இப்படிச் செய்தாலென்ன?
எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு சார்பில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மதச்சார்பற்ற வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் அவரை


எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு சார்பில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மதச்சார்பற்ற வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டால் அவரை ஒருமனதாக ஆதரிக்கலாம் என்று அண்மையில் தில்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்
டுள்ளது.
ஒருவேளை ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற வேட்பாளர் முன்மொழியப்படாவிட்டால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தலாம் என்றும் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எல்லாம் குடியரசுத் தலைவர் வேட்பாளரை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக மட்டுமன்றி, வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணிக்கு அச்சாரமாகவும் என்ணி ஒன்றுகூடியுள்ள நிலையில், பா.ஜ.க. அறிவிக்கப்போகும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க., உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற இமாலய வெற்றி, தமிழகத்தில் அ.தி.மு.க.வை தங்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்திக் கொண்டது இதுபோன்ற சில காரணங்களால் பா.ஜ.க. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றிபெற்று விடலாம் என்ற நிலையே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படி இருந்தும் பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறது என்பது தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளும் விரும்பும் வகையில் இவர்களது வேட்பாளர் தேர்வு இருக்குமா அல்லது உத்தரப் பிரதேச முதல்வரை போன்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவரோ, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிக நெருக்கமான நபரோ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் எழுகிறது.
முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டார். அனைத்துக்கட்சிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக அவர் இருந்தார்.
பா.ஜ.க. இந்துத்துவா கொள்கை கொண்டதாக இருந்தாலும்கூட, இஸ்லாமியரான அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்து எதிர்க்கட்சியினருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டது.
அதுபோன்றதொரு சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் தற்போதும் பா.ஜ.க.வுக்கு உள்ளது. மத்தியில் முன்பு ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு முறைகேடு வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய மோடி ஆட்சியின் மீது அதன் அரசியல் எதிரிகளால்கூட ஒரு ஊழல் புகாரைக்கூட எழுப்ப முடியவில்லை.
அதற்காக அவர்கள் பா.ஜ.க.வை எதிர்க்க பயன்படுத்தும் ஒரே ஆயுதம் மதச்சார்பின்மை என்பதுதான். இந்த ஒற்றை வார்த்தையால் மட்டுமே எதிர்க்கட்சிகளால் பா.ஜ.க.வை எதிர்க்க முடிகிறது. ஒன்றுகூட முடிகிறது.
பா.ஜ.க.வை பொருத்தளவில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அத்வானி, மோகன் பாகவத் போன்ற உள்ளிட்ட எவரை வேட்பாளராக அறிவித்தாலும் அது எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.
அந்தக் கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானதாக மட்டுமன்றி, அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியாக அமையும் வாய்ப்பும்கூட ஏற்படும்.
இந்த தருணத்தில் ஒரு நல்ல குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதோடு, தனது எதிரிகளை ஒன்றிணைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் பா.ஜ.க.வுக்கு உள்ளது.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியானவரை வேட்பாளராக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் கனவு கனவாகவே போய்விடும். மக்களிடத்திலும் பா.ஜ.க. அரசு மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படும்.
அந்த வகையில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்ய தகுதியானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளார். எளிமையானவர், திருமணமாகாதவர். பொது நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். குறிப்பாக ஊழலுக்கு எதிரானவர்.
இவரை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுமக்களிடமும் பா.ஜ.க. நற்பெயரை பெறமுடியும்.
ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மூலமாக அண்ணா ஹசாரேவின் தொடர் உண்ணாவிரதப் போராட்டமே முந்தைய காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக அமைந்தது. 77 வயதான அந்த மனிதர் குழந்தைகள் முதல் இளைஞர்கள் உள்பட இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரிடத்திலும் நல்மதிப்பை பெற்றவர்.
இவரது இயக்கத்தில் சேர்ந்ததால் மேதாபட்கர், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி உள்ளிட்டவர்கள் மேலும் பிரபலமானார்கள்.
இவரது இயக்கத்தால் இளைஞர்கள் கவரப்பட்டு ஊழலுக்கு எதிராக சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினர். அதன் வெளிப்பாடே ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்ற பா.ஜ.க.வின் கொள்கைக்கு ஆதரவாக அமைந்தது. தற்போது பா.ஜ.க. அரசும் 3 ஆண்டுகளை நிறைவு செய்து
விட்டது.
இருந்தபோதிலும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் எதிரிகள் ஒருவரால் கூட ஒரு ஊழல் புகார்கூட இந்த அரசு மீது எழுப்ப முடியவில்லை.
ஊழலுக்கு எதிராக இருக்கக் கூடிய மத்திய பா.ஜ.க. அரசும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும் இணைந்தால், குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறாமல், அண்ணா ஹசாரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுமக்களின் வாக்குகள் தேவையில்லை என்ற போதிலும், அவருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகம் இருக்கும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட எதிர்க்கும் வாய்ப்பு இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...