நீரின் அருமை உணர்வோம்!

தண்ணீர் தண்ணீர் எங்கும் தண்ணீர் - ஆனால் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை' ஆங்கிலக் கவி கோலரிட்ஜின் புகழ்பெற்ற வரிகள்.
Published on
Updated on
3 min read

தண்ணீர் தண்ணீர் எங்கும் தண்ணீர் - ஆனால் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை' ஆங்கிலக் கவி கோலரிட்ஜின் புகழ்பெற்ற வரிகள். அருகிவரும் நீர்நிலைகள், இருக்கும் நீர்நிலைகளும் குடிப்பதற்குப் பயன்படா வண்ணம் மாசடைந்து கிடக்கும் நிலை - இவற்றைப் பார்க்கும்போது மேற்கண்ட வரிகள் உண்மையாகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.
"கங்கை', "யமுனை', "காவேரி', "சரஸ்வதி' என்று நீர்நிலைகளுக்கெல்லாம் பெரும்பாலும் பெண்களின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள். இவற்றில் பல நதிகளின் நிலை சீரழிந்து உள்ளது. சில நதிகள் சுருங்கிப் போய்விட்டன. சில மறைந்தே போய்விட்டன. ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் தூர்க்கப்பட்டு அரசு அலுவலகங்களும், அடுக்குமாடிக் கட்டிடங்களும் கட்டப்பட்டு விட்டன. நீரோடும் பாதைகளிலெல்லாம் ஆக்கிரமிப்புகள். கிணறுகள் காணாமல் போய் வெகுகாலமாகிவிட்டது. 
நிலத்தடி நீரோ மிகவும் கீழே இறங்கிப் போய்விட்டதோடு, ரசாயனப் பொருள்களால் மாசடைந்துவிட்டது. காடுகள் பத்திரமாக இருந்தவரையில் மோயார், பில்லூர் போன்ற நீர்நிலைகளும், காட்டருவிகளும், காட்டாறுகளும் ததும்பி வழிந்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போது "சூழல் சுற்றுலா' என்ற பெயரில் காடுகளைத் திறந்து விட்டதால் இவற்றுக்கும் வந்து விட்டது ஆபத்து. எப்போதுமே வற்றாத காட்டாறுகள்கூட தற்போது கொஞ்சங்கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றன.
மீதமிருக்கும் நீர்நிலைகளின் நிலையும் நம்பிக்கை தருவதாக இல்லை. நகரத்தின் குப்பைகளும், கட்டட இடிபாடுகளும் குளங்களிலேதான் கொட்டப்படுகின்றன. கிராமங்களிலும் மக்கள் வீடுகளின் கழிவுநீரையெல்லாம் குளங்களில்தான் விடுகிறார்கள். மரங்கள் வெட்டப்படும்போதும், வீடுகளின் கூரைகள் மாற்றப்படும்போதும், ஓடுகளும், கீற்றுகளும் குளங்களுக்குள் வீசப்படுகின்றன. ஊர் கூடி குளங்களைத் தூர்வாரி பராமரித்த காலமெல்லாம் போய்விட்டது.
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் மதச்சடங்குகள் பலவும் நீர்நிலைகளுக்கு உலை வைப்பதாகவே இருக்கின்றன. பக்தி என்ற பெயரிலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைச் சாக்கிட்டும் ரசாயனப் பூச்சுக்கள் பூசப்பட்ட பெரிய பெரிய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பாழ்படுத்துகின்றனர்.
கிணறுகளும், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும்தான் நீர் ஆதாரங்கள் என்றிருந்தபோது மக்கள் அவற்றைப் போற்றிப் பாதுகாத்தனர். தங்கள் வீட்டுக் கிணறு என்றிருந்தபோது அவ்வப்போது தூரெடுத்து ஊற்றுக்கண் உயிரிழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஊருக்குப் பொதுவான கிணறு, குளம் என்றிருந்தபோது கூட ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை கோடையில் நீரை வெளியே இறைத்து, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, மண்ணரிப்பு ஏற்படாதவாறு மரங்களை நட்டு வைத்துப் பாதுகாத்தனர்.
எப்போது வீட்டுக்கு வீடு குழாயில் தண்ணீர் வந்ததோ, அப்போதே அலட்சிய மனப்போக்கும் வந்துவிட்டது. கிடைப்பதற்குக் கஷ்டமாக இருந்தவரைதண்ணீரின் அருமையை நாம் அறிந்திருந்தோம். எளிதில் கிடைக்கும்போது நீரின் அருமையை நாம் மறந்துவிட்டோம். 
கடலைக் கூட நாம் விட்டுவைக்கவில்லை. கப்பல்களிலிருந்து கடலுக்குள் வீசப்படும் குப்பைகளும், எண்ணெய்க் கழிவுகளும், டன் கணக்கில் கடலில் வீசப்படும் மின்னணுப் பொருட்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் கடல்நீரைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கின்றன.
நிலைமை சரிசெய்ய முடியாத அளவுக்குச் செல்வதற்கு முன் அரசு விழித்துக் கொண்டு இந்தச் சீர்கேட்டைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும். நீர் மேலாண்மைக்கென்று தனியாக ஒரு துறையை அமைக்க வேண்டும். நீர் மேலாண்மை வல்லுநர்கள், விஞ்ஞானிகள், சூழல் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கி நீர்ப்பாதுகாப்புக் குழு ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் நீர்நிலைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றை இக்குழுவின் மேற்பார்வையில் விடவேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்துவோரைத் தண்டிக்க இவர்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கவேண்டும்.
எல்லா நீர்நிலைகள் குறித்தும் - நல்ல நிலையில் இருப்பவை, சுருங்கிப்போனவை, ஆக்கிரமிப்புக்குள்ளானவை, மாசடைந்தவை, மறைந்துபோனவை - எல்லாவற்றையும் பற்றிய தகவல்களைத் திரட்டி ஒரு"டேட்டா பேஸ்' ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே இதனைச் செய்யலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு பெரிய நீர்நிலைகள், இரண்டு சிறிய நீர்நிலைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தூர்வாரித் தூய்மைப்படுத்தி, குப்பைகளையும் கழிவுகளையும் அப்புறப்படுத்தி, நீர் வரும் பாதைகளிலும், கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மண்ணரிப்பிலிருந்து காக்க, மரங்களை நட்டு பலமான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவை மீண்டும் மாசுபடாமல் இருக்க, கண்காணிப்புப் பணியையும், பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கலாம்.
இது நீண்டகாலத் திட்டம். இதற்குத் திட்டமிடுதலும், வழிகாட்டுதலும் அவசியம். ஆனாலும் இது மிக அவசியம். உறுதியுடன் செயல்படக்கூடிய அரசும், அரசுக்குச் ஆலோசனை கூற நீர் மேலாண்மை விஞ்ஞானிகளும், நிபுணர்களும், உதவி செய்ய தன்னார்வலர்களும் ஒன்றுசேர்ந்தால் இதைச் செய்யலாம், செய்யவேண்டும். இத்திட்டத்தை விரிவுபடுத்தி நாட்டிலுள்ள எல்லா நீர்நிலைகளையும் சரி செய்யலாம். 
நகருக்குள் இருக்கும் நீர்நிலைகளை சுத்தம் செய்து மக்களின் குடிநீர்ப் பயன்பாட்டுக்கு அந்நீரை விநியோகித்தால், மக்கள் நீர்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். முதலில் செயல்படுத்துவது கடினமாக இருந்தாலும், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் மக்களும் ஒத்துழைப்பார்கள். கடவுள் உருவங்களை நீர்நிலைகளில் கரைப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். 
பயன்பாட்டில் இல்லாத பெரிய திறந்தவெளிக் கிணறுகளையும்,பொதுக் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்புக்குப் பயன்படுத்தஅரசு முனைய வேண்டும். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும், சாலைகளிலிருந்தும் வழிகின்ற மழைநீரைக் குழாய்களின் மூலம் இவற்றில் கொண்டு சேர்த்தால் அவை மழைநீர் சேமிப்புத் தொட்டிகளாகமாறிவிடும்.
மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டபோது எல்லோரும் தத்தம் வீடுகளில் அவசர அவசரமாக அரைகுறையாக மழைநீர்ச் சேமிப்புத் தொட்டிகளை அமைத்தார்கள். அரசு, அவை முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று கண்காணிக்கவில்லை. இப்போதாவது மக்கள் தண்ணீரின் அருமையை உணர்ந்து உடனடியாக மழைநீர் சேமிப்பை உறுதி செய்ய வேண்டும். 
அதிக செலவில்லாத, சுலமாகச் செய்யக்கூடிய மழைநீர் சேகரிப்பு முறை இதோ: கனமான, உறுதியான பிளாஸ்டிக் கீழ்நிலைத் தொட்டிகள் 1,000 லிட்டர், 2,000 லிட்டர் என பல கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. வீட்டின் வெளிப்புறம் வசதியான ஒரு மூலையில் ஆழ்துளைக் கிணற்றின் அருகில் தொட்டியின் அளவுக்கேற்ப,மண்ணில் ஆழக் குழிதோண்டி,தொட்டியைப் புதைத்துவிட வேண்டும். வீட்டின் மேற்கூரை, மொட்டைமாடி, மேல்நிலைத் தொட்டியிலிருந்து வெளியேறும் நீரை, குழாய்களின் மூலம் இத்தொட்டியில் விழச்செய்ய வேண்டும். 
மழைக்காலங்களில்இத்தொட்டி நிறைந்து வெளியேவரும் உபரிநீர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்றுவிழுவதற்குத் தொட்டியின் மேல் பகுதியிலிருந்து ஒரு குழாய் பொருத்தவேண்டும். ஒரு குதிரைத் திறன் மோட்டாரைப் பொருத்தி இத்தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைச் செயல்படுத்த சில ஆயிரம் ரூபாய்கள் போதும். தண்ணீர்ப் பஞ்சம் வராது.
வீட்டைச் சுற்றிலும் சிமெண்ட் தளம் அல்லது டைல்ஸ் ஒட்டிவிடாமல் ஒரு அடி அல்லது இரண்டு அடி மண் தரையாக விடவேண்டும். மழைநீர் மண்ணுக்குள் இறங்கிச் சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். தண்ணீர் குறைவாக விழும்படியான குழாய்கள் தற்போது விற்பனைக்கு வந்து விட்டன. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இக்குழாய்களைப் பயன்படுத்தலாம்.
ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் பகுதியில் இருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இளையதலைமுறையினர் கணினியிலும், வலைதளத்திலும் நேரத்தைப் போக்காமல், சிறுசிறு குழுக்களாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடலாம். இரவு நேரங்களில் பாதுகாப்புக்கென்று ஒருவரை நியமித்து, எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு ஊதியமாக சிறு தொகை தரலாம்.
விவசாயிகள் அதிக லாபம் வேண்டும் என்ற ஆசையில் அளவுக்கதிகமான ரசாயனஉரங்களைப் பயன்படுத்தினால், நிலத்தடிநீர் கடுமையாக மாசடைந்து குடிப்பதற்கு உதவாமல் போய்விடும். மெல்ல மெல்ல அவர்கள் இயற்கை வேளாண் முறைக்கு மாற வேண்டும். அரசும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
சிறுவர் முதல் பெரியோர் வரை தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
அதிக மக்கள்தொகையும், குறைந்த கல்வியறிவு விகிதாச்சாரமும், பலதரப்பட்ட மதங்களும், நம்பிக்கைகளும், கலாசாரமும் நிறைந்த நம் நாட்டில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடினம்தான். அரசாங்கம் முனைப்போடு நீர்நிலைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றி, அவற்றை மீறுபவர்களுக்கு மிகக் கடுமையானதண்டனை விதித்தால் மட்டுமே நீர்நிலைகளைக் காப்பாற்ற முடியும். 
இவையெல்லாம் இருக்கும் நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளே. நமக்கு நீர் வருவதற்கு ஒரே வழி வான்மழைதான். அம்மழை வருவதற்கு ஒரே வழி மரங்கள் நடுவதே. மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; நீர்வளம் பெருக்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com