மொழி என்பது, இயற்கையின் இனிய படைப்பு. வளர்ச்சிப் பரிமாணத்தின் வற்றாத ஊற்று. எண்ண நாற்றுகள் எழுந்திடும் விளை நிலம். இலக்கியக் குழந்தையின் இசைவுக் கருவறை. வரலாறு சேமிக்கும் விந்தைக் களஞ்சியம். இயல், இசை, நாடகம் வளர்த்திடும் பண்ணை. அறிவு மணம் விரிக்கும் அற்புத மஞ்சரி. மனிதம் உயர்த்தும் மேன்மை விருந்து. உறவை உயர்த்தும் உன்னத மருந்து. இனத்தை உணர்த்தும் சிறந்த சான்று.
மொழியின் தோற்றம் பற்றிப் பல கருத்துகள் உள்ளன. கடவுள்தான் மொழியைப் படைத்தார் என்று முன்பு நம்பப்பட்டது. சிவனுடைய உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்திலிருந்து சம்ஸ்கிருதமும் பிறந்தன என்று கூறப்பட்டது. ஆகவேதான் 'தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடினார்.
பண்டைய கிரேக்கர், எகிப்தியர், சீனர் முதலியோர் இறைவனே மொழியைப் படைத்தான் என்றனர். பின்னர் தோன்றிய கிறிஸ்துவமும் அதே கருத்தை அறிவித்தது. மொழியின் தோற்றம் பற்றி ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டன.
விலங்கு, பறவை முதலியவற்றின் ஒலிகளைப் போன்று, மனிதன் முதலில் ஒலி எழுப்பினான். பின்பு அது மொழியாக வளர்ந்தது என்பது ஒரு கருத்து. இது ஒலிக்குறிப்பு வகை ( (Onomatopoeic) எனப்பட்டது அச்சம், மகிழ்ச்சி, கோபம் முதலிய உணர்ச்சிகளின் நிலையில் வாயிலிருந்து தானாக வெளிப்பட்ட ஒலியே மொழிக்கு அடிப்படை என்பது மற்றொரு கருத்து. இது வியப்புக்குறிவகை (Interjectional) என்று உரைக்கப்பட்டது.
மக்கள் முதலில் சைகை மூலமே தம் கருத்தை அறிவித்தனர். அப்படி, சைகை செய்தபோது, அவர்களை அறியாமல் நாக்கில் பிறந்த ஒலிகளிலிருந்தே மொழி உருவானது என்பது இன்னொரு கருத்து. இது சைகைக் கொள்கை(Gesture Theory) என்று கூறப்பட்டது.
மேக்ஸ்முல்லர் முதலிய மொழியியலாளர்கள் இவற்றுக்குப் பெயர் சூட்டினார்கள். விலங்கு, பறவை முதலியவற்றின் அடிப்படையில் மொழி தோன்றியது என்ற கருத்து 'பெளவெள' (Bow Wow) கொள்கை எனப்பட்டது (எ-டு: காகா, குயில்).
அச்சம், சினம் முதலியவற்றைக் காரணமாகக் கொண்டு மொழி உருவானது என்ற கருத்து 'பூ பூ' (Pooh Pooh) கொள்கை என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட ஓசை உண்டு (எ-டு: வெண்கல மணி ஓசை). இந்த இயற்கை ஓசையே மொழித் தோற்றத்துக்கு மூல காரணம் என்ற புதுக் கருத்தும் எழுந்தது. இது டிங்டாங் என்ற கொள்கையாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டோ ஜெஸ்பெர்சன் என்பவர் மொழியியல் ஆய்வாளர். ஓர் ஆண், ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள முயற்சி செய்த காலத்தில் மொழி பிறந்திருக்கலாம் என்று அவர் அறிவித்தார்.
உணவுதேடலே மொழியின் முதன்மையான அடிப்படை என்று ஆய்வறிஞர் குணா அறிவித்தார். மொழி முதலில் வாக்கியமாகவே உருவானது என்றும் பிறகு, அதிலிருந்து தனித்தனிச் சொற்கள் பிறந்தன என்றும் ஒரு கருத்து கூறப்பட்டது. இதனை அறிஞர் விட்னே மறுத்தார். ஓரசைச் சொற்களே முதலில் தோன்றின என்றார் ஜெஸ்பெர்சன். தமிழில் ஓரெழுத்து இருப்பதைத் தொல்காப்பியம் அறிவித்தது (தமிழில் 64 ஓரெழுத்து ஒரு சொல் உள்ளது. இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இது தமிழின் தொன்மைக்கு முக்கிய சான்று).
உலகில் 6700 மொழிகள் பேசப்படுகின்றன என்று 'வேர்ல்டு வொய்டு வாச்' என்ற நிறுவனம் அறிவித்தது. இவற்றில் தமிழ், வடமொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகியவை செவ்வியல் மொழி (செம்மொழி) என்பதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. தமிழே உலகின் முதல் செவ்வியல் மொழி என்று தேவநேயப்பாவாணர் ஆய்ந்து அறிவித்தார். பிறகு பிறந்த ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ரஷியன் முதலிய மொழிகள் இலக்கிய வளம் பெற்றுள்ளன.
ஆனால் சில மொழிகளில் இலக்கியம் இல்லை. ஒரு சில மொழிகளுக்கு எழுத்தும் இல்லை. மொழி பேசுவோரின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. ஆங்கிலம் பேசுவோரின் தொகை மிக அதிகம். சில பழங்குடி மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
மொழியின் வளர்ச்சிக்குச் சாதகமான சூழல் இல்லை என்றால் அது அழிந்துவிடும். கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பு என்பது ஐக்கிய நாட்டுச் சபையின் முக்கிய கிளை. இந்த அமைப்பு 21.02.2009-ஆம் நாள் அன்று பாரிஸ் மாநகரத்தில் கூடியது. உலக மொழிகளின் வாழ்வுநிலை பற்றி ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டது. 2100-ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 50% விழுக்காடு மொழிகள் அழிந்துவிடும் என்று அறிவித்தது. இஃது ஓர் எச்சரிக்கைக் குரல். தாய்மொழி பேசுவோருக்கு விழிப்புணர்வு ஊட்டும் இன்றியமையாத் தூண்டுகோல். அந்த அமைப்பு மொழியின் அழிவுக்குரிய முக்கிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ளது.
தாய்மொழி, ஆட்சி மொழியாக இல்லாவிட்டால் அம்மொழி அழிந்துவிடும்; கல்விமொழியாக இல்லாவிட்டாலும் ஒரு மொழி மாய்ந்துவிடும்; நீதிமொழியாக இல்லாதிருந்தாலும் மொழி இறந்துவிடும்; வழிபாட்டில் தாய்மொழிக்கு இடம் இல்லை என்றால் மொழி அழிந்துவிடும்; பொருளியல் துறையில் மொழிக்கு முதல் உரிமை இல்லை என்றால் அது மறைந்துவிடும்; மிகுதியாக மொழிக்கலப்படம் ஏற்பட்டாலும் மொழி மாண்டுவிடும்; தாய்மொழியின் பெருமையை உணராமல் பிறமொழி மீது மோகம் கொண்டாலும் தாய்மொழி செத்து விடும்; ஊடகங்கள் தாய்மொழியைச் சிதைத்துவந்தாலும் அம்மொழி அழிந்துவிடும்.
மேலும் சில காரணங்களாலும் மொழி அழிவு நிகழலாம். ஒரு மொழி பேசுவோரின் எண்ணிக்கை நூற்றுக்குக் கீழே இருந்து, அது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும் அவர்களின் மொழி மறைந்துவிடும்.
உலகமயமாக்கல், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம், பெற்றோர் தம் மக்களுக்குத் தாய்மொழி கற்பிக்காதிருத்தல், பேச்சு வழக்கில் மட்டும் மொழி இருத்தல் முதலிய காரணங்களாலும் அழிவின் விளம்பில் மொழி நெளியும், பின்பு அடங்கும். ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு அடிமையாகிவிடும்போது, ஆதிக்க ஆட்சியால் மொழி தேயும்.
கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு மறைந்த மொழிகளையும் மறையும் நிலையில உள்ள மொழிகளையும் அறிவித்துள்ளது.
1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி (சென்சஸ்படி) இந்தியாவில் 1652 மொழிகள் இருந்தன. ஆனால் 1971-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 109 மொழிகளே வழக்கில் இருந்தன. 10,000 பேர் பேசிய மொழியே கணக்கில் கொள்ளப்பட்டது. அதற்குக் குறைவாகப் பேசிய மக்களின் மொழி, ஒரு தொகுதி மொழியாகக் கருதப்பட்டது என்ற அவர் அறிவித்தார் 310 இந்திய மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்றும் அவர் சொன்னார்.
கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பு பிப்ரவரி 21-ஆம் நாளை 'தாய்மொழி தினமாக' அறிவித்தது. எல்லா மொழிகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்தியது (ஆனால் அரசும் இலக்கிய அமைப்புகளும் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதில்லை). இந்த அமைப்பு, அழிவு நிலையில் உள்ள மொழிகளின் பட்டியலையும் வெளியிட்டது. (இதைப் பற்றி இங்கு யாரும் கவனிக்கவும் இல்லை. கவலைப்படவும் இல்லை).
கூகுள் என்ற நிறுவனம், அழியும் நிலையில் உள்ள மொழிகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது. அழிவு மொழிகளின் (காக்கும்) திட்டம் என்பதைத் தொடங்கியது. அறிஞர்கள் மொழியிலாளர்கள் ஆகியோரின் உதவியை நாடியது. இணையம் ஒன்றை ஏற்படுத்தியது.
அழிவை நோக்கி நகரும் மொழியினரின் பேச்சு, வாழ்வுமுறை, சடங்கு, வரலாறு முதலியவற்றைப் பதிவு செய்தது இவற்றைப் பற்றிக் குறும்படங்களும் எடுத்தது. எல்லாவற்றையும் அவனிக்கு அறிவித்தது. மொழியைக் காக்க மறைமுகமாகத் தூண்டியது.
இந்தியாவிலும் மொழிகளின் மறுவாழ்வுக்கு முயற்சி தொடர்கிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இத்துறையில் உதவி புரிகிறது. தனிப்பட்டவர் மட்டுமன்றி அமைப்புகளும் இவ்வகையில் தொண்டு புரிகின்றன இப்படிப் பல நிலைகளிலும் அழிவின் விளிம்பில் நெளியும் மொழிகளைக் காப்பாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கல்வி, அறிவியல், பண்பாட்டு மன்றம் அறிவித்த அழிவு நிலை மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளது என்று துணைவேந்தர் பொன்னவைக்கோ அறிவித்தார்.
அப்பட்டியலில் தமிழ் எட்டாம் இடத்தில் இருக்கிறது என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறியதாக ஒரு நண்பர் சொன்னார், மிகுந்த வேதனையுடன், ஆழமாகச் சிந்தித்து, விரைவாகச் செயற்பட வேண்டிய தருணம் இது.
ஆளும் அரசு, தொண்டாற்றும் அமைப்புகள், உண்மையான தமிழ் ஆர்வலர்கள், அறிவூட்டும் ஆசிரியர்கள், நலம் நாடும் பொதுமக்கள், உயர்த்தும் ஊடகத்தினர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து, மொழிகாக்க முன்வர வேண்டும்.
அணையும் மொழி வாழத் துணை நிற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


