சிந்தனை மாற்றம் தேவை
இந்தியாவின் தலைநகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் தில்லி, தற்போது காற்று மாசுபாட்டின் தலைநகரம் என்ற அவப்பெயரையும் சுமந்து


இந்தியாவின் தலைநகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் தில்லி, தற்போது காற்று மாசுபாட்டின் தலைநகரம் என்ற அவப்பெயரையும் சுமந்து வருகிறது. அங்கு நிலவும் காற்று மாசு, உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக குளிர்காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரை, தில்லியில் காற்று மாசுபாடு மிகத் தீவிரமாக உள்ளது.
காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதில், சல்ஃபர்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமோனியா, 10 மற்றும் 2.5 மைக்ரோ மீட்டருக்குக் குறைவான விட்டத்தில் காற்றில் கலந்துள்ள திடப்பொருள்கள் (பிஎம்10, பிஎம்2.5) போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓசோன், பென்சீன் போன்றவை இரண்டாம் நிலையில் உள்ளன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, கடந்த 2009-லிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில், தில்லியில் பிஎம்10-யின் அளவு ஏறத்தாழ 335 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லியில் மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாலும், வாகனங்களுக்கான பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாலும் சல்ஃபர்-டை-ஆக்சைடின் அளவு கட்டுக்குள் உள்ளது. ஆனால், மற்ற மாசுகள் அளவுக்கு அதிகமாகக் காற்றில் கலந்துள்ளன.
அதிகளவிலான வாகனப் பயன்பாடும், தொழிற்சாலைகளும், தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகளும் இதற்குக் காரணங்களாக உள்ளன. தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது சுமார் 83 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் அதிகளவில் காற்றை மாசுபடுத்துகின்றன. குளிர்காலப் பயிர்களை விளைவிப்பதற்காக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட தில்லியைச் சுற்றியுள்ள விவசாயிகள், விளைநிலங்களிலுள்ள களைகளுக்குத் தீயிடுவதும் தில்லியின் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது.
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் தில்லியில் உள்ள அளவுக்கே காற்று மாசுபட்டு வருகிறது. ஆனால், இந்த நகரங்கள் கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்கின்றன. தில்லி கடலிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால், காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கிறது. காற்றின் வேகம், காற்று வீசும் திசை, வெப்பநிலை, சூரியக் கதிர்வீச்சு, காற்றிலுள்ள ஈரப்பதம் போன்ற இயற்கைக் காரணிகளும் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
மேலும், தில்லியின் மேற்கே அமைந்துள்ள தார் பாலைவனமும், கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் அமைந்துள்ள இமயமலையும் தில்லியில் நிலவி வரும் இயற்கைக்காரணிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்கின்றன.
காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டம் கடந்த 1984-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. காற்று மாசுபாட்டை அளவிடுவதற்காக நாடு முழுவதும் 614 கண்காணிப்பு மையங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்துள்ளது.
தில்லி அரசு 2016-ஆம் ஆண்டு, ஒற்றைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் ஒற்றைப்படை தேதியிலும், இரட்டைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் இரட்டைப்படை தேதியிலும் இயக்க வேண்டும் என்ற திட்டத்தைச் சோதனை அடிப்படையில் 15 நாள்களுக்குச் செயல்படுத்தியது. ஆனால், அந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது.
காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கான புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. இந்தியாவிலுள்ள வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் முதல் மின்சாரப் பேருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு பெங்களூருவில் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஹிமாசலில் 25 மின்சாரப் பேருந்துகளும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து மகாராஷ்டிரத்தில் 25 மின்சாரப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் விரைவில் மின்சாரப் பேருந்துகளை இயக்க உள்ளன.
மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே வேளையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 75.9 சதவீதம், நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 15.3 சதவீத மின்சாரம் மட்டுமே சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அரசுகள் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருவதால், மேலும் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டிவரும். நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, காற்று அதிகளவில் மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான குறிக்கோளே அடிபட்டுப்போகும்.
எனவே, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கு முன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும். மேலும், வாகனங்களில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தாமல், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் மற்ற காரணிகளைக் கட்டுப்படுத்தவும் அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போலந்து நாட்டின் கடோவைஸ் நகரில், ஐ.நா. பருவநிலை மாநாடு தொடங்கியுள்ள இத்தருணத்தில், இந்தியாவின் சிந்தனையில் மாற்றம் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...