வேறு எவரையும் விட, சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் மீது, அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார். "துடிப்பான இளமைக் காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல' என்று இளைஞர்களிடம் தெரிவித்தார்.
ஆன்மிகத்தைக் கடந்து, உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்தும் அவர் தொடர்ந்து இளைஞர்களிடையே பேசி வந்தார். அவர் ஒரு கர்ம யோகியாகவே நம்மால் அடையாளம் காணப்படுகிறார்.
கல்வி அனைவருக்கும் தேவை என்பதைத் தொடர்ந்து பறைசாற்றி வந்த அவர், "இளைஞர்கள் பெறும் கல்வி அவர்களின் வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்கவும் உதவ வேண்டும்' என்றார். சமய நல்லிணக்கத்தைப் பேணும் கல்விமுறை வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.
"வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும்' என்றார் சுவாமி விவேகானந்தர். எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால், நீ பயப்படும் நொடிப் பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே; நீ பலம் வாய்ந்தவன் என்பதை நம்பு. பலவீனமானவன் என்பதை நம்ப மறுத்திடு. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு; உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே! என்று அறைகூவல் விடுத்தார்.
மன வலிமையுடன் அவர் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி உரையாற்றினார். "கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்' என்னும் அவரின் வரிகள் மிகவும் எதார்த்தமானவை. அவர் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தந்தவர்.
சமூகப் பணி நாட்டின் வளர்ச்சிக்கும் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியம் என அவர் கருதினார். நாம் நம் மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் எனக் கூறினார். நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவருடன் ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களைத் தொழுதிட வேண்டும் என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். இவை நமது தற்கால சமுதாயத்துக்கும் மிகவும் பொருந்தும்.
எல்லாமே கிடைத்துவிடும். ஆனால், வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான 100 இளைஞர்கள்தான் இன்றைய தேவை; உலகை மாற்றிக் காட்டுகிறேன் என எழுச்சி உரை ஆற்றினார். சுவாமி விவேகானந்தர் உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய 100 இளைஞர்களையே தேடினார். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார். அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்தியா இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்; விரைந்து முன்னேறும்.
தற்போதைய சமூக, அரசியல் சூழலில் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர் ஆகியோரின் மனநிலையைப் பாதுகாப்பது இந்தியாவில் மிகப் பெரிய சவாலாக மாறிவருகிறது. கருத்தரிப்பு விகிதம் குறைவதற்கு நகரமயமாக்கல், கல்வி வளர்ச்சி, சிறிய குடும்பங்களை விரும்பும் மனநிலை போன்றவை காரணமாகி விட்டன.
ஒரு காலத்தில் இந்தியக் குடும்பங்கள், தலைமுறை சார்ந்த உறவுகளின் தளத்தின் மீது கட்டப்பட்டிருந்தன. தாத்தா, பாட்டி, உறவினர்கள் போன்றோரின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர். முதியவர்கள் குடும்பத்தின் மையமாக இருந்தனர். குடும்பம் என்பது வெறும் பொருளாதார அமைப்பாக அல்லாமல், அதீத உணர்வுகளை மேலாண்மை செய்யும் அமைப்பாக இருந்தது. இன்று, சமூக ஊடகங்கள் உருவாக்கும் செயற்கை அடையாள உலகம், உண்மையான மனித உறவுகளை மெதுவாக மாற்றிவருகிறது. உறவுகள் சிக்கலாகி வருகின்றன. சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு நல்வழியை மட்டும் காட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்த நிலையில், இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 38 கோடி; இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தியாவின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமாக உள்ளனர். எனவே, இந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதை ஒரு தனித்துவமான காலகட்டமாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 1.18 கோடியாக உள்ளது.
இதில் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவர்களின் திறமைகள் நாட்டு வளர்ச்சிக்காக நன்கு திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். எதிர்கால இந்தியாவின் தலைவர் இவர்களே. இவர்களை விவேகானந்தர் வழியில் நன்கு வழிகாட்டி அவர்களை ஆக்கச் சக்திகளாக மாற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது.
இளைஞர்களைக் கொண்டு அமைந்துள்ள அரசு, இவர்களின் நலத்தில் தீவிர அக்கறைக் காட்டுவது நல்லது. இளைஞர்களும் விழித்தெழுந்து செயலாற்ற வேண்டும். தொழில் துறைகளில் பட்டங்களைப் பெற்று விட்டு தகுந்த வேலையும், வருமானமுமின்றி இருக்கும் இவர்கள், அரசின் கவனத்துக்கு உரியவர்களாக மாற வேண்டும். இவர்களின் திறமையும், அறிவும் அவர்களுக்கும் ,நாட்டுக்கும் சிறப்பாக பயன்படத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய காலமிதுவே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதானி, கூகுள் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் இளைஞர்களின் தரவுகள்: ராகுல்

கனமழையால் தத்தளிக்கும் கேரளம்: 15 ஆன பலி, 7 பேர் மாயம்!

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! இந்திய இளைஞர்களின் வெற்றி! - காங்கிரஸ் புகழாரம்!
கல்வியும் சமூகமும்...
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



