அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கண்ணீர் வளர்த்த பயிர்கள்

திருமுருக கிருபானந்த வாரியார் வேடிக்கையாகச் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த கருத்துகள் இருக்கும். பிறந்த குழந்தை அழவேண்டும்.

News image
Updated On :23 ஜூலை 2018, 7:57 pm

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

திருமுருக கிருபானந்த வாரியார் வேடிக்கையாகச் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த கருத்துகள் இருக்கும். பிறந்த குழந்தை அழவேண்டும். குழந்தை அழுதால் மற்றவர்கள் சிரிப்பார்கள். பிறந்த குழந்தை அழாவிட்டால் மற்றவர்கள் அழுவார்கள்' என்பார் அவர். ஒரு மனிதன் இறக்கும் பொழுது சுற்றி உள்ள சொந்தமும், நட்பும் அழ வேண்டும். அந்த அழுகை இறந்தவனுக்கும் இருப்பவர்களுக்கும் உள்ள பாசத்தின் வெளிப்பாடு. பாசக்கார உறவுகள் இல்லாவிட்டால் கூலிக்கு மாரடி'ப்பார்கள். அது இறந்தவன் சேர்த்து வைத்திருக்கும் பணத்தின் வெளிப்பாடு; குணத்தின் வெளிப்பாடு அல்ல. 
அண்மையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி பொதுவெளியில் அழுததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. குமாரசாமி ஏன் அழுதார் என்ற வாத, பிரதிவாதங்கள் இன்று வரை செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 224 சட்டப்பேரவை உறுப்பினர்களை உடைய கர்நாடக சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கான முடிவுகள் வெளியானபோது 112 சீட்டுகள் ஆட்சி அமைக்க தேவை. முந்தைய சட்டப்பேரவையை விட 65 இடங்களைக் கூடுதலாகப் பெற்று எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி 104 சீட்டுகளை அள்ளியது. இரண்டு சீட்டுகளை இழந்த குமாரசாமி தனது 38 சீட்டுக்களுடன், 43 சீட்டுக்களை இழந்து 78 சீட்டுக்களைக் கைப்பற்றிய காங்கிரசுடன் கைகோத்து ஆட்சிக்கு உரிமை கோரினார். 
எடியூரப்பா அழவில்லை; மனம் தளரவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் பலத்தால் ஆட்சியமைக்க அவரை அம்மாநில ஆளுநர் அழைத்தார். அவர் ஒருநாள் முதல்வர்' பாணியில் பதவியேற்றது, பின் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியது, அதன் பின் நடந்தவை எல்லாம் நாடறிந்த ரகசியம். பதவியைத் துறக்கும் முன்பு, சட்டப்பேரவையில் உணர்ச்சி பிழம்பாக பேசியபோதும் எடியூரப்பா கண்ணீர் சிந்தவில்லை. காங்கிரசின் ஆதரவு' என்ற ரசவாதத்தால் சிரித்துக் கொண்டே பதவியேற்ற குமாரசாமி, பின்பு பொதுவெளியில் கண்ணீர் சிந்துகிறார். 
நேருக்கள் பொதுவெளியில் உணர்ச்சி வசப்படுவதில்லை' என்று சொன்ன இந்திரா காந்தி - அதாவது இந்திரா காந்தி என்ற தாய் - தனது அரசியல் வாரிசு என்று கருதிய சஞ்சய் காந்தியின் உடலை எரியூட்டி விட்டு வரும்போது பேரனை கட்டிக்கொண்டு அழுத காட்சி மறக்க முடியாதது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர் என அறியப்பட்டவர் வைகோ.
திராவிட அரசியலுக்கும் கண்ணீரு'க்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அரசியலில் இருந்து விலகி சமூக சீர்திருத்தவாதியாக தன்னை வெளிப்படுத்திய ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் அன்றைய திராவிட கழகத்தில் இருந்த அண்ணாதுரை மற்றும் சகாக்கள் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஈ.வே.ரா. தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது, அண்ணாதுரையும் வேறு பலரும் வெளியேறி தனிக்கட்சி கண்டபோது, ராமசாமி நாயக்கர் அவர்களை கண்ணீர்த் துளிகள்' என வர்ணித்தார். இந்த கண்ணீர்த் துளிகள்' வளர்த்த பயிர் திராவிட விருட்சமாக வளர்ந்து 1967-இல் ஆட்சி அதிகாரம் என்ற பலனைக் கண்டன. 
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' என்பது பாரதியார் பாடிய காதல் கண்ணீர் பாடல். கண்ணீர் கவிதைகள் காதல் தோல்வியை வெளிப்படுத்துகிறது. 
அமெரிக்க காங்கிரசின் சபாநாயகர் ஜான்போக்னர், போப் பிரான்சிஸ் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
2016 ஜனவரியில் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்கர்கள், சுதந்திரம்' என்ற பெயரில் துப்பாக்கி வைத்துக் கொண்டு, பள்ளிக்குழந்தைகள் கூட அநியாயாமாக கொல்லப்படும் துப்பாக்கி கலாச்சாரத்தை கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
ரஷியத் தலைவர் விளாதிமிர் புதின் 2013-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ரஷிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். நமது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க முகநூல் அலுவலகத்துக்குச் சென்று தன் தாயைப் பற்றி பேசும்பொழுது தாயை நினைத்து கண்ணீர் சிந்தினார்.
சிறு குழந்தைகள் அடிக்கடி அழும். அழுகை குழந்தைகளின் மொழி. பெற்ற தாய்க்கு தெரியும் தன் குழந்தை அழுவது வயிற்றுப் பசிக்கா, வயிற்று வலிக்கா என்று. அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்பது பழமொழி. கிராமங்களில் மரணம் சம்பவிக்கும்பொழுது, கிராமத்து ஜனங்கள் உறவுமுறை தெரிந்தவர், தெரியாதவர் என்று வகை தொகையில்லாமல் எல்லாரும் அழுவார்கள். 
அனைத்து அதிகாரங்களையும் உடைய அரசியல்வாதிகள் பொதுவெளியில் அழுவது ஏன்? அரசியல்வாதியானால் என்ன? அவரும் மனிதர்தானே. சாதாரண மனிதனை பாதிக்கும் துக்கங்களும் இழப்புக்களும் ஓர் அரசியல்வாதியை பாதிக்கும்பொழுது அவர் கண்ணீர் விடுவதில் வியப்பில்லை. ஒரு அரசியல்வாதி எதற்காக அழுகிறார் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம், அவர் எப்படி அழுகிறார், எப்படி அதனைக் கட்டுப்படுத்துகிறார் என்பதும். அண்ணா இறந்தபொழுது கருணாநிதி எழுதிய எதையும் தாங்கும் இதயம்' கவிதையும், நேரு இறந்தபொழுது சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ, தீயே உனக்கொரு நாள் தீமூட்டிப் பாரோமோ' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியதும் அமரத்துவம் வாய்ந்தவை. 
நிகழ்கால வசதிகளுக்கு இடையே வரும் திடீர் துன்பங்களை நினைத்து அரசியல்வாதி என்ன, ஆண்டவனே ஆனாலும் கண்ணீர் வடித்து தான் தீர வேண்டும். தட்சன் யாகத்தில் தன் கணவரான உலகை ஆளும் ஈசனுக்கு அவிர் பாகம்' கொடுக்கவில்லையென போராடி தீயில் குதித்த உமையம்மையும், தன் பழியை நீக்க எரியூட்டி தீயில் குதித்த சீதா பிராட்டியும் சிரித்துக்கொண்டா இருந்தார்கள்? 
சோகத்தில் அழுவது ஒரு ரகம் என்றால், அதிக சந்தோஷத்தில் கண்ணீர் பெருகி வருவது மற்றோர் ரகம். உலக அழகியாக தன் பெயர் அறிவிக்கப்படும்பொழுது அப்பெண் மேடையில் சிந்துவது ஆனந்தக் கண்ணீர். இரும்புத்திரை நாடு' என அறியப்பட்ட ரஷியாவின் தலைவராக 2012-ஆம் ஆண்டு விளாதிமிர் புதின் என்ற முன்னாள் ஒற்றர் படைத் தலைவர் வெற்றி பெற்றபொழுது, மேடையில் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தி உலகை நிமிர வைத்தார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய' நாயன்மார்களும், ஆழ்வார்களும் வேறு ரகம். நன்றியின் வெளிப்பாடும் கண்ணீரைக் காணிக்கையாக்கும். 2014-இல் தன்னை பிரதமராக தேர்ந்தெடுத்த பொழுது நரேந்திர மோடி சிந்திய கண்ணீருக்கும், விளாதிமிர் புதின் சிந்திய கண்ணீருக்கும் வேறுபாடு கிடையாது.
மீண்டும் குமாரசாமிக்கு வருவோம். 224 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டப்பேரவையில் 38 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைப்பதென்பது ஜனநாயக கேலிக்கூத்து. 104 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, குதிரை பேரத்தின் மூலமாக ஆட்சியைத் தக்க வைத்து விடலாம் என எடியூரப்பா கண்ட கனவை விட குமாரசாமியின் கனவு மிக மோசமானது. ஏற்கெனவே பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு காலை வாரியவர் குமாரசாமி. 
காவிரிப் பிரச்னையில் கர்நாடாகவிற்கு எதிராக உச்சநீதிமன்றம் நிலை எடுக்கும் போது யார் ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகாவில் கெட்ட பேர் சம்பாதிக்க நேரிடும். இது தெரியாமல் அவசரப்பட்டார் எடியூரப்பா. விவரம் தெரிந்த காங்கிரஸ், குமாரசாமியை முன்னிறுத்தி எதிரிக்கு எதிரி நண்பன்' என்கிற அரசியல் பால பாடத்தை மீண்டும் நடத்தி விட்டது. இங்கே அரசியலில் கொள்கைகள் முக்கியமல்ல. பதவியும் அதன் மூலமாக வரும் சுகமும் வருமானங்களும் போதுமென்ற நிலை வந்த பிறகு குமாரசாமி அழுவதில் எந்தப் பயனுமில்லை. உண்மையில் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டியது ஜனநாயகம்தான். 
இப்போதெல்லாம் ஒரு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடும்பொழுது உள்ளூரிலிருந்து உலக ஊடகம் வரை அது செய்தியாகிறது. ஆனால், அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் வரை குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிடுவதை சட்டம் தடுக்கிறது. அதனால் அவர்கள் முகம் மறைக்கப்பட்டு, முகமூடி அணிவிக்கப்பட்டு அல்லது கைக்குட்டை அல்லது கையால் முகத்தை மூடி படங்கள் வெளியாகின்றன. நாடறிந்த அரசியல்வாதிகளுக்கு இந்த விதி பொருந்தாது. லல்லு பிரசாத்தும், ஜெயலலிதாவும் அவருடைய தோழியும், உறவினர்களும் அமைச்சரவை சகாக்களும் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக தண்டிக்கப்பட்டு, நீதிமன்றத்திலிருந்து காவல் வாகனத்திற்கு அழைத்து செல்லப்படும்பொழுது அழுததாக செய்திகள் இல்லை. 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலால் புகழ் பெறுவார்கள். அண்மையில் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததால் புகழ் பெற்றிருக்கிறார். அவரது கண்ணீரால் எந்தப் பயனும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு வேண்டுமானால் பயன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு பெரும் பயன் கிடைத்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை வறண்டிருந்த காவிரியில் அவர் கண்ணீர் சிந்தியதும் வெள்ளம் பெருகியிருக்கிறது. எனவே, குமாரசாமி கண்ணீர் சிந்தியதை, தமிழர்களாகிய நாம் தார்மிக ரீதியில் ஆதரிக்கத்தான் வேண்டும். என்ன சரிதானே? 
கட்டுரையாளர்: 
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.