப்ரூட்டஸ்?' என்ற கூற்று காட்டுகிறது.
ஷேக்ஸ்பியரின் மிகச் சிறந்த படைப்புகளான "ஒதெல்லோ', "ஹாம்லெட்', "லியர் அரசன்', "மாக்பெத்' ஆகிய துன்பியல் நாடகங்களும் இந்தியர்களை மிகுதியாகக் கவர்ந்துள்ளன. துன்பியல் இலக்கியங்கள் இங்கே இல்லாததனால், அந்த வெற்றிடத்தை இவை நிரப்புவதாகச் சிலர் கூறுவர். ஆனால், துன்பத்தால் வாழ்க்கை தூய்மையும் முழுமையும் பெறுகிறது என்ற தத்துவம்தான் இந்தியர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும்.
மேலும், ஒதெல்லோ, அன்பு மிகுதியால்தான் தன் மனைவி டெஸ்டிமோனாவைக் கொல்கிறான். இது மறத்துக்கும் அன்பே துணை என்ற குறளின் விளக்கமாக உள்ளது. மேலும் லியர் அரசன், தன் கடைசி மகள் கார்டீலியாவோடு, கடைசியில் சேர்ந்தவுடன் அவள் கொல்லப்பட்டாலும், அவள் உயிருடன் இருப்பதாகவே கருதி இறப்பது, அவன் ஆனந்தத்தில் அன்பு சாவையும் வெல்லும் என்பதையே காட்டுகிறது.
"இருப்பதா, இறப்பதா' என்ற அடிப்படை வினாவை எழுப்பும் ஹாம்லெட், தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழி வாங்க முடியாமல், செயலற்றிருப்பதற்கு, அவனது மிகுதியான சிந்தனையும் மனச்சாட்சியுமே காரணம்.
ஹாம்லெட்டும் இறுதியில் அவனது எதிரிகள் சூழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்த "விளையாட்டுச்' சண்டையிலே, "தான்' என்பதை மறந்து விளையாட்டாகப் போரிட்டு, பழி வாங்குவதோடு, பாவத்திலிருந்தும் விடுபடுகிறான், அர்ஜுனனைப்போல். சம்பந்த முதலியாரின் மனோகராவில் மூலத்தில் போலில்லாமல், அவனது சிற்றன்னை தீயவளாகக் காட்டப்படுவது, தமிழ் மரபுக்கேற்ற மாற்றம்.
ஷேக்ஸ்பியரின் மாக்பத்தில் மகாபாரதத்தில்போல் நன்மையும் தீமையும் நெருங்கிய உறவினர்களாக உள்ளன. அரச பதவி ஆசையினால், பாவங்கள் பல செய்து, பிறகு தன் மனைவியிடமிருந்தே தனிமைப்படுத்தப்பட்டு, தன் எதிரியை சரியாக மதிப்பீடு செய்யாமல் சண்டைக்குப் போய் வீழ்ச்சியடையும் மாக்பத், பெண்ணாசையினால் தவறுகள் செய்து, தன் உறவுகளையும் பிள்ளைகளையும் இழந்து, ராமனை ஒரு சாதாரண மானுடனாகக் கருதிப் போருக்குச் சென்று வீழ்ந்த ராவணனை நினைவுபடுத்துகிறான்.
இறுதியாக, ஷேக்ஸ்பியரின் கடைசிக் கட்ட நாடகங்களான "புயல்', "ஒரு குளிர்காலக் கதை', "சிம்பலின்', "பெரிக்ளீஸ்' ஆகியவைகளில் எளிமையும், இனிமையும் மிளிர்கின்றன. அவருடைய இன்பியல் நாடகங்களில், ஆண்களும் பெண்களும் மோதுகின்றனர். அவருடைய வரலாற்று நாடகங்களில் அரசரோடு அரசர்கள் மோதுகின்றனர். துன்பியல் நாடகங்களில் மனிதன் விதியோடு மோதுகின்றான். ஆனால், இறுதி நாடகங்களில் மோதல்கள் கடந்த முழுமை தெரிகிறது.
வாழ்வின் அடிப்படை பழி வாங்குவதல்ல, மன்னிப்பது என்று "புயல்' நாடகம் கூறுகிறது. இங்கு மூத்த தலைமுறையில் ஏற்பட்ட குழப்பங்கள், இளைய தலைமுறைகளின் தூய காதலால் மறைந்து, பிரிந்தவர்கள் இணைகிறார்கள்.
இவற்றில் வாழ்வின் புத்துயிர்ப்பு, இயற்கையின் இறவாமையோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் காளிதாசனின் சகுந்தலையோடு, புயல் நாடகத்தின் மிராண்டாவும், குளிர்காலக் கதையின் பெர்டிதாவும் ஒப்பிடப்படுகிறார்கள்.
காளிதாசனின் நாடகங்களுக்கும் ஷேக்ஸ்பியரின் கடைசிகால நாடகங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
மொத்தத்தில், ஷேக்ஸ்பியரின் வாழ்வு ஏற்புத் தத்துவம், அசாதாரணச் சிக்கல்களையும் அழகையும் சாதாரண மனிதர்கள் மூலம் காட்டும் ஆற்றல், கவித்துவம், இங்கிலாந்தில் தோன்றிய அவரை இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற மகாகவியாக உயர்த்தியுள்ளன.
ஏப்ரல் 23 - ஷேக்ஸ்பியரின்
400-ஆவது நினைவு நாள்.
கட்டுரையாளர்:
முனைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...