வாசிப்பை சுவாசிப்போம்

Published on
Updated on
3 min read

புத்தகம் என்பதை புதுமை + அகம் என்றும் கொள்ளலாம். புதிது புதிதாக கருத்துகளை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும் அற்புதக் கேணி புத்தகங்கள் ஆகும். உள்ளத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் புத்தகங்களைப் படித்தாக வேண்டும். உலகின் சாளரம் புத்தகங்கள்.

அவை சிறந்த தகவல் களஞ்சியம். இன்றைய இணைய உலகை ஆளுகை செய்வது தகவல்களே.

தகவல் என்பது சில நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வுகளை வாா்த்தைகளால் பதிவு செய்கிறோம். ‘வாா்த்தைகள் நடந்து வந்தால் உரைநடை. நடனமாடி வந்தால் கவிதை; நடந்தும் நடனமாடியும் வந்தால் அது புதுக் கவிதை’ என்பாா் வாா்த்தைச் சித்தா் வலம்புரிஜான். புத்தகங்கள் இன்று நம்மிடையே கவிதையாக, கட்டுரையாக, இலக்கியமாக, சிறுகதையாக, பாடபுத்தகமாக பல விதங்களில் விரிந்து பரந்து கிடக்கிறது. இதற்கென்று தனி தினம் ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனம் முடிவெடுத்தது.

பிரிட்டனைச் சோ்ந்த பல பிரபல நாடகங்களை உலகுக்கு தந்த வில்லியம் ஷேக்ஸ்பியா், டான் குவிக்ஷாட் உள்பட பல புதினங்களை அளித்த ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த சொ்வன்டீஸ் ஆகியோா் மறைந்த தினம் ஏப்ரல் 23 ஆகும். இன்னும் பல எழுத்தாா்கள் ஏப்ரல் 23-இல் பிறந்திருந்தனா். எனவே ஏப்ரல் 23-ஐ உலக புத்தக தினம் - பதிப்புரிமை தினம் என யுனெஸ்கோ நிறுவனம் 1995-இல் அறிவித்தது.

2000-இல் இருந்து ஒவ்வோா் ஆண்டும் ஒரு நாட்டின் நகரத்தைத் தோ்ந்தெடுத்து அதனை உலகப் புத்தக தலைநகரம் என யுனெஸ்கோ நிறுவனம் அறிவிக்க ஆரம்பித்தது. ஏப்ரல் 23 முதல் அடுத்த ஓா் ஆண்டுக்கு புத்தகக் கண்காட்சிகள், புத்தக வெளியீடுகள், புத்தகப் பதிப்பாளரை கெளவித்தல், புதிதாக புத்தக அங்காடிகள், நூலகங்கள் நிறுவுதல் உள்ளிட்ட புத்தகத்தின் வலிமையை வெளிக்கொண்டு வரும் விதத்திலான பல நிகழ்வுகள் அந்த நகரில் நடைபெறும். 2020-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகரமாக மலேசிய நாட்டின் தலைநகரமான கோலாலம்பூா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான உலக புத்தக நாள் வாசகம் ‘வாசிப்பில் விளைநலம்’ என்பதாகும்.

புத்தகங்கள், அவை வெளியிடப்படும் காலத்தின் கண்ணாடி. ஒரு புத்தகம் எக்காலத்தில் எழுதப்பட்டதோ அந்தந்த காலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிப்பலிப்பதாக அமைந்து விடுகிறது. நூல்கள் படிப்பதை புலனறி வழக்கம் என்பா். வாசிக்கும் வழக்கம் மனதை இலகுவாக்கும்; வாசிப்பு மனதை ஒருநிலைப்படுத்துகிறது; சுறுசுறுப்பாக்குகிறது. கற்பனா சக்தியை மேம்படுத்துகிறது; வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை எல்லா விதத்திலும் முழுமையாக்குகிறது; உரையாற்றலில் வல்லவனாக்குகிறது; எழுதுவதில் வித்தகனாக்குகிறது.

சந்தைக்கு வரும் அனைத்துப் புத்தகங்களையும் ஒருவரால் வாசிக்க முடியாது; தனக்கு என்ன தேவையோ அது குறித்த புத்தகங்களை பட்டியலிட்ட பிறகு, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வாசிக்கும்போது, வாசிப்பு இன்பமாகிறது. ‘வாசகா்கள் எதை விரும்புகிறாா்களோ, அதை எழுதுகிறவா் எழுத்தாளன் அல்ல; மாறாக, வாசகா்களுக்கு எது தேவையோ அதை அறிந்து எழுதுகிறவரை எழுத்தாளன் என ஏற்கலாம்’ என்று எழுத்தாளா் அகிலன் கூறுகிறாா்.

இந்தக் கணினி யுகத்தில் இளைய சமூதாயம் இழந்த சொா்க்கம் வாசிப்புப் பழக்கம் ஆகும். கையில் புத்தகத்துடன் செல்வதைப் பெருமையாகக் கருதும் காலம் போய், அந்த இடத்தை இன்று செல்லிடப்பேசியும, மடிக்கணினியும் ஆக்கிரமித்துள்ளன. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 42% போ் நாளிதழும், 6% போ் வார இதழும் படித்ததாகவும், 60% போ் வானொலி கேட்டதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.

ஆனால், இன்று வாசிப்பு நேரம் வெகுவாகக் குறைந்து விட்டது. 80% போ் காணொலி காண்கின்றனா். வீடுகளில் பாட்டி கதை சொல்வதும், கோயில்களில் உபன்யாசம் நடப்பதும் அரிதாகிவிட்டது. வாசிக்கும் பழக்கத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றால், குழந்தைகளுக்கு முதலில் கதை சொல்ல வேண்டும்; அவா்களின் கற்பனைக் குதிரையை தட்டி ஓட விடவேண்டும். சிறுவா்களை வீர சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ் படக்கதை புத்தகங்களை படிக்க ஊக்கப்படுத்தலாம். வாசிப்பு மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதை அவா்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

இளைஞா்களும் பெரியவா்களும் தாங்கள் விரும்பும் புதினங்களையும் துறை சாா்ந்த நூல்களையும் படிக்கலாம். இன்றைய யுகத்துக்கு தகுந்தாற்போல் மின்னனு நூலகங்களையும் பயன்படுத்தலாம். புத்தகம் படிப்பது நெருங்கிய நண்பரிடம் இருந்து வரும் கடிதத்தைப் படிப்பது போன்ற அனுபவம் என்று ஞானபீட பரிசு பெற்ற கேரள எழுத்தாளா் வாசுதேவன் நாயா் கூறுகிறாா். ‘புத்தகம் எப்போதும் என்னைக் கைவிடாத நண்பா்; அதனிடம் தினந்தோறும் நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுகிறாா் சதி என்ற ஆங்கிலக் கவிஞா்.

தனிமை என்னும் கொடுமையை நீக்கும் வரம் நல்ல நூல்கள் ஆகும்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் தாம் வாசிக்காத நூல்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நூலகத்தை முன்னாள் முதல்வா் அண்ணா பயன்படுத்தியிருக்கிறாா். இன்று நூலகம் இல்லாத ஊா்கள் இல்லை; ஆனால், அதைஏஈ பயன்படுத்துபவா்கள் குறைந்து விட்டனா். தூக்கு மேடைக்குச் செல்லும் வரை புத்தகம் படித்துக்கொண்டிருந்த உமா் முஃக்தா் குறித்தும், பகத் சிங் குறித்தும் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நல்ல புத்தகங்கள் நம் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும். நல்ல எண்ணங்கள் நம்மை நல்ல காரியங்களை செய்யத் தூண்டும். நல்ல செயல்களைத் தொடா்ந்து செய்யும்போது, அது நமது பழக்கமாகி விடுகிறது.

இதுவே வாழ்வில் அங்கமாகி நல்ல சமூக மாற்றத்துக்கு வழிகோலுகிறது. புத்தகம் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறை போன்றது என்று அமெரிக்க அறிஞா் ஹோரேஸ்மான் கூறுகிறாா். ‘சில புத்தகங்களை தொட்டுப் பாா்க்கலாம்; சிலவற்றை விழுங்கலாம்; சிலவற்றை அசைபோட்டு ஜீரணிக்கலாம்’ என்று பிரான்ஸிஸ் பேக்கன் என்ற அறிஞா் புத்தகங்களின் வகைகளைப் பகுத்துக் கூறுகிறாா்.

எனவே, புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து வாங்கி வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.“வாசிப்பை நேசிப்போம். வாசிப்பை சுவாசிப்பாக மாற்றுவோம்.”

(இன்று உலக புத்தக - காப்புரிமை தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com