தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று.
தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

~ எம்.சடகோபன்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் தன்னிறைவு பெற்று விளங்குகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதிலைப் பெறுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் மழை நன்றாகப் பெய்தாலும் கூட, நம்மால் அந்த முழுமையான தண்ணீரை சேகரிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மாநில அரசுகளும் சரி, மத்திய அரசும் சரி, மழைநீர் வீணாகாமல் விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் விதத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், அவை முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் எத்தனை, எத்தனையோ பெரிய, சிறிய அணைகள் கட்டப்பட்டாலும், மக்களின், விவசாயிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் தொடர்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த நிலை தொடர்கிறது என்பது வேதனையிலும் வேதனையாகும். ஒரு மாநிலம் போதுமான தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறது...அதே சமயம், மற்றொரு மாநிலத்தில் ஏராளமான மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதுதான் இயற்கையின் பார்வையாக உள்ளது. ஆனால், மக்களும் அரசும் கொஞ்சம் விழிப்புணர்வோடு முயற்சிகளை, திறமையான நீர் மேலாண்மையை மேற்கொண்டால், தண்ணீர் தேவையில் ஓரளவு தன்னிறைவு பெற முடியும். தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமப் பகுதிகளில் மக்கள் தங்களது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சொல்லி மாளாது. பல மாநிலங்களில் நகரங்களிலும் கிராமங்களிலும் பொது ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குடிநீர் சேகரிக்க பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிகழ்வுகளை இப்போதும் பார்க்க முடிகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் அசுத்தமான குடிநீரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு செய்திகள் வந்தன. அப்போது, அந்த மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் கோனால் என்ற கிராமத்தில் ஓர் இளம் பெண் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் இறந்துவிட்டார். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள்ளாகினர். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்வது வேதனையிலும் வேதனைதான். இதேபோன்று, அதே மாநிலத்தில் தாவணகரே மாவட்டத்தில் இளைஞர் ஒருவரும், கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில், ராய்ச்சூரு நகரத்தில், சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்பாட்டால் ஐந்து பேரும் இறந்ததாக செய்திகள் வந்தன. தண்ணீரை சுத்திகரிக்கும் மையம் ஐந்து ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. இதுபோன்று ஆண்டு தோறும் தண்ணீர் பிரச்னையால் இறப்புகள் பதிவாகின்றன.

இந்த நிகழ்வு தமிழகத்துக்கு அருகே உள்ள கர்நாடகத்தில் மட்டும் அல்ல. இது ஒரு தேசிய சோகமாகவே கருத வேண்டியுள்ளது. இந்தியாவில் அசுத்தமான குடிநீரை உள்கொள்வதால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இறப்புகள் ஏற்படுவதாக நீதி ஆயோக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த பிறகும், வாழ்வதற்கான உரிமையை அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்திய நிலையில், சுத்தமான குடிநீரைப் பெற முடியாத காரணத்தால், மக்கள் அசுத்தமான நீரைக் குடித்து இறக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

மக்கள் சுத்தமான தண்ணீரைப் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த அசாத்திய நெருக்கடி நிலையை மத்திய அரசு உணர்ந்துள்ளது. அதனால்தான் ஜல் சக்தி அமைச்சகம் என்ற முழு அளவிலான அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஒரு சவாலான பணியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், "சுத்தமான நீர்' எங்கிருந்து வரும்? நீதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நன்னீர் கிட்டத்தட்ட 70 சதவீதம் அசுத்தமானதாகத்தான் உள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுதல் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தண்ணீரில் கலப்பதால், நீர்நிலைகள் மாசு அடைகின்றன. அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளிலும், குறிப்பாக தொழில்துறை பகுதிகளிலும் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக் கொள்வது குறைகிறது அல்லது பாதிக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மையும்கூட.

இந்த நிலையில், மழைநீர் சேகரிப்பு பற்றி மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது குறித்தும், சுகாதாரமான தண்ணீர் பயன்பாடு குறித்தும் போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாக உள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் ஆண்டு தண்ணீர் தேவை 3,000 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். விவசாயத்திற்கு மட்டும் 80 சதவீதம் தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு 4,000 கன மீட்டர் மழை மட்டுமே பெய்கிறது. மழைநீர் சேகரிப்பு, முறையான நீர் சுத்திகரிப்பு முறைகள், சிறந்த நீர்ப்பாசன நடைமுறைகள், கடுமையான நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை நாட்டில் நீர் நெருக்கடியைத் தவிர்க்கத் தேவையான சிறந்த நடவடிக்கைகளாகக் கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், மக்கள் போதுமான அளவு விழிப்புணர்வு பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com