கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் ஆகிய உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-இல் அறிவித்ததையடுத்து, பதுக்கல்காரர்களைவிட அதிகமாக அதிர்ச்சி அடைந்திருப்பவர்கள் அவரது அரசியல் எதிரிகள்தான்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் எல்லை தாண்டி துல்லியத் தாக்குதல் நடத்திய நாளிலிருந்து (செப்டம்பர் 29) ஒருவார காலத்துக்குள், மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கருப்புப் பணத்துக்கு எதிரான துல்லியத் தாக்குதல் விரைவில் அரசால் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள "உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்து விட்டன' என்ற திட்டத்தால், பணத்தை மாற்ற மக்கள் வங்கிகள் முன்பு பல நாள்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இதிலிருந்து, மோடியின் அறிவிப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு இயந்திரம் இயங்கவில்லை என்பதும், சரியான ஒருங்கிணைப்புடன் திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி இத்திட்டத்தை அறிவித்தபோது, நாடு முழுவதும் பரவலாக மக்கள் இதனை வெகுவாக ஆதரித்தனர். யாருக்கும் மோடியின் திட்டம் மீது சந்தேகமில்லை.
இதற்கு முன் நாடு முழுவதிலுமுள்ள மக்களிடமிருந்து இத்தகைய வரவேற்பை எந்த இந்தியப் பிரதமரும் பெற்றதில்லை என்பது உண்மைதான். இத்தனைக்கும் பணப் புழக்கம் ஒரேநாளில் திடீரென இறுக்கப்பட்டதால் மக்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டால் மக்கள் அடைந்த அவதியைப் பயன்படுத்தி அரசியல் நடத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவர்களது சூழ்ச்சி வலைக்குள் இதுவரை மக்கள் சிக்கவில்லை.
இருப்பினும், வரும் நாள்களில் மக்களின் சிரமத்தைக் குறைக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல் இரு வாரங்களில் இதை நடைமுறைப்படுத்திய விதத்தைக் கணிக்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகிறது.
இதுவரை இருந்த நேரு காலத்திய அமைப்பால் நிறுவப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளை சீர்திருத்தும் எண்ணம் கொண்ட, செயல்வேகம் மிகுந்த, மிகுந்த துடிப்புடன் சிந்திக்கக்கூடிய பிரதமரை நாடு தற்போது பெற்றிருக்கிறது.
அதே சமயம், தனது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதே வேகம் கொண்ட அரசு இயந்திரம் அவரிடம் இல்லை.
அரசு நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் பேசி வந்தாலும், கடந்த 70 ஆண்டுகளாக சோம்பிப் பழகிவிட்ட நிர்வாக இயந்திரத்தால் மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை.
தற்போதைய செல்லாத நோட்டு விவகாரம் பல இடையூறுகளைச் சந்தித்திருப்பதற்கு, பிரதமருடன் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்படாததே காரணம்.
பிரதமர் மோடி வெளிப்படையாகவே கருப்புப் பணத்துக்கு எதிரான போரைத் தொடங்கிவிட்டார். "பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்தவும், கருப்புப் பணத்தை ஒழிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் தொடர உள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது, இனிமேல்தான் பிரதமரின் மிக முக்கியமான அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளன. ஆனால்,
அவற்றை மேற்கொள்ள நமது அதிகார வர்க்கம் தயாராக உள்ளதா என்பது பெரிய கேள்விக்குறியே.
கடந்த மூன்று வார அனுபவங்களைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், அரசு இயந்திரத்தின் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தும் புதிய வியூகங்களின் தேவையை உணர முடிகிறது. இதற்கு உடனடியான ஒரே வழி, அரசு நிர்வாகத்துக்குள், மேலாண்மை நிபுணர்களை அனுமதிப்பதாகும்.
தற்போதைக்கு மிகச் சிறந்த மேலாண்மை நிபுணர்கள் அரசு நிர்வாகத்துக்கு வெளியேதான் அதிகமாக உள்ளனர்.
மோடியின் அதிரடி சீர்திருத்தத்தை ஏற்க நாடு தயங்கும் நிலையில், அரசுத் திட்டங்களை சிறந்த முறையில் வகிக்க, அதிகார வர்க்கத்துடன் தனியார் மேலாண்மை நிபுணர்களை இணையாக அனுமதிப்பது பயன்தரக் கூடும்.
இதற்கு இதுவரையிலான மந்தமான பாரம்பரிய நடைமுறையை உடைத்து, சிறந்த அறிவுஜீவிகளை தனியார் துறையிலிருந்து அரசு நிர்வாகத்தில் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு தொழில்நுட்பத் திறன்கள், மேலாண்மைப் பின்புலம் கொண்ட, பலதரப்பட்ட சேவைகளை அளிக்கும் அதிகாரிகள் அரசு நிர்வாகத்தில் உள்ளனரா என்பதைப் பரிசீலித்து, அந்த இடைவெளியை நிரப்பத் தேவையான மனிதவளத்தை வெளியிலிருந்து அரசுக்கு பெற பிரதமர் முயல வேண்டும்.
இதற்கு ஊரக சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் மிகுந்த, சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான திட்டங்களைக் கொண்ட தனிநபர்களை தனியார் துறையின் அடித்தளத்திலிருந்து மோடி தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், அமெரிக்க அதிபர் தனது அணியைத் தேர்வு செய்யும் முறையை நமது பிரதமர் மோடி பின்பற்றலாம்.
தற்போது அரசின் மேல்மட்டத்திலுள்ள பலரும், முன்னர் தனியார் துறையில் பிரகாசித்தவர்கள்தான். ஆனால், அவர்கள் அரசு நிர்வாகத்துக்கு வந்த பிறகு அதன் மந்தநிலைக்கு ஏற்றவாறு தாங்களும் மாறி, அப்படியே நீடித்து ஓய்வுபெறுகிறார்கள்.
இதற்கு மாறாகவே, அமெரிக்காவில் அரசு நிர்வாகத்துக்கு வெளியிலுள்ள புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
எனவே, தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனை பிரதமர் மோடி மேம்படுத்த விரும்பினாலோ, சீர்திருத்தம்
செய்ய நினைத்தாலோ, தனியார் துறையில் பிரகாசிக்கும் மேலாண்மை நிபுணர்களை அரசின் புதிய தேசியத் திட்டங்களில் நியமிப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும்.
ஆனால், வெளிப்புற நிபுணர்களை எதிர்க்கும் நிர்வாக இயந்திர மனோபாவம் இதற்கு தடையாகவே இருக்கும். அதை மோடியால் மாற்ற முடிந்தால், அரசுக்கு புதிய சக்தி கிடைக்கும்.
இந்தியாவில் அரசு நிர்வாகம், தனக்கு பக்கவாட்டில் புதிதாக நிபுணர்கள் நுழைவதை எளிதாக ஏற்காது. அவர்களைப் பொருத்தவரை, விருப்பமின்றியும்கூட அரசியல்வாதிகளின் மேலாதிக்கத்தை ஏற்கத் தயார். ஆனால், வெளிப்புற நிபுணர்கள் நுழைவதை அவர்கள் ஒருகாலும் ஏற்க மாட்டார்கள்.
அரசு ஊழியர்களின் சேவைக் காலம், அனுபவம், எந்த வருட "பேட்ச்' ஆகியவையே இங்கு பிரதானமாக உள்ளன. இந்தத் தகுதி இல்லாதவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் இடமில்லை என்பதே அவர்களின் கருத்து.
ஆனால், மோடி விரும்பும் புதிய இந்தியாவை உருவாக்க, துடிப்பான புதிய நிர்வாக அமைப்பு கண்டிப்பாகத் தேவை.
தற்போதைய நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வு, மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை நன்கு உணர்ந்த அரசு அதிகாரிகளும், வெளியிலுள்ள மேலாண்மை நிபுணர்களும் அரசு நிர்வாகத்தில் சங்கமிப்பதுதான்.
அதாவது, பழைமையான மனிதவளமும் புதிய துடிப்பான மனிதசக்தியும் கலந்ததாக அது இருக்கும். தவிர, பாரம்பரியமும் முற்போக்கும் கலந்ததாகவும் அது விளங்கும்.
இதை நிறைவேற்ற வேண்டுமானால், தற்போதைய நிர்வாக நடைமுறையை பிரதமர் மோடி அதிரடியாக மாற்றியாக வேண்டும். அரசு இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக அவர் மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.
பிரதமர் மோடியின் அடுத்த துல்லியத் தாக்குதல் இதுவாகவே இருக்க வேண்டும்.
தொல்லை கொடுக்கும் எதிரி நாடு, உள்நாட்டு கருப்புப் பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான துல்லியத் தாக்குதல்களுக்கு அடுத்ததாக, மந்தமான அரசு நிர்வாகம் மீதான துல்லியத் தாக்குதலையே பிரதமர் நடத்த வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது.
இரண்டு துல்லியத் தாக்குதல்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய நமது பிரதமர் நரேந்திர மோடி இதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
கட்டுரையாளர்:
தலைவர், பிரஸார் பாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







