அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நினைவுகூரும் விதத்தில், கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் 1863-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற 'சிப்பாய்கள் தேசிய கல்லறை' அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் 'மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி இந்த உலகில் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும்' என்று தனது உரையை நிறைவு செய்தார். மனித சமுதாயத்தின் ஆரம்ப காலங்களில், மனிதர்கள் பல்வேறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
அந்தக் குழுக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வழி நடத்தவும் தங்களுக்கென்று தலைவர்களைத் தேர்வு செய்து கொண்டனர். வீரம், அறிவு, பொதுநலனில் அக்கறை செலுத்துதல் போன்ற பண்புகளுடையவர்களை தங்களுடைய தலைவர்களாக அந்தக் குழுக்கள் ஏற்றுக் கொண்டன.
தேர்தல் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்து அந்தக் காலத்தில் உருவாகவில்லை.காலப்போக்கில் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, அந்தச் சமுதாயத்தின் நலனை மேம்படுத்தவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் சபைகள் உருவாக்கப்பட்டன.
முக்கியப் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது சபைத் தலைவரும், உறுப்பினர்களும் கலந்து பேசி முடிவெடுத்தனர். மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி அமைப்புக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது. குடிமக்கள் தங்களது ஆட்சியாளர்களை வாக்கெடுப்புமூலம், அதாவது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நகரங்களில் ஒன்றான ஏதென்ஸில் பின்பற்றப்பட்டது.
நேரடி ஜனநாயகத்தின் தொடக்கமாக இது கருதப்படுகிறது. அதேசமயம், ஏதென்ஸ் குடிமக்களில் வயது வந்த ஆண்களுக்கு மட்டுமே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. பெண்கள், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், வெளிநாட்டில் பிறந்து ஏதென்ஸ் நகரில் வசிப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
பண்டைய இந்தியாவில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வைசாலி (தற்போதைய பிகார் மாநிலம்) என்ற பகுதியில் மன்னராட்சிக்குப் பதிலாக, குடியரசு ஆட்சிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு 'சபை' அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சபை உறுப்பினர்கள் தங்களுக்கிடையே கலந்தாலோசித்து, வாக்களித்து முக்கிய முடிவுகளை எடுத்தனர். குறிப்பிடப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே அந்தச் சபையின் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.
வைசாலியில் நடைபெற்ற ஆட்சிமுறையானது முழுமையான ஜனநாயகமாக இல்லாவிட்டாலும், அது ஜனநாயகத்தின் தொடக்க நிலையாகப் பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பின்பற்றப்பட்ட முறை குறித்து உத்தரமேரூர் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. கிராம சபை உறுப்பினர் பதவிக்குத் தகுதியான நபர்களை குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தனர்.
இது ஜனநாயகத் தேர்தல் முறைக்கு முன்னோடியாகும். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சி நவீன ஜனநாயக அரசியல் அமைப்புக்கான அடித்தளத்தையும், பிரெஞ்சு புரட்சி பொது வாக்குரிமைக்கான பாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இவ்விரு புரட்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு, பல உலக நாடுகள் ஜனநாயக நாடுகளாக மாறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டன. மன்னராட்சி, காலனியாதிக்கம் ஆகியவற்றில் இருந்து பல உலக நாடுகள் விலகி, தேர்தல் மூலம் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறைக்கு மாறத் தொடங்கின.
ஜனநாயகத்தின் தொடக்க காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்கள். அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் அரசியல் கட்சிகள் பலவீனமாகவோ அல்லது தோற்றுவிக்கப்படாமலோ இருந்தன. தனிநபர் செல்வாக்கு மற்றும் சமூக மரியாதை உள்ளவர்கள் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். தேர்தலுக்குப் பின்னர், வெற்றி பெற்றவர்கள் ஒன்றுகூடி தலைவரைத் தேர்ந்தெடுத்து, அரசு நிர்வாகத்தை நடத்திவந்தனர்.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், அமெரிக்காவிலும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு இருந்தாலும், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் உலக நாடுகள் பலவற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் தோன்றின.
ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே தொகுதிகளைப் பங்கீடு செய்து, வாக்குகளை ஒருங்கிணைத்து, எதிரிகளைத் தேர்தலில் தோற்கடிக்கும் 'தேர்தலுக்கு முன் கூட்டணி' என்ற நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கின. தேர்தலுக்கு முன் கூட்டணி என அரசியல் கட்சிகள் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து, தேர்தல்களை எதிர்கொள்ளும் நடைமுறை இந்திய அரசியல் களத்திலும் தற்போது நிகழ்கின்றன. இத்தகைய தேர்தல் கூட்டணிகள் மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர கடந்த காலத்தில் துணைபுரிந்துள்ளன.
அதே சமயம், கூட்டணிக் கட்சிகளின் சில செயல்பாடுகள், ஜனநாயகத்தின் அடிப்படை தன்மையைச் சீர்குலைத்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றன. சமுதாய நலனை மேம்படுத்தும் நீண்டகால செயல் திட்டங்களின் அடிப்படையில் தேர்தல் கூட்டணிகள் அமைக்கப்படுவதற்குப் பதிலாக, குறுகிய கால அரசியல் லாப நோக்கத்துக்காகவும், உடனடித் தேர்தல் வெற்றிக்காகவும் அமைக்கப்படுகிற தேர்தல் கூட்டணிகள் நம்நாட்டில் அதிகரித்து வருகின்றன.
மாறுபட்ட மற்றும் எதிர்மறையான கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள்கூட தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக கூட்டணியில் இணைந்து செயல்படுவதையும் நம் நாட்டில் காண முடிகிறது. பெரிய கட்சிகள் தேர்தல் கூட்டணிகளில் ஆதிக்கம் செலுத்துவதும், எப்படியாவது ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஆசையில் சிறிய கட்சிகள் அத்தகைய ஆதிக்கத்தைச் சகித்துக் கொண்டு, கூட்டணியில் தொடர்வதும் கள எதார்த்தமாக இருந்து வருகிறது.
தேர்தலில் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக, சிறிய கட்சிகள் சிலவற்றை எப்படியாவது தங்களது கூட்டணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என சில பெரிய கட்சிகள் முயற்சி செய்வதும், இதை உணர்ந்த சிறிய கட்சிகள் தரமான சன்மானத்தைக் குறிவைத்து காய் நகர்த்துவதுமான தேர்தல் கூட்டணி தொடர்பான செயல்பாடுகள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை இழக்கச் செய்கின்றன.
தேர்தல் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் பெரிய கட்சிகள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைத் தங்களது கிளை அமைப்புகளாகக் கருதுவதும், அவர்களின் தேர்தல் செலவுகளுக்கென கணிசமான தொகையை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ கொடுப்பதுமான செயல்கள் நடைபெறுகின்றன. அது மட்டுமின்றி, தேர்தல் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கென தனித்தனியான சின்னங்கள் இருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பெரிய கட்சிகள் தங்களது சின்னங்களில் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் நடைமுறை நம் நாட்டு தேர்தல் களத்தில் தொடர்கிறது.
தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், இத்தகைய தேர்தல் நடைமுறையானது 'இரு கட்சி ஜனநாயக' முறையை நோக்கி நம் நாடு பயணிக்கத் தொடங்கிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துக்காக, பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டங்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் கூட்டணிகள் அமைப்பதும், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க வாய்ப்பு இல்லாத கட்சிகள் எதிர்க்கட்சிகளாகச் செயல்பட்டு, ஆட்சியிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, நல்லாட்சி நடைபெற வழிவகுப்பதும் ஜனநாயகத்தின் வலிமையாகும். மாறாக, கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் 'கூட்டணி தர்மம்' என்ற பெயரில், ஆட்சியிலுள்ள குறைகளைச் சகித்துக் கொண்டு, அமைதி காப்பது ஜனநாயகத்தின் வலிமையைச் சீர்குலைக்கும் செயலாகும்.
வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்கும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஆனால், பணம் அல்லது அன்பளிப்பு கொடுத்து வாக்குகள் சேகரிக்கப்படுகிற நடைமுறை நம் நாட்டில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை நோக்கி இந்திய ஜனநாயகம் நகர்ந்து செல்கிறது.
தேர்தல் கூட்டணி என்ற பெயரில் ஜனநாயக மாண்புகளைச் சிதைத்தல், சந்தைப் பொருள்களைப் போன்று வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்குதல், தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆளும் கட்சிகள் மாநில அரசின் நிதியில் இருந்து பெரும்தொகையை தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு வழங்குதல் போன்றவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு உடையது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்திய தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பாகச் செயல்பட்டு, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் முன்னெடுப்புகள் குறித்து, இந்திய வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.
கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறை உயரதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் 1.39 கோடி பெண் வாக்காளர்கள்... ஆனால், களத்தில் வெறும் 40 பெண் வேட்பாளர்கள்!

அஸ்ஸாம் தேர்தல்: மாநில கட்சிகள் மீது சவாரி செய்யும் தேசிய கட்சிகள்!

உரிமையின் புரிதல் தேர்தல்

மதிமுகவுக்கு 4 தொகுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


