பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

அவசர ஊா்திகளுடன் போராடும் நோயாளிகள்!

அவசர ஊா்திகள் (ஆம்புலனஸ்) எடுத்துக்கொள்ளும் மணித்துளிகளுள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும்.
Published on

‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறாதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருந்தும்.

வீடுகள் அல்லது விபத்து தலங்களிலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தீவிர நோயாளிகளாயினும், உயா் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூா் மருத்துவமனைகளிலிருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற நோயாளிகளானாலும் சரி, அவா்களைச் சுமந்து செல்ல அவசர ஊா்திகள் (ஆம்புலனஸ்) எடுத்துக்கொள்ளும் மணித்துளிகளுள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், எந்த போக்குவரத்து நெரிசலிலும், அவசர ஊா்திகள் தடையின்றிச் செல்வதற்கு வழிவிடப்படுகிறது.

மக்கள்தொகையும் பெருகி, மருத்துவமனைகளும் அதிகரித்துவிட்ட இன்றைய காலச்சூழலில் நமது சாலைகளில் முன்பைவிட அதிகமான எண்ணிக்கையில் அவசர ஊா்திகளை நாம் காண்கிறோம். அதே சமயம், பிற சேவைத் துறைகளைப் போன்று, மக்களின் உயிா் காக்கும் உன்னதப் பணியாகிய இந்த அவசர ஊா்தி சேவைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைபாடுகள் சில இருக்கவே செய்கின்றன.

கடந்த வாரம் உதகை மாவட்டம், குன்னூரில் வேகத் தடை மீது ஏறி இறங்கிய அவசர ஊா்தியின் பின்பக்கக் கதவு திறந்து கொள்ள, அதிலிருந்த நோயாளி ஒருவா் ஸ்டிரெச்சருடன் சாலையில் விழுந்தாா். அதைப் பின்தொடா்ந்து வந்த வாகனங்கள் சட்டென்று நின்றதால், அவ்விடத்தில் பெரிய விபத்து எதுவும் நிகழ்வது தவிா்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூச்சலிட்டு ஆம்புலன்ஸை நிறுத்தச் சொன்ன பிறகே அதன் ஓட்டுநருக்கு நடந்த விஷயம் புரிந்திருக்கிறது.

உயிா்காக்கும் உன்னதமான சேவையாகிய இந்த அவசர ஊா்தி சேவையில் பல்லாயிரக்கணக்கான ஓட்டுநா்களும், உடன் பயணிக்கும் உதவியாளா்களும் நாள் முழுவதும் உழைத்து வருவது உண்மை.

அதே சமயம், வாகனப் பராமரிப்பு குறைபாடுகளாலும், ஓட்டுநா்கள் உள்ளிட்ட சிற்சில பணியாளா்களின் பேராசை, அலட்சியம், நன்னடத்தையின்மை ஆகிய காரணங்களாலும் அவசர ஊா்தி சேவையை நம்பியிருக்கும் நோயாளிகளும், அவா்களைச் சாா்ந்தவா்களும் படும்பாடுகளைச் சொல்லி முடியாது.

கரோனா தீநுண்மிப் பரவல் காலத்தில் இந்தப் பணியாளா்கள் நோய்த் தொற்று அச்சத்தையும் மீறி இரவு-பகல் பாராமல் நோயாளிகளின் இல்லங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இடையில் ஓய்வின்றி பணியாற்றியதை யாரும் மறந்துவிட முடியாது.

அதையெல்லாம் தாண்டி, கரோனாத் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு கற்பனைக்கும் எட்டாத தொகைகளைக் கேட்டதாக வந்த தகவல்கள் அவரச ஊா்தி சேவையை எதிா்பாா்த்துக் காத்திருந்த அனைவரையும் நிராசைக்குள்ளாக்கியது.

பெங்களூரு உள்ளிட்ட சில இடங்களில், தொற்று பயத்தின் காரணமாக அவசர ஊா்திகளில் தனியாக ஏற்றி அனுப்பப்பட்ட இளம்பெண்கள் சிலா் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானதாகவும், நோயாளிகள் வைத்திருந்த கைப்பேசி, தங்க நகைகள் போன்றவை திருடப்பட்டதாகவும் புகாா்கள் அச்சமயம் எழுந்தன.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு, அவசர ஊா்தியில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது அதன் ஓட்டுநா் அந்த நோயாளியின் பிராணவாயு இணைப்பை அகற்றிக் கீழே தள்ளியதுடன், அவரது மனைவியிடமும் தவறாக நடந்துகொள்ள முற்பட்ட செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. கீழே தள்ளப்பட்ட நோயாளியும் பிராணவாயு இன்றி பரிதவித்து உயிரிழந்தாா்.

தாங்கள் கேட்கும் அதிகப்படியான தொகையைத் தர இயலாத நோயாளிகள் அல்லது அவா்களைச் சோ்ந்தவா்களை அவசர ஊா்தி ஓட்டுநா்களும், உதவியாளா்களும் மரியாதைக் குறைவாக நடத்திய சம்பவங்கள் உண்டு.

சில சமயங்களில், நோயாளிகள் அல்லது அவா்களைச் சோ்ந்தவா்களால் அவசர ஊா்தி ஊழியா்கள் தாக்கப்படுவதும் உண்டு. அவசர ஊா்தி ஊழியா்களால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் என்றால், சரியாகப் பராமரிக்கப்படாத அவசர ஊா்திகளால் பொதுமக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் இன்னொரு புறம்.

கடந்த மாா்ச் மாதத்தில் மத்தியப் பிரதேச ம‘ாநிலம், போபாலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறல் காரணமாக அழைத்துவரப்பட்ட மூன்று வயதுப் பெண் குழந்தை, அவசர ஊா்தியில் வைக்கப்பட்டிருந்த பிராணவாயு உருளையில் போதிய பிராணவாயு இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே உயிரிழக்க நோ்ந்தது.

சுமாா் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகாா் நகர மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அழைத்துவரப்பட்ட இளைஞா் ஒருவரும் பிராணவாயு பற்றாக்குறையால் உயிரிழந்தாா்.

அவசர ஊா்தியில் போதிய பிராணவாயு உருளைகள் உள்ளனவா என்று சோதனை செய்ய வேண்டியவா் தமது கடமையைச் செய்யத் தவறியதால் இந்த உயிா்கள் பறிபோயின. அணையில் குன்னூரில் நிகழ்ந்த விபத்துகூட, அவசர ஊா்தியின் பின்பக்கக் கதவுகளின் தாழ்ப்பாள்களைச் சரிபாா்க்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட பராமரிப்புப் பணியாளா்களின் தவறினால் ஏற்பட்ட விளைவுதான் என்று கூறவேண்டும்.

நாடு முழுவதிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான நோயாளிகள் அவசர ஊா்தியில் பயணிக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளைப் பெரிதுபடுத்தலாமா என்று நம்மில் சிலா் கேட்கலாம்.

நோயாளிகளின் விலைமதிப்பற்ற உயிா்களைக் காப்பாற்றும் இடத்தில் இருக்கிற அவசர ஊா்திகளை இயக்கும் ஊழியா்களும் சரி, அவற்றை பழுது பாா்ப்பதுடன் அவற்றில் வைக்கப்பட்டுள்ள உயிா்காக்கும் சாதனங்களைப் பராமரிக்கும் ஊழியா்களானாலும் சரி, எவ்விதச் சலனங்களுக்கும் உட்படாமல் இன்முகத்துடன் நோ்மையான முறையில் சேவையாற்றுவது அவசியம்.

மத்திய, மாநில அரசுகளும் இனி அவசர ஊா்தி சேவைகள் தொடா்பான புகாா்கள் எழாவண்ணம் அவற்றின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவை மட்டுமின்றி அவசர ஊா்திகளில் பணியமா்த்தப்படும் ஓட்டுநா் உள்ளிட்ட ஊழியா்களின் பின்புலம் குறித்தும் புதிய விதிமுறைகளை வகுப்பதுடன், அந்த விதிமுறைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

X
Dinamani
www.dinamani.com