தமிழகத்தில் இன்று ஒரு மிக மோசமான அரசியல் சூழல் மற்றும் கலாசாரம் நிலவி வருகிறது. அது முற்றிலும் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு முரணானது அல்லது எதிர்மறையானது. உண்மையைச் சொன்னால் அல்லது எதிர்மறைக் கருத்தைச் சொன்னால், அது ஒரு கருத்து என்ற நிலையில் அந்தக் கருத்தை மதித்து கேட்பதற்குப் பதிலாக, அந்தக் கருத்து யாரால் கூறப்பட்டது, யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்று பார்த்து, கருத்தைச் சொன்ன அந்த தனிநபர் மேல் முத்திரையைக் குத்தி அவரை ஓர் அணியில் சேர்த்துவிடுவது என்ற ஒரு கலாசாரம் நிலவி வருவதால் பலர் உண்மையைச் சொல்லவும், கருத்தைச் சொல்லவும் தயங்குகின்றனர்.
அவர் சொன்ன கருத்து தங்களுக்குச் சாதகமானதாக இருந்தால் அவரைத் தன் பக்கம் தன் கட்சிப் பக்கம் என்று கருதிக்கொள்வது, அப்படி இல்லை எனில், அவரை எதிர்க்கட்சி ஆதரவாளர் என்று கருதி நிந்திப்பது. இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில், கருத்துச் சொன்னவரை வசைபாடி அவர் மனநிலை பாதிக்கின்ற அளவிற்கு கொண்டுவிடுதல் என்ற தாழ்நிலை மக்களாட்சிக் கலாசாரத்தை நாம் பார்த்து வருகிறோம். ஆகையால்தான், பல நேரங்களில் உண்மைகளைச் சொல்ல அறிவுஜீவிகள் பொதுத் தளங்களுக்கு வருவது கிடையாது.
சென்னையில் 260-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், 80-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள், மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருக்கின்றனர். பொதுக்கருத்தை உருவாக்க அல்லது வெளிப்படுத்த யாரும் முன்வருவது கிடையாது. இதற்குக் காரணமே நம் தமிழகத்தில் இருக்கும் குறுகிய மனோபாவ அரசியல் கலாசாரம்தான். இதன் விளைவுதான் உண்மையைச் சொல்வதற்கும், நல்லவற்றைப் பாராட்டவும்கூட பொது மனிதர்கள் வருவதில்லை.
சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழக உள்ளாட்சியில் 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட்டது மிகப்பெரிய சமூக மாற்றத்தை விளைவிக்கக் கூடிய ஒரு முடிவாகும். இந்த இடஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறவில்லை. அதைப்பற்றி அரசியல் கட்சிகளும் தொடர் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
இன்றைய சூழலில் உள்ளாட்சி பற்றிய விவாதங்களே நடைபெறாத அரசியல் சூழலைத்தான் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்து வந்தோம். இந்தப் பின்னணியில் இந்த முடிவு என்பது பாராட்டுக்குரியதாகும். இன்றைய தேர்தல் நேரத்தில் இந்தப் பிரச்னை பொது விவாதத்திற்கு வராமலேயே எங்கோ புதையுண்டுவிட்டது.
இதைவிட மிக முக்கியமான இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு முடிவையும் இதே அரசுதான் எடுத்தது. பெண்களுக்கும் தலித்துகளுக்கும் உள்ளாட்சியில் இருந்த இடஒதுக்கீடுகள் என்பது தொடர்ந்து பத்தாண்டுகளாக உறுதி செய்யப்பட்டது. எந்த மாநிலமும் இந்த முடிவை எடுக்க முன்வரவில்லை.
மிகப்பெரிய சட்ட வல்லுநர்களெல்லாம் சட்டத்தில் கண்டபடி ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் சுழற்சி முறையில் மாறி ஆக வேண்டும், இதை எப்படி மாற்றியமைக்க முடியும் என்றுதான் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த மாதிரி ஒரு வேண்டுகோளையே தமிழக உள்ளாட்சிப் பெண் தலைவர்கள் கூட்டமைப்புதான் முதன் முதலில் இந்தியாவில் எடுத்து வைத்தது. அதைப் பலரும் நகைப்புதான் செய்தார்கள்.
ஆனால், அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா மட்டும்தான் இந்தக் கருத்தை ஆமோதித்து, தான் முதல்வராக வந்தால் அதைச் செய்வேன் என்று அந்தப் பெண் தலைவர்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர்களிடம் உறுதி அளித்தார். அதன் பிறகு, தான் முதல்வராக வந்த பிறகு ஜெயலலிதா தமிழக உள்ளாட்சி பெண்கள் பிரதிநிதிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அந்த முடிவை அறிவித்தார். இந்த முடிவை மத்திய அரசு மற்றும் பெண்கள் அமைப்புக்கள் அனைத்தும் பாராட்டின.
இவ்வளவு பாராட்டுக்குப் பிறகும் இதுவரை இந்தச் சுழற்சி முறையை எந்த மாநிலமும் கொண்டுவர முயலவில்லை. தமிழக அரசின் இந்த முடிவு எல்லா சர்வதேச, தேசிய கருத்தரங்குகளிலும் பாராட்டப்படும்.
ஏனென்றால், அந்த மாதிரி முடிவுகளை எடுக்கத் துணிவு வேண்டும். அந்தத் துணிவு இவருக்கு மட்டுமே உரித்தானது. ஏனென்றால், வக்ஃபு வாரியத்தில் ஒரு பெண்ணை தலைவராக நியமனம் செய்து இந்தியப் பெண்ணியவாதிகளின் பாராட்டைப் பெற்றார். இந்த முடிவை எடுப்
பதற்கும் துணிவு வேண்டும். பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும் அதில் உறுதியாக இருந்தார்.
இந்த ஐம்பது சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கொடுத்திட இப்போது மத்திய அரசே சட்டம் கொண்டுவருகிறது. ஏனென்றால், இந்த 73-வது மற்றும் 74-ஆவது அரசியல்சாசன திருத்தச் சட்டங்களில் எந்த இடத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கள்தான் இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கட்டாயமாக்கப்படவில்லை. சட்டத்தை பலர் தவறாகப் புரிந்துகொண்டனர்.
சட்டத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் இடஒதுக்கீடு உள்ளாட்சியில் தரவேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் எவ்வளவு என்றுதான் சட்டம் கூறியது; அதிகபட்சம் எவ்வளவு என்று கூறவில்லை. அந்த ஷரத்தைப் பயன்படுத்தித்தான் 50 சதவீத இடஒதுக்கீடு ஒரு சில மாநிலங்களில் பெண்களுக்குத் தந்தனர்.
அந்த மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பெண்கள் மேம்பாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள். தமிழகம் பெண்கள் மேம்பாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு தந்த மாநிலங்களை விட மேம்பட்ட மாநிலம். எனவே, இன்று தந்த இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய வல்லது.
ஏன் மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகின்றது என்றால், இந்தியாவில் உள்ளாட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த உலக வங்கி, ஐ.நா. நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவுடன் ஆய்வுகள் நடத்தி பல முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வு அறிக்கைகள் பல்வேறு புதிய கருத்துகளைக் கொண்டுவந்துள்ளன. பெண்களும் தலித்துகளும் தங்கள் பிரச்னைகளைப் பொதுப் பிரச்னைகளாக மாற்றி பொது இடங்களில் விவாதித்து முடிவு எடுக்க இந்த உள்ளாட்சியைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் இந்தப் பிரச்னைகளை சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் மட்டுமே பேசுவார்கள். ஆனால், இன்று அது சமூகத்தில் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
இந்த சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு உள்ளாட்சிகள் உதவிகரமாக உள்ளன. தங்கள் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் நல்ல திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்த உள்ளாட்சி மூலம் பொதுமக்கள் தேடுதல் பணிகளைச் செய்கின்றார்கள். அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் அரசாங்கத் துறைகளைக் கண்காணிக்க முயலுகின்றார்கள். இந்தத் தேடுதல் முயற்சியால் ஊழல் அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது.
இந்திய ஜனநாயகம் இந்த உள்ளாட்சிகள் மூலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திலிருந்து பங்கேற்பு ஜனநாயகமாக மாற ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பெண்களின் பங்கேற்பு என்பது பெண்கள் சமத்துவம், பெண்கள் மேம்பாடு பற்றிய பிரச்னைகளைப் பொதுத் தளங்களில் கொண்டுவந்து விவாதித்து, சமூகத்தின் பார்வையை மாற்றத் தொடங்கியிருக்கின்றது என்பது போன்ற பல்வேறு முடிவுகள் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
இந்தியாவில் கேரளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் அதிகாரப்பரவல் நடைபெறவில்லை. இருந்தும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு மக்களிடம் பல அடிப்படையான சேவைகளைச் செய்து மாநில அரசுகளின் பளுவினை குறைத்துக்கொண்டுள்ளது.
இந்த உள்ளாட்சியில் பெண்களும் தலித்துகளும் இருப்பதால் சமூக மேம்பாட்டுக்கான பிரச்னைகளும், சமூக நீதிக்கான பிரச்னைகளும், சமூக மாற்றத்திற்கா
னப் பிரச்னைகளும் தொடர்ந்து பொதுத் தளங்களுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இதுபோன்ற பல்வேறு முடிவுகள் வெளிவந்ததால் ஐ.நா. நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு அதிகாரப்பரவலுக்கான அழுத்தங்களைக் கொடுத்துவந்தன. அதன் விளைவு, இன்று பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. தமிழகம் இதில் முன்னோடியாக விளங்க இந்த முடிவுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த முடிவு மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தனக்குச் சாதகமாக உருவாக்கும் என்று கருத முடியாது. ஏனெனில், இந்தக் கருத்தாக்கத்தை அரசியல் கட்சிகள் பெருமளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை. இந்த முடிவு என்பது இன்றைய முதல்வரின் பார்வையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் பத்தாண்டுகள் தொடர்ந்து ஒரே தொகுதியை உறுதிசெய்தது இந்த 50 சதவீத ஒதுக்கீட்டைவிடப் பெரிய சாதனை. இந்த இரண்டும் பாராட்டப்பட வேண்டிய சாதனைகள். இன்றைய அரசியல் சூழல் இந்தச் சாதனைகளின் மேல் படர்ந்து மறைக்கிறது என்பதுதான் நாம் பார்க்கும் எதார்த்தமான உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.