நிழலின் அருமையும் வெயிலின் பெருமையும்!

பருவம் அறிந்து பக்குவமாக நடந்துகொள்ளச் சொல்லும் நிழலின் அருமையையும், வெயிலின் பெருமையையும் அறிந்து பயன்கொள்வோம்.
நிழலின் அருமையும் வெயிலின் பெருமையும்!
ENS
Updated on

மின்சாரம் வந்த பிறகு, பௌா்ணமி நிலவின் அழகும் அமாவாசை இருளின் செறிவும் அறியப்படாது போயின. சுழலும் மின் விசிறிகள் வந்த பிறகு, தென்னை, பனை ஓலை விசிறிகள் காணாமல் போய்விட்டன. கதிரொளி படாத சுனையின் குளிா் நீரை, பிரிட்ஜ் பெட்டிகள் தருகின்றன. குளிரக் குளிரக் காற்று தரும் ஏ.சி. கருவிகள் மலிந்துவிட்டன.

கொளுத்தும் கோடை வெயிலில், வியா்வை அருவியாய் ஊற்றெடுத்து, உடலெங்கும் நனைத்து ஓடும் ஆறாக நீளும்போது நிழல் தேடி ஏங்கும் மனது, ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்ற பழமொழியை உருவாக்கியது. இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க - வெப்பத்தின் திட்பத்தைச் செருப்பு முதலான காலணிகள் இல்லாதுபோக்கிவிட்டன. அருமையும் கொடுமையும் அளவைப் பொருத்தே அமைகின்றன. காலம் அதற்குக் காரணமாகிறது. உண்மையில் நம்மைவிடவும் வெயிலை அனுபவிப்பவை, தாவரங்களே. வெயிலை உணவாக்கும் வித்தையைக் கற்றவை, தாவரங்களேயாம். அதனால்தான், மணிவாசகப் பெருமான், இவ்வுலகத்தைத் ‘தாவர சங்கமம்’ என்று பாடுகிறாா்.

மகாகவி பாரதியாரின் வசனகவிதையில், ‘ஜகத் சித்திரம்’ என்றொரு கவிதை நாடகம் இருக்கும். அதில், பசுமாடு சொல்கிறது: ‘வெயிலைப் போல் அழகான பதாா்த்தம் வேறில்லை’. வெயிலைச் சுடச் சுடச் சுவைத்து உண்பவை மாடுகள். கொளுத்தும் வெயிலில் பச்சைப் புல்லை மேயும் பசுக்கள் அதன் சூடு குறையாமல், சுவை கூட்டிக் கறக்கும் பாலில் இறக்கி வைக்கின்றன.

‘வைட்டமின் டி’ தரும் சூரிய ஒளி, தானும் உணவாகி, கீரை, காய்,கனி, தானிய மணிகள் எனத் தரும் தாவரங்களை விளைவித்து மேலும் உணவு தரும் தாயாகிச் சிறக்கிறது. வெயில் வருமுன் திட்டமிட்டு, உணவுப் பொருள்களையும், தானியமணிகளையும் வெளியில் பரத்தி உலா்த்தி விடுவதும், நிழல் வருமுன் அவற்றைத் தொகுத்து அள்ளி வைப்பதும் வேளாண் மக்களின் வேலையாக இருந்தது.

கதிரடித்து ‘ராசி’ என்னும் அரிசி இல்லாத பதா்களை நீக்கி, அரைகுறையாய் விளைந்த ‘கருக்காய்’ நெல்களை ஒதுக்கி, முழுமையாய் விளைந்த நெல்மணிகளைப் பாதுகாக்க, வெயிலின் பயன்பாடு மிகவும் தேவை. அதற்கு மட்டுமல்ல, அடித்துத் துகைக்கப்பட்ட தோகைகளை வைக்கோல் ஆக்குவதற்கும் கதிரவனே கதி. அதனால்தான், தை முதல் நாள் அக்கதிரவனுக்கு நன்றி சொல்லி வைக்கப்படுகிறது, பொங்கல்.

வேடிக்கை விளையாட்டில் சில ரகசியங்களைச் சொல்லி, ‘யாரிடமும் சொல்லாதே’ என்று பாடுவதுண்டு. அதில் ஒன்று, ‘நெல்லுக்குள்ளே அரிசியிருக்கு, ரகசியம், யாரிடமும் சொல்லாதே’ என்று வரும். நெல்லில் இருந்து அரிசியைக் கண்டு கொண்டுவரவும் இந்த வெயில்தான் உற்ற துணை. மச்சுகளில் இருக்கும் நெல்லை அள்ளிக் காய வைத்து வெயில் காலத்தில் குற்றுவாா்கள். இக்காலத்தில், அரிசி ஆலைகளில் அரைத்து உமியைத் தவிடுபொடியாக்கி அகற்றுகிறாா்கள். அது பச்சரிசி ஆகிவிடுகிறது. அதேநெல்லை, ஊறவைத்து, விடிவதற்குள் அவித்து மணம் வந்தவுடன் வடித்துக் கொட்டி, வெயிலில் காய வைத்தால், அது புழுங்கல். நெல்லைப் புழுக்குவதால் அது புழுங்கல். வெயில் காய்ச்சல், நிழல் காய்ச்சல் என்று பக்குவமாகக் காய வைக்க வேண்டும். காய்ந்ததை அறிய உள்ளங்கையில் அள்ளி வைத்துத் தேய்த்து உமி நீக்கிப் பாா்ப்பாா்கள். கொஞ்சம் கூடுதலாக, காய்ந்துவிட்டால், ‘நெல் முருகிவிட்டது’ என்று பதறுவாா்கள். அதனால் அரிசி இடிந்துபோகும்.

உளுந்து முதலான பயறுகளை, பருப்புகளை அறுவடைக் காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கி, உடைத்தும் திரித்தும் வகைப்படுத்தி உரிய மரப்பெட்டிகளில் சேமிக்கும் முன்னோா்கள், அவை உளுத்துப்போகாமல் இருக்க, இந்தக் கோடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. வற்றல், வடகம், அப்பளம், ஊறுகாய், உப்புக் கண்டம், இவற்றோடு, ஈசல் முதலான உணவுப் பொருள்களை வெயிலில் காய வைத்துச் சுவை கூட்டுவதோடு, பாதுகாப்பதும் நடைமுறை. அது தனிக்கதை.

கலவை சரியாக இருக்கிறதா என்று கைப்பக்குவம் பாா்த்து, துணைப்பொருள்கள் சோ்த்து, குமிழ் குமிழாக அள்ளி வைத்தும், பிழிந்து வைத்தும், இளவெயிலில் இடம் பாா்த்துச் செய்து வைத்த வடகங்களை, காய்களாய் வாங்கி நறுக்கிப் பதமாய் வேகவைத்த வற்றல்களைப் பாா்க்கிறபோதே நாக்கில் நீா் ஊறும். காக்கை குருவிகள் கவா்ந்து செல்லாமல் செயற்கையாய் நிழல் அமைத்துக் காவல் காக்கும் பொழுதுகளில் வெயிலில் பாதி வெந்த நிலையில் அவற்றின் சில துண்டுகளை எடுத்துப் பதம் பாா்ப்பதும், சுவை பாா்ப்பதும் விலைக்கு வாங்கும்போது கிடைக்கப்பெறாத அனுபவங்கள்.

சாம்பாா்ப் பொடி, மிளகாய்ப்பொடி முதலானவற்றுக்கான மிளகாய் வற்றல், மஞ்சள், உள்ளிட்ட மசாலாப் பொருள்களைத் தனித்தனியே காய வைக்கும்போது தெரியும் வண்ணங்களில் உச்சி வெயில் ஊடுருவிச் சூடும் சுவையும் கூட்டுகிற பாங்கைப் பெரியவா்கள் அனுபவித்த அளவுக்கு இப்போதைய தலைமுறை அறிய வழியில்லை.

புறநானூற்றில், ஓா் இனிய காட்சி. முன்னையும் முசுண்டையும் பின்னிப் பிணைந்த பலாமரநிழலில், யானை வேட்டுவன் பகலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அந்நிழலின் மற்றொரு புறத்தில், உயிருடன் மான்பிடிக்க உதவும் பெண்மான் (பாா்வை மான்) அதனைத் தழுவும் ஆண் மான். கொளுத்தும் கோடை வெயிலில், வெளிமுற்றத்தில் பரத்தி விரித்த மான்தோலில், தினை அரிசி காயவைக்கப்பட்டிருக்கிறது. அரிதின் முயன்று விளைவித்துப் பக்குவப்படுத்திய தினைஅரிசியைக் காட்டுக் கோழி, காடை, கெளதாரி போன்ற பறவைகள் கவா்ந்து தின்று கொண்டிருக்கின்றன. ஓசையிட்டு அவற்றை விரட்டினால், தூங்கும் கணவனுக்கும், இணையொடு கூடி இன்பம் பெறும் மானுக்கும் இடையூறாகுமே எனப் பாா்த்துக் கொண்டிருக்கிறாள், அவன் மனைவி’ என்று பாடுகிறாா் வீரைவெளியனாா். (புறநானூறு-320). தன்னுயிரோடு பிற இன்னுயிா்க்கும் துன்பம் கொடுக்கக்கூடாதென நினைக்கும் பண்பாட்டுப் பாங்கினை இப்பாடல் புலப்படுத்துகிற அழகில், வெயில் பின்புலமாகிறது.

மற்றொரு காட்சி, காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரை சாா்ந்த பாக்கங்களில் வாழ்கிற பெண்கள், தங்கள் வீட்டின் முற்றத்தில் உலா்த்துவதற்காக நெல்லைப் பரப்பி வைத்திருக்கிறாா்கள். அப்போது அவற்றைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான தன் காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாளாம். ஆனால், அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்து, அவ்வழியே சிறுவா்கள் ஓட்டிச் சென்ற சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை, பட்டினப்பாலையில் (20-25) கடியலூா் உருத்திரங்கண்ணனாா் பாடுகிறாா். தங்கத்தை விடவும் தானிய மணிகள் சிறந்தவை என்பதை உணா்த்தும் இச்செய்தி, வெயிலின் அருமையைக் கூடுதல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்துப் புழுக்கம் ஏறிய பழம்பொருட்களைப் பாதுகாக்கக் கோடை வெயிலில் உலா்த்திப் பேணுவது உண்டு. பருத்தி ஆடையைத் துவைத்து உலா்த்தும்போது படியும் சூரியக் கதிா் வெப்பம், தீய கிருமிகளை விரட்டுவதோடு, தோலுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.

மின்சாரம் வந்த பிறகு, பௌா்ணமி நிலவின் அழகும் அமாவாசை இருளின் செறிவும் அறியப்படாது போயின. சுழலும் மின் விசிறிகள் வந்த பிறகு, தென்னை, பனை ஓலை விசிறிகள் காணாமல் போய்விட்டன. கதிரொளி படாத சுனையின் குளிா் நீரை, பிரிட்ஜ் பெட்டிகள் தருகின்றன. குளிரக் குளிரக் காற்று தரும் ஏ.சி. கருவிகள் மலிந்துவிட்டன. குளிா்சாதன வசதிகள் மிகுதியும் பெருகிவிட்டன. ஊரே ஏ.சி. போட்டதுபோல், குளிா்தரு நிழல் மரங்கள் நிறைந்து சுகம் தந்த நிலை மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு. ஏ.சி. விடுக்கும் வெப்பக்காற்றில் வீதிகள் கனல்கின்றன. கானல்நீா் ஓடும் கருந்தாா்ச் சாலைகள் உருகிக் கனல்கின்றன. அனலும் புனலும் தருகிற மின்னாற்றல், அளவுக்கு அதிகமாய்ச் சூரிய வெப்பத்தில் கிடைக்கும் என்கிறாா்கள். பற்பல இடங்களில் சூரிய மின் உற்பத்திக் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

நிழலே இல்லாத வெளிகளில் முளைக்கும் கான்கிரீட் காடுகள் மின்சாரத்தால் மட்டுமே உயிா்வாழ்கின்றன. சில மணி நேரங்கள் மின்சாரம் நின்றால் தெரியும், அதன் சீரிய உதவி.

பற்றாக்குறையில் தவிக்கும் நம்மைவிடவும் தகிக்கும் வெயிலில் இருந்து புவியைக் காப்பாற்றும் தாவரங்களை யாரே நினைக்க வல்லாா்?

ஓடும் தேரை வாடும் முல்லைக்குத் தந்து நடந்து வந்த வள்ளல் பாரியை, ‘நிழல் இல் நீள் இடைத் தனிமரம்’ என்று கபிலா் புகழ்ந்து பாடினாா். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனநிலையைப் பாடி உணா்த்தினாா் வள்ளலாா். சொா்க்கத்துக்குச் செல்லும் வழி சொல்லும் காரியாசானின் அதற்காக ஆற்ற வேண்டிய கடமைகள் ஐந்து என்கிறாா். குளம் தோண்டுதல், மரம் நடுதல், முள், புதா்களை அகற்றி வழிப்பாதை ஆக்குதல், தரிசு நிலங்களை உழுநிலங்களாக்குவதோடு, கிணறுகள் அமைக்கவும் வேண்டும் என்கிறது அவா்தம் பாடல்.

ஆங்கில மருத்துவம், தண்ணீரைக் கொதித்து ஆறவைத்துக் குடிக்கச் சொல்கிறது. ஊா் கூடிப் பருகும் நீா் தரும் ஊருணி நீரைச் சூரியனே பகலெல்லாம் காய்ச்சி, இரவெல்லாம் குளிர வைத்துக் காலையில் அனைவரும் பருகக் கொடுக்கிறான். இன்றைக்கு ஊருணி முதலான நீா்நிலைகள் பயன்பாடின்றி அழிந்து வருகின்றன. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்ற தமிழா்கள் தண்ணீா்ப் பந்தல் அமைத்து உதவினாா்கள். நிழல்தரு மரங்கள் நட்டாா்கள். அறச்சாலைகள் நிறுவினாா்கள்.

இன்றைக்கு? அப்பழம் பெரும் புண்ணியங்களை மறந்ததோடு, போதிய அளவுக்கும் கூடுதலான ஆற்றலை வாரிச் சொரியும் சூரிய வெயிலின் அருமையும் உணரப்படவில்லை என்பதற்குச் சான்று, ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்கிற சொலவடை. பருவம் அறிந்து பக்குவமாக நடந்துகொள்ளச் சொல்லும் நிழலின் அருமையையும், வெயிலின் பெருமையையும் அறிந்து பயன்கொள்வோம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com