தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல்!

தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல்!

 சனாதன தர்மத்தின் குருமார்கள் தர்மத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு வகித்தார்கள். அவர்களுள் சிலர் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.
 வசிஷ்டரும் ஸ்ரீராமரும்: குருகுலவாசம் முடிந்த பிறகு திடீரென்று ஸ்ரீராமருக்கு உலகின் மீதும், இன்ப - துன்பம், லாப - நஷ்டம் போன்ற விஷயங்களிலும் வைராக்கியம் ஏற்பட்டது. நேற்று இருந்தார் இன்று இல்லை நாளை யார் இருக்கப் போகிறார்? அயோத்தியை ஆள வேண்டிய இளவரசருக்கு இப்படிப்பட்ட வைராக்கியம் இருந்தால் நாட்டை எப்படி ஆள்வார் என்று கவலை கொண்டார் தசரதர்.
 அந்தக் கவலையை அவர் ராஜகுருவான வசிஷ்டரிடம் கூறினார். வசிஷ்டர் தனது சீடனின் வைராக்கியத்தைக் கண்டு பெருமைப்பட்டாலும், அது போன்ற வைராக்கியம் அவசியமற்றது என்பதை ராமருக்குத் தர்க்க ரீதியாகப் புரிய வைத்தார். நாட்டையும் மன்னரையும் காக்கும் பொறுப்பு தன்னிடம் இருப்பதை உணர்ந்த வசிஷ்டர், ராமரிடம் பல கதைகள் கூறினார். துறவிகளின் உயர்ந்த வாழ்க்கை, மாமன்னர்கள் அரசாண்ட விதம் போன்றவற்றையெல்லாம் கதைகளாகக் கூறினார். அந்தக் கதைகளின் தொகுப்பு "யோக வாசிஷ்டம்' எனப்படும். இதன் மூலம், அழியக்கூடிய ஒவ்வொன்றிலும் அழியாமல் இருக்கும் ஆத்ம தத்துவத்தை ராமருக்கு வசிஷ்டர் புரிய வைத்தார்.
 அதனால் ஸ்ரீராமர் நடைமுறை ஞானம் பெற்றார். வனவாசம் சென்றார். திரும்பி வந்து அயோத்தியைச் சிறப்பாக ஆண்டார் என்பதெல்லாம் ராமாயண வரலாறு. இவ்வாறு ஒரு ராஜகுரு சரியான முறையில் மன்னருக்கு அறிவுரை கூறியதால் அந்த நாடு காப்பாற்றப்பட்டது. ராமாயணம் என்ற இதிகாசம் இந்தியாவிற்குக் கிடைத்தது.
 ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும்: பாண்டவர்கள், கெளரவர்களிடம் நாட்டை இழந்த பிறகு, அதனை ஒரு குடும்பச் சண்டையாக அர்ஜுனன் முதலானவர்கள் புரிந்து கொண்டார்கள். "எப்படி என்னுடைய தாத்தாவை நான் எதிர்க்க முடியும்', "எப்படி என் குருவை நான் கொல்ல முடியும்' என்றெல்லாம் முதலில் அர்ஜுனன் கதறினான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், "இது ஒரு குடும்பச் சண்டை மட்டுமல்ல, இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். அந்தப் போரில் அர்ஜுனா, நீ தர்மம் சார்ந்து இருப்பதால்தான் உன்னோடு நான் இருக்கிறேன்' என்பதைத் தெளிவாக்கினார். அதன் பின்னர் அர்ஜுனன் கிருஷ்ணரின் சீடனாகி தருமோபதேசம் பெற்றார். அதனால் தருமத்திற்கு வெற்றி கிடைத்தது. பகவத் கீதை நமக்குக் கிடைத்தது.
 ஸ்ரீவித்யாரண்யரின் விஜயநகரப் பேரரசு: அலாவுதீன் கில்ஜியும், அவனது தளபதி மாலிக் காபூரும், நமது நாட்டைச் சூறையாடினர். நம் நாட்டுச் செல்வங்களை, நமது ஆன்மிகச் செல்வங்களான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகக் கொதித்தெழுந்தார் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் பன்னிரண்டாவது ஜகத்குருவாக விளங்கிய ஸ்ரீவித்யாரண்யர். தவமும் ஞானமும் கொண்ட வித்யாரண்யர் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக, 1336 -ஆம் ஆண்டில், எந்த ஆதரவுமற்ற ஹரிஹரர், புக்கராயர் என்ற இரண்டு யாதவ சிறுவர்களை சிறந்த வீரர்களாக்கினார்.
 அந்நிய கலாசாரத்தையும், அந்நிய அரசையும் அகற்ற வேண்டும் என்று உணர்வில் அவர்களுக்கு வலிமை ஊட்டினார். அந்த இருவரால் உண்டானதுதான் விஜயநகர சாம்ராஜ்யம். இஸ்லாமியர்களின் பெரும் படையை எதிர்த்து வஜ்ரமாக நின்று விஜயநகர சாம்ராஜ்யம் தென்னிந்தியாவைக் காப்பாற்றியது. இதற்கு உதவியவர், வித்யாரண்யர் என்ற ராஜகுரு.
 சமர்த்த ராமதாசரும் சத்ரபதி சிவாஜியும்: சத்ரபதி சிவாஜி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், ஹிந்து பூமி என்பது இல்லாமலேயே போயிருக்கும். சிவாஜி ஒரு முறை வேட்டையாடச் சென்றார். காட்டில் ஓர் இடத்தில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தார். அங்கு விலங்குகள் ஒன்றோடொன்று அன்போடு பழகின. சிறந்த ராம பக்தரான சமர்த்த ராமதாசர் அங்கு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். குரு கண் திறப்பார் என்று சிவாஜி காத்திருந்தார். ஒரு நாள் இரு நாளல்ல, ஒன்பது நாட்கள் சிவாஜி அங்கேயே காத்திருந்தார்.
 சிவாஜி மகாராஜாவைத் தேடி மந்திரிகளும் தளபதிகளும் காட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு ராமதாசர் முன்பு சிவாஜி தியானத்தில் இருந்தார். மந்திரிகள் எவ்வளவோ கூறியும் சிவாஜி நாடு திரும்ப மறுத்தார். சிவாஜியின் தகுதியையும் பண்பையும் வீரத்தையும் ராமதாசர் கவனித்தார். சிவாஜி ஹிந்து தர்மத்திற்காகவும் நாட்டிற்காகவும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை யோசித்தார். குரு பணித்ததால் அவரிடம் ஆசி பெற்ற பிறகு சிவாஜி நாடு திரும்பினார்.
 சில தினங்களுக்குப் பிறகு குருவிடமிருந்து நான்கு பொருட்கள் சிவாஜிக்கு வந்தன. அவற்றைத் தனது அன்னையான ஜீஜாபாயிடம் காண்பித்தார். அந்தப் பொருள்கள்: தேங்காய், ஒரு கைப்பிடி மண், இரண்டு கைப்பிடி குதிரை சாணம், சில கற்கள். இவற்றின் மூலம் குரு எதைச் சொல்ல விரும்புகிறார் என்பதை ஜீஜாபாய் புரிந்து கொண்டார்.
 சிவாஜி, நம் நாடு வளமையாக இருக்க வேண்டும் என்பதைத் தேங்காய் குறிக்கிறது. நமது மண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டால்தான் நாடு செழிக்கும் என்பதைக் கைப்பிடி மண் கூறுகிறது. அந்நியர்களிடம் அடிமைப்பட்டுள்ள நாடு, நம் வசமாக வேண்டும் என்றால் நாம் குதிரைப்படையைத் திரட்ட வேண்டும் என்பதைக் குதிரை சாணம் காட்டுகிறது. நான்காவதாக இருப்பவை கற்கள். கற்களைக் கொண்டு நீ வளமான கோட்டைகளைக் கட்ட வேண்டும். அந்நியர்களிடம் பிடிபட்டுள்ள நம் நாடு நம் வசப்பட வேண்டும். அதற்குப் பெரும் படை திரட்டி வலுவான கோட்டைகளைக் கட்ட வேண்டும் என்று குரு கூறியிருப்பதாக ஜீஜாபாய் கூறினார்.
 குருவின் உபதேசங்களை ஏற்ற சிவாஜி வீறுகொண்டு எழுந்து, ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைத்தார். கிராமத்து சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களை போர் வீரர்களாக மாற்றினார். ஹிந்து ராஜ்யம் ஒன்றை உருவாக்கி ஒரு பெரும் பாரம்பரியத்தை உருவாக்கியதில் மிக முக்கியமாக இருந்தது படைவீரர்களா? தளபதிகளா? இரண்டும் இல்லை, சமர்த்த ராமதாசர் என்ற ராஜகுருதான் காரணம்.
 ஸ்ரீராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வழிகாட்டுதலால், தியானத்தில் ஆழ்ந்து சென்று நிர்விகல்ப சமாதி நிலையைச் சொற்ப காலத்திலேயே அடைந்தார். அதன் பின் விவேகானந்தர், "குருவே, நான் எப்போதும் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருக்க ஆசீர்வதியுங்கள்' என்று வேண்டினார். சுவாமி விவேகானந்தர் ஹிந்து சமயத்திற்கும், உலக ஆன்மிகத்திற்கும், இந்திய நாட்டைத் தட்டி எழுப்புவதற்கும் செய்ய வேண்டிய மகத்தான காரியங்கள் யாவும் ஸ்ரீராமகிருஷ்ணரின் மனதில் தோன்றின.
 உடனே ஸ்ரீராமகிருஷ்ணர், "நரேன், நீ பெரிய ஆலமரமாக இருப்பாய். அதனடியில் ஏராளமான சிற்றுயிர்களும் மக்களும் இளைப்பாறுவார்கள் என்று நினைத்தேன். நீயோ நிர்விகல்ப சமாதியிலேயே தோய்ந்திருக்க விரும்புகிறாயே, என்ன சாதாரண மனநிலை இது? ஜீவர்களை சிவனாக கருதி சேவை செய்வது இதைவிடப் பெரிய நிலை' என்று விளக்கினார்.
 இதன் பிறகு சுவாமி விவேகானந்தர் மனித சேவையில் ஆழ்ந்து ஈடுபட்டார். அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால் விவேகானந்தர் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்து உலகிற்குத் தெரியாமலே மறைந்திருப்பார். ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற உன்னத குரு தமது சீடரை இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் உலகத்தின் நன்மைக்காகவும் தடுத்தாட்கொண்டார்.
 விவேகானந்தரும் ஜம்ஷெட்ஜி டாடாவும்: தர்மத்தையும், நாட்டையும், ஆன்மிகத்தையும் காப்பதில் மட்டுமல்ல, அறிவியல் வளர்ச்சியிலும் சிறந்த குருமார்களின் பங்கு உள்ளது. இன்று நமது மத்திய அரசாங்கம் ஆத்ம நிர்பர் அதாவது சுய சார்புடன் இருப்பது, சுயசார்பு பொருளாதாரம் பற்றிச் சொல்கிறது. ஆத்ம நிர்பர் என்ற செயல்திட்டத்திற்கு வித்திட்டவரே சுவாமி விவேகானந்தர்தான்.
 பொதுவாக, குருமார்கள் ஆன்மிக உபதேசத்தை மட்டுமே வழங்குவார்கள். சுவாமி விவேகானந்தர் இதிலிருந்து மாறுபட்டவர். "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' இன்று சிறந்த ஆராய்ச்சி மையமாக விளங்கி வருகிறது. இந்த அமைப்பு உருவாவதற்குப் பின்னணியாக இருந்தது சுவாமிஜியின் அறிவுரைதான். ஜம்ஷெட்ஜி டாடா ஜப்பானுக்குச் சென்று கொண்டிருந்தார். அதே கப்பலில் சுவாமி விவேகானந்தரும் சென்றார். சுவாமிஜி டாடாவிடம், "உங்கள் தொழிற்சாலைக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வேறு நாட்டிலிருந்து பெறாமல் நம் நாட்டிலேயே பெற்றால், அதற்கான பணம் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருக்குமில்லையா' என்று கேட்டார். அதோடு அறிவியல் வளர்ச்சியிலும் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றும் சுவாமிஜி அறிவுறுத்தினார்.
 அதுவரை டாடா அந்தக் கோணத்தில் யோசித்ததில்லை. விவேகானந்தரின் அறிவுரையை டாடா ஆழ்ந்து யோசித்ததன் அடிப்படையில் உருவானதுதான் "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்'.
 சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் வ. உ.சி.யும் உலகிலேயே ஆங்கில அரசுக்கு எதிராக கப்பலோட்டியே அந்த அரசை அதிரச் செய்தவர் வ. உ. சி. அதற்குக் காரணமாக இருந்தவர், சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற ஒரு குரு. ஆரம்ப காலத்தில் வ.உ.சி, "கைவல்ய நவநீதம்' போன்ற வேதாந்த கிரந்தங்களை ஆழமாகப் படித்தார். அதனால் ராமருக்கு வைராக்கியம் வந்தது போல, வ. உ. சி. க்கும் வாழ்க்கையில் வைராக்கியம் மேலிட்டது. எல்லாமே அநித்தியமாகத் தெரிந்தது. நம் நாட்டை யார் ஆண்டால் என்ன என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.
 அதே வைராக்கிய மனநிலையோடு ஒரு முறை அவர் சென்னையிலுள்ள விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்கிற சுவாமி விவேகானந்தருடைய சகோதர சீடரைத் தரிசித்தார். வேதாந்தத்தைப் பற்றி இருவரும் உரையாடினார்கள். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் நடைமுறை வேதாந்தத்தைக் கூறி வ. உ. சி.க்கு வேதாந்த சாரத்தை உணர்த்தினார். "தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக என்ன செய்கிறாய்' என்று கேள்வி கேட்டு வ.உ.சி.யை சிந்திக்க வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் வ. உ. சி. ஆங்கிலேய ஆட்சியை அகற்ற கப்பல் ஓட்டும் எண்ணம் கொண்டார்.
 இவ்வாறு நம் குருமார்கள் பலரும் நாட்டையும் தர்மத்தையும் மன்னர்களையும் மக்களையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றினார்கள். அப்படிப்பட்ட குருமார்களை குருபூர்ணிமா தினத்தில் தொழுது நலமும் வளமும் பெறுவோம்.
 இன்று குருபூர்ணிமா தினம்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com