
மறைந்தும் வாழும் விழிகள்!
இந்திய அரசின் சுகாதார, குடும்ப நல அமைச்சகம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான காலத்தை தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு விழாவாக அறிவித்துள்ளதைப் பற்றி...
மறைந்தும் வாழும் விழிகள்!
இந்திய அரசின் சுகாதார, குடும்ப நல அமைச்சகம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான காலத்தை தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு விழாவாகவும், செப்டம்பர் 8-ஆம் தேதியை தேசிய கண் தான விழிப்புணர்வு தினமாகவும் அறிவித்துள்ளது.
விழிவெண் படலம் (கார்னியா) தொடர்பான பார்வையிழப்பு, விழிவெண் படலம் மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் கண் தானம் குறித்த உண்மைகளை அறிந்து கண் தானத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்வது நமது கடமை. உலக அளவில் குறைந்தது 220 கோடி மக்கள் கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்னை உடையவர்களாக இருக்கிறார்கள். கண்புரைக்கு ஒளிவிலகல் குறைபாடுகளே முதன்மையான காரணம்.
க்ளாக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) மற்றும் கார்னியா எனப்படும் விழி வெண்படல தொடர்பான நோய்கள் இந்தியாவில் கார்னியா தொடர்பான பார்வை இழப்பு ஓர் "அமைதியான பெருந்தொற்று' போல பரவியுள்ளது. கார்னியா என்பது கண்ணின் முன்புறத்தில் உள்ள தெளிவான, குவிமாடம் போன்ற அமைப்பிலான ஒரு பகுதியாகும். நாம் பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவக்கூடியதாக (தெளிவாக) இருக்க வேண்டும். நோய் அல்லது காயம் காரணமாக அது தழும்பு, வீக்கம் அல்லது ஒளிபுகாத் தன்மை அடையும்போது, ஒளி உள்ளே நுழைய முடியாது - இதுவே கார்னியா பார்வைக் குறைபாடு ஆகும்.
இந்தியாவில் கண்புரைக்கு அடுத்தபடியாக, பார்வையிழப்புக்கு இரண்டாவது பொதுவான காரணம் கார்னியா (விழிவெண் படலம்) ஒளிபுகாத் தன்மை ஆகும். 50 வயதுக்கும் மேற்பட்டோரின் மொத்த பார்வையற்ற தன்மையில் இது 8.2%-க்குக் காரணமாக அமைகிறது.
தொற்றுகள், காயம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கூம்பு வடிவ விழி (கெரடோகோனஸ்), ரசாயனத் தீக்காயங்கள், புல்லஸ் கெரடோபதி எனும் கார்னியா நோய்கள், கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் கெரடோபதி மற்றும் பாரம்பரிய தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள். அண்மைக்காலங்களில் கணினி மற்றும் அறிதிறன் கைப்பேசிகளின் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில் தோன்றும் உலர் கண் பிரச்னையும் கார்னியா (விழிவெண் படலம்) பாதிப்புக்கு காரணமாகின்றன.
இவற்றில் பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தடுக்க முடியும். கார்னியா (விழிவெண் படலம்) மாற்று அறுவைச் சிகிச்சை அல்லது கெரடோ பிளாஸ்டி என்பது, ஒளிபுகா கார்னியாவுக்குப் பதிலாக, கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட தெளிவான கார்னியாவைப் பொருத்தும் ஓர் அறுவைச் சிகிச்சை முறையாகும். 90%-க்கும் மேற்பட்ட கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, பார்வையை மீட்டெடுக்க உதவுகின்றன.
ஒரு கொடையாளியால் கார்னியாவால் பார்வை இழந்த இருவருக்குப் பார்வை வழங்க முடியும். இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் கார்னியாக்கள் தேவைப்படுகின்றன; ஆனால், சுமார் 50,000 கண்கள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன; அவற்றில் சுமார் 60% மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. ஆண்டுதோறும் சுமார் 15,000-30,000 விழிவெண் படல (கார்னியா) மாற்று அறுவைச் சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட கண் வங்கிகள் உள்ளன. ஆனால், அவற்றில் சுமார் 100 மட்டுமே நவீன வசதிகளுடன் செயல்பாட்டில் உள்ளன.
தானமாகப் பெறப்பட்ட கார்னியாக்களை கண் வங்கிகள் சேகரித்து, மதிப்பீடு செய்து சேமித்து விநியோகிக்கின்றன. வயது, பாலினம், உடல்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம்.
கண்ணாடி அணிபவர்கள், கண்புரை அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூடத் தானம் செய்யலாம். எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி/சி, ரேபிஸ், செப்டிகீமியா போன்ற தொற்றுகள், கண் புற்று நோய்கள், ரத்தப்புற்று நோய்கள் மற்றும் புற்றுநோய் உடலின் இரண்டாவது பாகத்துக்கும் பரவியிருக்கும் நிலைகளில் உள்ளோரின் விழிவெண்படலம்தான் (கார்னியா) பார்வை வழங்குவதற்குத் தடையாக இருக்கும்.
இறப்புக்குப் பிறகு 6 மணி நேரத்துக்குள் முடிந்தால் 4 மணி நேரத்துக்குள் கண்களிலிருந்து விழிவெண்படலம் சேகரிக்கப்பட வேண்டும். எனவே, கண் வங்கியை விரைவாகத் தொடர்புகொள்வது அவசியம். உங்கள் வாழ்நாளிலேயே கண் தானத்திற்கு உறுதியளியுங்கள்; உங்கள் குடும்பத்தினரிடம் இதைத் தெரிவியுங்கள். மரணம் நிகழ்ந்ததும் அவர்களின் இமைகளை மூடி வைக்கவும்; மின்விசிறியை அணைத்து விடவும்; முடிந்தால் கண்களின் மீது ஈரமான பஞ்சு, ஐஸ் துண்டுகளை வைக்கவும்.
அருகிலுள்ள கண் வங்கியைத் தொடர்பு கொள்ளவும் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1919 அல்லது உள்ளூர் கண் வங்கியை அழைக்கலாம். கண்களிலிருந்து விழிவெண்படலத்தை (கார்னியா) சேகரிப்பதற்கு 15-20 நிமிஷங்கள் மட்டுமே ஆகும். இதனால், முகத்தில் விகாரமோ, ரத்தப்போக்கோ ஏற்படாது; இறுதிச் சடங்கிலும் தாமதம் இருக்காது.
விழிவெண்படலம் (கார்னியா) ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, எம்.கே. மீடியம் அல்லது கார்னிசோல் கரைசலில் சேமிக்கப்பட்டு பயனாளிக்கு 14 நாள்களுக்குள் பொருத்தப்படும். அதேபோன்று, இறந்தவரின் முகத் தோற்றத்தை கண் தானம் மாற்றும் அல்லது விகாரமாக்கும் என்பதில் உண்மை இல்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் 25,000 பேர் மட்டுமே கண்களைத் தானம் செய்கிறார்கள். அதாவது, மொத்த இறப்புகளில் 0.3 முதல் 0.4 சதவீதம் பேர் மட்டுமே கண்களைத் தானம் செய்கிறார்கள். இதை 2 முதல் 4 சதவீதமாக உயர்த்தினால்கூட, கண் தானத்துக்காகக் காத்திருப்போர் பட்டியல் என்ற நிலையே இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






