அனைவருக்குமான பொருத்தம்...
இல்லறம் என்பது வெறும் திருமண உறவாக இல்லாமல், இரு மனங்கள் இணைந்து உருவாக்கும் அழகான வாழ்க்கைப் பயணம் என்பதைப் பற்றி...

அனைவருக்குமான பொருத்தம்...
~ மருத்துவர் துரை. நீலகண்டன்
கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் பெருகிவரும் சூழலில், இன்றைய தலைமுறையினர் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் முன்னேறியிருந்தாலும், இல்லற வாழ்க்கையின் புரிதலும், பொறுமையும் கேள்விக்குறியாகி வருகிறது. பொதுவாக, பெரும்பான்மையான குடும்பத்தினர் ஜாதகம் பார்த்து, பலவிதமான மணப் பொருத்தங்களை ஆராய்ந்து, உற்றார்- உறவினர்களை அழைத்து திருமணங்களை நடத்துகின்றனர்.
அப்படியிருந்தும் குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாடுகளையும், பிரிவையும் சந்திப்பது அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு முன்பு பார்க்கும் மணப் பொருத்தத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, திருமணம் செய்யப்போகும் இருவரின் மனப் பொருத்தத்துக்கு அளிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. ஜாதி, மதம், குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை, ஜாதகம், மணப் பொருத்தம் போன்றவற்றை பெற்றோர் ஆராய்கின்றனர். ஆனால், திருமணம் செய்யவிருக்கும் இருவரின் குண நலன்கள், வாழ்க்கைப் பார்வை, ஒருவரின் விருப்பங்களையும் சுதந்திரத்தையும் மற்றவர் மதிக்கும் தன்மை, கோபம், விட்டுக்கொடுத்தல், வேலை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள், பெற்றோர் பராமரிப்பு போன்ற முக்கிய அம்சங்களில் அவர்களின் எண்ணங்கள் ஒத்துப்போகின்றனவா என்பதைக் கவனிப்பது பல நேரங்களில் பின்தள்ளப்படுகிறது.
இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்கள் மனிதர்களை எளிதில் இணைக்கின்றன. நேரில் சந்தித்துப் பழகாமலேயே அறிமுகமாகி, நட்பாகி, காதலித்து திருமணம் செய்துகொள்பவர்களும் உள்ளனர். அதேபோல், ஒரே பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் நீண்ட காலம் பழகியவர்கள் காதலித்துத் திருமணம் செய்வதும் இயல்பாகிவிட்டது.
ஆனால், பல ஆண்டுகள் காதலித்தவர்கள் என்றாலே அவர்கள் இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற மனப் பொருத்தம் கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. காதலிக்கும் காலத்தில் வெளிப்படும் குணமும், குடும்பப் பொறுப்புகள் நிறைந்த இல்லற வாழ்க்கையில் வெளிப்படும் குணமும் பலருக்கும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தாலும், அதன் வெற்றியை அது நடைபெற்ற விதம் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
சில தம்பதிகள் மனப் பொருத்தம் குறைந்திருந்தாலும் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒன்றாக வாழ்கிறார்கள்; சில உறவுகள் தொடர்ச்சியான சிக்கல்களால் முறியும் நிலைக்கும் செல்கின்றன. இல்லறத்தில் ஒருவருடைய குண நலன்கள் மற்றொருவரின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுவது போலவே, அளவுக்கு மீறிய சுதந்திரம் , பிறரின் உணர்வுகளை மதிக்காத போக்கு அல்லது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் கொண்ட பெண்களாலும் ஆண்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படலாம்.
எனவே, இல்லறச் சிக்கல்களை ஆண் அல்லது பெண் என்ற ஒரே கோணத்தில் பார்க்காமல், இருவருடைய குண நலன்களையும் மனநிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பிறகு இருவரின் குண நலன்கள், எதிர்பார்ப்புகள், பொறுப்புணர்வு, குடும்பப் பார்வை, வேலை, பொருளாதாரம், குழந்தை வளர்ப்பு, குடும்பப் பொறுப்புகள், தனிப்பட்ட நேரம் போன்றவை வாழ்க்கையை மாற்றக்கூடும்.
எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகப் பேசாமல் இருந்தால், சிறிய கருத்து வேறுபாடுகள்கூட நாளடைவில் பெரிய பிரச்னைகளாக மாறலாம். தீர்க்கப்படாத மனஅழுத்தம், கோபம், பாதுகாப்பின்மை, சந்தேகம் அல்லது பிற உளவியல் சிக்கல்களும் உறவைப் பாதிக்கக்கூடும். இவற்றை வெறும் 'குணக்குறை' என்று ஒதுக்காமல், தேவையானபோது மனநல ஆலோசனை அல்லது தம்பதியர் ஆலோசனையை நாடுவது பயனுள்ளதாகும்.
தொடர்ச்சியான உறவுச் சிக்கல்கள் மனநலனையும் உடல்நலனையும் பாதிக்கக்கூடும். பாலியல் விருப்பங்களில் வேறுபாடு, தாம்பத்யச் சிக்கல்கள், குழந்தைப் பிறப்புக்குப் பிந்தைய உடல் மற்றும் மன மாற்றங்கள், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை உறவின் நெருக்கத்தைப் பாதிக்கலாம். இவற்றைப் பற்றி பேசத் தயங்காமல், தேவையான சூழலில் மருத்துவர், மனநல நிபுணர் அல்லது தம்பதியர் ஆலோசகரின் உதவியை நாட வேண்டும்.
திருமணத்துக்கு முன்பு பெற்றோரும் திருமணம் செய்யவிருக்கும் இருவரும் மணப் பொருத்தங்களைப் பார்ப்பதுபோல, இருவரின் குணநலன்கள், வாழ்க்கை எதிர்பார்ப்புகள், பொறுப்புணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் கருத்து வேறுபாடுகளைக் கையாளும் மனப்பக்குவம் ஆகியவற்றையும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். மணப் பொருத்தம் திருமணத்தை நடத்தி வைக்கலாம்.
காதல் இருவரையும் அருகில் கொண்டுவரலாம். ஆனால் மனப்பொருத்தம், பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் மனப்பக்குவம்தான் அந்தத் திருமணத்தை இல்லறமாக மாறும். எனவே, திருமணத்துக்கு முன்பு நாம் கேட்க வேண்டிய கேள்வி, 'இருவருக்கும் மணப் பொருத்தம் இருக்கிறதா' என்பதுடன் முடிந்துவிடாமல், 'இரு மனங்களும் இணைந்து ஒரு வாழ்க்கையைப் பயணிக்கத் தயாராக இருக்கிறதா' என்ற கேள்வியையும் கேட்க வேண்டும்.
இந்தப் புரிதல் திருமணத்துக்கு முன்பே ஏற்படுமானால், பல இல்லறச் சிக்கல்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு சரியான முறையில் கையாள முடியும். அப்போது இல்லறம் என்பது வெறும் திருமண உறவாக இல்லாமல், இரு மனங்கள் இணைந்து உருவாக்கும் அழகான வாழ்க்கைப் பயணமாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

