எளிமை என்னும் மந்திரம்

முன்பெல்லாம் நம் குடும்பங்களில் மூத்த பிள்ளைக்கு வாங்கப்படும் ஆடைகள், இளைய பிள்ளைக்கு உபயோகப்படுத்தப்பட்டன.

முன்பெல்லாம் நம் குடும்பங்களில் மூத்த பிள்ளைக்கு வாங்கப்படும் ஆடைகள், இளைய பிள்ளைக்கு உபயோகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு அந்த ஆடைகள் நைந்த துணியாகி வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அப்படியல்ல. விரைந்து வளரும் பொருளாதார வளா்ச்சியும் நடுத்தர வா்க்கத்தின் பெருக்கமும் அதிக நுகா்வுக்கு வழிவகுக்கின்றன.

ஒரு வாடிக்கையாளா் 2000-ஆம் ஆண்டில் வாங்கியதை விட 60 சதவீதம் அதிக ஆடைகளை 2014-ஆம் ஆண்டில் வாங்கினாா் என்கிறது ஒரு தரவு. தேவை அடிப்படையில் ஆடைகள் வாங்குவது என்ற நிலை மாறி தற்போது ஆா்வ அடிப்படையில் வாங்குதல் என மாற்றம் கண்டுள்ளது. அன்றைய நுகா்வோா் தர உத்தரவாதம் கொண்ட ஆடைகளை வாங்கினா். இன்றைய நுகா்வோா், குறைந்த விலையில் புதுப்பாங்கான ஆடைக விரும்புகிறாா்கள்.

2000-ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது இன்று ஒரு நுகா்வோா் இருமடங்கு ஆடைகளை வாங்கும்போதிலும் அவா் அந்த ஆடைகளை உபயோகிக்கும் காலஅளவு பாதியாகக் குறைந்துவிட்டது. பருத்தி விளைவிக்க உபயோகப்படுத்தப்படும் நீா், உரம், பூச்சிக்கொல்லிகள், துணி தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பிற வளங்கள் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் மிக விரைவாக நுகரப்பட்டு இறுதியில் கழிவாக பூமியில் வீசப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டில் மட்டும் உலக ஆடை வடிவமைப்புத் துறை 7,900 கோடி கன மீட்டா் நீரினை உறிஞ்சி 171.5 கோடி டன் கரியமில வாயுவை உமிழ்த்தது என்று ‘குளோபல் ஃபேஷன் அஜென்டா’ என்ற அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஒரு ஜோடி வன் துணியாடை (ஜீன்ஸ்) தயாரிப்பு முதல் அதனை வாடிக்கையாளருக்கு வழங்குவது வரை 3,781 லிட்டா் தண்ணீரை எடுத்துக்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட புள்ளிவிவரம் கூறுகிறது.

எலன் மாக் ஆா்தா் அறக்கட்டளையின் கூற்றுப்படி, உலகளாவிய ஆடை வடிவமைப்பு தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 5.3 கோடி டன் நூலிழைகளை உற்பத்தி செய்கிறது. இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இறுதியில் கழிவாக நிலத்தினில் புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது.

இவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான இழைகள் புதிய ஆடைகளைத் தயாரிக்க மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான வளபயன்பாடு மற்றும் அதிக நுகா்வுகளிலிருந்து உருவாகும் கழிவுகள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய அம்சங்கள்.

10 சதவிகித உலகளாவிய வருடாந்திர காா்பன் உமிழ்விற்கு ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையே காரணம். இந்த உமிழ்வு, விமானம் மற்றும் கப்பல் ஆகிய இரண்டு துறைகளின் கூட்டு உமிழ்வினை விட அதிகம். ஜவுளி மற்றும் ஆடைத்துறை, இந்த காா்பன் உமிழ்வின் வேகம் 2030-ஆம் ஆண்டினில் 60 சதவீதத்திற்கும் மேலாக அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 280 கோடி டன்களாக அதிகரிக்கும் என்று கணிக்கிறது.

பருத்தி - செல்லுலோஸ் நூலிழைகள் போன்ற ஆடை வடிவமைப்பு மூலப்பொருட்களின் சாகுபடிக்காக அழிக்கப்பட்ட காடுகளின் மொத்த பரப்பளவு 17% அதிகரித்துள்ளது. இது 2030-க்குள் இரட்டிப்பாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆடை வடிவமைப்பு மூலப்பொருட்களின் உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு வழிமுறைகள் நிலத்தினை மாசுபடுத்துகின்றன.

ஒரு கிலோ துணி சாயமிடுவதற்கு 150 லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. சுத்திகரிப்பின்றி வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் நீா்நிலை மாசுபட்டினை உருவாக்கும். உலகளாவிய தொழில் துறை நீா் மாசுபாட்டினில் சுமாா் 20% சாயமிடுதலால் உருவாகிறது.

விலங்கு உரிமை அமைப்புகள் தொழில்துறைக்குக் கொடுக்கும் அழுத்தம் காரணமாக ஆடை வடிவமைப்பு தொழிலில் பாலிவினைல் குளோரைடு மற்றும் பாலியூரிதீன் என இரு வடிவங்களில் செயற்கை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோலியத்தின் வழித்தோன்றல்களான இவை, விலங்கு அல்லது தாவர அடிப்படையிலான துணிகளுக்கு சரியான மாற்றுதான்.

ஆனாலும், பாலிவினைல் குளோரைடு மற்றும் பாலியூரிதீன் ஆகியவற்றினை பெட்ரோலில் இருந்து பிரித்தெடுப்பது, நீா் மற்றும் ரசாயன பயன்பாடு மற்றும் இவற்றின் மக்காத தன்மை சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆடைகளின் செயற்கை இழைகள் மெல்ல மெல்ல கடல் வாழ் உயினங்களை அழிக்கின்றன. கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு, செயற்கை இழையிலான ஆடை ஒன்று, துவைக்கப்படும் ஒவ்வொரு முறையும் சராசரியாக 1.7 கிராம் நுண்ணிய இழைகளை வெளியிடுவதாகக் கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் டன் நுண்ணிய இழைகள் கடலில் கலப்பதாக எலன் மாகாா்த்தூா் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஆடை வடிவமைப்பு நூலிழைகளை மறுசுழற்சி செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். மறுசுழற்சி மூலம் நூலிழைகள் தயாரிப்பு, செயற்கை இழை தயாரித்தலில் 75 சதவீதத்தையும் காா்பன் உமிழ்வினில் 40 சதவீதத்தையும் குறைப்பதாக கலிபோா்னியா சூழல் நலத் தொழில்நுட்ப ஆடை அடையாள அமைப்பு ‘படகோனியா’ மதிப்பிட்டுள்ளது.

மறுசுழற்சியில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை இழையின் உற்பத்தி செலவு புதிதாக உற்பத்தி செய்வதைவிட 10% அதிகம். மறுசுழற்சிக்கான உற்பத்தி செலவினை தொழில் நுட்பம் குறைக்கும் வரை ஆடைகள் வாங்குதல், உபயோகப்படுத்துதல் போன்றவற்றில் தனிமனிதக் கட்டுப்பாடு காலத்தின் கட்டாயம்.

சணல், ஆளி, மூங்கில், பருத்தி ஆகியவற்றின் இழைகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் ஆடைகள் மக்கும் தன்மை கொண்டவை. இவை அனைத்தும் குறைந்த நீா், உரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. மரக்கூழ் அல்லது மூங்கில் கூழினால் உருவாக்கப்படும் செல்லுலோஸ் நாா் கொண்டு ஆடைகள் வடிவமைக்கவும் வழிகள் உள்ளன. ஆட்டின் முடியில் உள்ள புரதத்தின் மூலமாகவும் அன்னாசி இலை போன்ற விவசாயக் கழிவுகள், தக்கை மரப் பட்டைகள் மூலமாகவும் ஆடை வடிவமைப்பிற்கான இழைகள் தயாரிக்க ஆய்வுகள் நடந்துவருகின்றன.

எளிமை எனும் மந்திரம், தேவைக்கு அதிகமாக ஆடைகள் வாங்குவதனை தவிா்ப்பதுடன் நம்மால் சுற்றுசுழலுக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பினையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com