
அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் உள்ளன. மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 2023- 24-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 37 லட்சம் சரிந்துள்ளதாகத் தெரியவந்தது.
அண்மையில் பழங்குடியினரின் கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்த கேள்விக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் துர்கா தாஸ் உய்கே பதிலளிக்கும்போது, தொடக்கக் கல்வி அளவில் 2021-22-ஆம் ஆண்டில் 103.4 சதவீதமாக இருந்த பழங்குடியின மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 2023-24-இல் 97.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக அனைத்து சமூக மாணவர்களின் சேர்க்கை விகிதம் 100.3 சதவீதத்திலிருந்து 91.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொடக்கக்கல்வி அளவில் மட்டுமின்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவிலும் மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உயர்நிலைப் பள்ளிக்கல்வி அளவில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78 சதவீதத்திலிருந்து 76.9 சதவீதமாகவும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 79.56 சதவீதத்திலிருந்து 77.4 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை மேல்நிலைக்கல்வியில் சேர்க்கை பெற்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதை அறிய முடிகிறது.
நாட்டில் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 52 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாகவும், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 57.56 சதவீதத்தில் இருந்து 56.2 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை, ஆரம்ப நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என ஒவ்வொரு நிலையிலும் இடைநிற்றலுக்கு உள்ளாகும் மாணவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. பள்ளிக்கல்வியில் ஆரம்ப நிலையில் தொடரும் இடைநிற்றல், உயர்கல்வி வரை தொடர்கிறது.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இவையன்றி, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், சேர்க்கை பெற்றவர்களைத் தொடர்ந்து தக்க வைக்கவும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் போன்ற குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே ஆரம்பக்கல்வியில் சிறார்கள் சேர்க்கையில் முழுமையான இலக்கை எட்டியுள்ளதாகவும், பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி செல்லும் வயதை எட்டியபோதும் பள்ளியில் சேர்க்கப்படாமல் குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும், அரசுப் பள்ளிகள் குறித்த அவநம்பிக்கையும்தான் காரணங்களாகும்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற அவநம்பிக்கை புரையோடிப் போன ஓர் அம்சமாகவே உள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளும், கற்பித்தல் தரமும் மேம்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் மெய்ப்பிக்கின்றன. எண்ணிக்கை அடிப்படையில் குறைவான ஆசிரியர்கள் இருக்கலாமே தவிர, அரசுப்பள்ளிகளில் அனைத்துப் பாடங்களுக்கும் கல்வியியல் பட்டம் பெற்றவர்களே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர் என்பதை எளிதாக மறந்துவிடுகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிரான கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டிருந்தாலும் நீட் தேர்வில் ஆதிக்கம் செலுத்தும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
2017-18-இல் நீட் தேர்வில் பங்கேற்ற 3,739 மாணவ, மாணவியர்களில் 825 பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்த ஆண்டில் பங்கேற்றோர் மற்றும் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
2020-21-இல் தேர்வில் பங்கேற்றோர் எண்ணிக்கை 8,061 -ஆகவும், தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 1957 -ஆகவும் இருந்தது. இது முறையே 2021மற்றும் 2022-இல் 14,979, 4118 எனவும், 2022 மற்றும் 2023-இல் 12,997, 3,982 ஆகவும் இருந்தது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2017-18 -இல் 22.1 சதவீதமாக இருந்த அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2022-23 -இல் 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும், 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. 2023-இல் பிளஸ் 2 தேர்வில் 89.8 சதவீதமாக இருந்த நிலையில் 2024-இல் 90.02 சதவீதமாக அதிகரித்துள்ளது. 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326-இல் (2023) இருந்து 397 (2024) -ஆக அதிகரித்துள்ளது.
அடிப்படை வசதிகள், கற்பித்தல் தரம், தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் மேம்பட்ட நிலை, போட்டித் தேர்வுகளில் ஆதிக்கம் எனப் பல்வேறு நிலைகளில் அரசுப் பள்ளிகள் மேம்பட்டும், சேர்க்கைக் குறைவு ஏன் உள்ளது என்பது சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் இருப்பதும், பெற்றோர்களிடம் அரசுப் பள்ளிகள் மீதான அவநம்பிக்கை இருப்பதுமே காரணமாகும். பெற்றோர்களிடம் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆண்டுதோறும் பள்ளி செல்லும் வயதை எட்டிய குழந்தைகள் குறித்த விவரங்களை அரசு சேகரித்து, அவர்களைப் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்வதும்தான் தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.