

மனிதர்களிடையேதான் எத்தனை எத்தனை மாறுபட்ட குணாதிசயங்கள்! சிங்கம் இப்படித்தான் இருக்கும், புலியின் குணம் இதுதான், யானை இப்படித்தான் பழகும் என்று மிருகங்களின் குணம் பற்றி கூறிவிடலாம். ஆனால் மனிதனுக்கு மனிதன் குணத்திலும், செயல்களிலும், எண்ணத்திலும் மாறுபடுகிறான்.
சிலர் தன்னிடம் யாராவது வந்து ஏதாவது உதவி கேட்டால் அவர்கள் கேட்டதை அரும்பாடுபட்டு செய்து கொடுப்பார்கள். வாக்கு கொடுத்து விட்டால் அதைச் செய்தே தீர வேண்டும் என எண்ணுபவர்கள் அவர்கள்; செய்யாமல் விட்டு விட மனம் ஒப்புவது இல்லை. அந்த நபரை எங்காவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு மிகுந்த தர்மசங்கடம் உண்டாகும்.
சிலர் யாராவது உதவி கேட்டால், "கண்டிப்பாக செய்கிறேன், இந்த வேலையை முடித்துத் தருகிறேன்' என்று முகம் மலரக் கூறி வந்தவரின் அகம் குளிர அனுப்பி வைப்பார்கள். ஆனால் அடுத்த விநாடியே அவர் கோரிக்கையையும் மனதில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். அவர்கள் கேட்கும் போதெல்லாம் எதையெதையோ சொல்லி சமாளித்து விடுவார்கள்.
இப்போது பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கான நேரம். பொறியியல் படிப்பைத் தெரிவு செய்பவர்கள், எந்தக் கல்லூரி சிறந்தது, எந்தப் பிரிவு சிறந்தது என்பது தெரியாமல் பலரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே பல பொறியியல் கல்லூரிகளில் பணம் கட்டி இடத்தைப் பதிவு செய்து வைக்கிறார்கள். அதற்கும் கூட அது பற்றித் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.
என்னிடமும் சிலர் கேட்பார்கள். பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட பிரிவுதான் வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். பெற்றோர்கள், பிள்ளைகள் இரு பிரிவினவரிடமும் பேசி புரிய வைக்க வேண்டியுள்ளது. கலந்தாய்வு நாளுக்கு முதல் நாள் வரை பெற்றோர்கள் நேரிலும், தொலைபேசியிலும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், அவர்கள் பிள்ளை கல்லூரியில் சேர்ந்தவுடன் நம்மைத் தொடர்பு கொண்டு எந்த கல்லூரியில் சேர்ந்தான் என்பதைக் கூற மாட்டார்கள். காரணம், நாம் கூறிய கல்லூரியில் சேர்ந்திருக்க மாட்டார்கள். இறுதி முடிவு அந்த மாணவனுடையதாகவே இருக்கும்.
இப்போது, கல்லூரியைவிட, மழலையர் பள்ளியில் சேர்க்கை கிடைப்பது கடினம். பெரிய அளவில் பரிந்துரை வேண்டும். யாரைப் பிடிப்பது என்று பெற்றோர் யோசிக்கிறார்கள். நமக்கு அந்தப் பள்ளியுடன் தொடர்பு இருப்பதை அறிந்து வந்து கேட்கும் போது மறுக்க முடிவதில்லை. நாம் மிகுந்த தயக்கத்துடன் பள்ளி நிர்வாகத்திடம் கேட்க வேண்டும்.
எப்படியோ ஒப்புதல் வாங்கி விட்டு அவர்களுக்குத் தொலைபேசி மூலம் "நான் பேசிவிட்டேன். போய் குழந்தையை சேர்த்து விடுங்கள்' என்று சொல்வோம். குழந்தையை சேர்த்த பின் ஒரு நன்றி கூடச் சொல்ல மறந்து விடுவார்கள். அத்தோடு முடிந்தது அவர்களுடான நம் தொடர்பு.
தற்போது தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்ய முடிவெடுப்பவர்கள், திருமண சேவை மையங்களில் பதிவு செய்கிறார்கள். அவர்கள் அனுப்பும் விவரங்களைப் பார்த்து பொருத்தமானவரைத் தேர்வு செய்கிறார்கள். சில சமயம் தெரியாத இடத்தில் பெண் எடுத்தாலோ, கொடுத்தாலோ சிக்கலாகி விடுகிறது. பலரும் ஏமாந்து போய் விடுகிறார்கள்.
"ஒரு கல்யாணம் நடக்க வேண்டுமென்றால் பத்து செருப்பு தேய வேண்டும்' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். பையன் எப்படி, அல்லது பெண் எப்படி, குடும்பம் எப்படி என்று துருவித் துருவி விசாரிப்பார்கள். இப்போதோ அக்கம்பக்கத்தினர் கூட உண்மை பேசுவதில்லை. கல்யாண விஷயத்தில் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். எனவே பலரும் தெரிந்தவர் மூலம் பார்ப்பது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்.
நம்மிடம் யாராவது ஜாதகத்தைத் தந்து விட்டு வரன் தேடித் தரச் சொன்னால் நாம் கர்ம சிரத்தையுடன் அதில் இறங்கி விடுகிறோம். அவர்கள் சொன்ன தகுதி, படிப்பு, குடும்பம் எல்லாம் பார்த்து, நன்கு விசாரித்து நமக்குப் பொருத்தம் என்று தோன்றினால் அவர்களுக்கு தொலைபேசியில் தெரிவிப்போம்.
நாம் மகிழ்ச்சியாக சொல்ல மறுமுனையில் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகச் சொல்லுவார்கள். நமக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்காக நாம் வலைவீசி வரன் தேடியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அப்போது தோன்றும். உறுதி செய்யப் போகிறோம் என்பதை நம்மிடம் சொல்லி இருக்கலாமல்லவா? இது போன்ற அலட்சியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
"எங்கள் பிள்ளைக்கு வேலை கிட்டவில்லை. எங்காவது வேலை வாங்கித் தாருங்கள்' என்று கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். வீட்டிற்கு நடையாக நடப்பார்கள்; போனில் கேட்பார்கள். நாம் வேலை வேட்டையைத் தொடங்குவோம். நம் சுயகெளரவத்தை இழந்து சிலரிடம் வேண்டி விண்ணப்பம் செய்வோம். நம்முடைய தொடர் முயற்சியால் அவர்கள் பிள்ளைக்கு வேலை கிடைக்கும். ஆனால், அதன்பின் அவர்கள் நம்முடனான தொடர்பைத் துண்டித்து விடுவார்கள்.
சிலர், நம்மை தொலைபேசியில் அழைத்து தனக்குப் பையன் பிறந்திருக்கிறான் என்றும், அவனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயராக யோசித்துத் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். நாமும் நல்ல தமிழ்ப் பெயர் கேட்கிறார்களே என மகிழ்ந்து யோசிப்போம்.
ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதும் நம் மனம் பெயரையே யோசித்துக் கொண்டிருக்கும். மறுநாள் சில பெயர்களை அவர்களுக்கு அனுப்பி வைப்போம். ஆனால், அவர்கள் ஏற்கெனவே பெயர் வைத்துவிட்டதாகக் கூறுவார்கள். இவர்கள் எல்லாம் நம்மிடம் "சும்மா' கேட்டு வைக்கிறார்களோ என்று தோன்றும்.
அண்மையில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம். என் தூரத்து உறவினர் ஒருவரின் மகன் ஒரு விபத்தில் இறந்து விட அவருக்கு இழப்பீட்டுத் தொகையாக சில லட்ச ரூபாய் தரவேண்டுமென்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருந்தது. பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. தாங்கள் வயதான காலத்தில் மிகவும் சிரமப்படுவதாகக் கூறி அந்தப் பணம் உடனே கிடைக்க உதவும்படி வேண்டினார் என் உறவினர்.
நான் என் தோழி மூலம் மிகவும் சிரமப்பட்டு அந்த தொகை கிடைக்க முயன்றேன். நிறைய சிரமம் இருந்தது. சில மாதங்களும் ஓடி விட்டன. பணம் கிடைக்கவில்லை. குற்ற உணர்ச்சி மேலிட மீண்டும் முயன்ற போது பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். அதிர்ந்து போய் என் உறவினரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது 'ஆமாம் பணம் கொடுத்து விட்டார்கள்' என்றார். "என்னிடம் ஏன் சொல்லவில்லை' என்று கேட்டேன். பதில் இல்லை. என் மனம் மிகவும் வேதனைப்பட்டது.
இத்தகைய நபர்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம், நாம் அடுத்தவர் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது என்பது. நம் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு முக்கியம். நமக்கே பல வேலைகள் உள்ளன. நமக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படி இருக்க ஒரு கல்லூரியைத் தேர்வு செய்ய, வரன் பார்க்க, பரிந்துரைக்கு ஓட நாம் மெனக்கெடுகிறாம். பலமுறை அனுபவப்பட்ட பின் யாருக்கும் எந்த உதவியும் செய்யக் கூடாது என்று தோன்றுகிறது.
எல்லாரும் அப்படித்தான் என்று கூற முடியாது. நேற்று என் உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து தன் வீட்டுக் குழந்தைக்கு என் பரிந்துரையின் பேரில் பள்ளியில் இடம் கிடைத்து விட்டது என்று வாய் கொள்ளா மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். கேட்டதும் ஆனந்தம் பொங்கியது. நன்றி சொல்லாதவர்களை விட்டுத் தள்ளுவோம். நல்லவர்களுக்காக முடிந்ததைச் செய்வோம் என்று மனம் தெளிந்தேன்.
உண்மையில் ஒருவருக்கு ஏதாவது உதவி செய்யும் போது மனதுக்கு அச்செயல் ஒரு நிறைவைத் தருகிறது. அது தரும் சுகம் அலாதியானது. நமக்கு நன்றி சொல்லவில்லையே என்று வருத்தப்படுவதற்கு பதில் அவர்கள் நிலையில் இருந்து பார்க்கத் தோன்றியது. நாம் ஆலோசனை கூறிய கல்லூரியைத் தவிர்த்து அவர்கள் வேறு கல்லூரியைத் தேர்வு செய்ததால் அதை நம்மிடம் கூறத்தயங்கி சொல்லாமல் விட்டிருக்கலாம். இது மற்ற எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.
நாம் அவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்று தோன்றுகிறது. சொல்ல மறந்து போயிருக்கலாம். அவர்கள் ஆலோசனை கேட்ட பலரில் நாமும் ஒருவராக இருக்கலாம். நமது அனுபவம் நமக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் பயன்பட்டால் அது மேன்மையானது. நமது திறமையை, ஆற்றலை, சக்தியை பலரது மகிழ்ச்சிக்காகவும், மனநிறைவிற்காகவும் செலவிடுவோம்.
எங்கோ படித்தது. ஒரு புலி வேடனைத் துரத்திக் கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அங்கே மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் "இந்த வேடன் மிருக குலத்துக்கே பகைவன். அவனைக் கீழே தள்ளி விடு' என்று கூறியது. அதற்கு கரடி சொல்லியது "இருக்கலாம். ஆனால் இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவரை நான் கைவிட மாட்டேன்' என்று கூறியது. சொல்லி விட்டு கரடி உறங்கி விட்டது.
சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் "எனக்குப் பசியாக இருக்கிறது. அக்கரடியைத் தள்ளி விடு' என்று சொன்னது. வேடன் கரடியைத் தள்ளி விட்டான். அப்போது புலி கரடியிடம் சொன்னது "இந்த மனிதன் நன்றி கெட்டவன்; உன்னையே தள்ளி விட்டு விட்டான். நீ இப்போது அவனைப் புரிந்துகொண்டாயா? மேலே போய் அவனைக் கீழே தள்ளி விடு' என்றது.
இப்போது கரடி "எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்திலிருந்து வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கை விட மாட்டேன். இன்னமும் அவன் சரண் புகுந்தவனே; அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும்' என்று சொன்னது.
இக்கதை சொல்லும் நீதி மகத்தானது. துன்பம் இழைத்தவர்களுக்கு பதிலுக்கு துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. எந்த சூழ்நிலையிலும், எதற்காகவும் யார் எப்படி நடந்தாலும் நாம் நம் குணத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது. அனைவரையும் அவரவர் குறை, நிறைகளோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதை விட வேண்டும்.
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரைப் பற்றி தீர்மானிக்க நாம் யார்? நம் கண்ணோட்டம் தவறாக இருக்கலாம். மனக்கணக்கு தவறாகலாம்; ஆனால், மனிதர்களைப் பற்றிய நம் கணக்கு தவறாகிவிடக் கூடாது.
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.