தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

காவலரும் மக்களும்

நாட்டில் பொது அமைதியைப் பராமரிக்க உருவாக்கப்பட்டது காவல் துறை. அது நிர்வாக முறையில் பல அடுக்குகளைக் கொண்டது.

Updated On :24 ஜூலை 2016, 8:15 pm

நாட்டில் பொது அமைதியைப் பராமரிக்க உருவாக்கப்பட்டது காவல் துறை. அது நிர்வாக முறையில் பல அடுக்குகளைக் கொண்டது. ஆனால் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு சட்டம், ஒழுங்கு முறைகள் சீர்குலையாமல் இருக்கச் செயலாற்றுவது. மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நல்லுறவைப் பேணுவது என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

ஆனால் ஆளும் கட்சியும், அரசும் காவல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றன. முறையற்ற முறையில் தன் கட்சிக்கு ஆதரவாகவும், அரசு சார்ந்தும் நடந்து கொள்ள வைத்து விடுகின்றன.

எதிர்க்கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயற்பாட்டை முடக்குகிறது. பொய்யான வழக்குகள் போட்டு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாசிரியர்களை எல்லாம் நீதிமன்றத்திற்கு அலைய விடுகிறது. பயத்தில் வாழும்படியே மக்களை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

காவல் துறை அதிகாரிகளில் யாரெல்லாம் அரசுக்கு அதிக விசுவாசிகளாக இருக்கிறார்களோ அவர்களை முக்கியமான பணிகளில் போட்டுக் கொண்டு, நடுநிலையானவர்கள், சட்டப்பூர்வமான வேலைகள் மட்டுமே செய்யக் கூடியவர்கள் என்று இருப்பவர்களை ஓரம் கட்டி விடுகிறது. அதனால், காவல் துறையில் அரசுக்கு ஆதரவான கோஷ்டி, எதிரான கோஷ்டி என எல்லா மட்டத்திலும் பிரிந்து விடுகிறது. எனவே எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காவல் துறை ஏவல் துறையாகிவிட்டது என்று விமர்சிக்கின்றன.

பொதுமக்களும் காவல் துறையைப் பற்றி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை, வழிப்பறி, பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க வேண்டிய காவல் துறையினர் அமைச்சர்கள் பாதுகாப்புக்குப் போய்விடுகிறார்கள்.

அதனால் அவர்கள் சட்டப்பூர்வமான வேலைகளை செய்ய முடியவில்லை. அது முக்கியம் என்றும் கருதுவதில்லை. எனவே காவல் துறை பொதுமக்களை கண்ணியமாக நடத்துவதில்லை. ஈனத்தனமான வார்த்தைகள் பேசி நிந்தனை செய்கிறது. புகார் கொடுக்கச் செல்லும் பெண்கள், முதியவர்களைக் கூட மதிப்பதில்லை. எனவே மானத்தோடு வாழும் மக்கள் போகக்கூடிய இடமாக காவல் நிலையம் இல்லை என்று பெயரெடுத்து இருக்கிறது.

காவல் துறை ஆதரவாளர்கள், ஆளும் கட்சியினர், முன்னாள் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர், "நம்முடைய காவல் துறை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. அதன்மீது பழி சுமத்தக்கூடாது. பெரும் பணிச்சுமையோடு ஓய்வு இன்றி உழைக்கும் அவர்கள் மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல மாநிலங்களைவிட நமது மாநிலத்தில் குற்றங்கள் குறைவு. அதிகமான குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றம் வழியாகத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்' என்று சொல்கிறார்கள்.

எத்தனைதான் சொன்னாலும் யதார்த்தத்தில் பொதுமக்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் நகரங்கள் வேகமாக உருவாகியது; குற்றவாளிகள் கூடும் இடமாக நகரம் மாறியது; மக்கள்தொகை பெருக்கம்; ஊடகங்கள் வரம்பு மீறி வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று சொல்லிவிட முடியாது.

தான் வாழும் நகரம் பாதுகாப்பானது. பணிக்குச் சென்றுவிட்டு இரவிலும் திரும்பி வரலாம். கழுத்துச் சங்கிலி அறுக்கப்பட மாட்டாது; பூட்டிய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருக்காது; குழந்தைகள் கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள் - என்ற உத்தரவாதத்தை காவல் துறை வழியாகத் தருவதுதான் அரசின் கடமை.

கொலை, கொள்ளைக்காரர்களுக்குப் பயந்து கொண்டு இருப்பது போல காவலர்களுக்கும் மக்கள் பயந்து கொண்டு வாழ முடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு காலத்தை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சமூக யதார்த்தமாக இருக்கிறது.

எளிய மக்களிடம் முரட்டுத்தனமாகவும், மூர்க்கமாகவும் நடந்து கொள்ளும் காவல் துறையினர், பணக்காரர்களிடமும், தொழிலதிபர்களிடமும், அதிகாரம் இருப்பவர்களிடமும் அடக்க ஒடுக்கமாக நடப்பது, லஞ்ச ஊழல் பேர்வழிகளோடும், சமூக விரோதிகளோடும் ரகசியமாகத் தொடர்பு கொண்டிருப்பது கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைகிறார்கள். எல்லாம் பணம் சேர்க்க என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நமது காவல் துறை பிரிட்டீஷ் ஆட்சியின் எச்சம். அதாவது அவர்கள் பிரிட்டீஷ் ஆட்சி நீடித்து நிலைத்திருக்கக் கடமையாற்றியவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களை லத்தியால் அடித்து மண்டையை உடைத்தவர்கள். கூட்டமாக ஒன்று சேர்ந்தமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள். ஆனால் அவர்கள் நம் மக்கள். வேற்றுலகவாசிகள் இல்லை.

சட்டத்திற்கு உட்பட்டு மேலதிகாரிகள் உத்தரவின்படி செயற்பட்டவர்கள். அது அவர்கள் குற்றம் கிடையாது என்று பொது நியாயம் பேசப்பட்டது. அது ஓரளவிற்குச் சரியானதுதான். ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சுதந்திர நாட்டின் சட்டங்களையும், காவல் துறை செயற்பாட்டையும் மாற்றியமைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை. அதன் பலனை பொதுமக்கள் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நூற்று எண்பதாண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிற்கான குற்றவியல் சட்டத்தை எழுதிய சட்ட ஆணையத்தின் தலைவரான தாமஸ் பாபிங்டன் மெக்காலே "சட்டத்தின் நோக்கம் எல்லாருக்கும் நீதி வழங்குவதுதான்' என்றார். ஆனால் "நாட்டிற்கே சுதந்திரம் இல்லாதபோது, தனிப்பட்ட குடிமக்களுக்கு என்ன சுதந்திரம்' என்று கேட்கப்பட்டது.

அப்படிக் கேட்டு கிளர்ச்சி செய்தவர்கள், எழுதியவர்கள் எல்லாம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். அப்போதும் காவல் துறை எல்லை மீறி செயல்படுகிறது என்றுதான் சொல்லப்பட்டது. காவல் துறையிலே எல்லை மீறுதல் என்பது இயல்பு போல இருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல கமிஷன்கள் போட்டு காவல் துறையை நவீனப்படுத்தி இருக்கிறார்கள். சீருடையை மாற்றியிருக்கிறார்கள். நீளமான லத்தி கொடுத்திருக்கிறார்கள், உடைக்க முடியாத விலங்குகள் வழங்கியிருக்கிறார்கள். விரைவாகச் சுட நவீன துப்பாக்கிகள், அதிவேக கார்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஆயுதங்களால் மக்கள் அன்பை பெற முடியாது. காவல் துறையின் மனோநிலையை அதன் அதிகார வெறியை மாற்ற ஏதாவது செய்து இருக்கிறோமா?

1985-ஆம் ஆண்டில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் எல்லா மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்

காவல் துறையின் நடத்தை விதிகள் பற்றி ஓர் அறிக்கை அனுப்பியது. அதில் முதல் பரிந்துரை, காவல் துறை சட்டப்படியான கடமைகளை மட்டும் செய்ய வேண்டும். குடிமக்களின் மாண்புகளுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

நமது நாட்டில் சட்டங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் அவற்றை அமல்படுத்துவதில்தான் குளறுபடிகள்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் ஒருமுறை "அநீதியால் யாராவது பாதிக்கப்பட்டால் அது சமூகத்தின் குற்றம்' என்று குறிப்பிட்டார். நீதி என்பது எல்லாருக்குமானது. அதனை எல்லா நிலைகளிலும் வாழும் மக்கள் பெறும்படியாகச் செய்வதுதான் ஆட்சியின் முதலாவதும், முக்கியமானதுமான லட்சியம்.

காவல் துறை, நீதிமன்றம், நிர்வாகம் எல்லாம் அதற்காகவே இருக்கின்றன. முக்கியமாக காவல் துறையில் இருந்தே பல மாற்றங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்கள். லஞ்சம், ஊழல், பாரபட்சம் என்பனவற்றை அநேகமாக காவல் துறையில் இருந்து ஒழித்திருக்கிறார்கள். காவலர் தனக்குள்ள சட்டபூர்வமானப் பணிகளைச் செய்ய பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்.

சட்டத்திற்கு விரோதமான செயலுக்குப் காவல் துறை பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. சட்ட வல்லுநர்களை அனுப்பி சிலரைக் காப்பாற்ற வாதாட - பொய்யுரைக்க ஏற்பாடு செய்வது இல்லை.

காவலர் போலவே குடிமக்களும் ஒரு நாட்டின் சொத்துதான். "பொய் சொல்லக்கூடாது பாப்பா' - என்று பாரதியார் பாடியிருப்பது பாப்பாவிற்கு மட்டும் ஆனதில்லை. எல்லார்க்குமானது. ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

காவலர், வழக்குரைஞர், தொழிலாளர்கள், குடிமக்கள் யாருக்கும் பொய்யுரைப்பது தர்மம் கிடையாது. பொய்யுரைத்து, ஏமாற்றி வெற்றி அடைவதைவிட உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்பது பேராண்மை. ஏசுநாதர் பாவிகளுக்கும் மன்னிப்பு உண்டென்றார்.

நமது தேசிய வாசகம் "சத்யமேவ ஜெயதே' - அதாவது வாய்மையே வெல்லும் என்பது. வாய்மையென்றால் உண்மை.

ஜனநாயக நாட்டில் மக்கள் மக்களால் தான் ஆளப்படுகிறார்கள். காவலர்களால் இல்லை. காவல் துறை என்பது குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஏற்படுத்திக் கொண்டது.

காவல் துறை மக்கள் விரோதமாகவும், மக்கள் காவல் துறைக்கு எதிராகவும் மாறாத வரை சரியாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.