மதிப்பெண் கூட்டும் தேர்வு: அவசர அவசியம்

பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீட்டு முறையாக, மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 50 சதவீதமாகவும்,

பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீட்டு முறையாக, மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 50 சதவீதமாகவும், பிளஸ்-1 தேர்வுகளில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 20 சதவீதமாகவும், பிளஸ்-2 வகுப்பில் செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 20 சதவீதமாகவும், அகமதிப்பீட்டு மதிப்பெண்களை 10 சதவீதமாகவும்  கணக்கிட்டு, மதிப்பெண்களை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஜூலை 31-க்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். 

பத்தாம் வகுப்பு தேர்வை மாணவர்கள் நேரில் சென்று எழுதி பெற்ற மதிப்பெண்கள் என்பதால் அதற்கு அதிக மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத மாணவர்கள், அவர்கள் விரும்பினால் பிளஸ்-2 தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அந்தத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்கள் ஆகும். இது தொடர்பான கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய இடைநிலைக் கல்விவாரியம் எனப்படும் சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பீட்டு முறையைப் பொருத்தவரையில், பத்தாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 30 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 30 சதவீதமும் மற்றும் பிளஸ்2 வகுப்புகளில் இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் மதிப்பெண்களை 40 சதவீதமும் என எடுத்துக்கொண்டு மதிப்பெண் மதிப்பீட்டை இறுதி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு கரோனா சூழலை ஆய்வு செய்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 15-க்குள் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இவ்விரண்டையும் உற்று நோக்கும்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் கூட்டும் தேர்வுக் காலம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. கரோனா சூழலில் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்துவிட்டு மதிப்பெண் மதிப்பீட்டு முறையை அறிவித்திருப்பதும் தவிர்க்க முடியாதது. ஆனால், அவை முழுமை பெறுவது என்பது மாணவர்களின் திருப்தியில்தான் உள்ளது. 

மத்திய அரசின் இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு என்பதை கரோனா சூழலை ஆராய்ந்து நடத்த முன்வந்துள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு என்பது காலவரையறை ஏதுமின்றி அறிவிப்பு செய்திருப்பது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. 

மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 தேர்வை ரத்து செய்ததை உச்சநீதிமன்றமும் வரவேற்றது. மதிப்பெண் மதிப்பீட்டு முறை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் திருப்தியடையாத மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வு வைப்பது என்றும், குறிப்பிட்ட காலத்தை அறிவித்திருப்பதும் மாணவர் நலனில் அக்கறை செலுத்துவதை உணர்த்துவதாகத் தோன்றுகிறது. 

சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழக அரசு, பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் கூட்டும் தேர்வை நடத்துவது தொடர்பாகவோ, காலவரையறை செய்யாமலோ இருப்பது தகுமா? இதுதொடர்பாக அறிவிப்பு ஏதும் செய்யாமலோ, தாமதமாக அறிவிப்பு செய்தாலோ குறைவான நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் கூட்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள். இவ்வாறு நடக்கும்பட்சத்தில், மதிப்பெண் கூட்டும் தேர்வு என்ற வாய்ப்பு வழங்கப்படாமல், பிளஸ்-2 மதிப்பெண்களை மாணவர்கள் மீது திணித்தது போல் ஆகும். 

ஜூலை , ஆகஸ்ட்  என அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், மதிப்பெண் கூட்டும் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களையும் திருப்திபடுத்தியது மட்டுமன்றி, சமூக நீதியை உயர்த்திப் பிடித்தது போலும் ஆகும். வழக்கமான கல்வியாண்டுகளில், பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் தொடர்பாக சந்தேகம் எழும்போது, தங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு, மறு கூட்டல்  செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் மதிப்பெண் கூட்டும் தேர்வுக்கு ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிதல்லவே. ஆன்லைன் தேர்வாக இருந்தாலும் பரவாயில்லை. மற்ற கல்விவாரியங்களைப் போல், தமிழக அரசும் மாணவர்களுக்கு மதிப்பெண் கூட்டும் தேர்வை நடத்திய பெருமை வந்து சேரும். 

மற்ற கல்வி வாரியங்கள் போல் (சிபிஎஸ்இ, சிஐசிஎஸ்இ) பிளஸ்-2 மதிப்பெண் கூட்டும் தேர்வுக் காலத்தை தமிழக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும். அதிகபட்சம் ஒன்றரை மாதம் மட்டுமே தேர்வுக்குத் தயாராகும் அவகாசம் இருப்பதால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்தல் அவசர 
அவசியமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com