மனிதனின் மனம், தன்னைப்போல் ஆறறிவு உயிரிடத்தில் அன்பு கொள்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஐந்தறிவுப் பிராணிகள், பறவைகள், விலங்குகள் இவற்றிடமும் ஒரு ஈடுபாடு, அன்பு, பாசம் ஏற்படுகிறது. இந்த இயல்பு மிகும்போது அந்த வகை ஐந்தறிவு ஜீவனை தானே வளர்க்கவும் விழைகிறான்.
இந்த ஆசை சிறுவயதில், இளமையில், முதுமையில் என எப்பருவத்தும் எழுவதும் இயல்பு. வசதியும், வாய்ப்பும், சூழலும் கிட்டும்போது இது கைகூடுகிறது. வீடு எதிர்க்காத வரை இது இயல்பாய் நிகழ்கிறது. தனது நேரம், கவனிப்பு, பொருள் இவற்றையும் தான் வளர்க்கும் தனது செல்ல, வளர்ப்புப் பிராணி மீது செலுத்தும் நிலை உருவாகிறது.
இந்த வளர்ப்பு என்பது ஒருவரின் ஆசையால் மட்டுமின்றி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, மற்றவரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள விழையும் ஆசை, வாழ்நிலைப் பிரதிபலிப்பு போன்ற வேறு சில காரணிகளாலும் அமைகிறது. வாஸ்து, ஜோதிடம் போன்ற நம்பிக்கை சார்ந்த காரணிகளும் கை கோக்கின்றன.
நாய், பூனை, கோழி, முயல், கிளி, புறா, ஆடு, மாடு, மீன் எனப் பல உயிரினங்களும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. நகரம், கிராமம் என இரு சூழல்களுக்கேற்ப வளர்க்கப்பெறும் உயிரினங்கள் மாறுபடுகின்றன.
அண்மையில், கேரளாவில் தெருவில் திரியும் நாய்களால் பொது மக்களுக்குக் கேடு மிகுதியாவதால் அவற்றைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று ஒரு சாரார் கூறுவதும், மிருகவதைத் தடுப்புக் குழு, பிராணி நலச் சங்கம் போன்ற அமைப்புகள் இதை எதிர்ப்பதும் நிகழ்கிறது.
தமிழகத்திலும் அடிக்கடி தெருநாய்களின் தொல்லையால் சாமனிய மக்கள், சிறுவர் - சிறுமியர் பாதிக்கப்பெறுவதும் சில நிகழ்வுகளில் மனித உயிர் பிரிவதும்கூட நேர்கிறது.
முன்பு, வீடுகளில் வளர்க்கப்பெறும் பிராணிகளுக்கு நகராட்சி உரிமம் வழங்கி அதை அப் பிராணிகளின் கழுத்தில் கட்டச் செய்தும், குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்வதும் நடைமுறையில் இருந்தது.
அதேபோல் தெருவில் திரியும் பிராணிகளுக்கு முறையே ஊசி போன்ற மருத்துவப் பராமரிப்பும் மேற்கொள்ளப்பெற்று வந்தது. ஆனால், தற்போது காசு கொடுத்தால் மட்டுமே வைத்தியம்.
நாய் கடித்தால், கடிபட்டவருக்கு தொடர் ஊசியும் மருத்துவமும், மருத்துவப் பராமரிப்பும் என நேர்கிறது.
வீட்டில் நாயை வளர்ப்போர் அதன் பராமரிப்பில் மட்டுமல்லாது, அண்டை அயலாரின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், சிலர் இதில் அக்கறை கொள்ளாது, சுற்றுப்புற தூய்மை, தெருவாசிகள், மக்கள் பாதுகாப்பு இவற்றைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாது, அவர்களின் நியாயமான எதிர்ப்பையும், அவர்களது தற்பாதுகாப்பையும் புறந்தள்ளி அலட்சியப்படுத்தும் போக்கு நிலவுகிறது.
அக்கம் பக்கம், தெருவின் தூய்மை இவற்றை இந்தப் பிராணிகள் அசுத்தம் செய்வதை தவிர்ப்பதற்காக தெருவாசிகள் முன்னெச்சரிக்கையாக நாயை இந்தப் பக்கம் விடவேண்டாம் என்று கூறினால், நாய் வளர்க்கும் நபர் இது தெரு, உங்களுக்கு என்ன பிரச்னை எனக் கேட்கும் நிலை மனிதரின் மனம் வளரா நிலையைக் காட்டுகிறது.
மாடுகளும் நாய்களும் தெருவில் உரிய பராமரிப்பின்றி அலைவதால் பொதுமக்களுக்குத் தொல்லைகள் அதிகம் - நாய்கள் நம்மைக் கடித்துவிடுமோ என்றும், அவைகளுக்குள்ளேயே சொந்தச் சண்டையில், இரவில், ஏன் பகலில் கூடப் பெருங்குரலில் ஊளையிட்டு அமைதியைக் குலைப்பதும் பாய்ந்து அங்குமிங்கும் ஓடுவதும் என நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் என அனைவரையுமே பாதிக்கும் விஷயங்கள்.
நகராட்சிகள் சற்றே கூடுதல் கவனம் கொண்டு இவைகளைப் பராமரிக்க முயல வேண்டும்.
வெளிநாடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் பெரும்பாலும் அவற்றை வீட்டிலேயே, கழிப்பறையிலேயே அவற்றை மலம், சிறுநீர் கழிக்கப் பழக்கப்படுத்தி வளர்க்கின்றனர். நாய் வளர்ப்போர் கையில் சிறு நெகிழிப் பையையும், தாளையும் கொண்டு வருகின்றனர்.
தமது வளர்ப்புப் பிராணி தெருவோரம் மலம் கழித்தால் அதைத் தமது பையில் அள்ளி தாளில் சுற்றி அந்தத் தெருவில் வைக்கப் பெற்றிருக்கும் குப்பைத் தொட்டியில் இடுகின்றனர்.
இதற்கு நேர் விரோதமாய் அண்மையில் ஊடகத்தில் ஒரு செய்தி.
அரசு அதிகாரி ஒருவர், தம் வீட்டருகே திரியும் ஒரு தெரு நாய் தம்மைப் பார்த்து அடிக்கடிக் குறைக்கிறது என்கிற கோபத்தால் அந்த நாயை அடித்துக் கொலையே செய்துவிட்டார். உண்மையில் நடந்ததா எனத் தெரியாது.
மருத்துவம் பயிலும் மாணவர் சிலர் உயரமான மொட்டைமாடியிலிருந்து, நாயைத் தூக்கித் தரையில் கீழே வீசிய கொடூரமும், விடுதிக்கு வருகை தந்த குரங்குகளை எரித்துக் கொன்ற கொடூரமும் நம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
தொல்லை, திருட்டு இவை போன்ற காரணங்கள் கூறப்பெறினும் அதை உரிய முறையில் தடுக்க வேண்டுமே தவிர, இப்படி வதைப்பதும் கொல்வதும் எவ்வகையிலும் நியாயமில்லை. மனித மருத்துவம் செய்யப் பயிலும் இவர்கள் காக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரர்களன்றோ?
ஆக, உயிர்ப் பலி என்பது கண்டிக்கத் தக்கது களையப்பெற வேண்டியது அவசியம்.
தெருவில், பூங்காவில், கடற்கரையில், பொதுமக்கள் நடமாடுமிடங்களில், மக்கள் கூடுமிடங்களில் இந்த வகை வளர்ப்புப் பிராணிகளை அழைத்துவரும் வளர்ப்பாளர்கள் தமது பிராணிகளை கவனமாக அழைத்துச் செல்லுதல் நலம்.
சிலர் "நம்ம டைகர் கடிக்காதுங்க' என்று மிக எளிதாகக் கூறக் கேட்டிருக்கிறேன். நான் எனக்குள் சொல்லிக்கொள்வேன் - "உங்களுக்குத் தெரியும் எனக்கோ அந்த டைகருக்கோ தெரியுமா?'
அண்மையில் வட மாநிலமொன்றில் புதர்களுக்கிடையே விடப்பெற்ற பிறந்து சில மணிநேரமேயான பச்சிளங் குழந்தையைக் கொத்த வந்த பறவைகளிடமிருந்து சின்னஞ் சிறிய நாய்க்குட்டிகள் நாலைந்து சேர்ந்து காவல் காத்து அவ்வழியே சென்ற மனிதரிடம் முறையிட்டு அழைத்து வந்து அந்தக் குழந்தையைக் காட்டினவாம். அந்த மனிதர் அக் குழந்தையை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்த நாய்களின் அக்கறைகூட அந்தக் குழந்தையை ஈன்றவளுக்கும் அதன் தந்தைக்கும் இல்லாமல் போனது கொடும் அவலம்
பூனை வேறு வகை. பூனை தன்னைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளும். தனது கழிவுகளைத் தானே மண் கொண்டு மூடிவிடும்.... ஆனால், அதன் இரை - மாமிச வகையாய் அமைந்துவிடின் கேட்கவே வேண்டாம் கடித்துக் குதறி வழியெங்கும் சிதறச் செய்துவிடும் ...
மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் இரவில் மகிழுந்தினுள் - முன்பக்க பானெட்டில் என்ஜினருகே கதகதப்புத் தேடிச் சென்று பதுங்கி, அருகிருக்கும் மின்கம்பிகள், ஒயர்களைப் பதம் பார்த்து, ருசி பார்த்து, உறங்கி விழித்து, பின், ஒன்றும் செய்யாததுபோல் - ஒன்றும் தெரியாததுபோல் - ஓசையின்றி வெளியேறி விடும். மறுநாள் அவசரமாக, நாம் மகிழுந்தை எடுக்க நேரும்போதுதான் பூனையின் திருவிளையாடல் தெரியவரும்.
சென்னையில்கூட கோழி வளர்க்கும் பழக்கம் பல இடங்களில் உண்டு. அண்டை வீடுகளில் சென்று முட்டையிட்டு, விபரீத சண்டை சச்சரவுகளுக்குக் காரணமாகிவிடும் கோழிகளும் உண்டு.
காதல் பறவைகள் புறா, இவை வளர்க்கப் பெறும் வீடுகளில் மெலிதான கீச் கீச், கீ கீ, பக் பக் ஒலிகளும் அவ்வப்போது எழுந்து மறையும்.
மீன் வளர்ப்பது மற்றொரு கலை. பெரும்பாலும் வீட்டின் வரவேற்பறையை இந்த மீன்தொட்டி அலங்கரிக்கும். விருப்பம் காரணமாய் வளர்ப்பதைவிட ராசி காரணமாய் மீன் வளர்க்கப்பெறும் நிலை நகரில் அதிகரித்து வருகிறது.
ஆடுகளும் மாடுகளும் இல்லங்களில் வளர்க்கப்படுவது காலங்காலமாய் நம் நாட்டில் நடைமுறை. பசுவும் ஆடும் வளர்க்கப்பட்ட காலம் பொற்காலம்தான். அமைதியும் சாவகாசமும் கொண்ட இனிய வளர்ப்பு இந்த ஆடும் மாடும். அவற்றின் கழுத்து மணியோசை நம்மை விடியலில் எழுப்பும்.
"காக்கைக் குருவி எங்கள் ஜாதி' என்ற பாரதி, வீட்டில் சமையலுக்கு இருந்த அரிசியை குருவிகளுக்கு வாரியிறைத்து மகிழ்ந்தவர்.
சில வீடுகளில் இந்த வளர்ப்புப் பிராணிகளால் வீட்டுக்குள்ளேயேகூட கருத்து வேற்றுமை உருவாவதுமுண்டு. "அந்தப் பிராணிகிட்ட காண்பிக்கிற அக்கறையை மனுசங்க கிட்டயும் காண்பியுங்க' என்று குரல் ஒலிக்கக் கேட்பதுண்டல்லவா?
விபரீத விளைவுகளைப் பற்றி யோசித்து வளர்ப்புப் பிராணிகளைப் பொதுஇடங்களில் அழைத்து வரலாமா என்று யோசித்து அதனால் பிறருக்குத் தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதனாலேயே பொது வாகனங்களில் வளர்ப்புப் பிராணிகளை அழைத்துவரத் தடை உள்ளது.
பிராணி, சக குடும்பத்தினர், அண்டை அயல் வீட்டுவாசிகள், பொதுமக்கள் என்று அனைவரின் நலன் பற்றிய அக்கறையும் அதையொட்டிய செயல்முறையும் அவசியம் வேண்டும் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


