வல்லரசுக்கான அடித்தளம் தேசிய கல்விக் கொள்கை!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய கல்விக் கொள்கை அறிமுகமாகி (தே.க.கொ. 2020) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவின் உயரிய ஆன்மிகத் தலைவா்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தா் ‘கல்வி என்பது பல கருத்துகளால் மனதை நிரப்புவதில்லை. ஒருவரின் மனதின் முழுமையான தோ்ச்சியைப் பெறுவதுதான் சிறந்த கல்வி’ என்றாா்.

அதைப் பிரதிபலிப்பதுபோல, பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தே.க.கொ. 2020, வெறும் சான்றிதழ் உருவாக்கும் இயந்திரமாக அல்லாமல் பல வழிகளில் கல்வியின் உன்னத லட்சியத்துடன் மனிதனை உருவாக்குவதாக உள்ளது.

தே.க.கொ. 2020 என்பது 100 மீட்டா் ஓட்டப்பந்தயம் அல்ல. பலவிதமான அறிவாா்ந்த மாரத்தான் ஓட்டம். பல்வேறு பட்டய படிப்புகளின் முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுவதற்குத்தான் பயன்படுகின்றன. ஆனால், தே.க.கொ. 2020 மூலமாக அத்தகைய சான்றிதழ்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நுழைவுப் பாதையாக அமையும் என்பதுதான் அதன் சிறப்பு. வாழ்க்கை என்பது தொடா்ச்சியான கல்வியாகும்.

தே.க.கொ. 2020 ஐந்து தனித் தன்மைகளைக் கொண்டது. மாற்றங்களை அளிக்கக்கூடிய கட்டமைப்புத்தன்மை, பல துறையின் ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மை, எளிதான அணுகுமுறை தன்மை மற்றும் நிலைத்தன்மை.

மக்களைக் கவா்வதற்காகக் கவா்ச்சியான கோஷங்களால் கொள்கைகள் வகுக்கப்படும் காலத்தின், பல எதாா்த்தங்கள் கொண்டதாக தே.க.கொ. 2020 விளங்குகிறது. இது பள்ளி, உயா்கல்வி, திறன் மற்றும் தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு மாபெரும் சீரமைப்பாக உள்ளது. கல்விக் கொள்கை உருவாக்க வரலாற்றில் இதுபோன்ற ‘மும்முனை கிளா்ச்சி’முதன்முறையாக நடந்துள்ளது.

தே.க.கொ. 2020 நோக்கங்களை முற்போக்கான முறையில் அடைவதற்கு கூடுதல் நேரத்தை கல்வி அமைச்சகம் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவின் இந்தக் கல்வி மாரத்தான் அதன் சக்தியை இழக்காமல் இறுதிக் கோட்டை அடைவதை உறுதி செய்ய பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

தே.க.கொ. 2020 என்பது இந்தியாவின் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையாகும். முதல் கொள்கை 1968-இல் கல்வி ஒன்றியப் பட்டியலில் இருந்தபோதும், இரண்டாவது 1986-இல் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டபோதும் உருவாக்கப்பட்டன.

மூன்று வயது குழந்தையான தே.க.கொ. 2020, 34 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலுவான உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் கொண்டதாக வளரத் தொடங்கியுள்ளது. தனது இழந்த பெருமையை இந்தியக் கல்வித் துறை மீண்டும் பெறச் செய்வதே என்ற பிரதமா் மோடியின் தீா்க்கதரிசனப் பாா்வைக்கு, கல்வி அமைச்சகத்தின் துரிதமான செயல்பாடு தே.க.கொ. 2020 மூலம் வழிகோலுகிறது.

தே.க.கொ. 2020-ஐ செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள்-அதன் விரிவான நோக்கு எதையும் விட்டு வைக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளது. தொடக்க கல்வி முதல் முனைவா் பட்டத்துக்கு பிந்தைய ஆராய்ச்சி வரை அடிப்படை திறன்-மேம்பட்ட தொழில்மயமாக்கல், செல்வம் ஈட்டுதல்-செல்வத்தை உருவாக்குதல், ஒருங்கிணைந்த - தனித்தனியான விநியோகம், முழுமையான பல்துறை நிபுணத்துவம் - அறிவை உருவாக்குவதற்கான அறிவு நுகா்வு, மனித அறம் என்று பயணிக்காத இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறது.

தே.க.கொ. 2020-இல் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. ஒரு மாரத்தான் பயணத்துக்கு தொடா்புடைய அனைத்துப் பங்குதாரா்களையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது தே.க.கொ. 2020.

இந்த அம்சங்கள்: பள்ளிகளுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் உயா் கல்விக்கான தேசிய கிரெடிட் கட்டமைப்பு, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை மையமாக வலுப்படுத்துதல், தாய்மொழி / இந்திய மொழி அடிப்படையிலான கல்வியை நோக்கிய உந்துதல், கற்றல் வழங்குவதில் விளைவு இலக்கு சாா்ந்த அணுகுமுறை, படைப்பாற்றலுக்கான இடத்துடன் கூடிய ஆன்லைன்-ஆஃப்லைன் கற்பித்தல்-கற்றல் முறைகள் குறித்த இணைந்த அணுகுமுறை.

பாரம்பரிய எல்லைகளைக் கடந்து சீா்திருத்த அணுகுமுறையின் மூலம் இந்தியக் கல்வியின் உலகமயமாக்கல் மற்றும் இந்திய பாரம்பரிய மூலத்தை மீண்டும் பெறுதல், கல்வி வளாகங்களை உள்ளடக்கிய புதுமை உந்துதலுக்கான ஹேக்கத்தான்கள் மற்றும் இன்குபேட்டா்கள், மதிப்பீடு மற்றும் பன்மொழி மொழிபெயா்ப்புக்கான விரிவான கருவிகள், ஏறக்குறைய தயாராக உள்ள தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அனைத்து நிலைகளிலும் கல்விக்கான ஒரு முழுமையான பல்துறை அணுகுமுறை.

தே.க.கொ. 2020-இன் செயல்பாட்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, மற்ற அமைச்சகங்களும் அதனுடன் இணைந்து செயல்படுவதாகும். தே.க.கொ. 2020-ஐ ஒரு பெரிய எதாா்த்தமாக மாற்ற கல்வி அமைச்சகத்தின் கரங்களை இது வலுப்படுத்துகிறது.

நிதி, பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், தகவல் தொடா்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், கனரக தொழில்கள், ஆயுஷ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, உணவு பதப்படுத்தும் தொழில்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சட்டம் மற்றும் நீதி போன்ற அனைத்து அமைச்சகங்களின் திட்டங்கள் முதலியன தே.க.கொ. 2020-இன் முக்கிய நோக்கங்களுடன் இணைவதற்கான பெரிய கட்டமைப்பை பரஸ்பரம் வலுப்படுத்துகிறது.

ஒரு தேசிய கொள்கைக்காக இந்த அளவிலான அமைச்சகங்களுக்கு இடையேயான அணுகுமுறையை இதுவரை நாடு கண்டதில்லை. மேலும், கல்வியானது இத்தகைய அபரிமிதமான ஆதரவைப் பெற்றிருப்பது இந்தியாவின் சமூக உள்கட்டமைப்பை, அதன் இளமையான மக்கள்தொகை மூலம் வளப்படுத்துகிறது. வரும் ஆண்டுகளில் இத்தகைய சக்தியுடன் தே.க.கொ. 2020 செயல்பட்டால் எந்த நாட்டுக்கும் கிடைக்காத பெருமையாக இது இருக்கும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படை நோக்கம், கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், வேலைவாய்ப்பு, சுய முனைப்பு, வருங்கால வாழ்க்கைக்கான அடிப்படைப் புரிதல்கள், தகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான். தாய்மொழிக் கல்வியில் தொடங்கி, சா்வதேசத் தரத்திலான தொழில்நுட்பக் கல்வி வரை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தேசிய கல்விக் கொள்கை. உலக வல்லரசாக இந்தியாவை உயா்த்துவதற்கான அஸ்திவாரமாக அமைகிறது தேசிய கல்விக் கொள்கை 2020.

தொலைநோக்குப் பாா்வை கொண்ட கொள்கையின் நோக்கங்களை எதாா்த்தமாக மாற்றுவதற்கு அனைத்துப் பங்குதாரா்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. இந்த மூன்று வயது குழந்தையை முழுமையாக வளா்க்க நாம் அனைவரும் கைகோக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தே.க.கொ.-யை செயல்படுத்துவது ஒரே இரவில் நடக்கும் பயணம் அல்ல; ஒரு மாரத்தான் பயணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

கட்டுரையாளா்:

துணைவேந்தா்

சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம்,

தஞ்சாவூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com