நாம் திராவிடர்கள் அல்ல!

 தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றும், கன்னட மொழி பேசுபவர்கள் தங்களைக் கன்னடர்கள் என்றும், மலையாள மொழி பேசுபவர்கள் தங்களை மலையாளிகள்

 தெலுங்கு மொழி பேசுபவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றும், கன்னட மொழி பேசுபவர்கள் தங்களைக் கன்னடர்கள் என்றும், மலையாள மொழி பேசுபவர்கள் தங்களை மலையாளிகள் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் மட்டும்தான் நெஞ்சை நிமிர்த்தி நம்மைத் "தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்ளாமல் "திராவிடர்கள்' என்று சொல்லிக் கொள்கிறோம்.
 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தென்னிந்தியாவை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் "திராவிடம்' என்ற சொல்லே வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். காரணம், தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை "திராவிடன்' என்ற பொதுவான சொல்லில் அழைத்துக் கொள்வதில்லை.
 வடமொழியில் "தமிழ்' மொழியை "திராவிடம்' என்று குறித்துள்ளனர். குமாரிலபட்டர் என்னும் வடமொழி அறிஞர், தென்னிந்திய மொழி இனத்தை "ஆந்திர - திராவிட பாஷா' என்று பதிவு செய்துள்ளார். திராவிட ஆய்வில் முதலில் ஈடுபட்ட வெள்ளையர்கள் "திராவிடம்' என்ற சொல்தான் "தமிழ்' என்றாகி இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
 இதில் முக்கியப் பங்காற்றியவர் ராபர்ட் கால்டுவெல். வடமொழியில் "ள' என்ற எழுத்தும் "ட' என்ற எழுத்தும் ஒன்றுக்கொன்று மாறிவரும். "திராவிடம்' என்பது "திராவிளம்' என்றானதாம். அதேபோல் "வ' என்ற எழுத்தும் "ம' என்ற எழுத்தும் மாறிவரும். "திராவிடம்' என்பது "திராமிளம்' என்றாகிப் பின்னர் "த்ரமிளம்' என்றும் "தமிளம்' என்றும் "தமிள்' என்றும் நிறைவாகத் "தமிழ்' என்றானது என்பது ராபர்ட் கால்ட்வெல் பதிவு.
 சுற்றிவளைத்து வலியப் புனையப்பட்ட வேர்ச்சொல் ஆராய்ச்சி அது. அதாவது "திராவிடம்' என்ற வடமொழிச் சொல்லிருந்துதான் "தமிழ்' என்ற சொல் வந்தது என்று சொன்னதாகச் சொல்லி இருக்கிறார்.
 தமிழ் என்ற சொல்லின் சிறப்பே அதிலுள்ள "ழ' என்னும் எழுத்துதான். "ழ' என்னும் எழுத்து, வேறெந்த ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவர்கள் வாயில் "ழ' என்னும் சொல் நுழையாததாலும், அவர்கள் மொழிகளில் "ழ' இல்லாததாலும், "தமிழ்' என்ற பெயரை அப்படியே சொல்லாமல் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். நிறைவாக ராபர்ட் கால்டுவெல் சொன்ன "திராவிடம் என்ற சொல்லிலிருந்து தமிழ்' என்ற வாதமே நிலைத்துவிட்டது.
 "திராவிடம்' என்பது "திரமிழம்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். "தமிழ்' மொழிக்குத் "திரமிழம்' என்றொரு பெயரும் உண்டு. "திரம்' என்றால் "உறுதி' மற்றும் "நிலை' என்று பொருள். "மிழம்' என்றால் "மொழி' என்று பொருள். ஆக "திரமிழம்' என்றால் "உறுதியான நிலையான மொழி' எனப் பொருள்படும்.
 "திராவிடம்' என்ற சொல்லிலிருந்து "தமிழ்' என்ற சொல் வரவில்லை. மாறாக "தமிழ்' அதாவது "திரமிழம்' என்ற சொல்லிலிருந்தே "திராவிடம்' என்னும் வடசொல் உருவானது.
 தமிழ் மொழிக்கு "திராவிடம்' என்ற பெயர் பழங்காலம் தொட்டே இருந்திருந்தால் "திராவிடம்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூவாயிரம் ஆண்டு பழந்தமிழ் "தொல்காப்பியம்' இலக்கண நூலில் எங்குமே "திராவிடம்' என்ற சொல் இல்லை. "தமிழ்' என்ற சொல்லே வழங்குகிறது.
 தொல்காப்பியப் பாயிரத்தை எழுதிய பனம்பாரனார் "தமிழ் கூறு நல்லுலகம்' என்றும் "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்' என்றும் கூறுகிறார். தொல்காப்பியத்துக்குப் பின் வந்த பல நூல்களிலும் "தமிழ்' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. "திராவிடம்' என்ற சொல்லாட்சி எங்குமே காணப்படவில்லை.
 "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்று பாரதி பாடியதில் வியப்பில்லை. காரணம் "இனிமை' என்ற சொல்லுக்குப் பதிலாக "தமிழ்' என்ற சொல்லையே தமிழர்கள் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளனர்.
 "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்கிறது பிங்கல நிகண்டு. அதாவது, இனிமை, ஒழுங்கான இயல்பு ஆகியவற்றைக் குறிக்கத் "தமிழ்' என்ற ஒற்றைச் சொல்லே போதுமாம்.
 ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான "சீவக சிந்தாமணி' நூலின் ஆசிரியர் திருத்தக்கத் தேவர் "இனிமை பொருந்திய சாயலை உடைய பெண்கள்' என்று குறிப்பிட "தமிழ் தழீஇய சாயலவர்' என்று கூறுகிறார். அவர் "இனிமை' என்ற சொல்லுப் பதிலாகத் "தமிழ்' என்றே குறிப்பிடுகிறார்.
 தென்னிந்திய நல உரிமைக் கழகம், நீதிக் கட்சி, இவற்றின் நீட்சியாக திராவிடர் கழகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி பேசுவோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
 குறிப்பாக தமிழர்களை விடவும் மற்ற மொழியினரே பெரும்பான்மையாக இருந்தனர். எனவே "தமிழர் கழகம்' என்று பெயர் வைப்பதில் தயக்கம் இருந்திருக்கலாம். ஆகவே, ஈ.வெ.ரா. "திராவிடர் கழகம்' என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியதில் வியப்படைய ஏதுமில்லை.
 ஈ.வெ.ரா., "திராவிடர் கழகம்' தொடங்கியபோது, அதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அதிக அளவில் இணைந்தனர். தாங்கள் தமிழர்களல்ல என்பது அடையாளப்பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால், "திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டியதில் வியப்பில்லை.
 மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து தனித்தனி மாநிலங்கள் உருவான பின்னரும், "தமிழன்' என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளாமல் "திராவிடன்' என்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் அழைத்துக் கொள்வதன் காரணம்தான் தெரியவில்லை.
 திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு டமிலியன் ஸ்டாக்' என்று கூறாமல் "சீஃப் மினிஸ்டர் ஆஃப் டமில்நாடு - பிரஸிடென்ட் ஆஃப் டிஎம்கே பிலாங்ஸ் டு திராவிடியன் ஸ்டாக்' என்று சொன்னதன் காரணம் என்ன?
 தமிழும், திராவிடமும் ஒன்றா? அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுந்தானே முதல்வர்? தென் இந்தியா முழுமைக்குமான (தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கருநாடகம், கேரளம் ஆகியவற்றை உள்ளடக்கிய) திராவிடத்தின் முதல்வரா? தமிழும், திராவிடமும் வேறு வேறு எனில் "டமிலியன் ஸ்டாக்' என்று சொல்லிக் கொள்வதில் என்ன தயக்கம்?
 வரலாற்று ரீதியாகப் பார்த்தால் 11-ஆம் நூற்றாண்டில் நிலவிய சோழ சாம்ராஜ்யமே தமிழர்களின் கடைசி சாம்ராஜ்யம் ஆகும்.
 இதன் பின்னர் தமிழகத்தை ஆண்டவர்கள் விஜயநகரப் பேரரசு (கிருஷ்ணதேவ ராயர்), நாயக்கர்கள் (திருமலை), மராட்டியர்கள் (சரபோஜி), சுல்தான்கள் / நவாப்புகள் (உருது), டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ்காரர்கள்.
 இவர்கள் அனைவரும் தமிழர் அல்லாத தெலுங்கு, மராட்டியம், உருது, ஆங்கிலம் பேசும் வேறு வேறு மொழியினர். இவர்கள் தமிழ் மொழியை ஆதரித்தார்களா, இல்லையா என்பது வேறு விஷயம்.
 பிராமணர் அல்லாத இயக்கமாகத் தோன்றிய "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', பின்னர் "நீதிக் கட்சி'யாகவும், "திராவிடர் கழக'மாகவும் உருமாறியது. பெயரில்தான் மாறுதலே தவிர மற்றபடி கொள்கை என்னவோ மூன்றுக்கும் ஒன்றுதான்.
 நீதிக் கட்சியின் தலைவர்களாக விளங்கிய பிட்டி தியாகராய செட்டி (தெலுங்கு), டி.எம். நாயர் (மலையாளம்) ஆகியோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்ல.
 தமிழக முதல்வர்களாகப் பதவி வகித்த சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, ராமகிருஷ்ண ரங்கா ராவ், கர்ம வெங்கட் ரெட்டி, டி. பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா ஆகிய அனைவரும் தெலுங்கர்களே.
 காமராஜரும், அண்ணாவும் தேர்தலில் போட்டியிட்ட போது காமராஜரை "பச்சைத் தமிழன்' என்று சொல்லி ஈ.வெ.ரா. ஆதரித்தார். "காமராஜர் பச்சைத் தமிழன் என்றால் திமுக தலைவர் அண்ணாதுரை யார்' என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஈ.வெ.ரா. திமுகவினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
 பிற்காலச் சோழர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் கடைசி 600 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கொண்டால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களின் எண்ணிக்கையும், காலமும் மிகவும் சொற்பமே.
 பெயரில்தான் தமிழ்நாடு. ஆனால் ஆட்சி செய்த 90% பேர் வேற்று மொழிக்காரர்கள். அதிலும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டோரே அதிகம்.
 பல்லாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழி தனது பெயரை இன்னொரு மொழியிலிருந்து பெற்றது என்று கூறுவது அதன் தொன்மையையும், செம்மொழித் தகுதியையும் குறைப்பது போலாகும். ஆகவே, தமிழ் மொழிக்கு "தமிழ்' என்று பெயர் வைத்தவர்கள் தமிழர்கள்தானே தவிர வடமொழி பேசுவோரோ அல்லது வேறு மொழி பேசுவோரோ அல்ல என்பது தெளிவு.
 தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமையைத் தராமல் "திராவிடன்' என்று பொத்தாம்பொதுவாகப் பேசி, தமிழுக்கு உரிய எல்லாப் பெருமைகளையும், சிறப்புகளையும் தென் இந்தியாவைக் குறிக்கும் திராவிடத்துக்குத் தாரை வார்ப்பது நியாயம் அல்ல.
 தமிழகத்தில் வாழும் வேற்று மொழியினர் தங்களை "திராவிடர்கள்' என்ற குடையின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட "தமிழன்' தன்னை "திராவிடன்' என்று சொல்லிக் கொள்வதற்கு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒற்றைக் காரணம்கூடக் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com