/

உரிமை கீதம் பாடுவோம் 

மனித உரிமைகள் எங்கிருந்து துவங்குகிறது? அவை அரசியல் சாசனம் மூலமாகவோ, மக்களவையிலிருந்தோ, நீதிமன்றங்கள் தீர்ப்பின் அடிப்படையிலோ பிறப்பதல்ல.

News image
Updated On :18 டிசம்பர் 2017, 8:48 pm

ஆர். நட​ராஜ்

மனித உரிமைகள் எங்கிருந்து துவங்குகிறது? அவை அரசியல் சாசனம் மூலமாகவோ, மக்களவையிலிருந்தோ, நீதிமன்றங்கள் தீர்ப்பின் அடிப்படையிலோ பிறப்பதல்ல. அவை சிறு இடங்களில் வீடுகளில், தெருமுனைகளில் உணரப்படுபவை. அத்தகைய சிறு இடங்களில் உரிமைகள் காப்பாற்றப்படவில்லை என்றால், உலக அளவில் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் பயனற்றது,' என்றார் மனித உரிமைகள் சாசனத்தை வடிவமைத்த எலினோர் ரூஸ்வெல்ட். அவர் அதைச் சொல்லியது 1948-ஆம் ஆண்டு. ஆனால் இன்றும் அதே நிலைதான். எனவே, மீண்டும் மீண்டும் அதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது என்பதில் மாற்றம் இல்லை.
ஹியூமன் ரைட்ஸ் -மனித உரிமைகள் என்ற சொற்றொடரை 1831-ஆம் ஆண்டு வில்லியம் லாய்ட் காரிசன் என்பவர் "லிபரேட்டர்' என்ற தனது பத்திரிகையில் பயன்படுத்தினார். தாமஸ் பெய்ன், ஜான் லாக், ஹெகல் போன்ற ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மனித உரிமைகள் பற்றி விரிவாக எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தி, சாதாரண மக்களுக்கு ஏழ்மையிலிருந்து விடுதலை, வாழ்வாதாரம், அடிப்படை வசதி, சுதந்திரமாக வாழ அமைதியான சூழல் இவை அனைத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரிட்டன் சிந்தனையாளர் தாமஸ் பெய்ன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மனித உரிமைகளுக்கு சோஷலிஸ வடிவம் கிடைத்தது.
மனித உரிமைகள் மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று உரிமைகள் பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மஹாகவி சுப்பிரமணிய பாரதி. "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பதுறுதியாச்சு' என்று குதூகலமாக சுதந்திரம் கிடைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே முழங்கினார்.
ஆனால் இன்றுவரை சமத்துவம் என்பது உலகளவில் நிறைவேறாமலே இருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை. 
"புத்தாயிரம் இலக்குகள் - "மில்லெனியம் கோல்ஸ்' என்று ஓர் லட்சியத்தை ஐ.நா. சபை 2000-ஆம் ஆண்டு அறிவித்தது. உலக நாடுகள் 15 ஆண்டுகளில், அதாவது 2015-ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய பொருளாதார இலக்குகளை நிர்ணயித்தது. ஏழ்மை- பசிப்பிணி ஒழித்தல், எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி, பாலியல் சமத்துவம், சிசு இறப்பு தவிர்த்தல், தாய்மார்கள் நலம் பேணுதல், எய்ட்ஸ், மலேரியா போன்ற கொடிய நோய்கள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற 7 முக்கிய இலக்குகள் குறிப்பிடப்பட்டன. இவற்றை அடைய உலக நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பது ஐ.நா.வின் முக்கிய அறிவுறுத்தல்.
இலக்குகள் இன்னும் முழுமையாக எட்டா நிலையிலேயே நிற்கின்றன. உள்நாட்டுக் கலவரங்கள், கொந்தளிப்பு, மதம் சார்ந்த பிரச்னைகள், பயங்கரவாதம் போன்ற பல தடைக் கற்கள் மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கன்றன. இம்மாதிரி சூழலில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள், வயோதிகர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள்.
1950-களில் டொமினிகன் குடியரசின் கொடுங்கோல் ஆட்சியாளன் ட்ரூஜில்லோவுக்கு எதிராகவும் மக்கள் நலனுக்காகவும் மிராபல் சகோதரிகள் நால்வர் போராடினர். நால்வரில் மூவர், 1960-ஆம் ஆண்டு நவ.25-ஆம் நாள் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். அவர்களது உயிர்த் தியாகத்தை கொளரவிக்கும் வகையில் நவ.25-ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக ஐ.நா. 1999-இல் அறிவித்தது. நவ.25 முதல் டிச.10-ஆம் தேதி வரையிலான 16 நாட்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு காலமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன் முடிவில் டிச.10 சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாடுகளின் தலையாய கடமை. ஐ.நா.வின் அறிக்கைப்படி, 2005-லிருந்து 2016 வரை 87 நாடுகளிலிருந்து பெற்ற தகவலின்படி 15 வயதிலிருந்து 49 வயது வரை உள்ள பெண்களில் சுமார் 20% பேர் வன்முறைக்கு ஆளாகினர் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். இதில் பலர் உயிரிழந்தனர். இவ்வன்முறையில் ஈடுபடுவது பெரும்பாலும் உறவினர் அல்லது நெருக்கமானவர். 
இன்னொரு பிரச்னை ஆணவக் கொலைகள். பெண் சுதந்திரத்தை ஒடுக்கவும் ஆண் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் இத்தகைய கொலைகள். சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 16-ஆம் பிரிவின்படி ஆண், பெண் தமது விருப்பத்தின்படி மணமுடிக்க முழு சுதந்திரம் உண்டு. அந்த உரிமையை எவரும் பறிக்க முடியாது. 
ஐ.நா. வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு விழிப்புணர்வின் மையக் கருத்து "எவரையும் ஆதரவற்று விட்டுவிடாதீர்கள், பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' என்பது.
அகதிகள், இயற்கைப் பேரிடர், பயங்கரவாத தாக்குதலில் சிக்கியவர்கள், போர் மூண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இவர்கள்தான் அதிகமாக அவதியுறுகிறார்கள். அவர்களுக்கென பிரத்யேகமான கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கம். 
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2016-ஆம் ஆண்டு அறிக்கைப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நகர வரிசையில் தலைநகர் புது தில்லிக்கு முதலிடம். நாட்டில் பதிவான 3.39 லட்சம் வழக்குகளில் 33% புதுதில்லியில் நடந்தவை. அடுத்து மும்பை பெங்களூரு, ஹைதராபாத். சென்னை பாதுகாப்பான நகரமென்பதை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சமத்துவம், நீதி, கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்; அதற்கு எல்லோரும் உறுதியுடன் மனித உரிமைகளைப் பேண வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையம் தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டு வரும் 2018-இல் 70 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. அதையொட்டி, உலகம் முழுவதும் மனித உரிமைகள் பற்றிய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் முழுமையாக சென்றடைவதற்குத் தடையாக இருப்பது ஏழ்மை, தரமான கல்வி இல்லாமை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் உள்ளிட்டவை. மூட நம்பிக்கைகளைத் தவிர்த்த தரமான கல்வி ஒன்றுதான் பகுத்து ஏற்கும் அறிவை வளர்க்கும். மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலையும் சமூக விரோதிகள் வலையில் இளைய சமுதாயம் சிக்காமல் பாதுகாக்கும்.
ஐ.நா.சபை புத்தாயிரத்தில் வகுத்த வளர்ச்சி இலக்குகள் 2015 வரை ஓரளவு எட்டப்பட்டுள்ளன. ஆயினும் தடையில்லாமல் பேணக் கூடிய வளர்ச்சிப் பணிகள் 2030-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற வேண்டும் என்ற வகையில் 17 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சமூக நலன் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஏழ்மை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல், சமூக நீதி, வாழ்வாதாரம், மகளிர் மேம்பாடு, ஆழ்கடல் உயிரினப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதன்மை இலக்குகள் பதினேழை வகைப்படுத்தி 169 செயல் குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால், வளர்ந்த நாடுகள்- வளரும் நாடுகள் என்ற பாகுபாடின்றி எல்லா நாடுகளும் பரஸ்பர ஒற்றுமையோடு இலக்குகளை அடைய முற்பட வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
"தின்ன வரும் புலி தன்னையும்
அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய்'
- முண்டாசுக் கவிஞரின் ஆக்ரோஷமான அறிவுரை! 
அதெப்படி? புலி பாய்ந்தால் ஓடத்தானே தோன்றும், சிந்திக்க நேரம் உண்டா!
எவ்வளவோ பிரச்னைகள் நம்மை எதிர்நோக்கி வருகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலையில் உரிமைகள் சார்ந்த சவால்கள் வரத்தான் செய்கின்றன. அதனால் துவண்டு ஓடக்கூடாது. எதிர்கொள்ள மன திடம் வேண்டும். இதை மனதில் இருத்தினால் எல்லா பிரச்னைகளும் கதிரவன் முன் பனிபோல கரையுமே!
சுதந்திரம் பெற்றுவிட்டதாக ஆடி, பள்ளு பாடிய கவிஞரின் தூர திருஷ்டியை வியக்காமல் இருக்க முடியாது. என்ன வைராக்கியம், தைரியம்! தின்னத் துடித்த ஓநாய் ஆங்கிலேய அரசைத் தன் எழுதுகோல் மூலம் எதிர்கொண்டானே தமிழ்க் கவிஞன். சோம்பிக்கிடந்த கிணற்றுத் தவளையாக பயந்திருந்த சமுதாயத்தை தட்டி எழுப்பினானே பாரதி !
சேவை, அர்ப்பணிப்பு, சுயக் கட்டுப்பாடு, விதிகளை மதித்தல் ஒவ்வொருவரிடமும் இருந்தால் நாடு வளமையடையும். முன்னேறிய நாடுகளில் இத்தகைய குணங்களைப் பார்க்கலாம். அதிகார துஷ்பிரயோகம், சுய லாபம், இன்பத்தில் திளைத்தல் பெருகினால் அழிவுப் பாதைதான். மனம் வளமாக இருக்க வேண்டும். நிலத்தில் உழுதால்தான் விளைச்சல் வரும்.
சுவாமி விவேகானந்தர் கூறுவார்: 
"சமுதாயத்திற்கு மூன்று நிலைப்பாடுகள் அவசியம். ஒன்று - நல்லவைகளின் அழியா வலிமை; இரண்டு - பொறாமை, சந்தேகம், காழ்ப்புணர்ச்சி இல்லாமை; மூன்று- நன்மை செய்பவர்களுக்கு எல்லா உதவியும் நல்குதல்.'
எவ்வளவு உயர்ந்த கருத்துகள்! இம்மூன்றும் முழுமையாக இல்லாததால்தானே நாம் இவ்வளவு தூரம் பிரச்னைகளை 
சந்திக்கிறோம்!
நல்லெண்ணம் படைத்தவர்கள் சமுதாய பிரச்னைகளை அலசிப் புரட்டி விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். இப்போது தேவை சிறுமையைக் கண்டு வெகுண்டெழுவது. அதே சமயம், நல்லியல்புகளை வளர்த்து அன்பு பாராட்டுவது. அப்போதுதான் உரிமை கீதம் 
சுதந்திர கீதமாக ஒலிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.