ஆத்திகப் பெரியார்

சமயவெளியின் ஒரு பேராளுமையை - சைவப் பரப்பின் ஒரு பேராண்மையைக் கட்டி உரைக்கவிருக்கும் இக்கட்டுரை, ஆத்திகம் - நாத்திகம் என்ற இரண்டு தத்துவத் தளங்களிலும் மெல்லிய அலைகளை எழுப்பி
ஆத்திகப் பெரியார்

சமயவெளியின் ஒரு பேராளுமையை - சைவப் பரப்பின் ஒரு பேராண்மையைக் கட்டி உரைக்கவிருக்கும் இக்கட்டுரை, ஆத்திகம் - நாத்திகம் என்ற இரண்டு தத்துவத் தளங்களிலும் மெல்லிய அலைகளை எழுப்பி அடங்கலாம். ஆனால் எனது நோக்கம் அலைகளை எழுப்புவதன்று.
நீண்டு கிடக்கும் தமிழின் நெடுங்கணக்கில் அழிக்க முடியாத ஒரு காலத்தின் கழிக்க முடியாத கவியாளன் என்று ஓர் ஆத்திகப் பெரியவரை நினைத்து என் நெஞ்சு விம்மி விம்மி விரிவதால் இக்கட்டுரை விளையலாயிற்று.
ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று கணிக்கப்பட்ட அப்பர் என்ற ஒரு சைவத் துறவி, கடவுள் துகள் கண்டறிய எத்தனித்துக் கொண்டிருக்கும் இந்த மின்னணு யுகத்திற்கு எப்படிப் பொருந்துவார் என்ற விடைத்த வினாவை எவரும் எளிதில் வீசிவிடலாம்.
நூற்றாண்டுகளாய் நிகழாத மாற்றம் கடந்த நூறாண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. பூமி மாறத்தான் மாறுகிறது. சுழற்சி இல்லாவிடில் பூமியில் மாற்றமில்லை என்பது விஞ்ஞானம் மாற்றமில்லாவிடில் பூமிக்குச் சுழற்சியில்லை என்பது மெய்ஞ்ஞானம்.
"ட்ரைகோடர் எக்ஸ்' என்ற கண்டுபிடிப்பு மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் உங்கள் தேகத்தை உங்கள் கைபேசியோடு இணைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் வந்துவிடும்; உடலின் செயல்பாட்டை அது நொடிக்குநொடி அறிவித்துக் கொண்டிருக்கும். இன்னொரு மென்பொருள் உடற்குறைபாட்டுக்கான மருந்தைப்"பால் நினைந்தூட்டும் தாயினுஞ்சால'ப் பரிந்தூட்டும். மருத்துவ மனைகள் மெல்ல மெல்லத் தங்கள் மேலாண்மையின் மேலாதிக்கத்தை இழந்துவிடும்.
2049-இல் "பெட்ரோல் யுகம்' ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவைவிட்டு மதம் வெளியேறிவிடும் என்று நம்பப்படுகிறது. உலகத்தின் பெருமதமாக இஸ்லாத் வளர்ந்து விரிய வாய்ப்பிருக்கிறது.
நிலாவில் நிறுவப்படவிருக்கும் ஒரு தொலைநோக்கி, ஒட்டுமொத்த பூமியைத் தன் கண்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்று கருதப்படுகிறது. தண்ணீரற்ற விவசாயம் - திருமணமற்ற தாம்பத்தியம் - தந்தையற்ற பிள்ளைகள் - சொத்துரிமையற்ற சமூகம் - சொந்தமற்ற மனிதர்கள் என்ற வெளிகளைத் தேடித் தன் பொடிநடையைச் சற்றே விரைவு செய்திருக்கிறது பூமி. இப்படி மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப யுகத்துக்குப் பொருந்துமாறு அப்பர் அடிகள் சொல்லும் நீதி யாது? உலகமெல்லாம் தானாகவும் - தான்மட்டுமே உலகமாகவும் வாழத் தலைப்படும் ஒரு துய்ப்புத் தலைமுறை அப்பர் பெருமானிடமிருந்து ஓதி உய்யும் சேதியாது?
பசியும் ஆசையும்தாம் மனித குலத்தை முன்னெடுத்தோடும் சக்கரங்கள். இந்த இரண்டையும் ஒரு காலத்தில் கடந்துவிட்டாலும் மனம் என்னும் நுண்பொருளை மனித இனம் கடப்பது கடிது. அதைக் கடந்து செல்லும் கருவியாக அப்பர் போன்றவர்களின் நுட்பத்துணை தேவைப்படும். அதற்கொரு புரிதல் வேண்டும்.
ஒரு வறட்டு பக்திகொண்டு "மாசில் வீணையில் மாலை மதியத்தில் வீசு தென்றலில் வீங்கிள வேனிலில், ஈசன் காட்டும் இணையடி நிழலை'த் தேடித் தேடிப் பைத்தியமாவதோ, ஒரு முரட்டுப் பகுத்தறிவுகொண்டு திருப்பூந்துருத்தியில் ஒரு பிராமணச் சிறுவனுக்கு சிவிகை சுமந்த வருணாசிரம வாடிக்கை யாளன்தானே என்று வசை வீசுவதோ அப்பர் பெருமானின் நீண்ட நெடுந்தொண்டுக்கு நியாயம் செய்வதாகாது.
நானறிந்தவரையில் தமிழ்ப்பரப்பின் முதல் பெரும் போராளி அப்பர். ஆண்டவன் மீதோ ஆள்கிறவன் மீதோ வாசகம் எழுதி யாசகம் தேடும் புலவர் பரம்பரையில் "என் வார்த்தை வழிபாட்டுக்கு மட்டுமே; என் வாழ்க்கை தொண்டுக்கு மட்டுமே; சிவ சின்னங்கள் துலங்கும் இந்த மேனி போராட வனைந்த ஒரு சதையாயுதம் மட்டுமே' என்ற கோணாத கொள்கையோடு எண்பத்தோராண்டுகள் வாழ்ந்து முடித்த துறவரசர் அப்பர். அவர் ஓர் இறைப்பாடகர் என்பதும் சமண எதிர்ப்பாளர் என்பதும் காலத்தால் விளைந்த கருத்தாக்கம். ஆனால் அந்த இரண்டுக்குமாய் அவருக்கு வாய்த்த கைக்கருவி தமிழ் என்ற உயிர் ஊடகம். ஏழாம் நூற்றாண்டில் அப்பர் போன்றவர்களின் கவண் கல்லிலிருந்து புறப்பட்ட தமிழ்தான் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையதளம் வரை வந்து விழுந்திருக்கிறது.
"அலகில் கலைத்துறை தழைப்ப / அருந்தவத்தோர் நெறிவாழ / உலகில்வரும் இருள்நீக்கி / ஒளிவிளங்கு கதிர்போல' அந்த வேளாளன் மகன் தோன்றினான் என்ற சேக்கிழாரின் சித்திரத்தில் "இருள் நீக்கி' என்ற சொல்லாட்சியை மட்டும் இரவுபகலாய் எண்ணிக்கிடந்தேன்.
எந்த இருள் நீக்கினார்? மருள்நீக்கியார் என்று இயற்பெயர் பூண்டவருக்கு இருள்நீக்கியார் என்ற தொழிற்பெயர் தோன்றியதேன்? தமிழ்மீது படர்ந்த வடமொழி இருள், சைவத்தின் மீது படிந்ததாகக் கருதப்பட்ட சமண இருள், சமூகத்தின்மீது படிந்த சாதிய இருள் இந்த முவ்விருள் கிழிக்கத் தன்னையே சுடராய்க் கொளுத்திக் கொண்டதுதான் அப்பர் பெருமானின் பெருவாழ்வு. அவர் இருள் என்று கருதிய பொருள்கள்மீதும் இருளறுக்கும் கோடரி என்று அவர் கருதிய இறைநம்பிக்கை மீதும் புன்மைகளுக்கு எதிராக அவர் கைக்கொண்ட போர் முறையின் மீதும் காலந்தோறும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால் அவர்தம் அறாத தவத்தை - விடாத தொண்டினை - கெடாத நம்பிக்கையை - தொடாத துய்ப்பை - விழாத வீரத்தை - அழாத ஆண்மையை அய்யுறுவதற்கு அகச்சான்று ஏதுல்லை. அவர் உமிழ் நீரில் பட்டுத் தெறித்து வந்ததே பதிகத் தமிழ். அடிபுதை அரணமற்ற அவர் வெறும்பாதங்களின் கீழ் கடந்து கழிந்த நிலம்தான் தமிழ்நாடு. அப்பருக்கு முன்னும் அப்பருக்குப் பின்னும் துய்ய துறவுக்கான மெய்யளவுகோல்தான் அவர் வாழ்ந்துமுடித்த வாழ்வு. அவமானம் சகித்தல் - மெய்வருத்தம் பொறுத்தல் என்ற பொதுவாழ்வுக்கான உலக நெறிதான் அவர் பட்ட பாடு விட்ட பாடம்.
அப்பரின் தோற்றமே அன்பின் பெருஞ்சித்திரமாகும்.
"இடையறாப் பேரன்பும் மழை
வாரும் இணைவிழியும் உழவாரத்தின் / படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் / நடையறாப் பெருந்துறவும் வாசீகப் பெருந்தகைதன் ஞானப்பாடல் / தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்' பூண்டவர் அப்பர்.
நம்பியாண்டார் நம்பியின் கூற்றுப்படி "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையர்' வெறும் பதிகம் பாடிப் பரவிப்போன பரவசப் பாவலர் அல்லர். சைவநெறி என்ற கருத்
தாடல் வாயிலாய்த் தன் சமகாலத்தை நிமிர்த்த நினைத்த சமூகப் போராளி என்ற வகையில்தான் அவர் நாயன்மார்களின் நாயகராகிறார். தமிழ்மீட்பு - சைவமீட்பு - சமூகமீட்பு என்ற மூன்று பெரும் பணிகளுக்கே தம் வாழ்க்கையை வார்த்துக்கொடுத்தவர் அப்பர்.
முதலாவது தமிழ் மீட்பு


அவர் வாழ்ந்த காலத்துப் பல்லவர் அரசு தேவ பாடை என்று சொல்லப்பட்ட வடமொழிக்கு நடைபாவாடை விரித்தது.
பல்லவர் காலத்துக் காசுக்குடிப் பட்டயமும், தண்டந்தோட்டப் பட்டயமும் வடமொழியில் எழுதப்பட்டன. கைலாயநாதர் ஆலயக் கல்வெட்டிலும் வடமொழியே கல்லோச்சியது. மகேந்திர பல்லவன் நாணயத்தில் "கதா சித்ரா' என்ற வடமொழியே காணப்பட்டது. நரசிம்ம பல்லவன் காலத்து நாணயங்களிலும் "ஸ்ரீபரன்', "ஸ்ரீநிதி' என்றே பொறிக்கப்பட்டன. "சத்ருமல்லன்', "மத்தவிலாசன்', "குணாபரன்', "விசித்திரசித்தன்' என்று வடமொழிப் பட்டங்கள் சூழ வலம்வந்தான் நரசிம்ம பல்லவன். "லோகவிபாகம்' - "அவந்தி சுந்தரி கதா' - "காவ்யதர்சன்' என்பனவெல்லாம் பல்லவர் காலத்துப் பனுவல்கள் எனில், மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய நூலும் "மத்தவிலாசப் பிரகசனம்' என்றே தனக்கு வடமொழியில் தலை சூடியது. "தமிழ் விளங்கா நாடு' என்று இலக்கணப் புலவர்களால் குறுக்கப்பட்ட பல்லவ அரசு தன் ஆட்சிமொழியாக வடமொழியை வீற்றிருக்கவைத்து வெறியேற்றியது தமிழை. அரசால் அகதியாக்கப்பட்ட தமிழுக்கு ஆலயங்களில் அதிகாரபீடம் அமைத்துக் கொடுத்தவர்கள் நாயன்மார்கள்; அதற்கு முடிசூட்டியவர் அப்பர்.
தமிழை மீட்டெடுப்பது நாயன்மார்களின் முதல் நோக்கமன்று; மூழ்கியவனைக் காப்பாற்றக் கடலாழ்ந்தவன் முத்துக்களோடு வெளிவந்த கதையாய் சமணத்திலிருந்து சைவத்தை மீட்கப்போன சமய குரவர்கள் தமிழோடு வெளிவந்தது தமிழ்மண் செய்த தவப்பயன். வாழ்வே வழிபாடு; வழிபாட்டு மொழி தமிழ் என்ற குறிக்கோளால் சிவனை வழிபட்டோர் செந்தமிழையும் வழிபட்டார். செந்தமிழை வழிபட்டோர் சிவனிடம் முறையிட்டார். தமிழே வழிபாட்டு மொழியாக்கப்பெற்றது.
"அப்பன்நீ அம்மைநீ அய்ய னும்நீ / அன்புடைய மாமனும் மாமி யும்நீ / ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ / ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ / துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ / துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ / இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ / இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே' என்று எதுகையும் மோனையும், இசையும் நயமும் உயிரைச் சுண்டி விளையாடும் சொல்லாட்சியும் படிந்து படிந்து, குளிர்ந்து குளிர்ந்து, தெளிந்து தெளிந்து நிற்கும் இத் திருத்தாண்டகத்தை வாய்விட்டு வாசித்தால் நோய்விட்டுப் போகுமென்று சொல்லமாட்டேன். பக்தியாளன் இதில் சிவம் காண்பான்; பகுத்தறிவாளன் தமிழ் காண்பான். உறுதிப்பொருள் என்று கருதப்படும் இறைவனை உறவுப்பொருளாகத் தரைக்கிழுக்கும் உரமும் வரமும் பற்றற்ற வருக்கே பாலிக்கும்.
இப்படி ஓதும் தமிழ்கொண்டு வேதஞ்செய்தவர் அப்பர் பெருமான். அரசும் அரசு சார்ந்தவைகளும் வடமொழியின் பிடியில் இருக்க மண்ணையும் மண்சார்ந்த மக்களையும் வடமொழியினின்று மீட்டெடுத்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குத் தமிழ் கடத்தியவர் அந்த வெண்ணீறு சண்ணித்த மேனியர்.
இரண்டாவது சைவ மீட்பு
சமணத்திற்கு எதிரான போரில் அப்பரும் சம்பந்தருமே களப் போராளிகளாய்க் காணக் கிடைக்கிறார்கள். மகேந்திரவர்மன் ஆட்சியின் முற்பகுதியில் சமணமே அரச மதமாய்க் கோலோச்சியது. குணபரன் என்ற பெயரில் அரசனே சமணனாய் இருந்தான். தமிழ்ச் சமுதாயத்தின்மீது சமணம் சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்த காலமது. மொழிக்கும் இனத்திற்கும் சமணம் செய்த தொண்டு தள்ளத் தக்கதன்று. சமணப் பள்ளிகளில் ஊட்டப்பட்ட கல்வியிலிருந்துதான் பள்ளி என்ற சொல்லாட்சியே பின்னாளில் கடன் வாங்கப்பட்டது. தமிழர் வாழ்வியலின் மறுகருத்தாக்கத்திற்குச் சமணம் தந்த கொடையை வரலாறு வழித்தெறிந்துவிட முடியாது. ஆனால் சைவத்தின்மீதும் வைணவத்தின்மீதும் அது செலுத்திய வல்லாண்மையைச் சைவத் திருக்குலம் சகித்துக் கொள்ளவில்லை. சிவபெருமான் திருமால் என்ற கருத்தியல்களையும், ஆலயங்கள் என்ற நிறுவனங்களையும் கட்டிக் காப்பதற்கு "அன்பே சிவம்' என்ற அருங்கொள்கைவிட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலும் ஈடுபட சைவச் சாமியார்கள் தயங்கவில்லை. அதில் அப்பர் வழியோ தனிவழி; அன்பு வழி. சமணர்களை அவர் ஒறுத்துப் புகழ் பெறவில்லை; பொறுத்துப் புகழ் பெற்றார்.
புறச் சமயம் என்று சமணத்தைப் புறந்தள்ளுவதற்குச் சைவப் பெருங்கூட்டம் முன்னெடுத்துவைத்த வாதம் மிக நுட்பமானது. சமணம் முன்வைத்த "கொல்லாமை' என்ற கொள்கை தமிழ்ச் சமுதாயத்தின் மண் நெறிக்கு முரணானது என்று அது நுண்ணறிவாடியது. வேட்டைக் கலாசாரத்தின் நீட்சியாக விளங்கிய தமிழினம் தான்பெற்ற சிசுவை "பாறு மயிற்குடுமி எண்ணெய் நீவிச் செருமுகம் நோக்கிச் செல்கென விடுக்கும்' போர் முறையை வாழ்வின் சரிபாதி என்று கொண்டாடியது. சங்ககால மரபு புலனுணர்ச்சிகளைப் போற்றிப் பாடியது. மண்ணும் மண்சார்ந்த அழகியலோடு தன் வாழ்வை முடிந்து வைத்திருந்தது; அது இயற்கையோடு இயைந்தது.
பூக்களின் மலர்ச்சிகொண்டே பொழுது குறித்தது தமிழினம். செண்பகப் பூ மலர்ந்தால் அது விடிகாலை. வாழை மலர்ந்தால் அது முன்னந்திமாலை. மல்லிகை மலர்ந்தால் அது பின்னந்திமாலை. இருவாட்சி மலர்ந்தாலோ, நொச்சி உதிர்ந்தாலோ அது நள்ளிரவு என்று அழகியலோடு வாழ்ந்த வாழ்வை சமணம் துறவுக் குழியில் தள்ளுகிறது என்ற வாதத்தை நாயன்மார்கள் முன்வைத்தார்கள்.
ஆடையின்றித் திரிதலும் அழுக்கோடு அலைதலும் தலைச்சிகை பறித்தலும் தற்கொலையில் முடிதலும் நூற்றாண்டுகளாய் வாழப்பட்ட தமிழர் வாழ்வுக்கு எதிரானவை என்ற மீட்டுருவாக்கத்தை முன்னிறுத்திப் பதிகம்பாடி மக்களோடு பரவினார்கள் பாவலர்களாகிய நாயன்மார்கள்.
கலைகள் புலன்நுகர்ச்சியின் மாறுவேடங்கள் என்றுகொண்ட சமணர்கள், துய்ப்புக்கு எதிர்துருவத்தில் நின்று இயங்கியபோது, கலையே வழிபாடு வழிபாடே கலை என்ற சித்தாந்தத்தை முன்மொழிந்தது சைவப்பேரியக்கம். எனவே இசையே தேவாரமாயிற்று.
தேவாரம் என்ற சொல் சோழமன்னர் காலத்தில் வழிபாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரையின்படி அது வேறுபடுகிறது. இசையின் இயங்கியலை முதல்நடை, வாரம், கூடை, திரள் என்று நான்காகப் பகுக்கிறார் அடியார்க்கு நல்லார். மந்தநடையில் தாழ்ந்து செல்வது முதல்நடை என்றும், விரைந்த நடையில் முடுகிச் செல்வது திரள் என்றும், சொல்லொழுக்கம் இசையொழுக்கம் இயைந்த நடை வாரம் என்றும், சொற்செறிவோடும் இசைச்செறிவோடும் பின்னி நடப்பது கூடை என்றும் அடியார்க்கு நல்லார் உரை வகைப்படுத்துகின்றது. இதில் இரண்டாம் வகையான வாரம் என்ற இசைவடிவமே நாயன்மார்களின் நாவிற்கிடந்து நடனமாடியிருக்கிறது. தே என்பது தெய்வத்தைக் குறிக்கும் ஓரெழுத்தொருமொழி. வாரம் என்பது இரண்டாம் வகை இசைப்பாடல். எனவே தெய்வத்துக்கான இசைப்பாடல் என்பதுதான் தேவாரத்திற்கான பொருளாய்ப் பொருந்துகிறது. கலைக்கு எதிரான சமணர்களைக் கலைக்கருவி கொண்டே களம் கண்டிருக்கிறார்கள் நாயன்மார்கள்.
வாழ்வில் துய்ப்பு ஒரு நிலை; துறவு ஒரு நிலை. துய்ப்பு இயல்பு; துறவு என்பது துணிபு, அது கட்டாயமில்லை என்ற கருத்தை ஏழாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயம் இருகைநீட்டி வரவேற்றது.
சைவத்தில் பிறந்து மருள் நீக்கியாராகி சமணம் புகுந்து தர்மசேனராகி, மீண்டும் சைவமடைந்து அப்பரான பெருமான் பெற்ற பெருந்துயரும் உற்ற மெய்வருத்தமும் வேறெவரும் எதிர்கொள்ளாதது.
நீற்றறையில் இட்டபின்னும், பாற்சோற்றில் நஞ்சூட்டிய பின்னும், கொலைக்களிற்றை ஏவிய பின்னும், கல்லிற்பூட்டிக் கடலில் பாய்ச்சிய பின்னும் அப்பர் உயிர் தப்பி மீண்டு வந்தார் என்பது கதையோ வரலாறோ எவ்வாறாயினும், சிவனருள்கொண்டார் மரணத்தை வென்றார் என்ற கருத்தைப் பெரும்பிம்பப் படுத்தும் சைவப் பரப்புரை என்றே அதனைப் புரிந்துகொள்ள நேர்கிறது. சைவ மீட்புக்குத் தன்னுயிரையே பணயம் வைத்துப் பயணம் செய்த அறப்போராளி அப்பர் என்றே அகச்சான்று சொல்கிறது.
மூன்றாவது சமூக மீட்பு
அப்பர் பெருமானின் அறப்போரினால் சமணத்தைவிட்டு மன்னன் வெளியேறினான் என்ற போதிலும் சமூகத்தைவிட்டு வருணாசிரமம் வெளியேறவில்லை. குடும்பம் குலமாகி, குலம் சாதியாகி, சாதி வருணாசிரமப்பட்டு இறுகிக் கிடந்த சமூகத்தில் சமத்துவம் காணச் சைவ மருந்தே போதுமென்று நம்பினார்கள் நாயன்மார்கள்.
ஊருக்குள் உளிச்சத்தம் ஒலித்தபோதும் எல்லையில் ஓயாத வாள்சத்தத்தால் பல்லவர் பொருளாதாரம் பெரும்பாலும் பள்ளத்திலேயே கிடந்தது. ஆயுத உற்பத்திக்குக் "கத்திக் காணம்' என்று வரிவித்த அரசு, கீரை உற்பத்திக்கும்கூடக் "கண்ணிக் காணம்' என்று திறைகேட்டது.
சாதி அடுக்குகளும் சமூக பேதங்களும் கெட்டிப்பட்டுக் கிடந்த பல்லவ நாட்டில் சாதி தாண்டிய சமத்துவத்தை சைவத்தால் கொண்டுவர முடியுமென்று ஆலவாயன்மீது ஆணையாய் நம்பினார்கள் நாயன்மார்கள்.
சம்பந்தன் என்ற ஒரு பிராமணச் சிறுபிள்ளையின் காலில் அப்பராகிய ஒரு வேளாளன் வீழ்ந்து வணங்கியதைப் பகுத்தறிவுலகம் பாராட்டாது என்ற போதிலும் அப்பூதி அடிகள் என்ற பிராமணன் அப்பராகிய வேளாளன் காலில் வீழ்ந்து வணங்கியதைப் போகிறபோக்கில் புறந்தள்ளிவிட முடியாது.
"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்பது அப்பர் தேவாரம். பசுவை உரித்து மாட்டிறைச்சி உண்ணும் புலையரும்கூட, சிவபெருமான்மீது அன்பு பூண்டிருந்தால் அவரையும் இறைவனாய் எண்ணி வணங்குவோம் என்பது கருத்து. சைவத் திருமருந்து மூலம் சாதியற்ற சமத்துவம் காண்போம் என்பது நாயன்மார் கண்ட சமூகநீதி. அதே வேளையில் செருப்புத் தைக்கும் இனத்தான் ஒருவன் பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கன்பராகில் அவனுக்கும் கடைத்தேற்றம் உண்டா என்ற கேள்விக்கு விடையேறும் பெருமான் அடியாரிடம் விடையில்லை. "புலையரேனும்' என்ற சொல்லாட்சியில் ஆளப்படும் உம்மை, இழிவுச் சிறப்பும்மையாயினும் அப்பர் நோக்கம் புலையனை இழிவு செய்வதன்று; அவனைக் கடைத்தேற்றுவதே. ஒரு புலையனும் கைலாயம் ஏறி சிவகதி அடையும் ஒரே கருகி சைவ ஏணிதான் என்ற நாயன்மார்களின் நம்பிக்கை வருணாசிரமத்தை வழித்தெறியவில்லை என்ற போதிலும் அவர்தம் ஆழ்ந்த நம்பிக்கையை அய்யுறவியலாது.
ஊர்ப் பழியைத் தம்மேலிட்டுக் கொள்வது பொதுவாழ்க்கை புரிவோரின் பழுத்த பண்பாகும்.
"பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம் / மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து / கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாது கெட்டேன்' என்ற பாடலில் பிழை செய்யும் இன்னோர் உயிரின் பழியைத் தன்மேல் இட்டுக்கொண்டு தாண்டகம் பாடிய தலைவனுக்குத் தலை வணங்கவே தோன்றுகிறது.
துயரங்களின் வழியேதான் உயரம் செல்ல முடியும் என்பதே அப்பர் வாழ்வு. சிறுவயதில் தந்தை இறந்தார். அதே துயரத்தில் தாய் மரித்தார். தமக்கைக்கு நிச்சயமான மணமகன் கலிப்பகையார் களத்தில் இறந்தார். அந்த ஆறாத்துயரத்தில் தமக்கையும் உயிர்துறக்க எத்தனித்தார். இறுதியில் மணமாகாமலே இறுதிவரை விதவைக்கோலம் பூண்டார். சிறுவர் மருள்நீக்கியார் சமணம் புகுந்தார். வடவைத் தீ புகுந்ததுபோல் வயிற்றில் சூலை நோய் கண்டார். தமக்கையின் தாய்மடியிலும் சைவத்தின் காலடியிலும் மீண்டோடி வந்து விழுந்தார். அங்கிருந்து தொடங்குகிறது அவரது மிச்ச வாழ்வும் உச்ச வாழ்வும்.
வாழுந்தலைமுறை வரித்துக்கொள்வதற்கு அப்பர் பெருவாழ்வில் ஒன்றுண்டு. காலம் உன்மீது சம்மட்டி அடிக்கும்போதெல்லாம் துரும்பாய் இருந்தால் தொலைந்து போவாய்; இரும்பாய் இருந்தால் ஆயுதமாவாய்.
மனத்தொண்டு - மொழித்தொண்டு - மெய்த்தொண்டு என்ற முத்தொண்டு
களில் நிலைபெற்றவனே முழுத்தொண்டனாகிறான். பேரன்பிலேயே திளைத்துக்கிடந்த மனத்தொண்டு; நான்கு ஐந்து ஆறாம் திருமுறைகளைப் பாடிப் பரவிய மொழித்தொண்டு; வற்கடம் வந்துற்ற காலை சம்பந்தரோடு இணைந்து அன்பர் பசிதீர அன்னம் பாலித்த மெய்த் தொண்டு என்ற மூன்றும் கொண்டு தமிழ்நாட்டுத் துறவுப் பரப்பில் ஆகாயம் அளாவி நிற்கிறார் அப்பர் பெருமான்.
உலகு - உடல் - உயிர் இந்த மூன்றுக்குமான தொடர்புநிலைத் தேடலே மெய்ச் சமயம். அந்தத் தேடல் உணர்வு நிலையில் தொடங்குகிறது. உணர்விலிருந்து அறிவுக்கும் அறிவிலிருந்து ஞானத்திற்கும் ஞானத்திலிருந்து விடுதலைக்குமான சத்தியசோதனைதான் சமயம். அது கர்த்தரோ புத்தரோ
அல்லாவோ சிவனோ வேறு எவனோ ஆயினும் அகத்தேடல் என்பது ஒன்றுதான். அந்தத் தேடலே தன் வாழ்வென்று தெரிவு செய்துகொண்டவர் அப்பர்.
இன்பங்களின் பின்னால் ஐம்புலன்கள் அலைவது ஒரு நிலை. ஐம்புலன்களும் தம்மைத் தொடர்ந்து வரச் செய்தல் ஒரு நிலை. முன்னது வாழ்வின் முற்பகுதி. பின்னது வாழ்வின் பிற்பகுதி. இந்தத் தெளிவுதரும் திட்பத்தை அப்பரே அருளிப் போந்தார்.
அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதொன்றே ஒரு சமூகத்திற்கும், தனிமனிதனுக்குமான உச்ச விடுதலை. அச்சம் என்பது ஆசை; அச்சம் என்பது பற்று; அச்சம் என்பது பொய்மை; அச்சம் என்பது அறியாமை. அந்த அச்சத்திலிருந்து விடுதலை பெற்ற முதல் குரலாக அப்பர் பெருமான் குரலே தமிழ்ப்பரப்பில் கேட்கிறது. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்பதும், "அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை' என்றதும், "மலையே வந்து வீழினும் மனிதர்காள் நிலையினின்றும் கலங்கப் பெறுதிரேல்' என்ற கூற்றும் அச்சமற்ற சமூகத்தை வரித்தெடுக்கத் தன்னையே உரித்தெடுத்துக்கொண்ட துறவியின் உன்னதத்தைக் காட்டுகின்றன.
இந்த நூற்றாண்டு இளைஞருக்கும் எந்திர நூற்றாண்டு மனிதருக்கும் அப்பரின் பழுத்த வாழ்விலிருந்து வெடித்துவரும் சேதி மாறாத போர்க்குணமும் பற்றற்ற பற்றுறுதியும்தான். பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட என் முப்பாட்டன் என் குருதி அணுக்களில் எழுதியனுப்புவதும் இதுதான். ஆதிமனிதனின் மரபணுக்கள் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னும் விஞ்ஞான மனிதனின் திசுக்களுக்குள் வினைப்படுவது மாதிரி, திருநீறு கழிந்தபிறகும் சிவசின்னங்கள் அழிந்தபிறகும் உழவாரப்படை ஒடுங்கியபிறகும் பற்றற்ற போர்க்குணம் என்ற பேராண்மைத் தத்துவமாய் உலகளந்த அப்பர் ஓங்கி நிற்கிறார்.
ஓர் இனத்தின் மனிதவளத்தை எல்லாக் காலங்களிலும் செழுமை செய்யும் ஆளுமைகள் எல்லா மொழிகளிலும் பிறப்பதில்லை; சிலரே பிறப்பர். அப்படி ஓர் ஆளுமை அப்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com