தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஏமாற்றத்தில் முடியும் எழுச்சிகள்!

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்திப் போராட்டங்களை அறிவித்தன.

Updated On :20 டிசம்பர் 2018, 7:59 pm

ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்திப் போராட்டங்களை அறிவித்தன. மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டிப் போராடி, சிறைச்சாலைகளில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் அடைக்கப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். சிறைச்சாலை செல்வதற்குத் தயாரான நிலையில்தான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கும். தொண்டர்களும் தலைவர்களும் சிறைச்சாலை செல்லத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.
அதேபோலத்தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களின் பிரச்னைகளுக்காகப் போராடி, தொழிலாளர்கள் சிறை சென்றதை நாம் கண்டிருக்கிறோம். மாணவர்கள் அரசியல் கட்சிகளால் தயார் செய்யப்பட்டு, போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
அதே போன்று, ஆசிரியர் சங்கங்கள்கூட வலுவான போராட்டங்களை நடத்தி சிறை சென்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் நடந்தபோது அரசியல் கட்சிகளுக்கு இன்றைய அளவிலான பணமும், வசதிகளும் கிடையாது.
அரசியல் கட்சிகள் நிதி இல்லாமல் சிரமங்களை அனுபவித்ததைப் பார்த்திருக்கிறோம். இருந்தபோதும் தீவிரமான போராட்டங்களை நடத்திப் பல கோரிக்கைகளை வென்றெடுத்தன.
பெரும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த போதெல்லாம் வலுவான அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன், ஆளுமை பலம் கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்படிப்பட்ட வலுவான ஆட்சிக்கு எதிராகத்தான் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் அரசும் வலுவாக இருந்தது, போராடியவர்களும் வலுவுடன் அச்சமின்றி இருந்தனர். ஆனால், இன்றைய ஆட்சியையும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் பார்க்கின்றபோது நமக்குப் பல கேள்விகள் இயல்பாக உருவாகின்றன.
அன்று போராடிய அரசியல் கட்சிகள் இன்றும்கூட வலுவாக இருக்கின்றன. தொண்டர்கள் பலமும் இருக்கின்றது. பண பலம் என்பது மிக அதிக அளவில் இருக்கிறது. இருந்தும் அந்த மக்கள் பிரச்னைகளை முன்வைத்து முன்பு போல போராட்டம் நடப்பதில்லையே, ஏன்? தமிழகத்தில் இன்று பிரச்னைகளே இல்லையா அல்லது போராடும் அளவுக்குப் பிரச்னைகளின் தன்மை இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 
கடந்த முப்பது ஆண்டுகளில் உலகமயமான பொருளாதாரச் செயல்பாடுகளில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, மேம்பாடு எனப் பிரகடனப்படுத்தி செயல்பட்டதன் விளைவாகத் தமிழகம் பல நிலைகளில் நிலைகுலைந்துபோய் உள்ளது. 
வேகமான வளர்ச்சிச் செயல்பாடுகள் ஊழலுக்கு வழிகோலும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க, ஊழல் உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இயற்கை வளம் குன்றிய மாநிலமாக மாறிவிட்டது. இந்தப் பிரச்னைகளை அரசியல் கட்சிகள் பேசாமலில்லை, இருந்தும் போராடவில்லை. போராட்டத்திற்குப் பதிலாக அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டன.
போராடுவதற்குத் தேவையான அடிப்படை பிரச்னைகள் இருந்தும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராடத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழகத்தில் மைய அரசால் தயாரிக்கப்பட்டு புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட சுற்றுப்புறச் சூழல் அறிக்கை, உலகமயப் பொருளாதாரச் செயல்பாட்டால் தமிழகத்தின் இயற்கைச் சூழல் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப் பெரிய இயற்கைச் சீரழிவைச் சந்தித்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. தண்ணீருக்காக கர்நாடக மாநிலத்துடன் போராடிய நாம், காவிரியில் வந்த 100 டி.எம்.சி. தண்ணீரைக் குளங்களில், ஏரிகளில், குட்டைகளில் சேர்த்து வைக்க முடியாமல் கடலில் கலக்க வைத்து சாதனை படைத்தோம். விவசாயம் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.
சிறு, குறு தொழில்களும் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளன. ஊழலை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மக்கள் வங்கிக்கு அலையவிடப்பட்டனர். அத்துடன் ஜி.எஸ்.டி. என்ற வரியை அமல்படுத்தி சிறு, குறு வணிகத்தைப் பாதிக்க வைத்ததும் சாதாரண மக்களை அதிகமாக வரிகட்ட வைத்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.
இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் அரசியல் கட்சிகள் ஏன் போராட்டத்தை புறம்தள்ளி, ஆர்ப்பாட்டத்தை அறிவித்து மூன்று நான்கு மணி நேரத்தில் நடத்தி முடித்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கு விடை தேட முயன்றபோது நமக்குக் கிடைக்கும் விடை, அரசியல் கட்சிகள் சுகம் தேட ஆரம்பித்து விட்டன என்பதுதான். 
போராட்டமாக அரசியல் இருந்தபோது எந்த வணிகனும், எந்த ஒப்பந்தக்காரரும், எந்தப் புதுப் பணக்காரரும் அரசியலுக்குள் நுழையவில்லை. அரசியல் இன்று சுகமானது, சூதாட்டம்போல் பணம் வைத்து பணம் எடுக்கலாம் என்ற நிலைக்கு வந்ததால் பணம் படைத்தவர்களெல்லாம் பணத்தை அரசியலில் முதலீடு செய்து மீண்டும் லாபம் பார்க்க அரசியலுக்குள் வந்துவிட்டனர். கொள்கைக்காரர்கள் அனைவரும் கட்சிகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை வந்துவிட்டது.
நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொருள் ஈட்டி தங்கள் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி சமூகப் பார்வையை இழந்துவிட்டனர். அரசியல் கட்சிகள் நிறுவனங்களாக மாற ஆரம்பித்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்களே கார்ப்பரேட் அலுவலகங்கள்போல் சொகுசு வாழ்வு தரும் நிலையங்களாக மாற்றப்பட்டுவிட்டன, ஒரு சில கட்சிகளைத் தவிர. 
பொதுமக்களிடம் நிதி திரட்டும் நிலையைத் தவிர்த்து சந்தை தரும் நிதியைப் பெற்றுக்கொண்டு தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டன பெரிய அரசியல் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும்.
அரசியல் வணிகமயமானதன் விளைவு, போராட்டங்கள் என்றாலே அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு மாற்றாக, அரசியல் கட்சிகள் கண்டுபிடித்த உத்திகள்தான் ஆர்ப்பாட்டங்கள். ஆர்ப்பாட்டம் என்றால் மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் அனைத்தையும் நடத்தி விட்டு வீடு திரும்பிவிடலாம்.
இந்தச் சூழல்தான் பலரை அச்சம்கொள்ள வைக்கிறது. மக்கள் போராட்டங்கள் என்பது ஓர் அரசியல் விழிப்புணர்வு என்பதாக நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் அதற்காக மக்களைத் திரட்டும் பெரும் நிகழ்வு நடந்தாக வேண்டும். போராடுவது ஒரு அனுபவம்.
அதனைத் தொடர்ந்து சிறை வாசம் என்பது பக்குவப்படுத்தும் ஒரு நிகழ்வு. இன்று அதற்கு அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை, தொண்டர்களும் தயாராக இல்லை.
போராட்ட உணர்வை பிரதான கட்சிகள் இழந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. அதனால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக தன்னெழுச்சியாக போராட ஆரம்பிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து, நெடுவாசல், கதிராமங்கலம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் என எல்லா இடங்களிலும் மக்கள் போராட்டங்கள் இதனால்தான் உருவாயின. சமூக ஊடகங்களின் மூலம் மக்களே விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராடத் தயாராகி விட்டனர். 
இப்போது நாடெங்கிலும் மக்கள் போராட்டங்கள் அரசியல் கட்சிகளின் தோல்வியால் எழுந்தவை. இந்த மக்கள் எழுச்சி என்பது புதிய அரசியலை நோக்கிப் பயணிக்க உருவான ஒன்று என்று எண்ணத் தோன்றுகின்றது. கட்சி அரசியலைத் தாண்டி மக்கள் பிரச்னைகளுக்காக மக்களே களமிறங்கி மக்கள் அரசியலை உருவாக்கும் புது முயற்சியாகவே தென்படுகிறது.
புதிய அரசியலுக்கான வாய்ப்பிருப்பதை அறிந்து புதிய திசையில் அரசியலைத் திருப்பினால் எதிர்காலத்தில் புதிய அரசியல் உருவாகும் என்பதில் ஐயமில்லை. இல்லையென்றால், முறையான இலக்கோ, தலைமையோ இல்லாத நிலையில், மக்களது தற்காலிக எழுச்சியின் அடிப்படையில் உருவாகும் போராட்டங்கள், எந்தவிதப் பயனும் அளிக்காமல் 
தவறாகவே அடங்கிவிடும். மாற்றங்கள் ஏற்படாது; ஏமாற்றம்தான் மிஞ்சும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.