அறிவியல் பார்வை தேவை!

தூத்துக்குடியில் பதிமூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளனர். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியபோது பெரும்பாலான கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு
Updated on
3 min read

தூத்துக்குடியில் பதிமூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளனர். ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியபோது பெரும்பாலான கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு வெளியேறிவிட்டனர். பொதுமக்களே அரசியல் கட்சிகளை நீங்கள் வராதீர்கள்' என்று சொல்லிவிட்டனர். நம் தமிழகத்தின் அரசியல் வரலாறு அந்த அளவுக்கு தாழ்நிலையை எட்டி இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
சமீபகாலமாக தமிழகத்தில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுசேர்ந்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க அரசியல் கட்சியைக் கலக்காமல் போராட ஆரம்பித்துவிட்டனர். இந்த எழுச்சி ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வெற்றிபெற்று தற்போது கதிராமங்கலம், நெடுவாசல் வழியாக தூத்துக்குடி வந்து ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 
இதற்குக் கொடுத்த விலை அதிகம். பதிமூன்று உயிர்கள். இந்தியாவில் ஏழை மக்களின் உயிருக்கு எந்த மரியாதையும் கிடையாது. இயற்கை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பிற்கான மக்கள் போராட்டம் ஓயப்போவது கிடையாது. மாறாக அது தொடரப்போகிறது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு இன்று தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. இப்படிப்பட்ட சூறையாட்டத்தில்தான் ஒரு பெரு அரசியலும் பெரு வணிகமும் இன்று தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வளர்ச்சி செயல்பாடுகளுக்கும், இயற்கைவள அழிப்புக்கும் ஒரு தொடர்பு இருப்பதைப் புரிந்துகொண்டு பெரும்பாலோர் கருத்துக்களைத் தெரிவிப்பது இல்லை. இயற்கை வளத்தைப் பயன்படுத்தாமல் வளர்ச்சி வராது என்பதுதான் நிதர்சனம். 
வளர்ச்சி இல்லாமல் ஒரு சமூகம் மேம்பாடு அடைய முடியாது. வேகமான வளர்ச்சி வேண்டும் என்றால் அதற்கான விலையைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அது, இயற்கை வளம் சுரண்டப்படுகிறது' என்கிற குற்றச்சாட்டில்தான் முடியும். 
இன்று உலகமயப் பொருளாதார வளர்ச்சி உலகம் வியக்கும் வண்ணம் உள்ளது என்றால், அது எப்படி இயற்கை வளத்தைப் பாதிக்காமல் சாத்தியமாகியிருக்கும்? இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் காந்தியடிகளையும் ஜே.சி. குமரப்பாவையும் படிக்க வேண்டும். குறிப்பாக, இன்று நம் நாட்டில் பல்வேறு விதமான வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசிடம் மூலதனம் என்பதே கிடையாது. தனியாரின் உதவியுடன் வெளிநாட்டு மூலதனத்தைப் பெற்றுதான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
வீடு கட்டும் கட்டுமானத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, விமான நிலையங்களை உருவாக்குவது - விரிவுபடுத்துவது, துறைமுகங்களை உருவாக்குவது - விரிவுபடுத்துவது, வணிக வளாகங்களை உருவாக்குவது, புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவது போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அரசு பல்வேறு நிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. சாலைகள் நான்கு வழியில், ஆறு வழியில், எட்டு வழியில் கிடைக்கின்றன. வாகனங்கள் வேகமாகச் செல்வதற்கேப்ப சாலைகள் உருவாக்கப்பட்டு உலகத்தரத்தில் கார்களை வாங்கி ஓட்டிச் செல்கின்றார்கள். குறைந்த விலையில் ஆகாய விமானத்தில் பறக்க வழி பிறந்துவிட்டது. எங்கு சென்றாலும் சுத்திகரிக்கப்பட்ட, நன்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கின்றது. அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டிக் குடியிருக்க வீடுகள் கிடைத்துவிட்டன. அமெரிக்காவில் கிடைக்கும் அத்தனைப் பொருள்களும் நம் ஊரின் மெகா மால்'களில் கிடைக்கின்றன. 
இந்த வசதிகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றுக்குத் தேவையான இயற்கை வளங்களை எடுக்காமல் இவையெல்லாம் எப்படி உருவாகியிருக்க முடியும்? மணல் ஆனாலும் சரி, கருங்கல்லானாலும் சரி, நீரானாலும் சரி மற்ற கனிம வளங்களானாலும் சரி எதையும் எடுக்கவில்லை என்றால் அந்த வேலைகள் நடைபெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இப்படித்தான் நடைபெறுகின்றன. 
ஒரு சில மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுப்பதை உடனே புரிந்துகொண்டு மாற்றுவழி கண்டுபிடிக்கின்றன அல்லது தொடங்கிய திட்டச் செயல்பாடுகளை நிறுத்திவிடுகின்றன. வேறு சில மாநிலங்களில் இத்திட்டங்களைப் பற்றி மக்களிடம் பேசி அவர்களிடம் ஒப்புதல் பெற்று, அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி, பின்னர் சட்டதிட்டங்களைப் பின்பற்றி திட்டச் செயல்பாடுகளை நிறைவேற்றுகின்றனர். எனவே, பல இடங்களில் இந்த இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 
இந்தச் சூழல் நமக்கு எப்படி வந்தது என்றால், நாம் மேற்கத்திய நாட்டு வளர்ச்சி முறை மற்றும் அணுகுமுறையைக் கையாண்டதால்தான். மேற்கத்திய நாட்டு வளர்ச்சி முறையைப் பின்பற்றி நடந்த வளர்ச்சி செயல்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட குழு ஒன்று ஆய்வு செய்து ஒரு அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பித்தது. அதற்குப் பெயர் நமது பொது எதிர்காலம்'. அந்த குழுவுக்குப் பெயர் பிரண்லேண்ட் குழு'. அந்த அறிக்கை ரோம் நகரில் 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பெயர் ரோம் பிரகடனம்'. அது பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெருமளவு உலகில் இயற்கை அழிப்புச் செய்துவிட்டீர்கள், எனவே வளர்ச்சியின் வேகத்தைக் குறையுங்கள்' என்று உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. 
இதற்கு முன்னதாகவே 1972-ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஸ்டாக்ஹோமில் ஐ. நா மன்றக் கூட்டத்தில் பேசும்போது, இயற்கை வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு இவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, இவற்றைப் பாதுகாக்கவில்லையேல் எதிர்காலத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான சூழலுக்கு சென்றுவிடும் என்று கூறி உலகை வியக்க வைக்கும் உரையை ஆற்றி உலகத் தலைவர்களின் பார்வையைத் தன் மேல் ஈர்த்துக்கொண்டார். 
அந்த உரை உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்ட ஒன்று. அந்த உரையில் அவர் மற்றொரு கருத்தையும் பதிவு செய்தார். பரந்த உலக ஞானம் எங்களுக்கு உண்டு. அதை எங்கள் வேதம் எடுத்துக்காட்டியுள்ளது. இருந்தபோதும் நாங்கள் ஏன் மேற்கத்திய முறையிலான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுகிறோம் என்றால், விரைவாக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவந்து எங்கள் வறுமையைக் நீக்க வேண்டும் என்பதற்காகத்தான்' என்று ஒரு விளக்கத்தினைத் தந்தார். 
இதனைத் தொடர்ந்து, சூழல் பற்றிய ஆராய்ச்சிகள் பல உண்மைகளை உலகுக்குக் கொண்டு வந்ததன்மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் அது அறிவியல்பூர்வ விழிப்புணர்வா அல்லது அச்சத்தால் வந்த விழிப்புணர்வா என்பதுதான் இன்று நமக்கு முன்னுள்ள கேள்வி. எந்தப் பிரச்னையும் இன்று தமிழ்நாட்டில் அறிவியல்பூர்வமாக விவாதிப்பதை விட அரசியல் பின்னணியில் விவாதித்து வாக்கு அடிப்படையில் நம் கட்சிகள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது தமிழ்நாட்டை நல்வழிக்கு இட்டுச் செல்லாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
பொதுவாக அரசையோ, அரசியல்வாதிகளையோ, அரசு அதிகாரிகளையோ, காவல்துறையையோ மக்கள் நம்புவதற்குத் தயங்குகின்றார்கள். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ஆனால் அறிவுஜீவிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட தார்மிக பொறுப்பு உள்ளதா இல்லையா என்பதுதான் இன்றுள்ள ஒரு முக்கியமான கேள்வி. 
தமிழகத்தில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன, அவற்றில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கதிராமங்கலத்தையோ, நெடுவாசலையோ, தூத்துக்குடியையோ ஆய்வு செய்து ஏன் ஓர் அறிக்கையை அரசுக்குத் தரக்கூடாது? இதற்கு பலருடைய பதில், நம் அரசு அதை விரும்பாது. நாம் உண்மையை எழுதினால் அது அரசுக்குச் சாதகமாக இல்லை என்றால், அரசு நம்மைச் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்று பலர் கருதுகின்றனர். 
நீண்ட நாட்களுக்கு முன் நான் பார்க்லேண்ட் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தை கனடாவில் பார்க்கச் சென்றிருந்தேன். அது ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி நிறுவனம். அல்பர்ட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ள எட்மாண்ட் நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு அரசு நிதி கிடையாது. பல்கலைக்கழகம் ஒரு கட்டடம் மட்டும்தான் கொடுத்துள்ளது. பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டோர் தங்கள் ஓய்வு நேரத்தில் பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி, அதை மக்கள் மத்தியில் வெளியிடுவர். 
ஆய்வறிக்கையை வெளியிடும்போது அந்த ஆய்வுக்கான செலவுத் தொகையை, அங்கேயே பொதுமக்கள் திரட்டித் தந்து விடுவார்கள். பல ஆய்வு அறிக்கைகள் வெளிவந்ததால் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அதேபோன்று பலர் பதவிபோனதும் இந்த பார்க்லேண்ட் நிறுவனத்தின் அறிக்கையால்தான். இதனைக் கேட்டபோது இப்படிப்பட்ட நிறுவனங்களை ஏன் நம் நாட்டில் உருவாக்க முடியாது என்ற எண்ணம் எழுந்தது. இன்று அறிவியல்பூர்வ விவாதம் நடைபெறுவதற்கு பதில் அரசியல்பூர்வ விவாதம்தான் நடைபெறுகிறது. நம் அறிவுஜீவிகள் நம் நாட்டிலும் பார்க்லேண்ட் ஆராய்ச்சி நிறுவனம்போல் செயல்பட்டிருந்தால் அனைத்தும் அரசியலாகவே இருந்திருக்காது. எனவே இன்று நமக்குத் தேவை அறிவியல்பூர்வமான பார்வையும் விவாதமும்தான்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com