தமிழகத்தின் தவப்புதல்வன் காமராஜர்!

தமிழகம் கடந்து பாரதத்தை நேசித்த, தேசிய சிந்தனையை ஒவ்வொரு மனதிலும் விதைத்த மாபெரும் தேசபக்தர் கர்மவீரர் காமராஜர்.

Kamarajar

காமராஜர் - கோப்புப் படம்

Published On :

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழகம் கடந்து பாரதத்தை நேசித்த, தேசிய சிந்தனையை ஒவ்வொரு மனதிலும் விதைத்த மாபெரும் தேசபக்தர் கர்மவீரர் காமராஜர். சிறிய ஊரில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கும் கல்வி கிடைத்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு காமராஜரின் தொலைநோக்குப் பார்வையே காரணம்.

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காமராஜரின் மனதில் சுதந்திர வேள்விக்கான கனல் உதித்தது. சுதந்திர எழுச்சியை உருவாக்க தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்கு ஆர்வத்துடன் சென்றார். தந்தை குமாரசாமி நாடாரின் மறைவால் கர்மவீரருக்கு பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலை. வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். கடைகளில் வேலை பார்த்தார். ஆனால், அவரது கவனம் தேச விடுதலை குறித்தே இருந்தது. வீடா?, நாடா என்ற கேள்வி எழுந்தபோது நாடே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார்.

வைக்கம் போராட்டம், உப்புச் சத்தியாகிரகம், ஆகஸ்ட் புரட்சி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு எனத் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். சுமார் பத்துஆண்டு காலம் தேச விடுதலைக்காக சிறையில் வாடினார்.

தலைவர் சத்தியமூர்த்தியின் தொண்டனாக தன்னை முழுமையாக தேசப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தியாகம், அயராத உழைப்பு, தொண்டு} இவையே அவரது அடையாளங்களாயின. தேசம் விடுதலை அடைந்தது. சுதந்திர பாரதம் எப்படி இருக்க வேண்டுமென மகாகவி பாரதி கனவு கண்டாரோ அதை நனவாக்குவதே காமராஜரின் கனவாக இருந்தது.

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்

செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள்

வைப்போம்

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல்

செய்யோம்

உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள்

செய்வோம்”

என்ற மகாகவி பாரதியின் சொற்களை மெய்ப்பிக்க முயன்று பெருவெற்றி கண்டு பெருந்தலைவரானார்.

1952-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கர்மவீரர் காமராஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 1954-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரானார். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாத சமூகமே பெருந்தலைவரின் லட்சியம். அதற்கான வழி கல்வி என்று சிந்தித்தார் பள்ளிக் கல்வியைக்கூடத் தாண்டாத படிக்காத மாமேதை.

எல்லாருக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும்; குக்கிராமத்தில் பிறந்த குழந்தையும் சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற வேண்டும்; அதற்காக 500 பேர் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கல்விச் சாலை திறந்தார். பள்ளிக்கூடம் போனால் பசி தீருமா என்ற எளிய மக்களின் கேள்வி, அவரைச் சிந்திக்க வைத்தது. "உணவு கிடைத்தால் குழந்தைகள் கல்வியில் கவனம் கொள்வார்கள்; பெற்றோர் பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்ப மனம் கொள்வார்கள்”என்ற முடிவுக்கு வந்தார்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். தமிழக அரசிடம் பண வசதி இல்லாத காலத்தில் இதை சாத்தியமாக்க பொருள் உள்ளவர்களின் உதவியைப் பெற்று திட்டத்தைச் செயல்படுத்தினார். தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்பட்டது. "கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாடிய மகாகவியின் வாக்கை மெய்ப்படுத்திக் காட்டினார் பெருந்தலைவர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில், பெண் குழந்தைகளின் கல்வி விகிதம் ஒரு சதவீதம்கூட இல்லாத சூழ்நிலையில், கல்வியும் இல்லை - வேலையும் இல்லை என்ற அவல நிலை நிலவிய காலத்தில் வீடுதோறும் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப வைத்த மாபெரும் சாதனையை, பல தலைமுறைகளுக்கு வாழ்வளிக்கும் மகத்தான செயலை தேசமே போற்றும் வண்ணம் செய்து காட்டினார் பெருந்தலைவர்.

நான் சிறுவனாக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர் என்னுடைய சொந்த ஊரான திருப்பூருக்கு வந்தார். எனது உறவினரான தாயம்மாள் என்பவரது வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். அதுதான் அவரை நான் முதன்முதலில் சந்தித்த தருணம். அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கியபோது, அவர் என்னிடம், "நன்றாகப் படிக்க வேண்டும். தேசபக்த உணர்வு கொள்ள வேண்டும். நல்லொழுக்கம் மிக்க குடிமகனாக வளர வேண்டும்” என்று கூறினார். அவரது அறிவுரையும் ஆசியும்தான் எனது வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

அதே நாளில், திறந்த ஜீப்பில் வந்து திருப்பூர் மக்களைச் சந்தித்தார். ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நானும் சக மாணவர்களும் என் பள்ளியின் முன் நின்று, திறந்த ஜீப்பில் கைகூப்பியபடி பெருந்தலைவர் சென்றதைப் பார்த்து வணக்கம் சொன்னோம். அந்த எளிமையான தோற்றம் என் நினைவை விட்டு என்றைக்கும் அகலாது.

1971-ஆம் ஆண்டு நான் இளைஞனாக இருந்த போது அவரை மீண்டும் ஒருமுறை சந்தித்தேன். அப்போது தேர்தல் நேரம். அதே எளிய தோற்றம். காந்திய சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். எளிமை, பொது வாழ்க்கையில் தூய்மை ஆகிய பண்புகளை ஒவ்வொரு இளைஞரும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வருங்காலம் சிறப்பாக அமையும் என்றார். இந்தச் சொற்கள் மந்திரம் போல் என்னை ஈர்த்தன.

விதையாக இந்த சிந்தனை அன்றைக்கு என் மனதில் விழுந்தது. என் வாழ்நாள் முழுவதும் இந்தப் பண்புகளை வளர்த்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் என உறுதி கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றும் வாய்ப்பை மக்கள் எனக்கு வழங்கிய போது பெருந்தலைவர் காமராஜரின் சிந்தனைகள் என்னை வழிநடத்தின.

1963-ஆம் ஆண்டு திருவண்ணாமலை இடைத்தேர்தல் வந்தது. போட்டி கடுமையாக இருக்கிறது, நாம் செய்த சாதனைகளை ஓர் ஆவணப் படமாக எடுத்து மக்களுக்குக் காட்டுவோம் என்று பலரும் பெருந்தலைவர் காமராஜரிடம் கூறினர். அதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று பெருந்தலைவர் கேட்டாராம். சுமார் ரூ.30,000 ஆகும் என்றதும், "நாம் செய்ததை சொல்ல முப்பதினாயிரம் செலவு செய்ய வேண்டுமா? அந்தப் பணத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் வாழ்க்கையில் அறிவு ஒளியேற்ற உதவும். விளம்பரம் தேவையற்றது” என்று மறுத்து விட்டாராம்.

ஒருமுறை சோமனூர் பகுதியில் பாலம் ஒன்று வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மக்களவை உறுப்பினராக இருந்தபோது நான் நிறைவேற்றிக் கொடுத்தேன். அந்தப் பகுதியின் பேரூராட்சித் தலைவராக இருந்த மனோகர், இதைப் பாராட்டி தினசரிப் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க முன்வந்தார். அப்போது பெருந்தலைவர் காமராஜரின் உயர்ந்த சிந்தனைதான் என்மனதில் எதிரொலித்தது. "விளம்பரம் தரவேண்டாம், அதற்குச் செலவிடும் பணத்தை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பதற்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற கொடுமைகள் ஒழிய பல திட்டங்கள் வகுத்தார். புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்தார். தமிழ்நாடு காகித ஆலை, ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்காலை, ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான கிண்டி தொழிற்பேட்டை, அம்பத்தூர், ராணிப்பேட்டை தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.

திருச்சியில் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கும் பாரத மிகுமின் நிறுவன பாய்லர் தொழிற்சாலை (பிஹெச்இஎல்) அவர் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்யும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ், இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை ஆகியவை சான்றுகள்; குறிப்பாக, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை இந்திய ராணுவத்துக்குத் தேவையான ’விஜயந்தா' டாங்கிகள் மற்றும் போர் வாகனங்களைத் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆசியாவின் முக்கிய ரயில் பெட்டி தயாரிப்பு மையமாக பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையை வளர்த்தெடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றினார்.

தொழிற்சாலைகளுக்கான மின்சாரம் தயாரிக்க வேண்டியதை உணர்ந்து மேட்டூர், பெரியாறு, குந்தா நீர்மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. சாத்தனூர் கீழ்பவானி, மணிமுத்தாறு, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு போன்ற பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன.

தமிழகத்தில் எந்த அணை குறித்துச் சொன்னாலும், அது காமராஜரின் பெயரைச் சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பல அணைகளைக் கட்டினார். தமிழகம் பஞ்சத்திலிருந்து விடுபட அதுவே காரணமாக அமைந்தது. தமிழகத்தின் பொற்காலம் என்று சொன்னால் அது சுதந்திர இந்தியாவில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்காலம்தான்.

விருதுநகரில் மிக எளிய சாதாரண குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையில் வளர்ந்து, பின்னர் அரசியலில் தொண்டராக சேவையாற்றி தனது உழைப்பால், மக்கள் சேவையால், தேசபக்த உணர்வால், சுதந்திர வேட்கையால் படிப்படியாக உயர்ந்து பண்டித நேருவுக்குப் பிறகு இந்தியக் குடியரசின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை மிகச் சாதுரியமாகக் கையாண்டு தனக்கு வந்த வாய்ப்பைத் தவிர்த்து விட்டு இரண்டு பாரதப் பிரதமர்களை உருவாக்கி சரித்திரத்தில் மகத்தான இடம்பெற்று காலத்தை வென்ற கர்ம வீரராக மக்கள் மனங்களில் உயர்ந்து நிற்கிறார் பெருந்தலைவர் காமராஜர்.

அவரை வணங்கி எளிமை, உழைப்பு, தன்னலம் கருதாமை என அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம். அதுவே நாம் பெருந்தலைவருக்கு செலுத்தும் உண்மையான புகழ் அஞ்சலி ஆகும்.

இன்று காமராஜர்

51-ஆவது நினைவு நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.