எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாற்றம் பெறும் கேரளம்!

இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்கள், பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

News image
கேரளம்- ENS
Updated On :9 மார்ச் 2026, 10:49 pm

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

இ ந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, கடவுளின் தேசம் என உலக மக்களால் அறியப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி கேரளம் எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும், முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், நிர்வாக வசதிகளின் அடிப்படையில் மொழிவழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை எழுந்தது. ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதி 1.10.1953 அன்று மெட்ராஸ் மாநிலத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, பிற மொழி சமூகங்களும் தங்களுக்கென தனி மாநிலங்கள் கோரின. ஆந்திரம் 1956-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசமாக மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாநில மறுசீரமைப்புச் சட்டம், 31.8.1956 அன்று நிறை வேற்றப்பட்டு, 1.11.1956 அன்று அமலுக்கு வந்தது. இது இந்தியாவின் மாநில எல்லைகளை மொழியின் அடிப்படையில் மறுசீரமைத்தது. ஃபசல் அலி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 ஒன்றியப் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அந்த வகையில் 1.11.1956 அன்று மலையாள மொழி பேசும் மக்களுக்காக, தனி மாநிலமாக கேரளா உருவாக்கப்பட்டது. கேரளா மக்கள் இந்த தினத்தை ’கேரள பிறவி' தினம் எனக் கொண்டாடுகிறார்கள்.

இந்திய அரசமைப்பு சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும், கேரளா மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அந்த மாநில சட்டப்பேரவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-இன் கீழ், கடந்த 9.8.2023 அன்று மாநில முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது கேரள அரசு. இதை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பிறகு, மீண்டும் கடந்த 24.6.2024 அன்று கேரளா என்ற பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கேரள சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்தச் சூழ்நிலையில், 24.2.2026 அன்று புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கேரளாவின் பெயரை மலையாள மொழிப்படி, 'கேரளம்' என மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, அரசமைப்பின் மூன்றாவது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, அதிகாரபூர்வமாக கேரளாவின் பெயர், 'கேரளம்' என அறிவிக்கப்படும்.

கேரளாவின் பெயரை "கேரளம்' என மாற்றுவது மாநிலத்தின் பாரம்பரியத்தை அதன் அசல் தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், மாநிலத்தின் பெருமையை, அதன் பண்டைய கலாசார தன்மையையுடன் உணர்த்தும் ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

கேரளம் என்ற பெயர், மாநிலத்தின் பாரம்பரியத்துடனும், கலாசாரத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், கேரா என்பது தென்னை மரத்தையும், ஆளம் என்பது நிலத்தையும் குறிக்கிறது. இந்த இரு சொற்களில் இருந்து உருவானது தான் கேரளம். அதாவது, தென்னை மரங்களின் நிலம் எனப் பொருள்படும். சொற் பிறப்பியல்ரீதியாக அறிஞர்கள், இதை சேர் மற்றும் ஆலம். அதாவது கடலால் சூழப்பட்ட நிலம் எனப் பெயர் காரணத்தையும் குறிப்பிடுகின்றனர்.

கேரள பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ஷாஜி, கேரளா என்பது காலனித்துவக் கால எழுத்துப் பிழையாகும். பிரிட்டிஷார்களால் எம் அல்லது என் உடன் முடியும் பெயர்களைக் கொண்ட சொற்களை உச்சரிக்க முடியாது. எனவே, அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப இதை மாற்றினர். ஆனால், மலையாளத்தில் அது எப்போதும் கேரளம் தான் என்கிறார். கேரளம் என் பது உள்ளூர் மொழியில், மாநிலப் பெயரின் உச்சரிப்பு ஆகும்.

கேரளத்தின் மொழி, கலாசார அடையாளத்தை மரியாதையுடன் அங்கீகரிக்கும் வகையிலும், மாநிலத்தின் பண்பாட்டு பெருமையையும், தாய்மொழி அடையாளத்தையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மாற்றமாகவும் இது அந்த மாநில மக்களால் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் கேரளா எனக் குறிப்பிடுவதை, கேரளம் என்றுதான் உச்சரிக்க வேண்டும். எழுத வேண்டும் என முதல்முதலில் அறிவுறுத்தியவர், 'தினமணி' நாளிதழின் முன்னான் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன்.

தன்னைச் சந்திக்க வரும் பத்திரிகையாளர்களிடம், இந்த 'ஆகாரத்தை ஒழித்துக் கட்டுங்கள், ஆங்கிலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எழுதுகிறார்கள். தமிழிலும் எதற்காக இந்த ஆங்காரம்? என்று கேட்பார். 'இப்படியே போனால், எதிர்காலக் குழந்தைகள் 'நாங்கள் மராவில் ஏறி, குளாவில் குளித்து, பழாக்களைத் தின்றோம் என்று தமிழில் எழுதுவார்கள். தூய தமிழில் கேரளம், கேரளத்தில், ஆந்திரம், ஆந்திரத்தில் என்றெழுதுங்கள். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்று எழுதிப் பழகுங்கள் என்பார்.

ஒரு மொழியில், ஒரு பெயரை அல்லது ஒரு சொல்லை எவ்வாறு உச்சரிக்கிறார்களோ அதன்படியே தமிழிலும், எழுத வேண்டும். அதன் வேர்ச் சொல்லை கண்டறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.

இந்தப் பெயர் மாற்றத்தை வரவேற்ற திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் நகைச்சுவையாக சில கருத்துகளைத் தெரிவித்தார். நம்மிடையே உள்ள ஆங்கிலோபோன்களுக்கு ஒரு சிறிய மொழியில் கேள்வி புதிய கேரளம்' என்ற பெயர் நடைமுறைக்கு வந்தவுடன், அங்கு வாழ்பவர்களை எப்படி அழைப்பர். தற்போது அழைக்கப்படும் 'கேரளைட்', கேரளன்' என்ற சொற்கள் என்னவாகும் என்று கேட்டார். இனி அவர்களை கேரளமைட்' என்றால், அது ஒரு நுண்ணுயிரி போலவும், கேரளமியன்' என்றால் அது ஓர் அரிய வகை மண் கனிமமாகவும் ஒலிக்கிறது என்றார். சந்தேகமே வேண்டாம், கேரளத்தில் வாழ்பவர்கள் தொடர்ந்து கேரளரிட்டீ என்றே அழைக்கப்படுவர் என்றனர் மொழி இலக்கிய ஆர்வலர்கள்.

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு, தன் மாநிலப் பெயரை பங்களா' என மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறது. அப்பெயர், வங்க தேசத்துடன் ஒத்துப் போவதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக, 1950-ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்கள் என்ற பெயர் உத்தர பிரதேசமாக மாறியது. 1956-ஆம் ஆண்டு திருவாங்கூர் கொச்சின் என்ற பெயர், கேரளா என மாற்றப்பட்டது. 1959-ஆம் ஆண்டு மத்திய பாரத் என்ற பெயர் மத்திய பிரதேசமாக மாறியது. 1969-ஆம் ஆண்டு மதராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என்றும், 1972-இல் நார்த் ஈஸ்ட் ஃபிரான்டியர் ஏஜென்சி என்ற பெயர் அருணாசல பிரதேசம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1973-ஆம் ஆண்டு மைசூர் மாநிலம், கர்நாடகம் என்றும், 2007-இல் உத்தராஞ்சல் மாநிலம் உத்தரகண்ட் என்றும், ஒரிசா மாநிலம் 2011-இல் ஒடிசா என்றும் பெயர் மாற்றப்பட்டது.

மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மொழியில்தான் வாழ்கிறது மொழி என்பது ஒருவருக்கொருவர் கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கானது மட்டுமல்ல. உணர்வின் வெளிப்பாட்டுக்கும், பரிமாற்றத்துக்கும் உதவும் அற்புதக் கருவியாகும். ஒரு நிலப்பகுதி மொழிவழியாக பிரித்து ஆளப்படும் போதுதான், அதற்கென ஒரு சமூக கூட்டுணர்வு ஏற்படுகிறது. இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்கள், பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

தனது ரோமியோ ஜூலியட் நாடகத்தில் பெயரில் என்ன இருக்கிறது எனக் கேட்டார் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ் பியர். ஒரு பெயரில் மனிதகுல வரலாற்றின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சமூ சுப்படிநிலை, பாலினப்பாகுபாடு, அழகியல், அறிவார்ந்த மரபுகள், சாதனைகள், சமூகப் பங்களிப்புகள், சடங்கியல், இறையியல் எனப் பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

அந்தக் கால அரசர்களின் பெயர்கள் மூலம் அவர்களின் வீரம், துணிவு, சூழ்ச்சித் திறன், மதிநுட்பத்தை அறிய முடிகிறது. இறைவனின் திருநாமங்களை தரித்தவர்களின் பெயர்கள் மூலம் அந்தக்கால சமய எழுச்சியையும், புலவர்களின் பெயர்கள் மூலம் அவர்கள் வாழ்ந்த நாட்டின் பெருமையையும், சிறப்பையும், பண்பையும், பலனையும் நாம் அறிய முடிகிறது. இந்தப் பெயர்களின் வழியே அக்கால மக்கள் எய்திருந்த பல்வேறு விழுமியங்களையும், அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையும் வரலாறாக உணரலாம்.

ஓவியத்தில் வரையப்பட்ட தீப்பொறி இருளை நீக்காது. ஆனால், உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவை மிகுந்த மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும், நன்மையையும் தரும் என்பதையே இந்தப் பெயர் மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.