Enable Javscript for better performance
வந்தாரை வாழ வைத்த சென்னை!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  வந்தாரை வாழ வைத்த சென்னை!

  By பவித்ரா நந்தகுமார்  |   Published On : 27th June 2020 08:38 AM  |   Last Updated : 27th June 2020 08:38 AM  |  அ+அ அ-  |  

   

  இந்தியாவின் முதல் மாநகராட்சியும், உலகின் பழைமையான இரண்டாவது மாநகராட்சி என்ற பெரும்புகழ் பெற்றதுமான சென்னை, வந்தாரை வாழ வைக்கும்  நகரம் என்ற தனிச் சிறப்பு பெற்றது.

  பழைமையின் சுவடுகள் முழுவதும் மாறாமல் நிகழ்காலத்துக்கு ஏற்ற புதுமைகளைத் தாங்கி நிற்கும் சென்னைக்கு, இன்று 380 ஆண்டு பாரம்பரியம் என்பதாக அறிகிறோம். 1639-ஆம் ஆண்டு இன்றைய சென்னைக்கு சென்னப்பட்டணம் என்றும் மதராசபட்டினம் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மாதரசன்பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்ப "மதராஸ்' என்று அழைத்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  நீளமான மெரீனா கடற்கரை, பல விளையாட்டு அரங்கங்கள், வள்ளுவர் கோட்டம், டைடல் பூங்கா, ரிப்பன் கட்டடம், 
  உயர்நீதிமன்றம், மேம்பாலங்கள், உயிரியல் பூங்காக்கள், சிறந்த மருத்துவமனைகள், இந்தியாவின் முதல் புத்தகக் கடை, மெட்ரோ ரயில் என சென்னை ஒரு கனவு நகரம். நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் 26-ஆவது இடத்தை சென்னை பெற்றிருந்தது.

  தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நினைத்தாலே நினைவுகளில் இனிக்கும் சில நிகழ்வுகள் சென்னையில் நிச்சயம் சிலவாவது இருக்கத்தான் செய்யும். ஏதேனும் ஒரு உறவினரோ, நண்பரோ, தெரிந்தவரோ என்று சென்னையில் வாய்க்கப் பெற்றவராக இருப்பர்.  நம் தலைநகரம் குறித்தான பெருமையும் அக்கறையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.  

  அதனாலேயே 2015-இல் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது, ஒட்டுமொத்த தமிழகத்தின் மனங்களிலும் நெருப்பு  வட்டம் சூழ்ந்தது. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சென்னையை நோக்கி உதவிக்கரம் நீண்டது. இவ்வளவு ஏன்?  கஜா புயல் ஏற்படுத்திய பேரழிவைவிட, சென்னையைத் தாக்கிய வர்தா புயல் பெயர்த்துச் சென்ற மரங்கள் குறித்துத்தான் தமிழகம் அதிகம் கவலை கொண்டது.

  இந்த அளவில் சென்னைக்கு ஒன்று என்றால், தமிழகமே தவித்துப் போகும் நிலைதான் இன்றளவும். தென்மாவட்ட மக்களின் கனவு சென்னைக்கு வர வேண்டும் என்பதே. கலாசாரத்துக்கும் வீரத்துக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்ற சென்னை மண், எந்த ஊரிலிருந்து யார் வந்தாலும் அவரை தன் சொந்தமாக ஏற்றுக் கொள்ளும் மரபைக் கொண்டது. வாகன நெரிசல், தண்ணீர்த் தட்டுப்பாடு, பரபரப்பான வாழ்க்கை முறை என கடின சூழ் நிலைகள் பல இருந்தாலும் அனைத்தையும் சமாளிப்பது சென்னைவாசிகளுக்குக் கைவந்த கலை.

  ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்குப் பிறகு தலைப்புச் செய்திகளில் நித்தம் தலைநகரத்தின் பெயர் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது.  தொற்றுப் பரவல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அதிகரித்தபடியே செல்வதை ஒட்டுமொத்த தமிழகமும் கவலையுடன் பார்க்கிறது.

  "சென்னைக்குப் போனா பிழைச்சுக்கலாம் எனும் நிலைமை திரும்பி, சென்னையை விட்டு விலகினா பிழைச்சுக்கலாம்' என்பதுபோல ஆகிவிட்டது என கேலி - கருத்துப் படங்களை கனத்த மனதுடனே கடக்க வேண்டியிருக்கிறது.  

  சென்னைவாசிகளைக் கொண்டாடி மகிழ்ந்த தமிழகம்தான் இன்று சென்னைவாசிகள் நம் மாவட்டத்தை வந்தடைந்தார்கள் என்ற செய்தி கேட்டு அச்சமடைவதை நாம் கண்ணுறுகிறோம். வெளி மாநில, மாவட்ட மக்களை சத்ருக்களாக எண்ணும் அபாயகரமான மனவோட்டம் இது.  கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஏற்படுத்திய மிக மோசமான தாக்கம்.

  ஒரு காலத்தில் சென்னையின் அழகை திரைப்படத்தின் மூலம் பார்த்து ரசித்தவர்கள் ஏராளம். அவர்களின் பெருங்கனவு சென்னையை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது.  சென்னைக்கு போய் வந்ததையே பெருமையாகப் பேசித் தீர்த்த பெரியவர்கள் ஊர்தோறும் இருந்தனர். 

  "கெட்டும் பட்டணம் போய் சேர் என்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன்' என்றும், வீட்டை விட்டு வெளியேறிய ஓர் இளம் பெண்ணின் ஆசையை வெளிப்படுத்தும் "மெட்ராஸ சுத்தி பாக்கப் போறேன்' என்றும் பாடிப் பரவசப்படுத்திய  திரை இசைப் பாடல்களைக் கேட்டிருப்போம்.

  மதராசப்பட்டினம் படத்தில் இடம்பிடித்த அந்தக் கால சென்னையை இந்தக் கால ரசிகர்கள் அதிகம் ரசித்தனர். சென்னை குறித்த பல்வேறு வகைமைகளில் தத்தம் நினைவடுக்கில் நீக்கமற நிறைத்திருந்த  மக்கள், தற்போது சென்னை மக்களை எதிர்கொள்ளும் விதம் மாறிப்போய் உள்ளது.  

  கரோனா தீநுண்மி மூலம் காலம் ஏற்படுத்திய கொடுமைகளுள் இதுவும் ஒன்று. காலில் வெந்நீர் கொட்டிய கதியாக வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த சென்னை மக்கள், பெரும் கலக்கத்துடனேயே நகர்கின்றனர். தலைநகரில் தொற்றுப் பரவலின் செய்தி, சாமானியர்கள் முதற்கொண்டு பெரும் பணக்காரர்கள் வரை அனைவரின் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது. 
   
  சென்னைவாசிகள் என்று சொன்னாலே சற்று தள்ளி, அல்ல அல்ல, காத தூரம் ஓடியோ கதவடைத்தோ நிற்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.  மறு வீட்டுக்குச் செல்கையில், ஆரத்தழுவி விடைபெற முடியாமல் தவிக்கும் புது மணப்பெண்ணை போன்றதொரு நிலைமைதான். அவரவர் நலன் சார்ந்த விஷயம் என்பதால், இதற்கு மறுப்பு சொல்ல யாதொரு வார்த்தையும் இல்லை.

  சென்னையில் வசிக்கும் உறவினர், நண்பர் வட்டங்களுடன் உரையாடும்போது வேகமாகப் பரவும் தொற்று குறித்த விசாரிப்பே, பேச்சின் அதிக நேரத்தை கபளீகரம் செய்துவிடுகிறது. வெளிமாவட்டத்திலுள்ளவர்கள் அவர்களின் தொற்று குறித்து அச்சப்படுகிறோம்.  சென்னை வாசிகளோ அவர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது குறித்து கவலை கொள்கிறார்கள்.  

  "நெரிசலும் நெருக்கடியும் கிராமங்களில் இல்லை என்பதால் எண்ணற்றோர் ஊரை விட்டு வெளியேறினார்கள்' எனும் கூற்றில் முழுக்க உண்மையில்லை. இந்தக் காரணத்துக்காக சென்னையை நீங்கியவர்கள் வெகு குறைவு. உண்மையில் தொற்று ஏற்படுத்திய பேரச்சம் காரணமாக சென்னையிலிருந்து மக்கள் வெளியேறவில்லை. வேலைவாய்ப்பை இழந்து நின்றதால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

  வாழ்வாதாரத்துக்காக சென்னைக்கு அடைக்கலம் புகுந்த வடமாநில தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் சென்னையை விட்டு வெளியேறி வருகின்றனர் என்ற செய்தி கிடைக்கிறது.  இதனால் வரும் காலங்களில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மீண்டும் புது நபர்களை பணியமர்த்தி அவர்களுக்கு அந்த வேலையை பழக்கப்படுத்தி நிலைப்படுத்த சில காலம் பிடிக்கும். வர்த்தக நிறுவனங்களுக்கும் வியாபாரிகளுக்கும் இது ஒரு கூடுதல் தலைவலி.  

  ஏற்கெனவே பள்ளிகளைத் தொடங்க முடியவில்லை, வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக பொறுத்தாளப்பட்டிருக்கின்றன. நிகழ்கால பிரச்னைகளைச் சரிவரக் கையாண்டால்தான், வருங்கால வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

  தற்போது சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் மதுரையிலும் மீண்டும் முழு பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கரோனா தீநுண்மியின் கோர முகம் குறித்து அனைவருக்குமே தெரிந்திருந்தும், பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவதில் காட்டும் சுணக்கமே நிலைமை தலைகீழாக மாற்றம் பெற வழிகோலுகிறது.  அந்த அஜாக்கிரதையை களைந்தால் நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்கலாம்.

  அரசின் வழிகாட்டுதலுக்கு சற்றும் செவிசாய்க்காத மக்கள் இருக்கும் வரை அனைத்தும் வீணாகிவிடுகின்றன.  முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் மிக மிக அஜாக்கிரதையாக பலர் நடந்துகொள்வதால்தான் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.  

  இந்திய நகரங்களிலேயே முதல் உலகப் போரில் குண்டு வீசி தாக்கப்பட்ட ஒரே நகரம் சென்னைதான் என தரவுகள் சொல்கின்றன.  1914-ஆம் ஆண்டில் செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெர்மனியின் போர்க் கப்பலான எம்டன், மெட்ராஸ் மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. 

  இதில் மெட்ராஸ் சிறிதளவு சேதத்தைச் சந்தித்தாலும் அந்தத் தாக்குதலுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியேறினர். இதனால், ஆங்கிலேயர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  அதற்குப் பிறகு சென்னையை விட்டு அதிக மக்கள் வெளியேறியது கரோனா தீநுண்மியால்தான் என நம்பப்படுகிறது.

  பொதுவாக கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலச் சமூகம், சமுதாயப்படி நிலை வளர்ச்சியில் பொருளாதார மேம்பாடு அடையப் பெற்ற வணிக சமூக உருவாக்கத்தின் தோற்றுவாயிலாக விளங்கும்.  இதற்கு அந்த நிலம் சார்ந்த மக்களின் அக உறவு நிலைகளும் தொழில்சார் முறைகளும் பண்பாட்டு நிகழ்வுகளும் பின்புலங்களாக அமைந்திருக்கின்றன.

  ஆனால், இன்றைய சென்னை பெருவாரியான நெய்தல் நில மண்ணின் அடையாளங்களை என்றோ தொலைத்து விட்டது.  நவீனங்களால் தன்னை முழுவதும் கட்டமைத்துக் கொண்டது. இதிலிருந்து சென்னை நிச்சயம் மீண்டு வரும்.  இன்னும் வலிமையுடன், புதிய பொலிவுடன் தன்னைத் தானே மறுசீரமைப்பு செய்து பிரகாசிக்கும் என்று ஆணித்தரமாக நம்புவோம்.

  கட்டுரையாளர்: எழுத்தாளர்.

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp