ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடரும் இனப்படுகொலை

வரலாறு என்பது படிப்பினை தருவது. அதில் கிடைக்கும் அனுபவங்கள் நமது எதிர்காலத்தைப் பட்டை தீட்ட உதவ வேண்டும்.

News image
Updated On :31 அக்டோபர் 2016, 7:53 pm

பா. இளையபதி

வரலாறு என்பது படிப்பினை தருவது. அதில் கிடைக்கும் அனுபவங்கள் நமது எதிர்காலத்தைப் பட்டை தீட்ட உதவ வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் வாழும் தமிழர்களின் இன்னல்களைப் பொருத்தவரை, நமக்கு மிகவும் கொடிய அனுபவங்கள் கிடைத்தும் அவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம்.
அதன் விளைவாகவே மீண்டும் கொடூரங்கள் அரங்கேறுகின்றன. அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் இலங்கை போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தக் கோணத்தில்தான் அணுக வேண்டும்.
இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதியான யாழ்ப்பாணத்தின் கொக்கு - குளப்பிட்டிச் சந்திப்பில், இருசக்கர வாகனத்தில் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் விஜயகுமார் சுலக்ஷன் (24), நடராசா கஜன் (23) ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் இலங்கை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முதலில் அதை விபத்து என்றுதான் போலீஸார் கூறினர். ஆனால், உயிரிழந்த மாணவர்களின் உடலில் இருந்த குண்டுக் காயங்கள், நடந்த கொலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
அந்தப் படுகொலை தொடர்பாக ஐந்து போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அது கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
இலங்கையில் 2009-இல் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவு பெற்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
தமிழர்களின் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பறிக்கப்பட்டு அங்கு சிங்கள ராணுவத்தினரும், சிங்கள மக்களும் குடியமர்த்தப்பட்டனர்.
போரின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள், தமிழ் இளைஞர்களின் நிலை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. போராளிகள் 104 பேர் விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்னும், எத்தனை பேர் முடமாக்கப்பட்டனர், தடுப்புச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளி உலகுக்குத் தெரியாமலே மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 2009 மே 18-இல் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவித்தார். அதன்பின், பதவியேற்ற மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு, தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழர்கள் மீதான போரை தற்போதும் இலங்கை அரசு மறைமுகமாக நடத்தி வருவதாகவே தெரிகிறது.
சர்வதேச ஊடகங்கள் மைத்ரிபால சிறீசேனாவை அமைதியின் தூதர் என பாராட்டினாலும், அவரும் சிங்களப் பேரினவாதத்தின் ஓர் அங்கமாக இருந்தவர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே யாழ்ப்பாணத்தில் கல்லூரி மாணவர்களின் கொலை நடந்தேறியுள்ளது.
மாணவர்கள் கொலைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டம்பர் 24-இல் தமிழ் மக்கள் நடத்திய "எழுக தமிழ்' பேரணியாகும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் 10 பேருக்கு ஒரு சிங்கள ராணுவ வீரர் என்ற நிலை நிலவும் போதிலும், அந்தப் பேரணியில் தன்னெழுச்சியாகப் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
அது சிங்கள ஆட்சியாளர்களைக் கலங்கடிக்கச் செய்தது. அந்தப் பின்னணியில்தான், சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சிங்கள போலீஸார் அந்தப் படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப் படுகொலை 2009-இல் இலங்கையில் நடைபெற்றபோது, இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் இலங்கை அரசுக்கு உதவிகளைச் செய்தது. இப்போது மத்தியில் ஆட்சி புரியும் பா.ஜ.க. அரசும் கூட, அதே பாதையில் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது, இரு மாணவர்கள் கொலையில் தொடங்கியுள்ள இனப் பாகுபாடு அதன் கொடூர முகத்தைக் காட்டும்வரை இந்தியாவும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றனவா?
ஏனென்றால், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்கெனவே வரலாறு அளவுக்கதிகமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜனநாயக முறையில் உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளியதே இலங்கை அரசாங்கம்தான் என்பதை யாராலும் மறுக்க
முடியாது.
இதற்கு மேலும், அங்கு மிகப் பெரிய இனப் படுகொலை நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், இலங்கையில் 2009-இல் போர் என்ற பெயரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டதை இனப் படுகொலைதான் என்று இந்தியாவும், சர்வதேச சமூகமும் முதலில் அறிவிக்க வேண்டும்.
தவிர, அந்த இனப் படுகொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை, பொது வாக்கெடுப்பை நடத்தவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
மேலும், தமிழர்கள் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தை வெளியேற்றுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் திருப்பி அளிக்கவும் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று, தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமையாளர்களும், ஜனநாயகவாதிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.