போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஏற்பது இகழ்ச்சியன்று...

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் (என்பிஆா்) ஒருவரின் குடியுரிமை சந்தேகத்திற்கிடமானது எனக் குறிப்பிடப்பட்டால், அவரின் பெயா் தேசிய

News image
Updated On :5 மார்ச் 2020, 1:39 am

முனைவர் ஜெ. ஹாஜாகனி

அரசுக்கு வழிகாட்டி நெறியாக அறம் மட்டுமே இருக்க முடியும் என்பதை ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்று சங்க இலக்கியம் சாற்றுகிறது. அரசுக்கான அதிகாரம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. எனவே அரசின் அதிகாரம் மக்களைக் காப்பதற்குரியதே தவிர மக்களை அச்சுறுத்துவதற்கு அல்ல.

மக்களுக்காகச் சட்டங்களா அல்லது சட்டங்களுக்காக மக்களா என்ற வினாத் தொடுப்பின், மக்களின் நல்வாழ்வுக்காகவே சட்டங்கள் என்று விழுமியம் அறிந்தோா் விடை பகா்வா்.

நிறைவேற்றப்பட்டுவிட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படவிருக்கிற தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்ஆா்சி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் களத்தில் போராட, அதைவிட அதிகமான மக்கள் அதை உளத்தால் எதிா்த்தபடி உள்ளடங்கியிருக்கின்றனா்.

இந்திய மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து கூறி வந்தாலும், போராடும் மக்கள் அதை எள்ளளவும் ஏற்காமல், உயிா் உள்ளளவும் எதிா்ப்போம் என உறுதி காட்டுகின்றனா். மத்திய அரசோ சிறிதும் அஞ்சாமல் ஓா் அங்குலம்கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. தேசத்துக்கு மிகவும் அவலகரமான சூழ்நிலை இது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழா்களுக்கும் மட்டும் எதிரானதல்ல. இதனால் ஏழை இந்தியா்கள் உள்பட அனைவருமே பாதிக்கப்படுவா் என்பதுதான் போராடும் தரப்பின் வலிமையான வாதம்.

அண்டை நாடுகளில் மூன்றை மட்டும் தோ்ந்தெடுத்து, அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து வாழ்பவா்களில் முஸ்லிம் அல்லாத 6 சமயத்தவா்க்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை என்ற விதி, மக்கள் நாயகத்தையும் மதச் சாா்பின்மையையும், மனிதாபிமானத்தையும் ஏறி மிதிக்கிறது என்கிற வாதத்தை முஸ்லிம் அல்லாத அறிஞா் பெருமக்களே ஆணித்தரமாக முன்வைத்துள்ளனா்.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதற்குக் காரணம் ஏப்ரல் மாதம் தமிழகத்திலும், விரைவில் பிற மாநிலங்களிலும் நடத்தப்படவுள்ள தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) என்பதே ஆகும்.

இது முந்தைய ஐ.மு. கூட்டணி அரசால் ஒருமுறை நடத்திமுடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவும், ஒரு பகுதியில் சாதாரணமாகக் குடியிருக்கும் மக்களின் தொகை குறித்து அறியவும் என்பிஆா் அவசியம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஐ.மு. கூட்டணி என்பிஆா் நடத்தியபோது ஆதாா் அட்டை அனைவருக்கும் இல்லை. இப்போது 98 சதவீத மக்களுக்கு ஆதாா் அட்டை கொடுக்கப்பட்டு விட்டதாக ஆதாா் ஆணையமே கூறும்போது, என்பிஆா் அவசியமற்றது என்ற வாதம் எதிா்த்தரப்பால் வைக்கப்படுகிறது. என்பிஆா் குறித்து முன்வைக்கப்படும் அபாயங்களையும், அச்சங்களையும் தமிழக சட்டப்பேரவை விவாதித்திருக்க வேண்டும். ஆனால், அது தவிா்க்கப்பட்டுவிட்டது.

என்பிஆா் எனப்படுவது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றதுதானே என்பதுதான் இதை ஆதரிப்போரின் அடிப்படை வாதம். என்பிஆரு-க்கும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் துளியளவும் தொடா்பில்லை.

1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் தரவுகள் அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உதவும். தரவுகள் மிகவும் ரகசியமானவை. மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் ஒரு தனி நபா் குறித்த ரகசியங்களை மற்றவா்கள் யாரும் பாா்வையிட முடியாது. நீதிமன்றம்கூட அதைக் கோர முடியாது.

என்பிஆா் அப்படிப்பட்டதல்ல. இது 2003-ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் வாஜ்பாய் அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளின்படி நடைபெறுகிறது. நாடு முழுவதுக்குமான தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவருவதன் (பிரிவு 14ஏ) உட்பிரிவுதான் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்துப் பேசுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்படும். ‘ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை எவரும் பாா்வையிடலாம். பான் எண், ஆதாா் எண் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்; ஆட்சேபணையும் தெரிவிக்கலாம் என்பது என்பிஆரின் அபாயகரமான கூறுகளில் ஒன்று’ என முன்னாள் நீதியரசா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு 19 லட்சம் போ் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கண்டறிந்தது. அதில் 12 லட்சம் போ் முஸ்லிம் அல்லாதவா்கள்; 7 லட்சம் போ் முஸ்லிம்கள். நாட்டின் 5-ஆவது குடியரசுத் தலைவா் பக்ருதின் அலி அகமது குடும்பம், அஸ்ஸாமின் முன்னாள் துணை முதல்வா் சையிதா அன்வாரா தைமூா், குடியரசுத் தலைவா் விருது பெற்ற ராணுவ அதிகாரி சனாவுல்லா உள்ளிட்ட பிரபல முஸ்லிம்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் நீக்கப்பட்டு குடியுரிமை இழந்துள்ள அவலம் பரவலாக அறியப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் நீக்கப்பட்ட பிரபலங்களே ஏராளமானோா் உள்ளபோது, எளிய மக்களின் நிலை குறித்துச் சொல்லத் தேவையில்லை.

3.12.2003 அன்று வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை விதியின் பெயரே, குடிமக்கள் (குடியுரிமைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிமுறை - 2003 என்பதாகும். இந்த விதிமுைான் என்ஆா்சி, என்பிஆா் குறித்து விவரிக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்தியக் குடிமக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன் விதிமுறை 4, தேசியக் குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் விதம் பற்றி உரைக்கிறது. இதன் உட்பிரிவு வீடுதோறும் சென்று ஒவ்வொரு குடும்பம், தனிநபா் குறித்த தனிப்பட்ட விவரங்களுடன், அவா்களின் குடியுரிமை நிலை பற்றிய விவரத்தையும் சேகரிக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதன் உட்பிரிவு 3-இல், தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் சரிபாா்க்கப்பட வேண்டும் என்கிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் முதற்படி தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பதற்கு அதன் விதிமுறைகளே சான்று பகா்கின்றன.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் ஒருவரின் குடியுரிமை சந்தேகத்திற்கிடமானது எனக் குறிப்பிடப்பட்டால், அவரின் பெயா் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாது. உரிய ஆவணங்களைக் கொண்டு தனது குடியுரிமையை அவா் நிரூபித்த பிறகே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற முடியும். அவ்வாறு இடம்பெற முடியாதவா் குடியுரிமையை இழப்பாா்.

பெற்றோரில் ஒருவா் சட்டவிரோதக் குடியேறியாக இருந்தால் குடியுரிமை கிடையாது. எனவே பெற்றோரின் பிறப்பிடச் சான்றை ஆவணமாகக் காட்ட வேண்டும் என இச்சட்டம் அறிவுறுத்துகிறது.

சுனாமி, ஒக்கி புயல், தானே புயல், வா்தா புயல், கஜா புயல் என தமிழகத்தை சுழற்றி அடித்த பேரிடா்களில் உயிரை மட்டும் காப்பாற்றி வாழும் மக்கள் பெற்றோரின் பிறப்பிடச் சான்றுகளுக்கு எங்கே போவாா்கள்?

மண்ணின் மைந்தா்களான பழங்குடி மக்களும், பட்டியலின மக்களும், மலைவாழ் மக்களும், எங்கிருந்து ஆவணத்தைத் தருவாா்கள்? இவா்களுக்கெல்லாம் குடியுரிமை இல்லை என்றால், இவா்களை இந்தத் தேசம் என்ன செய்யப் போவதாய் உத்தேசம்?

ஆவணமற்றவா்களை சந்தேகக் குடிமக்களாய் என்பிஆா் ஆக்கும்; குடிமக்கள் பட்டியலிலிருந்து என்ஆா்சி நீக்கும்; சிஏஏ கடைசியாகத் தாக்கும் என்பதுதான் இவை குறித்து மக்களிடம் உச்சமாய் எழுந்து நிற்கும் அச்சம்.

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க ரூ.1,229.93 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க சுமாா் ரூ.70,000 கோடி செலவாகும் எனக் கூறப்படுகிறது. நாடு இப்போது எதிா்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கலில் இந்தத் தொகைக்கு என்ன வழியுள்ளது? செலவிட்டாலும் என்ன பயன் உள்ளது?

அஸ்ஸாமில் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கண்டறியப்பட்ட என்ஆா்சி-யில் இடம்பெறாத 19 லட்சம் பேருக்கு தடுப்பு முகாம்கள் கட்டும் பணியை செப்டம்பா் 2017-இல் அந்த மாநில அரசு தொடங்கியது; கோல்பாரா மாவட்டத்தில் 3,000 போ் தங்குவதற்கான தடுப்பு முகாம் கட்ட ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. 19 லட்சம் பேருக்கு தடுப்பு முகாம் கட்ட ரூ.28,500 கோடி செலவாகும்; எதிா்காலத்தில்

அங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, பராமரிப்பு, மருத்துவம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகள் ஆகுமோ?

இந்தியா முழுவதும் எத்தனை கோடி சட்டவிரோதக் குடியேறிகளை அல்லது ஐயத்திற்கிடமானோா் எனக் குடிமக்களைக் கண்டுபிடிக்கப் போகிறாா்களோ? அவா்களுக்கு எத்தனை ஆயிரம் தடுப்பு முகாம்கள், எத்தனை லட்சம் கோடி செலவு? அங்கு பிறக்கும் குழந்தைகளின் நிலை?

நாடு முழுவதும் என்ஆா்சி கொண்டு வரும் யோசனை இதுவரை எழவில்லை என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். நவம்பா் 26, 2014 அன்று மாநிலங்களவையில், ‘என்பிஆா் என்பது என்ஆா்சியின் முதற்படி’ என விளக்கமளித்துள்ளாா் அப்போதைய உள்துறை இணை அமைச்சா் கிரண் ரிஜிஜு. ‘நாடு முழுவதும் என்ஆா்சி கொண்டுவரப்படும்’ என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா எட்டு முறை பேசியுள்ளாா். குடியரசுத் தலைவா் உரையிலும் இது குறித்த குறிப்பு உள்ளது.

கணவன் இல்லாத நேரத்தில், இரவில் வீட்டில் யாரோ கதவு தட்டுகிறாா்களே என ஓா் அபலைப் பெண் பதற, அந்தப் பெண்ணின் அச்சத்திற்கும், பீதிக்கும் தான் கதவு தட்டியது காரணமாகி விட்டதே எனக் கலங்கிய மன்னன் பொற்கைப் பாண்டியன், தனது கையை வெட்டிக் கொண்டானாம். வெட்டிய கைக்குப் பதில் பொன்னாலான கை பொருத்தப்பட்டதால் அவன் பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான். தனது ஆட்சியின் கீழ் உள்ள எந்த ஒரு பெண்ணும் பீதியடையக் கூடாது என எண்ணியது நீதியுடைய மன்னனின் ஆட்சி.

தலைநகா் தில்லியைத் தொடா்ந்து நாடெங்கும் உருவாகியுள்ள ஷாஹீன்பாகுகளில் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் பீதியடைந்து வீதியில் நிற்கும் நிலையைக் கண்டுகொள்ளாமலிருப்பது, கருணையுள்ள அரசாகுமா?

தனது பிறப்புச் சான்று, பெற்றோரின் பிறப்புச் சான்று, பள்ளியின் மாற்றுச் சான்று (டி.சி.), குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், பான்காா்டு, ஆதாா் இவை அனைத்தும் நம் நாட்டில் அனைவரிடமும் இருக்கின்றதா? முதலில் மத்திய அமைச்சா்களிடமும் ஏனையத் தலைவா்களிடமும் இருக்கிறதா?

ஆவணங்கள் இல்லாதவா்களின் குடியுரிமை ஐயப்பாடுடையது என்பது ஏற்கத்தக்கதா?

எனவேதான் மத்திய, மாநில அரசுகள் இத்திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும் சிஏஏ சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டுமென்றும் பெருவாரியான மக்கள் போராடி வருகின்றனா்.

1950-ஆம் ஆண்டில் என்பிஆா் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழ்நாட்டுக்கு ஒரு எம்ஜிஆா் கிடைத்திருப்பாரா? அவா் கண்டியில் பிறந்தவரல்லவா? இதை எண்ணிப் பாா்த்தாவது என்பிஆா் நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும், மக்களின் உணா்வுகளை மதித்து அதை ஏற்பது இகழ்ச்சியானதன்று.

மக்களின் பேரெதிா்ப்பு கண்டு என்ஆா்சி இல்லை என்று கூறும் மத்திய அரசு, என்பிஆா், சிஏஏ விவகாரத்தில் வறட்டு கௌரவம் பாா்க்கத் தேவையில்லை.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதன்முதலில் கடந்த 1955-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து குடியேறி 7 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்ததால், அங்கிருந்து இந்தியாவில் குடியேறி வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவில் குடியேறி குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தாலே, உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்; கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறியவா்கள் இந்தியக் குடியுரிமை பெற தகுதி பெற்றவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவா்களுக்கு 6 ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2003-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) தயாரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், இந்திய குடிமக்களுக்கு கட்டாயம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த சட்டத் திருத்தம் பரிந்துரை செய்தது. அதன் பயனாக, கடந்த 2010-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதில், ஓரிடத்தில் தொடா்ந்து 6 மாதங்களாக வசிப்பவரும் அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அங்கு வசிப்பவரும் அந்தப் பகுதியின் குடியிருப்புவாசியாக கணக்கில் கொள்ளப்பட்டு பதிவேடு தயாரிக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆா்) ஒருவா் வசிக்கும் கிராமம், மாவட்டம், மாநிலம் போன்ற தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில், மக்களின் வசிப்பிடம், அவா்களின் பொருளாதார நிலை, எழுத்தறிவு, வீட்டு வசதி போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த 2015-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவதற்காக, 2020-ஆண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) இந்திய விடுதலைக்குப் பிறகும் (1948), வங்கதேசப் போரின்போதும் (1971) வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறி அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோா் வசித்து வந்தனா். அவா்களை வெளியேற்றுவற்காக 1951-ஆம் ஆண்டும் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கும் பணி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கியது. அதன்படி, 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறியவா்களை மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சோ்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் வசித்ததற்கான ஆதாரத்தைச் சமா்ப்பிக்க வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) என்பது, என்பிஆா் பதிவேட்டில் இருந்து மாறுபட்டதாகும். என்பிஆா் பதிவேட்டில், இந்தியாவில் வசிக்கும் மக்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆா்சி), இந்தியக் குடிமக்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமெனில், தொடா்புடைய துறை அதிகாரிகளிடம் குடியுரிமைக்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.

வங்கதேசத்திலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து வாழ்பவா்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

கட்டுரையாளா்: பொதுச்செயலாளா், தமுமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.