மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

உளவறிந்து ஆளும் அரசு

மாநில உளவுத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதும், அதற்கான விலையைத் தேர்தலில் அவர்கள் கொடுக்க நேரிட்டதையும் அண்மைக்கால அரசியல் வரலாறு வெளிப்படுத்தியதையும் பற்றி...

News image

உளவறிந்து ஆளும் அரசு - படம்: செய்யறிவு

Updated On :20 ஜூலை 2026, 4:00 am IST

மனித நாகரிகம் உருவான காலம் முதற்கொண்டு, உலக நாடுகளில் ஆட்சி புரிந்துவந்த அரசர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஒற்றர்கள் என்றழைக்கப்பட்ட உளவாளிகளை நியமித்திருந்தனர். ஒரு நாட்டின் வலிமை அதன் படைபலத்தின் வலிமையை மட்டும் பொருத்து அமையாது. அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அரசின் உளவுத் தகவல் திரட்டும் திறமையைப் பொருத்தே அமையும் என்பதை உணர்த்தும் சம்பவங்கள் பல உண்டு.

'திறமையான ஒற்றர்கள் சேகரித்து தரும் உளவுத் தகவல்களும், அறநூல்கள் கூறும் அறிவுரைகளும் நல்லாட்சி நடத்த விரும்பும் அரசனின் இரு கண்கள் போன்றவை' என ஒற்றாடல் என்ற அதிகாரத்தில் உளவறிதலின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். ஓர் ஒற்றர் அளிக்கும் உளவுத் தகவல்களை மற்றொரு ஒற்றர் மூலம் சரிபார்த்து செயல்பட வேண்டும்; ஓர் ஒற்றரின் அடையாளம் மற்றொரு ஒற்றருக்குத் தெரியாதவாறு ஒற்றர்கள் கையாளப்பட வேண்டும் என உளவறிதலின் அடிப்படைக் கொள்கைகளை திருக்குறள் சுட்டிக்காட்டுகிறது. வர்த்தகம் செய்ய 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த பிரிட்டிஷார்கள் காலப்போக்கில் இந்தியாவை பிரிட்டிஷ் காலனி நாடாக மாற்றினர்.

வர்த்தக வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்திய அவர்கள், தங்களது ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்களின் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் முன்கூட்டியே கணிக்கத் தவறினர். அதன் விளைவாக, 1857-ஆண்டில் சிப்பாய்களின் கலகத்தை பிரிட்டிஷ் அரசு எதிர்கொள்ள நேரிட்டது. இந்திய மக்களின் மனநிலையையும், உணர்வுகளையும் முன்கூட்டியே அறிந்து, அதைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவுதான் சிப்பாய் கலகம் என்றும், இந்திய மக்களின் கருத்தோட்டத்தை முன்கூட்டியே உளவறிந்து, தெரியப்படுத்துகிற உளவு அமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. இந்தச் சூழலில், இந்தியாவைத் தங்களது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்க துணைபுரியும் விதத்தில், புதிய காவல் அமைப்பை 1861-ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் ஏற்படுத்தினர்.

இந்த காவல் அமைப்பில் சி.ஐ.டி. என்றழைக்கப்படும் உளவுத் துறைக்கான வடிவம் கொடுக்கப்பட்டது. மேலும், இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்காக 1887- ஆம் ஆண்டில் 'மத்திய சிறப்புப் பிரிவு' ஒன்றை பிரிட்டிஷ் அரசு அமைத்தது. இவையே தற்போது இந்திய மாநிலங்களில் செயல்பட்டுவரும் மாநில உளவுத் துறை மற்றும் ஐ.பி. எனப்படும் மத்திய உளவுத் துறை ஆகியவற்றுக்கான அடித்தளமாக அமைந்தன. சுதந்திர இந்தியாவில் முதல் 20 ஆண்டுகளில் மத்திய, மாநில உளவுத் துறைகள் இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு போன்ற தேசத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகள் குறித்த உளவுத் தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டன.

காலப்போக்கில் மத்திய, மாநில அரசுகள் தங்களது அரசியல் எதிரிகளை உளவறிந்து கண்காணித்து, அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முடக்கும் பணியில் உளவுத் துறையை ஈடுபடுத்தத் தொடங்கின. தமிழக முதல்வராக மூன்று முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் மாநில உளவுத் துறை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், அரசியல் சார்ந்த முடிவுகளை முதல்வருக்கு எடுத்துரைக்கும் அமைப்பாகவும் செயல்பட்டது.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி, அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியிலும் மாநில உளவுத் துறை ஈடுபடுத்தப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களுடன் எம்.ஜி.ஆர். நெருங்கிப் பழகினாலும், அரசின் பல முடிவுகளை முதல்வர் சார்பாக மாநில உளவுத் துறையின் தலைவராக இருந்த கே.மோகன்தாஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த மு.கருணாநிதி, உளவுத் தகவல்களைத் திரட்டுவதில் தனக்கென்று ஒரு தனி பாணியைக் கடைப்பிடித்தார். அனைத்து செய்தியேடுகளை தினமும் படிப்பதுடன் மட்டுமின்றி, அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள, செய்தியாளர்களை தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு கள நிலவரத்தை அறிந்துகொள்ளும் பழக்கமுடையவர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு, கள நிலவரத்தை நேரடியாக அவர் அறிந்துகொண்ட சம்பவங்களும் உண்டு. இவர் முதல்வர் பதவி வகித்த காலங்களில், உளவுத் துறை தலைவரைத் தினமும் சந்தித்து, உளவுத் துறையினர் திரட்டிய தகவல்களை அறிந்து கொள்வார். அதேசமயம், களப்பணியாற்றும் கட்சியினரிடமும் நாட்டு நடப்புகளைக் கேட்டறிய அவர் தயங்கியதில்லை. தமிழக முதல்வராக 14 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஜெ.ஜெயலலிதா, மாநில உளவுத் துறை சேகரித்து தரும் தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக உளவுத் துறையின் ஆலோசனைகளை அவர் உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டார். உளவுத் துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில், கட்சியின் உயர்நிலை பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த சம்பவங்களும் உண்டு. எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்க உளவுத் துறையை அவர் பயன்படுத்திய சம்பவங்களும் உண்டு. முதல்வரின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டு, முதல்வரின் நிர்வாகத்தை மேம்படுத்த வழிகாட்டுவது மாநில உளவுத் துறையின் முக்கியக் கடமையாகும்.

அதே சமயம் அரசின் உயரதிகாரிகள் எவரேனும் தவறான பாதையில் நிர்வாகத்தை நடத்திச் சென்றால், அதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டியதும் உளவுத் துறையின் கடமையாகும். நேர்மை, திறமை மற்றும் அனுபவமிக்க உயர் காவல் துறை அதிகாரிகள் உளவுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டு வந்தனர். காலப்போக்கில், ஆளும் கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் காவல் அதிகாரிகள் மாநில உளவுத் துறையின் தலைவர்களாக நியமிக்கப்படும் கலாசாரம் தொடங்கியது. இதன் விளைவாக, மாநிலத்தின் நீண்ட கால நலன்கள் புறந்தள்ளப்பட்டு, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் குறுகியகால சுயநலம் சார்ந்து அரசு நிர்வாகம் செயல்படும் சூழல் ஏற்படத் தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக சில அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் செலவு செய்து, தனியார் உளவு நிறுவனங்கள் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர்களை ஏற்பாடு செய்துகொள்ளும் நடைமுறை கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டில் நிலவிவருகிறது. இவர்கள் மீதான அபரிமிதமான நம்பிக்கையின் காரணமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிலர், மாநில உளவுத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதும், அதற்கான விலையைத் தேர்தலில் அவர்கள் கொடுக்க நேரிட்டதையும் அண்மைக்கால அரசியல் வரலாறு வெளிப்படுத்துகிறது.

நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் எப்போதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதுதான் நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்கும். இவற்றின் செயல்பாடுகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது நாட்டின் நலனுக்கு உகந்ததாக அமையாது. அதே போன்று, மாநில அரசும் தனியார் உளவு நிறுவனங்களின் ஆலோசனையின்படி செயல்படுவது மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரியாது.

உளவுத் தகவல்களை எப்படி திரட்ட வேண்டும் என்பது குறித்த பயிற்சி காவல் துறையினருக்கு கடந்த காலத்தில் முறையாகக் கொடுக்கப்பட்டது. அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் உளவுத் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். காலப்போக்கில் ஆளும்கட்சியினரின் பரிந்துரையின் பேரில் உளவுத் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை பின்பற்றத் தொடங்கியது. இதனால், உளவுத் துறையின் தரம் குறைந்ததுடன், தனியார் உளவு நிறுவனங்கள் மாநில

அரசின் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தவும் ஏதுவாக அமைந்தது. உளவுத் தகவல்களைத் திரட்டுவதில் தமிழ்நாடு மாநில உளவுத் துறை திறன் வாய்ந்தது மட்டுமின்றி, ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையுடன் தமிழ்நாடு காவல் துறை ஒப்பீடு செய்யப்படுவதுண்டு. கையூட்டு இல்லாத தூய்மையான அரசு நிர்வாகத்தை நடத்த விரும்பும் தமிழ்நாடு முதல்வர், மாநில உளவுத் துறையைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து, உளவுத் துறை திரட்டும் தகவல்கள் குறித்து உளவுத் துறை தலைவரிடம் கலந்தாலோசித்து செயல்படுவது, மாநில அரசின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.