அனைத்து ஞானம், தத்துவத்தைவிட இசையே மிக உயர்ந்த வெளிப்பாடு - லுத்விக் வான் பீத்தோவன்
ஒன்பதாம் வகுப்பு படிக்க ரூ. 25 இல்லாத பண்ணைப்புரத்துச் சிறுவன் பணத்துக்காகப் பல்வேறு வேலை செய்து, அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் படிப்பை தொடருவதாக திட்டம் தீட்டுகிறான். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையைப் பாடல் மூலமாகப் பரப்புரை செய்யும் அவனது அண்ணனுக்கும் (பாவலர்) அவரது டிராமா குரூப்பில் ஹார்மோனியம் வாசிப்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அங்கு ஒரு வெற்றிடம் உருவாக, அந்த வாய்ப்பு எதேச்சையாக ஞானதேசிகன் என்ற அந்தச் சிறுவனுக்குக் கிடைக்கிறது.
சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கும் கூட்டத்தில் அந்தச் சிறுவனுக்குக் கிடைத்த கைதட்டல் அவனை அத்துடன் அவனது ஒன்பதாம் வகுப்பு என்ற கனவுக் கோட்டையை தகர்க்கிறது. புகழ்ச்சிக்கு மயங்காதவர் எவர்? 13 வயதுச் சிறுவன் மயங்கமாட்டானா?
பின்னர் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தலைவர் ஒருவர் இவருக்கு தங்குவதற்கு வீடு தர மறுக்கவே எழுந்த கோபத்தில், சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று இசைஞானி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கும் அந்தச் சிறுவன்தான் ஞானதேசிகன் - டேனியல் ராசய்யா - ராசய்யா - ராஜா - இளையராஜா என்று பரிணமித்து இருக்கிறார்.
"இசை எப்படி உருவாகிறது என்று எனக்குத் தெரியவில்லை; அது தெரிந்தால் அன்றே இசையமைப்பதை நிறுத்திவிடுவேன்" என்று இளையராஜா நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இது கிட்டத்தட்ட படைப்புகளை உருவாக்குபவர்கள் எல்லோருக்கும் இருக்கும் மனநிலைதான். எழுத்தாளரும் கவிஞருமான பிரமிள் கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
திமிங்கிலம் பிடிக்க
கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்.
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்.
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று புயல்.
நீர் சுழன்று குழிந்து
பிடிபட்டது பிரளயம் (1976)
இளையராஜாவின் வாழ்க்கையும் அவரது இசைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரு கவிதை பிறப்பது போல எதேச்சையாகவே நிகழ்ந்திருக்கிறது. கீபோர்ட்டில் சி மேஜர் ( C major) என்பதுகூட என்னவென்றே தெரியாமல் அவர் ஆயிரக்கணக்கான மேடையில் இசையமைத்திருக்கிறார். அதை முறையாகப் பயிலும்போது "ஓ, இதற்கு பெயர்தான் சி மேஜரா? இது எனக்கு முன்னமே தெரியுமே!" என்று வியப்படைந்திருக்கிறார்.
இலக்கணங்களுக்கு முன்பே இலக்கியம் உருவாகியிருக்கும் என்று கருத்துருவாக்கம் இளையராஜா விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.
மேடையில் கைதட்டல் பெற்ற சிறுவனுக்கு நாள்கள் போகப்போக ஒன்று புரிந்திருக்கிறது. அவனுக்கு வரும் கைதட்டல் அவனுக்கானது அல்ல; அவன் இசைக்கும் அந்தப் பாடலுக்கானதென. அதனால் தானும் இசை பயில வேண்டுமென நினைக்கிறான். சூழ்நிலையும் அவனை சென்னை நோக்கி அனுப்புகிறது.
தன்ராஜ் மாஸ்டர், சலீல் சௌத்ரி, ஜி.கே. வெங்கடேஷ் என்ற மேதைகளிடம் இசையைக் கற்று 1975-ல் பஞ்சு அருணாசலம் மூலம் 'அன்னக்கிளி' திரைப்படத்தில் இசையமைப்பாளர் 'இளையராஜா' என்ற பெயருக்கு வருகிறார். முதல் படத்தின்போதும் அவர் உதவியாளராக தன்ராஜ் மாஸ்டரிடம் வேலை செய்கிறார்.
தன்ராஜ் மாஸ்டரிடம் பயிலும்போது தான் கற்றுக்கொண்ட மேற்கத்திய இசையில் வரும் கிளாசிக்கான ஒரு ட்யூனை நாட்டுப்புற பாடலாக மாற்றி, பெண் குரலில் "மச்சானப் பாத்தீங்களா" என்று தனது முதல் பாடலிலே மேற்குமலை வெள்ளமெனத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்தப் பாடலுக்கு எப்படி இசையமைப்பது என்று மெரினா கடற்கரையில் நடந்துகொண்டே சிந்திக்கிறார். பெண்ணின் விரக தாபம் என்பதால் ஒரு ஹம்மிங்கில் இருந்து தொடங்குகிறார்.
முதல் பல்லவிக்கு இசையை உருவாக்கியதும் இரண்டாவது பல்லவிக்கு என்ன இசையமைப்பது என்று குழம்பியிருக்கிறார். பின்னர், அந்தப் பாடலுக்கான காட்சிகளை இவரே சிந்தித்து பாடல் வரிகளில் இருந்து இசையை நதிகளின் அலையை மையப்படுத்தி உருவாக்கினார்.
ஒரு பாடலுக்கு இசையமைப்பது என்பது அந்தக் காட்சியில் இருந்தே வருகின்றது (அவரது கற்பனையில் வரும் காட்சி) என்பதைத் தனது முதல் பாடலிலேயே கற்ற இளையராஜா அதுவே தனது தாரக மந்திரமாகவும் மாற்றியிருக்கிறார். பல படங்கள் இவரது பாடலுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் தான்தான் முதலில் நாட்டுப்புற பாடலை சினிமாவில் பயன்படுத்தவில்லை; பட்டுக்கோட்டை போன்ற பலர் முன்னோடியாக இருந்தார்கள் என்பதையும் ராஜா ஒப்புக்கொள்கிறார். ஒவ்வொரு பாடலும் எப்படி உருவாகியதென அவரே சொல்லும் விடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக்கிடக்கின்றன.
ஒருகட்டத்தில் பாடல் பெரிதா, இசை பெரிதா என்று சர்ச்சை வருகிறது. வைரமுத்துவுடன் 1985 வாக்கில் கருத்து வேறுபாடு வருகிறது. புன்னகை மன்னன் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பயணிக்கவே இல்லை. இந்தப் பிரச்னைதான் ராஜாவை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
பாடலே இல்லாத 'How to name it' என்ற தனது முதல் இசை ஆல்பத்தை 1986-ல் வெளியிட்டார். பின்னர், 1988ல் 'Nothing but wind', 2022-ல் 'How to name it - 2' வரை வந்து 2026-ல் தனது முதல் சிம்பொனியை அறங்கேற்றுகிறார். இடையில் திருவாசகத்துக்கு இசையமைப்பது வெண்பா எழுதுவது என்றும் பிஸியாக இருக்கிறார். தற்போது இரண்டாவது சிம்பொனியையும் எழுதி வருகிறார்.
பாடல் வரிகளுக்கு முன்பாக வரும் (ப்ரீலூட்) இசைத் துணுக்கு, பாடல் வரிகளுக்கு இடையே வரும் (இன்டர்லூட்) இசைத் துணுக்குகளை ஒன்று சேர்த்தாலே ராஜாவின் பலம் என்னவென்றும் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்னவென்றும் புரியும்.
சமீபத்தில் எழுந்த காப்புரிமை விவகாரத்திலும் இளையராஜாவை பலரும் ஆர்ஜே பாலாஜி மாதிரி நுண்ணுணர்வே இல்லாமல்தான் காசுக்காக செய்கிறார் என்று விமர்சிக்கிறார்கள். பல அறிமுக இயக்குநர்களுக்கு காசு வாங்காமலே இசையமைத்தவர்தான் இளையராஜா. இப்போதும் அவர் கேட்பது அவரிடம் நேரில் சென்று ஒரு அனுமதி மட்டுமே. பல பேர் அவரிடம் சென்று ஒரு பைசா காசில்லாமல் பல பாடல்களைப் பயன்படுத்தி வருகிற நடைமுறையும் இருக்கிறது.
ஒருமுறை பழைய மாதிரியான பாடல் வேண்டும் என்று ஹிந்தி பட இயக்குநர் கேட்க," ஒரே இடத்தில் எதற்கு ஓட வேண்டும்? அது பயணம் ஆகாது" என்றார். இதுவரை கார்த்திக் சுப்புராஜ் படத்தோடு 1,540 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிதான்; புதிய தேடல்தான்.
ஜென்ஸி காலம் வந்துவிட்டது. இளையராஜா இசையெல்லாம் எடுபடுமா என்பவர்களுக்கு மாடர்ன் லவ் படத்தில் வரும் தேன் மழையோ என்ற பாடலும், விடுதலை 2 படத்தில் (ராப் பாடகர் யோகியை வித்தியாசமாக உபயோகித்திருப்பார்) வரும் பொருத்தது போதும் பாடலும் சாட்சி.
பாடலை விடவும் இளையராஜாவின் பலம் பின்னணி இசையில்தான் இருக்கிறது. உதிரிப் பூக்கள் படத்தில் சிறுவன் வந்து அம்மாவிடம் அப்பா இன்று தியேட்டர் கூட்டி செல்கிறார் என்றதும் நாயகியின் அக மகிழ்வும் இறுதிக் காட்சியில் வரும் எபிக் காட்சிக்கான இசையையும் என்னவென்று சொல்வது?
வீடு படத்தில் புதியதாகக் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டில் கால் வைக்கும் அந்த தாத்தாவின் அக மகிழ்வை இசையால் உணர்த்தியிருப்பார்.
மூடுபனி படத்தில் வில்லனுக்குக் கடைசி காட்சியில் வரும் தாலாட்டுப் பாடலில் இதுவரையான அனைத்து பிம்பமும் உடைக்கப்பட்டிருக்கும். இதுமாதிரி சேது, நந்தலாலா, நாயகன், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என ஓராயிரம் இடங்களை நம்மால் பின்னணி இசையில் மட்டுமே குறிப்பிட்டுக் காட்ட முடியும்.
விடுதலை 2 படத்தில் முதல்முறையாகப் பட்டியலின மக்கள் ஆதிக்க சாதி வீட்டில் காலடி எடுத்து வைக்கும் காட்சிக்கு இளையராஜா ஒரு பின்னணி இசை அமைத்திருப்பார். தி ரிவொலுஸ்னரி அண்ட் தி சிம்ளிடன் (The Revolutionary and the Simpleton) என்ற அந்த இசை நமது நரம்புகளைப் புடைக்க வைக்கும். வழக்கமான இசைக்கருவிகள் மட்டுமல்லாமல் பல புதிய இசைக்கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியவராக இளையராஜாவே இருக்கிறார்.
ராஜாவை அவரது அரசியல் கருத்துக்காகவும் வலதுசாரி, ஆன்மிக சிந்தனைகளுக்காகவும் பலர் விமர்சிப்பதுண்டு. கலையில் அரசியல் சரித்தன்மையை குறிப்பாக இசையில் பார்க்கக் கூடாது என்கிறார் இளையராஜா. இதையெல்லாம் பார்த்து பார்த்து செய்தால் அது கலையாகவே இருக்காது என்றும் ஏதோ ஃபார்முலாக்கள் அடங்கிய பிஸினஸ் போல இருக்கும் என்கிறார்.
"இயல்பு தன்மையின் அழகுணர்ச்சி கெடாமல் ஒரு வரைமுறைக்குள் வருவதுதான் உண்மையான கலையாக இருக்க முடியும். உயர்ந்த இசை எப்படியும் தன்னை இலக்கணத்தில் அடக்கிக் கொள்ளும்" என்கிறார்.
இலக்கணங்களை அறிந்து அதை மீறுவதில் தவறில்லையே? இல்லையெனில் எப்படி பஞ்சமுகி என்ற ராகத்தை இளையராஜா உருவாக்கி இருக்க முடியும்? புதியதை முயற்சி செய்வது மட்டுமே ராஜாவின் வாழ்நாள் ஈடுபாடாக இருக்கிறது.
ஒருகட்டத்தில் புதியவர்கள் வருகையால் தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு சிறிய தேக்கம் நேரிட்டாலும் ராஜா ஓய்ந்துவிடவில்லை. தினமும் தனது அலுவலகத்திற்குச் சென்று இசையில் பயிற்சி செய்வார். ’வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு’ என்ற குறள் போல இளையராஜாவின் விடாமுயற்சிதான் அவரை இந்த வயதிலும் சிம்பொனி எழுத வைக்கிறது.
ராஜா தனது இசை ஆர்வத்தையும் தாண்டி இதெல்லாம் அன்னை மூகாம்பிகை கொடுத்த வரம் என்கிறார். ”நான் இசைக்கவில்லை அவள்தான் என் மூலமாக இசைக்கிறாள்” என்கிறார். என்னைக் கேட்டால், இவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் தொடர் பயிற்சியும் செய்து கொண்டிருந்தால் மூகாம்பிகை மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சமே அவருக்குத் தேவையான அற்புதத்தை நிகழ்த்தும்!
சிறிய வயதில் புல்லாங்குழலை அவரே மூங்கிலில் செய்திருக்கிறார். அதில் வரும் ஒவ்வொரு துளைக்குமான இடைவெளி குறித்த புரிதல் இன்றியுமே அதை உருவாக்கி இருக்கிறார். ஹார்மோனியம் மீது கை வைத்தால் அண்ணனிடம் அடி வாங்கும் ராசய்யா அவர் இல்லாத சமயத்தில் மட்டுமே பயிற்சி எடுக்கிறார். மற்ற நேரங்களில் கவனிப்பு மட்டுமே. தூக்கத்திலும் கைகளால் ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பதைக் கவனித்த அம்மாதான் அவரை அண்ணனுடன் செல்லுமாறு பாதையை மாற்றியிருக்கிறார். ஹார்மோனியம் வாசிக்க ஆள் இல்லாதபோது அம்மாதான் இவரைப் பரிந்துரைக்கிறார். சென்னை செல்லத் தனது நகையை விற்று, மொத்த பணத்தையும் கொடுத்திருக்கிறார். மூகாம்பிகைக்கு முன்பாக அவரது தாயே அவருக்கான பாதையை உருவாக்கியிருக்கிறார்!!
பிரமிள் எழுதிய கவிதையில் வருவது போல இளையராஜாவின் பேச்சுகள் சில நேரம் கிண்டல் செய்யப்பட்டாலும் அவர் உருவாக்கிய ஒவ்வொரு இசைத் துணுக்கும் பாடலும் நமக்குச் சொல்வது என்னவென்றால் தன்னம்பிக்கையும் அயராத உழைப்பும் இருந்தால் தூண்டிலும் துளிர்த்து நம்மிடம் புயலும் வசமாகிப் பிரளயமும் பிடிபடும்!!!
Summary
On Composer Ilaiyaraaja's birthday, writings were published regarding his musical journey and his music.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகதேவனின் இசையும் இசைக்குழுவும் போற்றுதலுக்குரியதே...
ஜென் ஸீ தலைமுறையினரிடையே இளையராஜா!
'இளையராஜா' என்ற பெயர் எப்படி வந்தது? இளையராஜாவே சொன்ன தகவல்!
இளையராஜாவின் முதல் சிம்பொனி! விரைவில் அனைத்து தளங்களிலும் வெளியீடு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



