

ஒவ்வோர் ஆண்டும் வன்முறைகள், பயங்கரவாதம், தொற்று நோய்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றை விட இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு பெரும் விவாதங்களையோ அரசு செயல்பாடுகளில் தாக்கங்களையோ இதுவரை ஏற்படுத்தவில்லை. காற்று மாசுபாடு தில்லி நகரத்துக்கு மட்டுமே உள்ள பிரச்னை என்றும் அது பிராந்தியம், பருவ காலம், சூழல் சார்ந்தது என்றும் மக்களிடையே தவறான புரிதல் நிலவுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2.5 மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்ணிய துகள்கள் (பி.எம்.2.5) காலம், மாநிலம், அரசியல், ஊடகம் ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி இந்தியர்களின் நுரையீரலில் நீடித்த பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசுபாட்டை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் கோபத்துடனும், மார்ச் மாதம் அக்கறையின்மையுடனும், மே மாதம் மறதியுடனும் எதிர்கொள்ளும் இந்தியர்களின் மறதி சுழற்சி இந்த மாசு நெருக்கடியை தொடர்கதை ஆக்குகிறது.
கண்ணியம், ஆரோக்கியம், நல்ல சுவாசத்துடன் கூடிய வாழ்வே வாழ்வதற்கான உரிமை என்று நீண்ட காலமாக உச்சநீதிமன்றம் கூறி வருகிறது. வாழ்வதற்கான உரிமையில் மாசில்லாத நீர், காற்று ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையும் அடங்கும் என பிகார் மாநில அரசு சம்பந்தப்பட்ட வழக்கில் 1991}ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கக்கூடிய மனித கண்ணியம் மற்றும் வாழ்க்கைக்கான உத்தரவாதத்துக்கு காற்று மாசுபாடு மிகக் கடுமையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. இந்த அரசமைப்பு நெருக்கடியை பருவகால சம்பவமாக மட்டும் கருத இயலாது.
வாகன உமிழ்வு முதல் தொழில் துறை மாசுபாடு வரையிலான சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தாவின் வழக்குகளில் சுத்தமான காற்று என்பது கொள்கை விருப்பம் அல்ல; அது அரசமைப்புச் சட்ட உரிமை என்று பல்வேறு நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 1996}ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் குடிமக்கள் நல மன்ற வழக்கில் நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடைமுறைக் கொள்கைகளை வகுப்பதற்கான உத்தரவை வழங்கியது.
தார்மிகக் கடமைகளில் அரசுகள் தவறும் தருணங்களில் நீதிமன்றங்கள் 32 மற்றும் 226 ஆகிய பிரிவுகளின் கீழ் தலையிட இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் தில்லியின் காற்றின் தரத்தை இந்தப் பிரிவுகளின் கீழ் உச்சநீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்தது. விவசாயக் கழிவுகள் எரிப்பதை ஒழுங்குபடுத்தவும் காற்று மாசுபாட்டைக் குறைக்க மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் நதிநீர் மாசுபாடு, குறையும் நிலத்தடி நீர் அளவு, சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து வழக்குகள் தொடர்ந்துள்ளன. அவசர சுற்றுச் சூழல் பாதுகாப்பு தேவைப்படும்போதும், அரசு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறும்போதும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் 2021}ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி}அங்கிதா சின்ஹா வழக்கிலிருந்து உறுதி செய்யப்பட்டது.
காற்று மாசு ஏற்படுத்தியுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண விழிப்புணர்வும் சட்ட அமலாக்கமும் அவசியம் என்று கூறும் வல்லுநர்கள் சட்டக் கோட்பாடுகளால் மட்டுமே சரி செய்ய முடியாத தார்மிக முரண்பாடு மனித மனங்களில் இருப்பதாகக் கருதுகின்றனர். சித்தாந்த, தார்மிக, மத உணர்வுகள் புண்படுத்தப்படும்போது இந்தியாவில் போராட்டம் வெடிக்கிறது. திரைப்பட வசனம், பாடல், சமூக ஊடகப் பதிவு, உரை, புத்தகம் ஆகியவற்றின் மூலமாக வரும் தவறான கருத்து நாடு தழுவிய அணிதிரட்டலையும், தெருக்களில் சீற்றத்தையும், நாடாளுமன்றத்தில் விவாதங்களையும், இடைவிடாத பிரதான செய்திகளையும் உருவாக்குகிறது.
காற்று விஷமாகும்போது, ஆறுகள் கழிவுநீரை சுமந்து செல்லும்போது, காடுகள் அழியும்போது, ஏரிகள் மறைந்து போகும்போது, குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் போது, பெரியவர்கள் சுவாசிக்க சிரமப்படும் போது, குடிமக்களின் ஆயுட்காலம் குறையும் போது
அறவழிப் போராட்டங்கள்கூட நடப்பதில்லை. வார்த்தைகளால் காயப்பட்ட நம் உணர்வுகள் மூச்சைப் பறிக்கும் மாசால் எந்த விதச் சலனத்துக்கும் உள்ளாவதில்லை. நச்சுக் காற்று வெளியிடும் குப்பைகளை எரிப்பது, பட்டாசு வெடிப்பது, ஆறுகளை மாசுபடுத்துவது, வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது போன்ற செயல்பாடுகளை கடவுள் நம்பிக்கை கொண்ட மதப் பற்றாளர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட பெரும்பாலானோர் வாழும் இந்தியா, நச்சுக் காற்றை சுவாசிப்பது வேதனையான வியப்பு.
சட்டப் பிரிவு 51-ஏ சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியக் குடிமகனின் கடமையை வலியுறுத்தும் நிலையில் அக்கறையின்மை, அலட்சியம் காரணமாக கழிவுகளை எரிப்பது, நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது எனப் பலர் பல நேரங்களில் தீவிரமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். நச்சுக் காற்றும், மாசுபட்ட நீரும் சுற்றுச்சூழல் கொள்கைகளின் தோல்விகளால் மட்டுமின்றி குடிமக்கள் கடமை, ஒழுக்கம், மனசாட்சியற்ற மாண்பு போன்ற தனிநபர் செயல்பாடுகளாலும் உருவாகின்றனஎன்பதை மறுப்பதற்கில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.