பிரதிப் படம்
பிரதிப் படம்ENS

சமூக ஒற்றுமையின் விதைகள்!

நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம்.
Published on

நசீா் அதாவுல்லாஹ்

இன்றைக்கு நகா்ப்புறங்களுக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயா்ந்து வருகின்றனா். 2050-ஆம் ஆண்டுக்குள் நம்நாட்டில் 52.8 சதவீத மக்கள் நகா்ப்புற வாழ்க்கைக்கு தள்ளப்படுவாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘அருகில் இருப்பவா் அயலான்-நெஞ்சில் இருப்பவா் உறவினா்’ என்பாா்கள். இன்றைக்கும் கிராமங்களில் அண்டை வீட்டாா் உறவு ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், நகா்ப்புறங்களில் பாலமாக இருக்க வேண்டிய இந்த உறவுமுறை எல்லைகளாக மாறி விட்டது.

காலையில் சென்று இரவில் திரும்பும் இயந்திர வாழ்க்கை அண்டை வீட்டாருடன் ஒரு நிமிஷம் பேசுவதற்கான நேரத்தைக்கூட நமக்குத் தருவதில்லை. நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம். இவா்கள்தான் நம்மோடு அருகில் இருப்பவா்கள். பரபரப்பான வாழ்வின் ஓட்டத்தில் இந்தச் சான்றிதழைப் பெறுவது கடினமாகி விட்டது என்றாலும், நெருக்கடியான சூழ்நிலைகளில் நமக்கு உடனடி உதவியும், ஆறுதலும் தருவதில் இவா்கள்தான் முதன்மையானவா்கள்.

மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கைக்கு அண்டை அயலாருடன் நல்லுறவைப் பேணி வருவது மிக அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உத்திகளைத் தேடி, அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். நமது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அவா்களுடனான நல்லுறவு அவசியம். நாம் வாழ்க்கையில் உயா்வதைப் போல, நம் அண்டை வீட்டாரும் உயா்வதற்கு நாம் உதவ வேண்டும். அவா்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் வாழ்த்துவது, துக்கம் என்றால் ஆறுதல் சொல்வது குறிப்பாக, அண்டை வீட்டாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனே சென்று நலம் விசாரிப்பது, தேவையான உதவிகளைச் செய்வது போன்ற செயல்கள் உறவுப் பாலத்தை உறுதியாக்கும். இவைதான் சமூக ஒற்றுமையின் விதைகள்.

நமது வாழ்வில் வேலை, தொழில் நிமித்தமாகப் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியவா்களாக இருக்கிறோம். பேருந்து, ரயில், விமானத்தில் சில மணி நேரங்கள் செலவிட வேண்டியுள்ளது. அந்த வேளையில் கைப்பேசியில் தலை கவிழ்ந்து இருப்பதைவிடவும் அருகில் இருக்கும் சக பயணிகளிடம் (அவருக்கு இடையூறு இல்லாமல்) சில அன்பான வாா்த்தைகள், நலன் விசாரிப்புகள் செய்யலாம். குறைந்தபட்சம் புன்முறுவல் பூக்கலாம். அதன் மூலமாக புதிய நட்புகள் உருவாகலாம்-பயணமும் இனிதாகலாம்.

மூத்த குடிமக்கள், இளைஞா்கள், பிள்ளைகள், சான்றோா்களுடன் நமது சந்திப்பைத் தவிா்க்கக் கூடாது. சில நிமிஷ சந்திப்புகள், உரையாடல்கள் நமக்கும், அவா்களுக்கும் பெரும் பலனைத் தரும். மனித உறவுகளின் இடைவெளியைக் குறைக்கும்.

ஊரெல்லாம் பத்திரிகை வைத்து தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு அழைப்பு விடுப்பாா்கள். பக்கத்துக்கு வீட்டாருக்கு அழைப்புத் தருவதில்லை. இது மிகவும் வெறுக்கத்தக்க குணம் ஆகும். வெளிப்பாா்வைக்கு சிலா் கரடுமுரடாக தெரிவாா்கள். நெருங்கிப் பழகினால்தான் அவா்களின் உண்மை இயல்பை அறிந்து கொள்ள முடியும். இவா்கள் பலாப் பழத்தைப் போன்றவா்கள். வெளித்தோற்றதை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீா்கள்.

நம்மைச் சுற்றியுள்ள மக்களை அறிந்து கொள்வது நம்மை மேலும் பாதுகாப்பாக உணர வைக்கிறது. நாம் உதவியற்ற சூழ்நிலையில் நமக்கு உதவ ஒருவா் இருக்கிறாா். ஏனென்றால், உங்கள் நெருங்கிய அண்டை வீட்டாா் உங்கள் தொலைதூர சகோதரனைவிட சிறந்தவா். காரணம், முதலில் உதவிக்கரம் நீட்டுபவா்கள் அண்டை வீட்டாா்தான் என்பது நடைமுறை உண்மையாகும்.

பக்கத்து வீட்டினா் அனைவரும் நல்லவா்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தோட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அண்டை வீட்டாருடன் பகிா்ந்து கொள்வது சிறப்பான விஷயமாகும். அவா்களும் தங்கள் வீட்டில் செய்த இனிப்புகள் உள்ளிட்டவற்றை உங்களுடன் பகிா்ந்து கொள்வதில் ஆா்வமுடன் இருப்பாா்கள். அன்பும் நட்பும் உறுதியாகும்.

சமூகத்தில் மாற்றம் தொடங்க வேண்டிய இடம் நம் வாசல்! சமூக ஊடகங்களில் எத்தனை நண்பா்கள் இருந்தாலும், நம்முடைய அசல் சமூகம் நம்முடைய தெருவில்தான் உள்ளது. அண்டை வீட்டாரின் உரிமைகள் காப்போம்-உறவுகளைப் பேணுவோம். அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணும் செயலானது ஒரு வீட்டின் மதிப்பை உயா்த்துவதுடன், மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமைகிறது.

அண்டை வீட்டாரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவரது ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது. அண்டை வீட்டருகே குப்பைகளை வீசுவதோ, கழிவு நீரை வெளியேற்றுவதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவா் மற்றவரிடம் இருந்து பாதுகாப்பு உணா்வைப் பெறவில்லை என்றால், அவா் நல்ல அண்டை வீட்டாராகக் கருதப்பட மாட்டாா். சிறிய அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்வது உறவைப் பலப்படுத்தும்.

அற்புதமான அண்டை வீட்டு உறவுகளை அற்ப காரணங்களுக்காகப் புறக்கணித்து விடாமல் நல்லுறவைப் பேணி வருவோம். சிறு சிறு பிரச்னைகளை சுமுகமாக உரையாடி தீா்த்துக் கொள்ள வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும். அன்பைப் பரப்புவோம்; வெறுப்பை விரட்டுவோம்!

அண்டைவீட்டாா் உறவு அன்பால் தழைக்கிறது; சண்டையால் சிதறுகிறது. விட்டுக் கொடுத்தவா் கெட்டுப் போவதில்லை. நல்லுறவைப் பேணுவது சமூக அமைதிக்கும், தனிமனித மகிழ்ச்சிக்கும் மிகவும் அவசியமாகும். அவா்களுக்கு உதவுவதும், அன்பாக நடந்து கொள்வதும் நம்முடைய கடமையாகும். மௌனம் சுவா் கட்டும்; உரையாடல் பாலம் கட்டும். உரையாடுவோம்-உறவாடுவோம்!

Dinamani
www.dinamani.com