அறிவியலால் ஆய பயன்

எந்த ஒரு நுண்ணுயிரியும்  உயிரினங்களைத்  தாக்க முன்வரும்போது தாக்குதலுக்கு உள்ளாகும்  உயிரினத்தின் உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி அதற்கெதிராக பணியாற்றி நுண்ணுயிரியை அழிக்கும்.



இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, கரோனா தீநுண்மியின் பாதிப்பினை உலகம் முழுவதும் வெகுவாகக் குறைத்துள்ளது. பரவுகின்ற முறையினை அறிவியல் பூர்வமாகக் கணித்து, விழிப்புணர்வைக் கூட்டியுள்ளது. தொற்றுக்கும், நோய்க்கும் உள்ள வேறுபாட்டினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கரோனா தீநுண்மி தொற்று, நோயாக மாறாமலிருக்கத் தேவையான ஆலோசனைகளைக் கூறி வருகிறது. 

இவை அனைத்தும் சாத்தியமாகக் காரணமாக அமைந்தது "நோய் நாடி நோய் முதல் நாடும்' அறிவியல் வழிமுறையே. எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கான தடுப்பூசியினை இத்தனை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளதும் அறிவியலே. அறிவியலில், எது ஒன்றையும் தொடக்கத்திலிருந்து ஆய்வு செய்யவேண்டிய தேவை இல்லை என்பதால் இவை சாத்தியமாகின்றன. 

அறிவியல் ஆய்வுமுறைகளான தொகுத்தல், வகைப்படுத்துதல், ஆய்வு செய்தல், முடிவுக்கு வருதல் என்பவை இன்று  இயல்பானதாகிவிட்டது. மருத்துவத்துறைதான் என்றல்ல. ஏனைய பல்வேறு துறைகளிலும் அறிவியல்பூர்வமான பார்வை கொண்டோர் சிக்கல்களுக்கானத் தீர்வினை எளிதில் கண்டு விடுகின்றனர். 

இவ்வளவு எளிதாய் இருக்கும் இந்த அறிவியல் வழிமுறைகள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. அதே நேரம் அது மனிதர்களின் உற்று நோக்கலையும், படைப்பாற்றலையும் அடிப்படையாகக் கொண்டது.  அனுபவங்களைத் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்ததால் விளைந்தது. 

ஆரம்ப காலங்களில் கடினமாக இருந்த தரவுகள் பெறும் வழிமுறைகள் இன்று எளிதாகியுள்ளன. தகவல் தொழில் நுட்பம் இதனை சாத்தியமாக்கியுள்ளது. இன்று நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வழிமுறைகள், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டோ சோப்பு கொண்டோ சுத்தம் செய்துகொள்வது என்று குழந்தை கூட கூறும். 

ஆனால் எளிமையான இதனை நமது சமூகத்திற்குப் புரியவைக்க எத்தனை அலைகள் தேவையாயிருக்கிறன? விலை மதிப்பில்லாத எத்தனை உயிர்களை நாம் இழந்துள்ளோம்? எத்தனை குழந்தைகள் தமது பெற்றோரை இழந்துள்ளனர்? முதல் அலையில் வயது முதிர்ந்தோரையும், இணைநோயுள்ளோரையும் தாக்கியது என்றதும் அந்த வயதினரை  எச்சரித்தோம். 

அடுத்த அலை இளைஞர்களைத் தாக்குகிறது என்று தெரிந்தபோது அவர்களைக் காக்கப் பாடுபட்டோம். அடுத்த மூன்றாவதுஅலை குழந்தைகளைத் தாக்கக்கூடும் எனும்போது அதையும் தடுக்கத் தயாராகிறோம். நுண்ணியிரிகள் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் அறிவியலைப் புரிந்துகொண்டால் மட்டுமே  இது எளிதாகப் புரியும். 

எந்த ஒரு நுண்ணுயிரியும்  உயிரினங்களைத்  தாக்க முன்வரும்போது தாக்குதலுக்கு உள்ளாகும்  உயிரினத்தின் உடலிலுள்ள எதிர்ப்புச் சக்தி அதற்கெதிராக பணியாற்றி நுண்ணுயிரியை அழிக்கும். ஆனால் அதே நேரம் உடலின் எதிர்ப்பு சக்தியை எதிர்கொள்ள எதிர்கொள்ள நுண்ணுயிரி அதனைத் தற்காத்துக்கொள்ள தேவையான உடலியல் மாற்றங்களை அடையும். அதாவது வீரியம் மிக்கதாய் மாறும். 

தொடக்கத்தில் உடலில் வலிமை குறைந்த வயதானோரைத் தாக்கிய  இந்நுண்ணுயிரி இன்று  வலிமையானவர்களையும் தாக்குவதை உற்றுநோக்கினால் இது புரியும். கிருமியின் வீரியம் கூடக் கூட  அதற்கேற்ற வீரியமான மருந்துகளையே உட்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் புதுப்புது பூஞ்சை நோய்களும் பரிணாம வளர்ச்சியடைகின்றன. 

ஆரம்ப காலங்களில் கொசுக்களை அழிப்பதாக வந்த கொசுவர்த்திகளும், இன்ன பிற சாதனங்களும் இன்றைக்கு கொசுவை விரட்ட மட்டுமே பயன்படுத்தப்படுவதை அறிந்தால் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் புரிந்துகொள்ள இயலும். மனித இனத்தைப் போல் அல்லாமல், குறைவான ஆயுள் கொண்ட நுண்ணுயிரிகள் பத்து நாட்களுக்குள்ளாகவே பல தலைமுறைகளைக் கண்டுவிடுகின்றன. 

பரிணாம வளர்ச்சியின் தொடக்க காலகட்டங்களில் அதாவது குரங்குகளாய் மனிதர்கள்  வாழ்ந்தபோது,  நான்கு கால்களால்தானே நடந்தனர்? அப்போது இன்றைக்கு கைகளாய் செயல்படுபவை கால்கள் போலவே  செயல்பட்டுக் கொண்டிருந்தன. 

பின்னர் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியில் நாம் நடக்கத் தொடங்கியபோது நமது முன்னங்கால்கள் கைகளாகப் பரிணமித்தன. நமக்கு வசதியான நமது பரிணாம வளர்ச்சி, மற்ற உயிரினங்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதை வசதியாக மறப்பது சரியா?

அனைவரின் இயல்பு வாழ்வையும் கரோனா தீநுண்மி புரட்டிப் போட்டுள்ளது. இதன்  தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரே வழி, அந்நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிப்பதே. வரலாறு நெடுகிலும் பல கொள்ளை நோய்கள் இவ்வாறே ஒழிக்கப்பட்டிருக்கின்றன. 

உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் நமது சமூகத்தை ஆட்டிப்படைத்த பெரியம்மை நோய் இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு அந்த கிருமி ஒரு குப்பியில்  ஒரு சில ஆய்வகங்களில் மட்டுமே பல கட்ட பாதுகாப்பு அடுக்கினுள் ஆராய்ச்சிக்காக  வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.  
அவற்றைவிட குறைவான காலத்திற்குள் மீளும் வாய்ப்பை அறிவியல் நமக்குத் தந்துள்ளதை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும். இதுபோல கரோனா தீநுண்மியும் குப்பிக்குள் சென்று பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். 

அனைவரும் வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா தீநுண்மியின் அடுத்தடுத்த மாற்றுரு உருவாகா வண்ணம் தடுக்க வேண்டும். மத்திய } மாநில அரசுகளும் கூடுதல் வேகத்துடன் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அதுவரை அனைவரும் அறிவியல்பூர்வமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி நம்மால் புதுநோயாளி உருவாகா வண்ணம் செயல்பட வேண்டும். 

நோய்த்தொற்று கண்டறியப்படும் ஒவ்வொரு நாளும் நம் சமூகம் மேலும் பதினான்கு நாட்கள் இயல்பு நிலையை இழக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com