யாருடைய நிலம்? தீராத சர்ச்சைகள்! இனாம், பஞ்சமி, கோயில், வக்ஃப் நிலங்கள்: ஆவணங்களும் சட்டங்களும் சொல்வது என்ன?
இனாம், பஞ்சமி, கோயில், வக்ஃப் நிலங்கள்: ஆவணங்களும் சட்டங்களும் சொல்வது என்ன? என்பதைப் பற்றி...
இனாம், பஞ்சமி, கோயில், வக்ஃப் நிலங்கள். - படம்: கூகுள் ஜெமினி.
தமிழகத்தில் இனாம் நிலங்கள், பஞ்சமி நிலங்கள், கோயில் நிலங்கள், வக்ஃப் நிலங்கள் தொடர்பான உரிமை சர்ச்சைகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருபவர்கள் பட்டா கோருவது, ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் தொடர்பாக ஆட்சேபங்கள் எழுவது, கோயில் மற்றும் மத அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிறரிடம் கைமாறியதாகப் புகார்கள் எழுவது எனப் பல்வேறு பிரச்னைகள் நில உரிமை விவகாரங்களைச் சிக்கலாக்கியுள்ளன.
தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்கள் குறித்துக் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நிலம் யாருக்குச் சொந்தமானது? பல ஆண்டுகளாக அதில் விவசாயம் செய்பவர்களுக்கு உரிமை கிடைக்குமா? பட்டா வழங்கப்பட்டிருந்தால் அதை எந்தச் சூழலில் ரத்து செய்ய முடியும்? கோயில் நிலம் எனக் கூறப்படும் நிலத்தில் தனிநபர் பெயரில் பட்டா இருந்தால் யாருடைய உரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? பஞ்சமி நிலம் பிறரிடம் கைமாறியிருந்தால் அதை மீட்க முடியுமா? வக்ஃப் வாரியத்தின் பதிவுக்கும் தனிநபரின் உரிமைப் பத்திரத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால் அதை எப்படித் தீர்ப்பது? என இனாம் நிலங்கள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இத்தகைய கேள்விகளுக்குப் பொதுவான பதிலை அளிக்க முடியாது. ஒவ்வொரு நிலமும் எப்போது, யாருக்கு, எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டது; பின்னர் அதன் உரிமை எவ்வாறு மாற்றப்பட்டது; எந்தச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டது; தற்போதைய வருவாய்ப் பதிவுகள் என்ன கூறுகின்றன என்பனவற்றை ஆராய்ந்தே முடிவெடுக்க முடியும்.
மன்னர் கால மானியங்கள் முதல் இன்றைய நில உரிமை வரை...
தமிழகத்தில் மன்னர்கள் மற்றும் பிற ஆட்சியாளர்கள் கோயில்கள், மடங்கள், தனிநபர்கள், கிராம நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நிலங்கள் அல்லது நில வருவாயை மானியமாக வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட சேவைகளைச் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலங்கள், கோயில் வழிபாடு மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் என அவற்றின் நோக்கங்கள் வேறுபட்டவையாக இருந்தன.
இனாம் என்பது மானியமாக வழங்கப்பட்ட நிலம் அல்லது அதன் வருவாய் உரிமையைக் குறிக்கும். தனிநபர் பராமரிப்பு, கோயில் வழிபாடு, மத அறப்பணி, கிராம நிர்வாகச் சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிலங்கள் வழங்கப்பட்டன.
இத்தகைய நிலங்கள் பொதுவாக இனாம் நிலங்கள் என அழைக்கப்பட்டாலும், அவையனைத்தும் ஒரே வகையான உரிமையைக் கொண்டவை அல்ல. இனாம் என்ற வகைப்பாடு மட்டும் நிலங்களின் தற்போதைய உரிமையைத் தீர்மானிக்கப் போதுமானதல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நில வருவாயை முறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இனாம் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மானிய உரிமைகள், வருவாய் விலக்குகள், நிலத்தின் அனுபவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான பதிவுகளும் ஆவணங்களும் உருவாக்கப்பட்டன. அசல் மானிய ஆவணம், இனாம் நியாய விசாரணைப் பதிவேடு, பழைய செட்டில்மென்ட் பதிவுகள், ரயத்துவாரிப் பட்டா ஆணை போன்றவை இனாம் நிலங்களுக்கான முக்கிய ஆவணங்கள் ஆகும்.
சுதந்திரத்துக்குப் பிறகு, நில உரிமை அமைப்புகளை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. குறிப்பாக, 1963-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இனாம் எஸ்டேட்கள் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி முறைக்கு மாற்றுதல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 26/1963), தமிழ்நாடு சிறு இனாம்கள் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி முறைக்கு மாற்றுதல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 30/1963) ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.
இந்தச் சட்டங்களின் கீழ், நிலத்தின் தன்மை, அப்போதைய உரிமை, அனுபவம் மற்றும் சட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ரயத்துவாரிப் பட்டா வழங்குவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய இனாம் பதிவுகள், கோயில் சொத்துப் பதிவுகள், தனிநபர் பட்டாக்கள் மற்றும் தற்போதைய நில வகைப்பாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் எழும்போது, யாருடைய உரிமைக்கு அங்கீகாரம் அளிப்பது என்ற கேள்வியும் அது தொடர்பான குழப்பங்களும் எழுகின்றன.
இனாம் நிலங்களும் கோயில் நிலங்களும்- எது யாருக்குச் சொந்தம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இனாம் நிலங்கள் தொடர்பான பட்டா மற்றும் பத்திரப் பதிவு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. சில நிலங்களில் நீண்டகாலமாக விவசாயம் செய்து வருபவர்கள், அவற்றுக்கான உரிமை கோருகின்றனர். மறுபுறம், குறிப்பிட்ட நிலங்கள் கோயில்களுக்குச் சொந்தமானவை என கோயில் நிர்வாகங்கள் கூறுகின்றன. இந்தச் சர்ச்சையில் முதலில் தெளிவுபடுத்த வேண்டியது, கோயிலுக்காக மானியமாக வழங்கப்பட்ட நிலம், கோயிலுக்குச் சொந்தமான நிலம், தனிநபர் கோயிலுக்குத் தானமாக வழங்கிய நிலம் ஆகிய அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவை அல்ல என்பதுதான்.
ஒரு நிலம் கோயிலுக்காக மானியமாக வழங்கப்பட்டிருந்தால், அதன் அசல் நிபந்தனைகள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ரயத்துவாரிப் பட்டா வழங்கப்பட்டிருந்தால், அந்தப் பட்டா எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டது என்பதையும் ஆராய வேண்டும். அதேபோல், கோயில் நிலம் என்பதற்கான மூல ஆவணங்களும் சரிபார்க்கப்பட வேண்டும். பழைய இனாம் பதிவேடு, கோயில் சொத்துப் பதிவேடு, தானப் பத்திரம் அல்லது மூல உரிமை ஆவணம், ரயத்துவாரிப் பட்டா ஆணை, தற்போதைய வருவாய்ப் பதிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே உரிமை தொடர்பான முடிவை எடுக்க முடியும்.
பட்டா இருப்பதால் மட்டுமே எல்லாச் சூழல்களிலும் தனிநபரின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுவிடாது. அதேநேரத்தில், பழைய பதிவில் கோயில் பெயர் இருப்பதால் மட்டுமே தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிடவும் முடியாது. வருவாய்த் துறை மற்றும் அறநிலையத் துறை ஆவணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதுடன், தேவையான இடங்களில் உரிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற வேண்டும். இனாம் நிலங்களின் உரிமையைத் தீர்மானிக்க இதுபோன்ற நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
பட்டா இருந்தால் நிலம் சொந்தமாகிவிடுமா?
பட்டா என்பது வருவாய்த் துறையின் பதிவு; அது தனியாக மூல உரிமைப் பத்திரமாகாது. பட்டா வழங்கப்பட்டிருப்பது உரிமைக் கோரிக்கைக்கு ஆதாரமாக இருக்கலாம். ஆனால், அதனால் மட்டுமே முழுமையான உரிமை நிரூபிக்கப்பட்டுவிடாது. பட்டா வழங்கும்போது அதிகாரி சட்டப்படி அதிகார வரம்புக்குள் செயல்பட்டாரா என்பதும் முக்கியம்.
தவறான ஆவணங்கள், மறைக்கப்பட்ட தகவல்கள் அல்லது உரிய விசாரணையின்றி பட்டா வழங்கப்பட்டிருந்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம். அதேநேரத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பு, விளக்கம் அளிக்கும் வாய்ப்பு, உரிய விசாரணை ஆகியவை வழங்கப்பட வேண்டும். பட்டா என்பது உரிமைக்கான சான்றுகளில் ஒன்று; அது மட்டுமே உரிமையை உருவாக்கும் ஆவணம் அல்ல.
நீண்டகால அனுபவம் இருந்தால் உரிமை கிடைத்துவிடுமா?
பல தலைமுறைகளாக ஒரு குடும்பம் நிலத்தைப் பயிரிட்டு வருவது, அந்த நிலத்தின் மீதான உரிமையைத் தானாக உறுதிப்படுத்தாது. நீண்டகால அனுபவம் என்பது ஒரு முக்கியமான ஆதாரமாக இருக்கலாம். ஆனால், அந்த அனுபவம் எந்த அடிப்படையில் தொடங்கியது என்பதை ஆராய வேண்டும்.
குத்தகை, அனுமதி, மானியம், ஒப்படைப்பு, விற்பனை அல்லது வாரிசுரிமை ஆகியவற்றில் எதன் அடிப்படையில் நிலம் அனுபவிக்கப்பட்டது என்பது முக்கியம். குறிப்பாக அரசு, கோயில், மடம் அல்லது அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் நீண்டகால அனுபவத்தை மட்டும் வைத்து உரிமை கோர முடியாது.
மூன்றாம் நபருக்கு நிலம் விற்கப்பட்டிருந்தால்...
ஒரு கோயில் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்ற பின்னர், பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். அதன்பிறகு வீடுகள் கட்டப்பட்டிருக்கலாம். சிலர் வங்கிக் கடன் பெற்றிருக்கலாம். அப்போது எழும் கேள்விகள்: முதல் பட்டா சட்டப்படி வழங்கப்பட்டதா? முதல் விற்பனைப் பத்திரத்துக்கு உரிமை அடிப்படை இருந்ததா? அடுத்தடுத்து வாங்குபவர்களுக்கு உண்மையான உரிமை மாற்றப்பட்டதா? நல்லெண்ணத்தில் நிலம் வாங்கியவர்களின் உரிமை என்ன? நிலத்தை மீட்கும்போது மூன்றாம் நபர்களின் உரிமைகள் எவ்வாறு பரிசீலிக்கப்படும்? இழப்பீடு அல்லது மாற்று நிவாரணம் பெறுவதற்கு சட்டத்தில் வாய்ப்பு உள்ளதா? ஒரு நிலத்தின் மூல உரிமையே சர்ச்சைக்குரியதாக இருக்கும்போது, அதன்பிறகு நடைபெற்ற ஒவ்வொரு பரிவர்த்தனையையும் தனித்தனியாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.
பஞ்சமி நிலங்கள்: உரிமைகள்
பட்டியல் சமூக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலங்கள் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன. நிலமற்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இந்த நிலங்களில், குறிப்பிட்ட ஒதுக்கீட்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. சில நிலங்கள் அந்த நிபந்தனைகளை மீறிப் பிறருக்கு மாற்றப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றன.
எனினும், ஒரு நிலம் பஞ்சமி நிலம் எனக் கூறப்படுவதால் மட்டுமே அதன் உரிமையை முடிவு செய்ய முடியாது. அசல் ஒப்படைப்பு ஆணை, பட்டா நிபந்தனைகள், விற்பனைப் பத்திரங்கள், வாரிசுரிமை ஆவணங்கள், விற்பனை அல்லது உரிமை மாற்றத்துக்கு என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டன? பின்னர் எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் என்ன என்பனவற்றை ஆராய வேண்டும். நிலத்தை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததா? அந்தத் தடை எந்தக் காலத்துக்குப் பொருந்தியது? பின்னர் நடந்த உரிமை மாற்றம் சட்டப்படி செல்லுமா? நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்பன ஒவ்வொரு நிலமீட்பு விவகாரத்திலும் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்விகள்.
நிலத்தை மீட்பதுடன் நடவடிக்கை முடிந்துவிடக் கூடாது. மீட்கப்பட்ட நிலத்தின் வகைப்பாடு பாதுகாக்கப்படுகிறதா, தகுதியுடைய பயனாளிகளிடம் அது மீண்டும் ஒப்படைக்கப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
வக்ஃப் நிலங்கள்: பதிவுகளுக்கும் உரிமைப் பத்திரங்களுக்கும் முரண்பாடுகள்!
மதம், அறப்பணி அல்லது பொதுநல நோக்கத்துக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகள் வக்ஃப் சொத்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன. பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸôக்கள் மற்றும் பிற அறப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் இதில் அடங்கும். வக்ஃப் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகளில், வக்ஃப் வாரியத்தின் பதிவுகள் ஒருபுறமும், தனிநபர்களின் பட்டா, விற்பனைப் பத்திரம், வாரிசுரிமை ஆவணங்கள் மற்றும் நீண்டகால அனுபவம் தொடர்பான கோரிக்கைகள் மறுபுறமும் இடம்பெறுகின்றன.
வக்ஃப் வாரியப் பதிவுக்கும் தனிநபரின் பட்டா அல்லது விற்பனைப் பத்திரத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால், சொத்தின் மூல வக்ஃப் அர்ப்பணிப்புப் பத்திரம், சர்வே எண், பரப்பளவு, வக்ஃப் சொத்துப் பதிவேடு, அரசிதழ் அறிவிப்பு, பழைய உரிமைப் பத்திரங்கள், நீதிமன்றம் அல்லது வக்ஃப் தீர்ப்பாய உத்தரவுகள் மற்றும் வருவாய்ப் பதிவுகளை ஒப்பிட வேண்டும். அத்துடன் 2025-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்குப் பிந்தைய சட்டநிலையும், அதுதொடர்பாக நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, வக்ஃப் (திருத்த) சட்டம், 2025 தொடர்பான வழக்குகளில் முக்கியமான இடைக்கால உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டம் முழுவதற்கும் தடை விதிக்க மறுத்தது. அதேநேரத்தில், சில முக்கியப் பிரிவுகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தியது. ஐந்து ஆண்டு மதப் பின்பற்றல் நிபந்தனை, அரசு–வக்ஃப் சொத்து உரிமையை ஆட்சியர் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களைத் தற்காலிகமாக நிறுத்தி, சர்ச்சைக்குரிய சொத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது.
ஆவணங்களே தீர்வுக்கான அடிப்படை!
இனாம், பஞ்சமி, கோயில், வக்ஃப் நிலங்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முதல் கட்டமாக, நிலத்தின் வரலாற்று ஆவணங்களை ஒருங்கிணைக்க வேண்டும். பழைய இனாம் பதிவேடு, அசல் ஒப்படைப்பு ஆணை, தானப் பத்திரம், வக்ஃப் அர்ப்பணிப்பு ஆவணம், பட்டா, சிட்டா, அ-பதிவேடு, நில அளவை வரைபடம், விற்பனைப் பத்திரங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய வேண்டும். நிலத்தின் பழைய சர்வே எண்ணுக்கும் தற்போதைய சர்வே எண்ணுக்கும் இடையிலான தொடர்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பட்டா எப்போது வழங்கப்பட்டது, பின்னர் எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது, நிலத்தின் வகைப்பாடு எப்போது மாற்றப்பட்டது, ஏதேனும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்பதையும் காலவரிசைப்படுத்த வேண்டும். சிக்கலான உரிமைத் தகராறுகளில், வருவாய்ப் பதிவுகளைத் திருத்தும் நடவடிக்கை மட்டுமே போதுமானதாக இருக்காது. சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி அதிகாரமுள்ள நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் தேவைப்படும்.
நில உரிமை தொடர்பான முழுமையான மாவட்ட வாரிப் பட்டியல், நிலுவை வழக்குகளின் விவரங்கள், மீட்கப்பட்ட நிலங்களின் கணக்கு மற்றும் இறுதி உத்தரவுகள் ஆகியவற்றை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து எழுந்துவரும் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக உள்ள இனாம் நிலங்களின் விவரங்கள், கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களின் சர்வே எண் வாரியான பட்டியல், பஞ்சமி நிலங்களின் மொத்தப் பரப்பளவு மற்றும் தற்போதைய நிலை, வக்ஃப் சொத்துகளின் சர்வே எண் வாரியான விவரங்கள், தவறாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டாக்கள் தொடர்பான புகார்கள், நிலுவையில் உள்ள நில உரிமை வழக்குகள், மீட்கப்பட்ட அரசு, கோயில் மற்றும் பஞ்சமி நிலங்களின் விவரங்கள், மீட்கப்பட்ட நிலங்கள் மீண்டும் உரிய நிறுவனங்கள் அல்லது பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதா என்ற விவரம், அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட இறுதி உத்தரவுகள் மற்றும் மேல்முறையீட்டு நிலை, இதன்மூலம் பொதுமக்கள் மட்டுமன்றி ஆராய்ச்சியாளர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் நில உரிமை விவகாரங்களைக் கண்காணிக்க முடியும்.
நிலத்தின் வரலாற்று நோக்கத்தைப் பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்றவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஆவணங்களின் அடிப்படையிலான வெளிப்படையான விசாரணையும், சட்ட நடைமுறைகளும் இணைந்தால்தான் தமிழகத்தின் நில உரிமைச் சர்ச்சைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும்.
இனாம் நிலத்தில் உரிமை கோருபவார் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நிலத்தின் மீது உரிமைச் சர்ச்சை ஏற்பட்டால், நிலத்தில் விவசாயம் செய்து வருபவர், வீடு கட்டி வசிப்பவர் அல்லது பழைய விற்பனைப் பத்திரம் வைத்திருப்பவர், முதலில் அந்த நிலத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக, தற்போதைய பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் அடங்கல் நகல்களைப் பெற வேண்டும்.
பழைய இனாம் பதிவேடுகள், ஒப்படைப்பு ஆணைகள் மற்றும் செட்டில்மென்ட் ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும்.
மூல விற்பனைப் பத்திரம், வாரிசுரிமை ஆவணங்கள் மற்றும் வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.
நிலம் கோயில், மடம் அல்லது வக்ஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்பட்டால், அந்த நிறுவனத்தின் மூலச் சொத்துப் பதிவுகளைப் பெற வேண்டும்.
பஞ்சமி நிலமாக இருந்தால், அசல் ஒப்படைப்பு ஆணை மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பரிசீலிக்க வேண்டும்.
பட்டா வழங்கப்பட்டதற்கான அசல் நிர்வாக ஆணையையும், அதன் சட்டபூர்வ அடிப்படையையும் சரிபார்க்க வேண்டும்.
ஏற்கெனவே நீதிமன்ற வழக்கு இருந்தால், அதன் தற்போதைய நிலை மற்றும் இடைக்கால உத்தரவுகளைப் பெற வேண்டும்.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக மனு அளித்து, மனுவுக்கான ஒப்புகை மற்றும் நடவடிக்கை விவரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
உரிமை தொடர்பான சிக்கலான தகராறுகளில், நில ஆவணங்களை ஆய்வு செய்யும் அனுபவமுள்ள வழக்குரைஞரின் ஆலோசனையைப் பெற்று, சட்டப்படி அதிகாரமுள்ள நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தை அணுக வேண்டும்.
பட்டா மாற்றம் அல்லது வருவாய்ப் பதிவுத் திருத்தம் மட்டுமே இறுதியான உரிமைத் தீர்வாகாது என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் நிலம் எந்தச் சட்டத்தின்கீழ் வருகிறது, யாருக்கு உரிமை கோரத் தகுதி உள்ளது, ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா சட்டப்படி வழங்கப்பட்டதா, தற்போதைய அதிகாரி விசாரிக்கலாமா அல்லது தீர்ப்பாயத்தை அணுக வேண்டுமா என்பவற்றைத் தீர்மானிக்க முடியும்.
கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியுமா?
சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டத்தின் 8-ஆவது பிரிவு, மத நிறுவனங்களுக்கான இனாம் நிலங்கள் தொடர்பாகத் தனிப்பட்ட நிபந்தனைகளைக் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட சூழல்களில், சட்டம் குறிப்பிடும் கால அளவுக்குத் தொடர்ந்து அனுபவத்தில் இருந்தவர்களுக்குப் பட்டா வழங்குவது குறித்த விதிகளும் உள்ளன. மற்ற சில சூழல்களில், அந்த மத நிறுவனத்துக்கோ சேவை செய்பவருக்கோ பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
எனவே, கோயில் நிலம் தொடர்பான சர்ச்சையில் பின்வரும் ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்:
அசல் இனாம் மானிய ஆவணம்.
கோயில் அல்லது மடத்தின் சொத்துப் பதிவேடு.
செட்டில்மென்ட் பதிவுகள் மற்றும் ரயத்துவாரிப் பட்டா ஆணை.
பழைய நில வருவாய்ப் பதிவுகள், சிட்டா, அடங்கல்.
விற்பனைப் பத்திரங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள், இருந்தால் பட்டா வழங்கப்பட்டிருப்பது மட்டுமே இறுதியான உரிமைத் தீர்ப்பாகாது; அதேபோல், பட்டா இல்லாதது மட்டுமே தனிநபரின் உரிமைக் கோரிக்கையைத் தானாக நிராகரிப்பதற்கும் போதுமானதல்ல. ஆவணங்களையும் பொருந்தும் சட்டப் பிரிவுகளையும் சேர்த்தே முடிவெடுக்க வேண்டும்.
நில உரிமைப் பிரச்னை ஏற்பட்டால் எங்கே செல்ல வேண்டும்?
இனாம் நிலம்: வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நில நிர்வாக ஆணையரகம்.
பஞ்சமி நிலம்: வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட நில மீட்பு அதிகாரிகள்.
கோயில் நிலம்: சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை.
வக்ஃப் நிலம்: தமிழ்நாடு வக்ஃப் வாரியம், சம்பந்தப்பட்ட வக்ஃப் நிர்வாகம் மற்றும் சட்டப்படி அதிகாரமுள்ள தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம்.
பட்டா, சிட்டா, அடங்கல், அ-பதிவேடு
பட்டா: நிலம் தொடர்பான வருவாய்ப் பதிவு; அதில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமை அல்லது அனுபவ விவரங்களைக் காட்டும் ஆவணம். நிலம் தொடர்பான பட்டாதாரர் விவரங்களைப் பதிவு செய்தல் இதன் நோக்கமாகும்.
சிட்டா: நிலத்தின் உரிமையாளர் விவரங்கள் மற்றும் நில வகை தொடர்பான வருவாய்த் தகவல்களை வழங்கும் பதிவு. நிலத்தின் வகை மற்றும் வருவாய்ப் பதிவுகளை அறிதல் இதன் நோக்கமாகும். சிட்டாவில் பட்டாதாரரின் பெயர். பட்டா எண், சர்வே எண், உட்பிரிவு எண், நிலத்தின் பரப்பளவு, நிலத்தின் வகை, கிராமம், வட்டம் மற்றும் மாவட்ட விவரங்கள் இருக்கும்.
அடங்கல்: ஒரு குறிப்பிட்ட நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்படுகிறது, யார் சாகுபடி செய்கிறார்கள், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வளவு பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது போன்ற விவரங்களைப் பதிவு செய்யும் ஆவணமே அடங்கல் ஆகும்.
அ-பதிவேடு: ஒரு கிராமத்தில் உள்ள நிலங்களின் அடிப்படை வருவாய்த் தகவல்களை சர்வே எண் வாரியாக அறிந்துகொள்ள உதவும் பதிவேடு இது. கிராமத்தில் உள்ள நிலங்களின் சர்வே எண், பரப்பளவு, வகைப்பாடு போன்ற அடிப்படை விவரங்களைக் கொண்ட பதிவு.
புல அளவைப் புத்தகம்: ஒரு நிலத்தின் எல்லைகள், அளவுகள், பரப்பளவு மற்றும் நில அமைப்பு ஆகியவற்றை வரைபட வடிவில் காட்டும் அதிகாரபூர்வ ஆவணம்.
ஒப்படைப்பு ஆணை: அரசு நிலத்தை ஒரு நபருக்கு அல்லது குடும்பத்துக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வழங்கியதற்கான ஆவணம். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே நோக்கத்துக்கானவை அல்ல. நிலத்தின் உரிமையைத் தீர்மானிக்கும்போது அவற்றை மூலப் பத்திரங்கள், பழைய பதிவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுடன் ஒப்பிட வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர்கள் குழு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

