சமூகச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் பேசியபோது, இந்தியா குறித்து கருத்துத் தெரிவித்தார்.  இந்தியாவை நேசிக்கக்கூடிய அவர்,
Updated on
3 min read


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் பேசியபோது, இந்தியா குறித்து கருத்துத் தெரிவித்தார்.  இந்தியாவை நேசிக்கக்கூடிய அவர், இந்திய சமூகப் பொருளாதார பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்து கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிக் கொண்டிருப்பவர். இந்தியாவில் அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பேசுவதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.  பேசுவது அனைத்தும் சமூகத்துக்கும், வாழ்க்கைக்கும் அல்ல என்பதை அனைவரும் நிரூபித்துக் கொண்டிருப்பதை அன்றாடம் அனைவரின் வாழ்க்கையிலும் பார்த்து வருகிறோம்' என்றார். தொடர்ந்து, இந்த முரண்பாட்டைக் களையாத வரையில் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை மாற்றுவது மிகச் சிரமமான ஒன்று' என்றார்.
 உடனே நான் அவரிடம், மேற்கத்திய நாடுகளில் இந்த முரண்பாடுகளே இல்லையா' என்று கேட்டேன்.  இந்தியா போன்று இருக்காது; எதை நினைக்கிறார்களோ, அதை அப்படியே கூறி விடுவார்கள்;  அத்துடன் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் கவனமாக இருப்பார்கள்;  இந்தியாவில் காணும் பெருத்த முரண்பாடுகளை அங்கு காண முடியாது' என்றார்.  மேலும் ஒரு கருத்தை அவர் பதிவு செய்தார். இந்தியாவில் பொதுத் தளத்தில் நிகழும் இந்தச் சூழல்தான் உங்கள் அரசியலை, ஆட்சியை, நிர்வாகத்தை, பொது நிறுவனங்களை, வணிகத்தை, குடும்பங்களை தாழ்நிலைக்குக் கொண்டு செல்கின்றன' என்றார்.
குறிப்பாக, ஊழல் பற்றி நாம் பேசாத நாள் கிடையாது.  ஆனால், ஊழல் குறைந்தபாடில்லை.  ஊழல் ஒருவர் மட்டும் செய்வது கிடையாது.  அதுவும் பொது நிறுவனங்கள் என்றால், பலர் அதில் இணையாமல் ஊழல் எளிதாக நடைபெற முடியாது.  ஊழலில் சேர்த்த பணத்தில்தான் குடும்பம், உறவினர், நண்பர்கள் அனைவரும் அனுபவிக்கின்றனர். ஆனால், அனைவருமே ஊழலை எதிர்த்துத்தான் பேசுகின்றனர்.  நடைமுறையில் தங்கள் வாழ்க்கையில் அதை நிராகரிப்பதில்லை. அதற்கு மாறாக ஊழலில் வரும் ஆதாயத்தை அனைவரும் சற்றும் கூச்சமின்றி அனுபவிக்கிறோம்.
இத்தகைய ஊழலில்  ஈடுபடுகிறவர்களில் அதிகமானோர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், அதிகாரிகள்தான்.   எதார்த்த வாழ்க்கையில் இவர்களைச் சந்திக்கிறபோது, அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிப் பணம் ஈட்டுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.  
ஆனால், இவர்கள் அனைவரும் சேவைத் தளத்தில் ஒரு முகத்துடனும் பொதுத் தளத்தில் மற்றொரு முகத்துடனும் காணப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த வாழ்வியல் முரண்பாட்டை எப்படி மாற்றுவது என்பதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.   மக்களை மனமாற்றம் செய்வது என்பது உடனடியாகப் பலன் தரக்கூடியவை அல்ல.  எனவே, பொது நிறுவனங்களை சட்டத்தின்படி நடைபெறச் செய்துவிட்டால், ஊழல் மயமான வாழ்க்கையில் ஒரு மாற்றம் வந்து ஊழல் குறைய ஆரம்பித்துவிடும்.
அதற்கு நம் பொதுநிறுவனங்களை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதற்கு தயார் செய்ய வேண்டும்.  அதற்கு முதலில் பொது நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கேட்காமலேயே, செய்திகளைத் தருவது; அடுத்து பொது நிறுவனங்கள் செய்யும் பணிகள் பற்றி பொதுமக்கள் விவரம் கேட்டால் கேட்பவர்களுக்கு அவற்றைத் தடையின்றித் தருவது;  மூன்றாவதாக, பொது நிறுவனங்களை பொது மக்களுக்குக் கடமைப்படுத்துவது;  மக்களுக்குத் தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அந்த நிறுவனங்களிடம் ஏற்படுத்துவது.  
பொது நிறுவனங்கள் தங்கள் நிறுவனச் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், மிகப் பெரிய மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு நிர்வாகச் சீர்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 
அதுதான் தகவல் பெறும் உரிமைச் சட்டம்.  இதன் பிறகு, பல நிறுவனங்களின் ஊழல்கள், அரசாங்கத்தின் ஊழல்கள், பொதுநிறுவனங்களில் பெருகும் அதிகாரிகளின் ஊழல்கள் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இவற்றில் தண்டனை பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவு.
 இருந்தபோதிலும், இன்று பொதுத் தளத்தில்  செயல்படும் அனைவரும் பெரும் கலக்கத்திலும், குழப்பத்திலும், அச்சத்திலும் செயல்படுகின்றனர் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அதே நேரத்தில் ஊழல் நடைபெறாமலும் இல்லை.  இந்த அச்சம் என்பது நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் ஒருசில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 
இது ஒரு தொடர் போராட்டம்.  இந்தப் போராட்டம் ஓயப்போவது கிடையாது.
இருந்தபோதிலும், சில கேள்விகளைத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றன.  அதாவது, தொண்டு நிறுவனங்கள் பொதுநிறுவனங்களா? இந்த நிறுவனங்களுக்கு நிர்வாகச் சீர்திருத்தம் பொருந்துமா?  அரசின் நிதி பெற்று நடத்துகிறவர்களுக்கு மட்டும்தானே பொருந்தும்? வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் நிதி பெற்று நடத்துகிறவர்களுக்கு நிர்வாகச் சீர்திருத்தம் எப்படிப் பொருந்தும்? இதுபோன்ற கேள்விகளுக்குத் தொடர்ந்து விளக்கங்கள் தந்தபோதும், நாங்கள் எங்கள் பணத்தில் சேவை செய்கிறோம்;  நாங்கள் எங்கள் லாபத்தில் சேவை செய்கிறோம்;  நாங்கள் வெளிநாட்டில் பணம் பெற்றுச் சேவை செய்கின்றோம்; நாங்கள் அரசு பணத்தை வாங்கி சேவை செய்யவில்லை;  எனவே, நாங்கள் இந்த நிர்வாகச் சீர்திருத்தக் கட்டுப்பாட்டில் வரமாட்டோம்' என்ற வாதத்தைத் தொடர்ந்து பலர் முன்வைக்கின்றனர்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு நீண்ட காலமாக வழிகாட்டிக் கொண்டிருக்கும் பிரியா' என்ற நிறுவனத்தின் தலைவரும், யுனெஸ்கோ இருக்கை பேராசிரியருமான டாக்டர் ராஜேஷ் தாண்டன் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோது, முதலில் பொது நிறுவனங்கள் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொண்டால், அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடும்' என்று  விளக்கினார்.
பொது நிறுவனங்கள் என்பது அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல;  அது நிதி சார்ந்தது மட்டும் அல்ல;  பொதுமக்களுக்குச் சேவை செய்யும் எந்த நிறுவனமும் பொது நிறுவனம்;  அந்த நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது அடிப்படை அல்ல;  யாருக்குச் சேவை செய்கிறோம்  என்பதுதான் முக்கியம்;   பொதுமக்களுக்கு யார் பணத்தில் சேவை செய்தாலும் அது பொது நிறுவனம் என்பதை நாம் நினைவில் கொண்டு செயல்படவேண்டும்.  எனவே, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர அந்த நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன' என்று விளக்கினார்.
அடுத்து, அரசு செய்ய முடியாதவற்றை, செய்யத் தவறியதை, நாங்கள் செய்கிறோம்; எனவே, அரசு ஏன் எங்களைக் கேள்வி கேட்கிறது என்பதற்கும் அவர் விளக்கம் அளித்தார். அரசாங்கம் பொதுமக்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. நாம் செய்யும் சேவையில் தவறு இருந்தால், அதற்கு நாம் மட்டும் பொறுப்பல்ல; அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.  அரசும் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளது; எனவே, அரசாங்கம் தலையிடும்; அதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டும்' என்று அவர் விளக்கினார்.  
இன்றைய சூழலில் ஜனநாயகப்படுத்துதலும், ஆட்சியை, நிர்வாகத்தை பொதுமக்களுக்குக் கடமைப்படுத்துதலும் இன்றியமையாத செயல்பாடுகளாக நடைபெற்று வருகின்றன.
இன்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்னென்ன கேள்விகளையெல்லாம் அரசியல் கட்சிகளுக்கும், அரசாங்கத்துக்கும் வைக்கின்றனவோ, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.  கேள்விகள் கேட்காத அளவுக்கு வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற நியதியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.  சட்டத்தின்படி ஆட்சி நடக்க வேண்டும் என்று சொல்லும் நாம், நம்மை அதிலிருந்து விலக்கிக் கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது.
எங்கிருந்து பணம் வந்தாலும், யாருக்காகச் செலவு செய்தாலும், பொதுமக்களுக்குத் தெரிவிக்க நாம் அனைவரும் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அத்துடன், வெளிப்படைத்தன்மையுடன் நிறுவனங்களை நடத்துவதற்கு எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதற்கு முதலில் நாம் நம்மை இந்த புதிய நிர்வாக ஆளுகை சீர்திருத்தத்துக்கு உட்படுத்தி பொதுமக்களுக்கு கடமைப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு யுனெஸ்கோ இருக்கை பேராசிரியருமான டாக்டர் ராஜேஷ் தாண்டன் விளக்கம் அளித்தார். எனவே, ஊழல் குறைய இந்தப் புதிய சூழலுக்கு ஏற்ப தொண்டு நிறுவனங்கள் மாறுவதுதான் தீர்வாக இருக்க முடியும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com