தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வாக்கினிலே தெளிவு வேண்டும்...

ஒரு தேசியத் திருவிழாவைப் போல, ஆனால் அதைவிடப் பத்துமடங்கு ஆர்வத்துடன் தேர்தலைச் சந்திக்கிறோம்.

Updated On :10 மே 2016, 4:42 am IST

ஒரு தேசியத் திருவிழாவைப் போல, ஆனால் அதைவிடப் பத்துமடங்கு ஆர்வத்துடன் தேர்தலைச் சந்திக்கிறோம். வேட்பாளர்களுக்குத்தான் முதற்கட்டக் குழப்பம். எந்தத் தொகுதியில் நிற்பது, எந்தக் கட்சி மூலம் வேட்பாளராவது, எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது, எவருடன் கூட்டணி வைப்பது போன்ற பலவகைச் சிக்கல்கள். அவற்றின் நன்மை தீமைகளைக் கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கி ஒருவகையாக வேட்பாளராக விண்ணப்பிக்கும் படலங்கள் நிறைவேறிவிட்டன.
 இனிமேல் வாக்காளர்கள் தரப்பிலேதான் பற்பல குழப்பங்கள் பூக்கும். பலவகைத் தடுமாற்றங்களை வாக்காளர்கள் சந்திக்கின்றனர். சிந்தனைக் கழனியில் வேட்பாளரை முன்நிறுத்துவதா அல்லது கட்சியை முன்நிறுத்துவதா என்ற குழப்பம் ஒருபுறம். தொகுதி வேட்பாளரில் தொடங்கி முதல்வர் வேட்பாளர் வரையிலான தரவுகளை எண்ணுவதா அல்லது முதல்வராக ஒருவரைக் கருதி அவருக்கு உதவுபவராகத் தம் தொகுதி வேட்பாளரை எண்ணுவதா என்ற குழப்பம் மறுபுறம்.
 தன் ஊரைச் சார்ந்தவரை ஆதரிப்பதா, வேற்றுப் பகுதிக்காரராக இருந்தாலும் தகுதியானவரெனில் மற்றொரு வேட்பாளரை அரவணைப்பதா என்று ஒரு குழப்பமும் ஏற்படும். மாநிலக் கட்சியும் தேசியக் கட்சியும் மனக்கண்ணில் தோன்றி மயக்கும். இத்தகைய குழப்பப் போக்குகளுக்கு வாக்குச் சாவடிக்குள் நுழையும் முன் எளிதாகத் தீர்வு கண்டுவிடலாம் எனத் தோன்றவில்லை. வாக்கு எந்திரத்தில் உரிய பொத்தானில் விரல் பதிக்கும்வரை ஒரே குழப்பமயம்தான்.
 இதுபோன்ற கலக்கங்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல; வேறுபல சூழல்களிலும் மலரும். வெளிநாட்டுக்குப் போய்ப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மண்ணில் மீண்டும் கால் பதித்தார் தமிழன்பர் ஒருவர். அவருடைய உறவினர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமானது.
 புதிய இடத்தை அறிவதில் உள்ள சிக்கல், பேச்சுத்துணை, நட்பு வட்டத்துடன் கூடுதலாக நேரம் செலவழிக்கும் எண்ணம் போன்ற காரணங்களால் என்னையும் அழைத்துக் கொண்டு அவர் பயணித்தார். மணமாகி வேற்றூரில் பணிபுரியும் நண்பரின் இல்லம் சென்றோம். அழகான பெண்குழந்தை ஒன்று தளிர்நடை போட்டபடி எங்களை வரவேற்றது. கொஞ்சம்நேரமானபின் அடுத்து ஆண் குழந்தை எப்போது என்ற வழக்கமான அசட்டுக் கேள்வியை உதிர்த்தேன். பளிச்சென்று நண்பரிடமிருந்து பதில் வந்தது.
 முதல் குழந்தைக்கு ஐந்து வயதாகி அக்குழந்தை அடுத்த குழந்தையைக் தூக்கவும், காக்கவும் வேண்டும். எனவே, அந்தக் கட்டம் வரும் வரை அடுத்த குழந்தைக்கு வாய்ப்பில்லை என்பது அவரது விடை. திட்டமிட்டுக் குடும்பம் நடத்தும் அவருக்கு வாழ்த்தும் பரிசும் வழங்கி விடை பெற்றோம். மகிழுந்தில் வரும்போது அவர் கொண்டிருந்த தெளிவான முடிவை ஒருமனதாகப் பாராட்டிப் பேசுவதில் ஓர் இனந்தெரியாத மகிழ்ச்சி இருந்தது.
 நான்கு நாள்கள் கழித்து நண்பருடைய பேராசிரியர் ஒருவரைப் பார்க்க அவர் (பணி ஓய்வுக்குப் பின்) தங்கியிருந்த சிற்றூருக்குப் போனோம். அவர் வீட்டில் அவருடைய மகளுக்கு மகப்பேறு முடிந்து இரண்டு மாதங்களாயிருந்தன. இஃது அந்த நங்கைக்கு இரண்டாவது பிரசவம். மூத்த குழந்தைக்கு இரண்டு வயதுக்கும் குறைவான வயதுதான். விடைபெறும்போது வெளிநாட்டு அன்பரால் அடக்கமுடியவில்லை. ஐந்தாண்டுக்குள் இரண்டு குழந்தைகள் பெறுவது என்பது... என இழுத்தார். மிகச் சரியானதுதான் என்ற விடையைப் பேராசிரியர் உதிர்த்தபோது அதிர்ந்துபோனோம்.
 அவரின் விளக்கம் வருமாறு: ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் ஒரே மூச்சில் வளர்த்து விடலாம். முதல் குழந்தையைக் கடினப்பட்டு ஓரளவு வளர்த்தபின் அடுத்த குழந்தையைப் பெற்றால் மீண்டும் கடினப்படவேண்டும். காலம் முழுவதையும் மழலைகளை வளர்க்கவே செலவிட வேண்டிவரும். ஒரே நேரத்தில் அக்குழந்தைகள் பள்ளி சென்று வரவும் வாய்ப்பாகும். இரு குழவிகட்கிடையே பெரிய இடைவெளி அமையின் வயதுக்குரிய செயல்பாடுகளும் சிக்கலை உருவாக்கலாம். இதோ பாருங்கள் அடுத்த மாதம் அவளுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை செய்யப்போகிறோம். பிற்காலத்தில் கர்ப்பந்தாங்கிச் சிரமப்பட வேண்டியதில்லையே!
 அவருடைய வகுப்பறையில் மீண்டும் அமர்ந்து பாடம் கேட்பதைப் போல நீண்ட விளக்கம் கிடைத்தது. உடனே நாங்கள் இருவரும் இதுவே சரியானதாக இருக்குமோ என ஐயப்பட்டோம். இந்த இரண்டில் எதுசரி என்பதில் அடர்த்தியான குழப்பம் எழுந்தது. பெற்றெடுத்த மகனை அல்லது மகளை முறைப்படியாக வளர்க்க, கைநிறைய வருவாயை வழங்கிய வேலையிலிருந்து நின்றுவிட்ட பெண்கள் பற்றிய செய்திகள் உட்படப் பற்பல தகவல்களைத் திரட்டினோம்; அலசினோம்.
 குழந்தை வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பெற்றோரின் துணை, காலத் தேவை, சமூகத் தேடல், உளவியல் போன்ற கூறுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. முடிவினில் கணவன்-மனைவி இருவரிடையே அமையும் நடப்புச் சூழல்களுக்கேற்ப மகப்பேற்றை அடுத்தடுத்தோ கால இடைவெளிவிட்டோ அமைப்பதே உவப்பானது என்று தெளிவுபடுத்திக் கொண்டோம்.
 ஒரே வாக்காளர் நாடுதழுவிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓர் அளவுகோலும் சட்டசபைத் தேர்தலுக்கென வேறோர் அளவுகோலும் வைத்துக் கொள்வதைப் போன்றதுதான் இந்த மகப்பேற்றுச் செய்தியும். இன்னொரு சுவை மிகுந்த எடுத்துக்காட்டையும் இங்கே பதிவு செய்தல் நலந்தரும்.
 இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பல்கலைக்
 கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தேர்வு நடத்துநராக ஒரு தமிழகப் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். புதுவைக்கு அவர் வந்தபோது, பல்கலைக்கழக உணவுச் சாலைச் சுவரில் ஒட்டப் பெற்றிருந்த ஓர் ஒட்டுவில்லையைப் பார்த்து வியந்தார். "உணவுப் பொருள்களை வீணாக்காதீர்கள்.. பட்டினியால் பலரும் சாகின்றனர்' என்பதே அந்த ஒட்டுவில்லைச் செய்தி. உணவுச் சாலை ஊழியரிடமே ஒரு தாள் வாங்கி அதனைக் குறித்துக் கொண்டார் அந்தப் பேராசிரியர். தன்னுடைய நிறுவனத்தில் அதைப் பெரிய எழுத்தில் பதிக்கப் போவதாகவும் உறுதி கூறினார்.
 ÷அவரை வீட்டுக்கு வரவழைத்து மதியவிருந்து தரமுடிந்தது. உணவு வகைகள் தலைவாழை இலையில் பரிமாறப்பட்டன. மகிழ்வுடன் உண்டார். கடைசியில் (கருவேப்பிலையையும் அவர் தயக்கமின்றி உண்டதால்) அவருடைய இலை மீதில் இரண்டு மிளகாய்கள் மட்டுமே தென்பட்டன.
 அவர் மூடிவைத்த இலையை நீக்குமுன் அரைக்கரண்டிச் சோற்றினை உள்ளே வைத்து இலையை எடுத்தார் என் மனைவி. வந்தவர் நேரடியாகவே என் மனைவியிடம் காரணம் கேட்டார். இடைமறித்து, "அது ஒன்றுமில்லை. உண்டு முடித்தபின் எடுக்கப்பெற்ற இலையைக் குப்பைக் குழியில் போடுவது வழக்கம். உடனே பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நாய் உள்ளே குதித்து இலையைப் புரட்டும். சில சமயங்களில் மரத்திலிருந்து சில சின்னப் பறவைகளும் குழிக்குள் பாயும். இலையைப் புரட்டும் எந்த உயிரானாலும் கொஞ்சமாவது உணவுப் பண்டம் இருந்தால் மகிழ்ச்சி கொள்ளுமே! அவற்றின் ஏமாற்றத்தை விரட்டவே அரைக்கரண்டிச் சோறு அல்லது அரை இட்டிலி வைத்துக் குழியில் போடுவது வழக்கம்' என்று நான் கூறிய பதிலில் அவர் உறைந்து போனார்.
 செய்யக்கூடாத தவறைச் செய்தவர்போல அங்கே அவர் நின்றார். உணவுச் சாலையின் ஒட்டுவில்லை உரைத்தது பொய்யா என்ற குழப்பம் வந்ததைப் போல என்னை நோக்கிக் திரும்பினார். "வீணாக்குவது என்பது வேறு, சிறு உணவுக்கொடை என்பது வேறு' என அவருக்கு விளக்கம் தந்தபின் தெளிந்தார்.
 "நோட்டா' எனப்பெறும் யாருக்கும் வாக்கில்லை என்பது வீணாக்கப்பெறும் வாக்கு என்பது பலருடைய கருத்து. தோற்பாரா? வெல்வாரா? எனத் தெரியாத போதும் தேர்தலில் நிற்பவர்களில் ஒரு நல்ல வேட்பாளர்க்காவது வாக்களிப்பதுதான் தருமமாகும்.
 இனி, தேர்தல்களத்தில் நுழைவோம்.
 வாக்களிக்கும் முன்பு வேட்பாளரை எடைபோடச் சில நடைமுறைகளைத் தள்ள வேண்டும், சிலவற்றைக் கொள்ள வேண்டும். வேட்பாளரை ஜாதி, மத,மொழி, வட்டாரப் பார்வையுடன் பார்ப்பது தவறு. வேட்பாளரை வேண்டியவர், நண்பர், வேண்டாதவர் என்ற கண்ணாடி அணிந்தும் பார்க்கக்கூடாது. சில நேரங்களில் ஒத்த கருத்துடைய இரண்டு நண்பர்களை ஒரே வேட்பாளர் பட்டியலில் காணவும் நேரலாம். நட்பு, பாசம், பழக்கம் இவற்றைக் கழற்றிவைத்துவிட்டுத்தான் வேட்பாளரை மதிப்பிடவேண்டும்.
 தந்தை ஒரு கட்சியிலும் மகனோ மகளோ வேறொரு கட்சியிலும் உள்ள சூழல் ஆங்காங்கே காணப்படுவது கண்கூடு. தேர்வு செய்வதில் எந்தப் பற்றும் கூடாது. விரும்பும் வேட்பாளர் வெல்லுவார். ஆனால் அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்குமா எனத் தெரியவில்லை என மயங்குவதும், தோற்கும் கட்சியில் நிற்கிறாரே என நல்லவர்க்கு நேசக்கரம் நீட்டத் தயங்குவதும் ஒருவகையில் பிழைபாடுகள்தாம்.
 கருதப்படவேண்டியவை சிலவுண்டு: (i) வேட்பாளரின் பின்புலம். எந்தத் தளத்திலிருந்து அவர் புறப்பட்டுள்ளார் என்பதை அறியும்போது அவ்வேட்பாளரை எளிதில் மதிப்பீடு செய்யவியலும். எத்தனை முறை கட்சி மாறினார் என்பது போன்ற புள்ளி விவரங்கள் வேட்பாளரை அடையாளப்படுத்தும்.
 (ii) வேட்பாளரின் பண்பு நலன்களைக் கணக்கில் கொள்வதும் தேவையானது. உதிர்க்கும் சொற்கள், பழகும் நேர்த்தி, நடையுடைப் பாங்கு, பழக்கவழக்கம் போன்ற வழிகாட்டு முறைகள் ஒருவரை இனங்காண வாய்ப்பளிக்கும்.
 (iii) வென்றபின் மாறமாட்டார் என்ற உறுதியைத் தருபவராகவும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என நம்பத் தக்கவராகவம் இருக்கும் வேட்பாளரைக் கண்ணை மூடிக்கொண்டு- ஜாதி, மத, வட்டார, மொழி, கட்சிப் பாகுபாடுகளை வீசியெறிந்துவிட்டு ஆதரிக்கலாம்.
 (iv) வாக்காளரிடம் வாக்கைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத வேட்பாளரே ஆளத்தகுந்தவர்.
 முதலில் குழப்பங்கள் நம்மை நோக்கும். இருப்பினும், வேட்பாளரின் தகுதிகளை அலசிப் பார்த்து மெய்மையை உணரவேண்டும். அதற்குப் பாரதியாரின் வரிகளில் சிலவற்றைச் சேர்த்து வாசிப்போம்.
 விலைபோகும் வேட்பாளரைத் தேர்வு செய்யாமல் இருக்க. மனதில் உறுதி வேண்டும் - அத்துடன் நாட்டை உயர்த்தும் நபருக்கு நாமளிக்கும் வாக்கினிலே தெளிவு வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 பல்கலைக் கழகப் பேராசிரியர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.