தமிழ்நெறி சிவாகம வழிபாடு - ஒரு விளக்கம்!

போற்றி ஓம் நமச்சிவாய. "நற்றவம் வேள்வி மல்க' என்பது நமது ஆன்றோர் வாக்கு.
தமிழ்நெறி சிவாகம வழிபாடு - ஒரு விளக்கம்!


போற்றி ஓம் நமச்சிவாய. "நற்றவம் வேள்வி மல்க' என்பது நமது ஆன்றோர் வாக்கு. வாழ்வியல் நிகழ்வுகளாகிய திருமணம், புதுமனைப் புகுவிழா, அகவை விழாக்கள் ஆகியனவும் அருளியல் நிகழ்வுகளாகிய திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்கள், ஆண்டுப் பெருவிழாக்களாகிய உற்சவங்கள், வழிபாடுகள் ஆகியனவும் நடைபெறுவதற்கு வேள்வி முதன்மை ஆகின்றது. அதனடிப்படையில் வேள்விகளைச் செய்து இந்நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். வேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று வைதீக வேள்வி, மற்றொன்று ஆகம வேள்வி. 

வைதீக வேள்வி என்பது வேத மந்திரங்களைக் கொண்டு நடத்தப்படுவது. அக்கினியை எழுந்தருளச்செய்து, அதன் மூலமாக இந்திரன், வருணன், சண்டி முதலான தெய்வங்களுக்கு ஆகுதி அளித்து அவர்களின் அருளைப் பெறுவது என்பதாகும். இத்தகைய வைதீக வேள்விகள் இந்தியா முழுக்கச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் நடைபெறுகின்றன. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாத ஆண், பெண் ஆகிய அனைத்து வகையினரும் இவ்வேள்வியைச் செய்து வருகிறார்கள். 

அதுபோல தமிழர்களின் வழிபாடாக, தமிழகத்திற்கு உண்டான வழிபாடாகத் திகழ்வது ஆகம  வழிபாடு. வைதீக வேள்வி என்பது வேதத்தை முதன்மைப்படுத்திச் செய்யப்படுவது. ஆகம வழிபாடு என்பது வேதத்தைப் பொதுவாகவும் ஆகமங்களைச் சிறப்பாகவும் கொண்டு நடத்தப்படுவது. வைதீக வேள்வியில் மந்திரங்களுக்கு முதன்மை அளிக்கப்படும். ஆகம வேள்வியில் சடங்குகளுக்கு முதன்மை அளிக்கப்படும்.  இத்தகைய ஆகம வேள்விகள் வாழ்வியல், அருளியல் நிகழ்வுகளுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. 

இத்தகைய வேள்வி முறைகளை ஆகமங்கள் மட்டுமல்லாமல் ஆகமங்களின் அடிப்படையில் நிறைமொழி மாந்தர்களாகத் திகழ்ந்த சான்றோர்கள் பத்ததிகளாக, நெறிமுறைகளாக வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்நெறிமுறைகளின் அடிப்படையில் ஆங்காங்கே உள்ள வேத சிவாகம பாடசாலையில் பயின்றவர்கள் அந்தந்தத் திருக்கோயில்களுக்கு உண்டான பத்ததிகளைக் கடைப்பிடித்து வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர். 

இத்தகைய வேள்வியில் இறைவனை அக்கினியில் எழுந்தருளச் செய்து வழிபாடுகள் செய்வார்கள். அக்கினியை சிவாக்கினி என்ற வகையில் சிவமாகப் பாவித்து சிவபெருமானே நெருப்பு வடிவமாக இருந்து வேள்வியை ஏற்றுக்கொள்கிறார் என்று சொல்லி நடத்துவார்கள். 

இவ்வேள்வியில், சிவபெருமானின் திருவைந்தெழுத்தாகிய மூல மந்திரத்தை பல ஆகுதிகள் செய்வார்கள். ஒவ்வொரு கால வேள்விக்கும் பதினாயிரம், நூறாயிரம் என மூல மந்திரத்தைச் சொல்லி வேள்வியைச் செய்வார்கள். வைதீக வேள்வியிலும் அந்தந்த தெய்வத்திற்கு உண்டான மூல மந்திரத்தைச் சொல்வார்கள். ஆகம வேள்வியில் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை மட்டுமே சொல்வார்கள். 

அக்காலத்தில் சூழ்ந்திருக்கும் மக்கள் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதற்காக கிரந்தத்தில் உள்ள சாத்திர நூல்களில் உள்ள முக்கியமான பகுதிகளைப் பாராயணம் செய்வார்கள். குறிப்பிட்ட ஆகுதிகள் நிறைவுறும் வரை பல பாடல்களைப் பாராயணம் செய்வார்கள். மற்றபடி வேள்வியில் திருவைந்தெழுத்தை மட்டுமே சொல்வார்கள். 

ஆகம வேள்வி செய்கின்ற போது ஒரு குண்டம், ஐந்து குண்டம், ஒன்பது குண்டம், உத்தம குண்டம் என்ற அடிப்படையில் 33 குண்டங்கள் வரை அமைத்து அக்குண்டங்கள் எந்தெந்த வடிவத்தில் இருக்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களோடு தொடர்புடையன என்பவற்றைப் பற்றி ஆகமத்தில் வகுத்துத் தருவார்கள். அதுவும் பத்ததிக்கு பத்ததி மாற்றம் உடையதாக இருக்கும். 

அந்த ஆகுதியைத் தொடர்ந்து, சிவபெருமானுக்குத் திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, நிறையாகுதி எனப்படும் பூரணாகுதி ஆகியவற்றை அளித்து அந்தச் சக்திகளை எல்லாம் திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்வார்கள். திருக்குடத்தையும் சிவமாகப் பாவித்து சிவவடிவமாக அதை எண்ணிச் செய்வார்கள். இரண்டு காலம், நான்கு காலம் என்ற கால வேள்விகள் நிறைவுற்றவுடன் திருக்குடத்தைச் சிவமாகப் பாவித்துக் கோயிலின் மேலே உள்ள விமானங்களுக்கும் உள்ளே இருக்கும் திருமேனிகளுக்கும் நன்னீராட்டு செய்வார்கள். இதுதான் ஆகம முறை வழிபாடாக நடத்தப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் சிறந்த முறையில் இத்தகைய ஆகம வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இது விரிந்து பரந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவாகம அடிப்படையில் வேள்விகளைச் செய்கின்றபோது எப்படி மூல மந்திரத்தை வேள்வியில் ஓதிக் கொண்டு கிரந்த மந்திரத்தைப் பாராயணம் செய்கிறார்களோ அதுபோலப் பாராயணம் செய்வதற்குத் திருமுறைகளைக் கொண்டு இதுபோன்ற அருளியல் நிகழ்வுகளை நடத்தவேண்டும் என்று தெய்வத்திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் விரும்பி தமிழகமெங்கும் இச்செய்தியைக் கொண்டு சேர்த்தார்கள்.

அச்சூழலில் பேரூராதீன இருபத்துநான்காம் குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி தமிழ்நெறி வழிபாட்டுத் தந்தை தெய்வத் திருப்பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரும், சிரவையாதீனம் மூன்றாம் குருமகாசந்நிதானம் தெய்வத் திருப்பெருந்திரு சுந்தரம் அடிகளாரும் இணைந்து அப்பொழுது துணைநின்ற ஓதுவாமூர்த்திகளையும் சிவாச்சாரியார்களையும் துணையாகக் கொண்டு 1954-இல் சிவாகம அடிப்படையில் திருமுறை மந்திரங்களைப் பாராயணம் செய்து தமிழ்நெறி வழிபாட்டைத் தொடங்கினார்கள். 

தமிழ்நெறி வழிபாடு பல்வேறு அமைப்புகளின் மூலமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்களைக் கண்டிருக்கிறது. அதில் 3,000 சிவபெருமான் திருக்கோயில்களும் அடக்கம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 

இத்தனைக் கோயில்களிலும் நடைபெறக் கூடியவை சிவாகம முறையில் முதன்மை வழிபாடுகள் எனப்படும் பூர்வாங்க வழிபாடாக இருந்தாலும், கால வழிபாடுகளாக இருந்தாலும், நாடி சந்தானம், கலா தர்சனம், முளைப்பாலிகை இடுதல், நிலத்தேவர் வழிபாடு ஆகிய அனைத்து வழிபாடுகளும் அந்தப் பத்ததிகளில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளதோ அதனடிப்படையில் தமிழில் திருமுறைகளை ஓதி நடத்தப்படுகின்றன.


இந்நெறிமுறைகளைப் பேரூர், அவிநாசி ஆகிய தலங்களில் உள்ள சிவாச்சாரியப் பெருமக்கள் அவ்வப்போது வந்து, இன்னின்ன சடங்குகளுக்கு இன்னின்ன பாடல்களை ஓதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி வழிகாட்டியுள்ளார்கள். 

மதக்காழ்ப்பால் தில்லையில் வழிபாடு முட்டுப்பட்டபோது அதனை நெறிப்படுத்த, திருத்துறைசை ஆதீன ஆதி குருமுதல்வர் இளைய பட்டமாக இருந்த ஆதி சிவப்பிரகாசரை அனுப்பினார். இறைவனை உணர்த்த பெட்டக இலிங்கத்தை அங்கலிங்கமாகச் செய்து தில்லை வழிபாட்டைச் செம்மைப்படுத்தியவர் ஆதி சிவப்பிரகாசர். அவருடைய சீடர் சாந்தலிங்கப் பெருமான். 

அவர்தம் அருட்திருக்கோயில், அருள்மிகு அம்பலவாணப்பெருமான் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழாவின் பூர்வாங்க வழிபாடுகளில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள், "இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பூர்வாங்க வழிபாடுகள் ஆகம முறைப்படி நாங்கள் எவ்வாறு செய்கின்றோமோ அதே வரிசைக் கிரமத்தில் இருக்கின்றன. நாங்கள் கிரந்தப் பாட சாத்திரங்களைப் பாராயணம் செய்வோம். நீங்கள் திருமுறைகளைப் பாராயணம் செய்கின்றீர்கள்' என்று கூறிப் பாராட்டிச் சென்றார்கள் என்பதையும் இங்கே நினைவுகூர்கின்றோம். 

இத்தகைய திருநெறிய ஒண்தீந்தமிழ் வழிபாடு யாருக்கும் எவ்விதத்திலும் இடர்ப்பாடு தரக்கூடிய வகையில் அமைவதில்லை. சிவாச்சாரியார்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் சைவநெறி தழைத்தினிது ஓங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கையில் பலநூறு திருக்கோயில்கள், மோரீஷஸில் பலநூறு திருக்கோயில்கள், மலேசியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், ரி யூனியன் தீவுகள், கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களிலும் தமிழ்நெறி வழிபாட்டைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து அன்பர்கள் திருமுறை அடிப்படையில் நடத்தி வருகிறார்கள். இதற்கு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே தமிழ்நெறி வழிபாடு வேதத்திற்கோ, ஆகமத்திற்கோ, நமது பண்பாட்டிற்கோ நிச்சயமாக எதிரானது அல்ல. 

நாங்கள் பெருந்திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்கின்றபோது அந்தந்தத் திருக்கோயில்களின் சிவாச்சாரியப் பெருமக்களைக் கொண்டு 33 குண்டங்கள் வரை அமைத்து அவர்களின் நெறிமுறைகளின் அடிப்படையில் கிரந்த சாத்திரப் பாடல்களை ஓதி நடத்துவதையும் ஊக்குவித்து வருகின்றோம். அதன் காரணமாக எந்த விதத்திலும் வேதத்திற்கோ, ஆகமத்திற்கோ, சிவாச்சாரியார்களுக்கோ, வைதீகத்திற்கோ எதிரானவர்களாக தமிழ்நெறி வழிபாட்டாளர்கள் இல்லை என்பதைப் பதிவு செய்து கொள்கின்றோம். 

அனைவரின் நோக்கமும் குறிக்கோளும் கந்தபுராணம் போற்றும் "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்பதே ஆகும். இது நமது முன்னோர் காட்டிய நெறியின் அடிப்படையில் நடைபெறுவது.

கட்டுரையாளர்: குருமகாசன்னிதானம், பேரூர் ஆதீனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com