FOLLOW US

ON GOOGLE DISCOVER

கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

புராணப் பெண்களின் மகத்துவம்!

பெண்ணியம் என்ற கருத்தாக்கம் ஓர் உலகளாவிய கருத்தாக்கம் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

News image

சீதை - DNS

Updated On :10 ஜூலை 2026, 6:21 am IST

உலகம் நவீனமயமாகிக் கொண்டு வருகிறது. ஆண், பெண் சமத்துவம் குறித்த கருத்துகள் மிக அதிகமாகப் பேசப்படுகின்றன. பெண்ணியம் என்ற கருத்தாக்கம் ஓர் உலகளாவிய கருத்தாக்கம் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

பாரதத்தின் வரலாற்றிலும், புராணங்களிலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மட்டுமே இருப்பதான கருத்தும் பேசப்படுகிறது. புராணப் பெண் பாத்திரங்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.

புராணங்களில் ஆண் பாத்திரங்கள் அவர்களின் வீரம், ஆற்றல், வெற்றி இவற்றுக்காகக் கொண்டாடப்படுகிறார்கள். ராமரை தர்மவான் என்று போற்று கிறோம். கிருஷ்ணரின் ஆற்றல், ஞானம் ஆகியவற்றைப் புகழ்ந்து வணங்குகிறோம். அர்ஜுனனை வீரத்தின் அடையாளம் என்று கொண்டாடுகிறோம்.

தேசம் முழுவதும் சீதையை வழிபடுகிறோம். திரெüபதியை பட்டிதொட்டியெங்கும் தெய்வமாகக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம். பார்வதி தேவி உலகுக்கே அன்னை என்று வணங்கப்படுகிறாள். ஆனாலும், பாரதத்தில் பெண்கள் மிகுந்த துன்பங்களை, அடக்குமுறைகளை அனுபவித்தனர்; அடிமைத்தனத்தால் அவர்களின் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருந்தது என்று மட்டும் பேசுகிறார்கள். புராணப் பெண்களை துன்பத்தின் அடையாளமாக உருவகப்படுத்துகிறார்கள்.

நமது பாரம்பரியத்தில் பெண் தெய்வங்களை வணங்குகிறோம். தாயாக நம்மைக் காக்கும் சக்திகள் உருவகப்படுத்துகிறோம்.

"அஹல்யா திரெüபதி சீதா தாரா

மண்டோதரி ததா

பஞ்ச கன்யகா ஸ்மரென்னித்யம்

மகாபாதக நாசனம்'

என்று இந்தப் பெண்களை நினைத்தாலே அனைத்துப் பாதகங்களும் இல்லாதொழியும் என்று முன்னோர் கற்றுக் கொடுத்திருக்க, நாம் அவர்களைத் துன்பத்தின் அடையாளம் என்பது முன்னோர்களை அவமதிப்பதாகாதா?

புராணப் பெண்கள் துன்பத்தின் அடையாளமாக இன்றைக்குக் காட்டப்படுவது ஏன்? இதன் பின் இருப்பது புரிதலின்மையா?, அரசியலா?- ஏன் இத்தகைய கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது? இது திட்டமிடப்பட்டதா?, அதனால் யாருக்கு லாபம்? எனப் பல வினாக்கள் இருந்த போதிலும் நாம் விடை காண வேண்டியது இந்த வினாக்களுக்கு அல்ல. துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தப் பெண்களின் வாழ்க்கை அதைத் தாண்டி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் யாது?, இந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் எதை நிறுவியிருக்கிறார்கள் ஆகிய வினாக்களுக்கு விடை காண்பதுதான்.

சீதையை துயரத்தின் வடிவம் என்றே இன்றைக்கு நம்ப வைக்க முயல்கிறார்கள். ஆனால், சீதை சுய மரியாதையின், வைராக்கியத்தின் வடிவம். சீதையின் வனவாசம் குறித்துப் பேசுகையில், பெண் புறக்கணிக்கப்பட்டதாகவும், கைவிடப்பட்ட அபலை போலவும் காட்டுகிறார்கள். ஆனால், சீதை பிறரின் அங்கீகாரத்தைவிட கண்ணியத்தை தனக்கானதாகக் கருதினாள்.

வனவாசத்துக்குப் புறப்படும் போது சுய விருப்பத்தால் புறப்படுகிறாள். வஞ்சகத்தால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறைவைக்கப்பட்ட போதும் மன உறுதியை சற்றும் கம்பீரம் குறையாமல் வெளிப்படுத்துகிறாள். உத்தரகாண்டத்தின் முடிவில், மீண்டும் நாடு திரும்பச் சொல்லி மன்றாடுகிறார்கள்; ஆனால், உறுதியாக அதை மறுத்து விடுகிறாள் சீதை.

தனது கண்ணியமும் மரியாதையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டபோது, பிறர் தனது மதிப்பை நிர்ணயிக்க அனுமதிக்காத சுயமரியாதையைத் தேர்ந்தெடுத்த கம்பீரமான பெண் என்பது சீதையின் பிம்பம். எந்தச் சூழ்நிலையிலும் தனது தீர்மானங்களில் எவ்விதத் தளர்வையும் சமரசத்தையும் காட்டாத பெண் என்பதே பாரதப் பெண்கள் சீதையிடம் கற்றுக் கொள்ள வேண்டியது.

திரெüபதியின் வாழ்க்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது. அரசவையில் திரெüபதி அவமதிக்கப்பட்ட சம்பவம், மகாபாரதத்தின் மையம். திரெüபதி சபை நடுவே அவமானப் படுத்தப்பட்டாள் என்பதைத் தாண்டி ஆழமாகச் சிந்திக்கவும் தெளிவு பெறவும் அதிகம் இருக்கின்றன.

திரெüபதி அந்த அவமானத்தைத் தனது அடையாளமாக ஒருபோதும் அனுமதிக்கவில்லை. துணிவுடன் தனியே நின்று அநீதியைத் தட்டிக் கேட்டாள், பொறுப்புகளை வலியுறுத்தினாள். சூழ்நிலை மிகக் கடினமானதாக இருந்தபோதிலும் துளியும் அச்சம் அற்றவளாக எதிர்கொண்டாள்.

"கெüரவ வேந்தர் சபைதன்னில் - அறங்

கண்டவர் யாவரும் இல்லையோ?-மன்னர்

செüரியம் வீழ்ந்திடும் முன்னரே-அங்கு

சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?'

என்ற உறுதியான நீதியின் குரல் அவளுக்கு இருந்ததை மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்தில் பாடுகிறார். மேலும், "பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்று மாபெரும் அரசுக்கு எதிராக தனது போர்க்குணத்தை வெளிப்படுத்துகிறாள்.

"இன்பமுந் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம்' என துன்பத்துக்குக் கலங்காத உறுதி திரெüபதிக்கு இருந்ததை மகாகவி பாரதியார் அவள் மொழி வழியாகவே காட்டுகிறார்.

தனிப்பட்ட தனது துயரத்தை நீதிக்கான அழைப்பாக மாற்றி தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்து தனக்கான நீதியை நிலைநாட்டிக்கொண்ட பெண் திரெüபதி.

அதிகாரத்தின், அநீதியின் கோரப்பிடிக்கு சரணடையாத அவளது வலிமையே அவளுக்கான அடையாளம், நமக்கான பாடம்.

மாதா பார்வதியின் கதையை பெண்களுக்கான நிராகரிப்பு என்ற கண்ணோட்டத்தில் தற்போது அணுகுகிறார்கள். பக்தி, ஒழுக்கம், இலக்கை அடைவதில் அவருக்கு இருந்த உறுதி, சிவனுக்கு நிகரான சக்தியாக பொறுமை, தவம் இவற்றால் உயர்ந்து உச்ச ஸ்தானத்தைப் பெற்று எவராலும் நிராகரிக்கப்பட முடியாத நிலையை எட்டுகிறார். பிறரை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுய முயற்சியால் தன்னை வடிவமைத்துக் கொள்ளும் சிறந்த பெண்மையின் வடிவம் பார்வதி தேவி.

உண்மையான சக்தி, சுயக் கட்டுப்பாட்டிலிருந்தும், வளர்ச்சியிலிருந்தும் தனது இலக்கின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்தும் உருவாகிறது என்பதே உலக அன்னையான பார்வதி தேவியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது.

வலிமை என்பது துன்பங்களை சகித்துக்கொண்டு வாழ்வதல்ல; கடினமான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்து நிற்பது அல்ல. அந்த அனுபவங்களை ஞானமாகவும், துணிச்சலாகவும், வாழ்க்கையின் நோக்கத்தைத் தீர்மானிப்பதாகவும் மாற்றி நெறிப்படுத்திக் கொள்வதாகும்.

சீதை, திரெüபதி, பார்வதி என ஒவ்வொரு புராணப் பெண் பாத்திரங்களும் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டன. ஆனால், அவர்களில் யாருமே சுய பச்சாதாபத்தை அனுமதிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையானது, துன்பங்களும் சவால்களும் நம்மைக் கட்டுப்படுத்தும் தடைகள் அல்ல, வளர்ச்சியின் வாய்ப்புகள் என்று கற்றுக் கொடுக்கின்றன.

ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்துவமான கலாசாரமும் பண்பாட்டு மரபுகளும் இருக்கின்றன. பெண்ணியம் என்ற மேலை நாட்டு சித்தாந்தம் பொதுமையானதாக உலகம் முழுமைக்கும் வழிகாட்ட முடியாது. நமது தேசத்தைப் பொருத்தவரை நாம் பரம்பரையை, பாரம்பரியத்தை நம்புகிறவர்கள். முன்னோர்களின் ஞானத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் வகுத்துத் தந்த பாதையைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே போதும்; நன்மைகள் விளையும்.

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில், நாம் ஒருவரின் துன்பங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது நம்மை அறியாமலே அவர்களின் மகத்துவத்தைச் சிறுமைப்படுத்தி விடுகிறோம். "துன்பத்தில் பலியானவர்கள்' என்ற பார்வை, அவர்களின் துணிவு, அறிவாற்றல், தலைமைத்துவம், மன உறுதி போன்ற உயர்ந்த பண்புகளை மறைத்து விடும்.

புராணங்களின் வழியாக இன்றைக்கும் நிலைபெற்றிருக்கும் மகத்தான பெண்கள், அவர்களின் வாழ்க்கை கொடுமையாக இருந்ததற்காக நினைவுகூரப்படவில்லை. அந்தக் கொடுமைகளை அசாதாரண வலிமையுடனும் கண்ணியத்துடனும் கடந்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதற்காக நினைவுகூரப்படுகிறார்கள்.

சீதை முதலான பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை விமர்சித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்ற புரிதலை வளர்ப்பதே அவசியம். அப்போதுதான் அவர்களின் மகத்துவம் புரியும். அவர்களின் பாரம்பரியம் நமக்குள் வாழ்கிறது. நாம் வரலாற்றை எப்படி நினைவுகூர்கிறோம் என்பது, நம்மை நாமே எவ்வாறு பார்க்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.

வாழ்க்கை கடினமான காலங்களையும், சவால்களையும் பாரபட்சமின்றியே வழங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பாடம் தொடர்ந்து தலைமுறைகள் தாண்டி வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

இன்றைய உலகில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. துன்பங்களுக்காகப் புலம்பி கழிவிரக்கத்தோடு கூட்டத்தில் ஒருவராக மடியப் போகிறோமா? அல்லது அவற்றைக் கடந்து உயர்ந்து நமக்கான அடையாளத்தை நிலைநிறுத்தப் போகிறோமா? இந்தப் புரிதலுடன் புராணங்களை மீள் வாசிப்பு செய்தால் புராணங்களின் பெண்கள் மகத்தான சாதனையாளர்கள் என்ற உண்மை விளங்கும்.

உண்மையான மகத்துவம் சவால்களைத் தவிர்ப்பதில் இல்லை; அவற்றைத் தாண்டி உயர்ந்து நிற்பதில்தான் உள்ளது என்ற சுய முன்னேற்றப் பாடத்தை இனி நாம் ஏன் வெளிநாட்டுப் புத்தகங்களிலும் சித்தாந்தங்களிலும் தேட வேண்டும்?

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.